ஹிஜாபும் கல்வியும்- கடிதம்

ஹிஜாபும் கல்வியும்

தங்களின் ‘ஹிஜாபும் கல்வியும்’ கட்டுரை, 19/20-ம் நூற்றாண்டில் எல்லோருக்குமான பொதுக் கல்வியும், நவீன மருத்துவமும் உருவாகி வந்த கதையை என்னளவில் இவ்வாறாகத் தொகுத்துக் கொள்கிறேன்.

1990-கள் வரை இந்திய இஸ்லாமியர்களில் மிகச்சிலர் மட்டுமே ஹிஜாப் அல்லது புர்க்கா அணிந்தனர்.

மேலோட்டமாக தாங்கள் கூறியது பகுதி உண்மை, அல்லது அதை இன்னும் திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்வதாக இருந்தால் வட தமிழக (பழைய வட / தென்னாற்காடு) மாவட்டங்களில் என் நினைவை இன்னும் சற்று பின்னோக்கி நான் சிறுவனாக எட்டு, பத்து வயதாக இருந்த ஆரம்ப பள்ளிக்கூட நாட்களான 1980-களின் நடுப்பகுதி வரை – என் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த சித்தி, அத்தை, (அப்பாவின் உடன்பிறந்த சகோதரிகளான) குப்பிமார்கள், மாமிகள், பெரியம்மா, பாட்டி, அனைவரும் துப்பட்டி அணிந்தவர்கள் மட்டுமே. அப்பொழுதெல்லாம் இந்த கறுப்பு நீளங்கி உடை புழக்கத்தில் இருக்கவில்லை. இன்றைக்கு எங்கள் பகுதியில் ‘துப்பட்டி’ என்கிற இந்த பழைய உடை அருகி விட்டது என்றாலும் சில பாரம்பரியமான ஊர்களின் முஸ்லிம் குடியிருப்புகளில் இந்த உடை உடுத்திய மூதாட்டிகளை இன்றைக்கும் காணமுடியும்.

தலை (முடி)யை (மட்டும்) மறைத்தல், முகத்தை(யும்) மறைத்தல், முழு உடலையும் மறைத்தல் என வெவ்வேறு செயல்கள் அனைத்துமே ‘ஹிஜாப்’ என்பதாக (தவறாக) பொருள்கோடல் செய்யப்படுகிறது. இந்த விஷயம் (இஸ்லாமிய) மதரீதியான கட்டளையா? வெறுமனே பரிந்துரையா? பண்பாட்டு ரீதியானதா? என விவாதங்கள் (முஸ்லிம்) சமூகத்துக்குள் நடந்து வருகின்றன. இதைத்தான் ’கேரளத்தில் தலையில் போடப்படும் ஒரு துணி (தட்டம்) மட்டுமே இஸ்லாமியப் பெண்களின் ஆடைகளில் கூடுதலாக இருந்தது’ என்றும் மற்றபடி ‘புர்க்கா முறை இந்தியாவில் 1985ல் ஷா-பானு வழக்கை ஒட்டி உருவான ஷரிஅத் பாதுகாப்புக் கிளர்ச்சியில்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வலியுறுத்தப்பட தொடங்கியது’ என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளதை இன்னும் பெருமளவிலான புர்கா பயன்பாட்டின் காலமாக எடுத்துக் கொள்ளலாமே தவிர அது முழுக்க திடீரென்று வந்த ஒன்றுல்ல. ஏற்கனவே பிரிட்டிஷ் காலத்திலேயே அந்த நடைமுறை இருந்திருக்கிறது என்பதற்கு இரண்டு, மூன்று எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அண்மைக்காலம் வரையில் எங்கள் ஊர் பள்ளிக்கூடங்களில் (முஸ்லிம்) மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகளே பாடம் எடுப்பர். சொன்னால் வியப்பாக இருக்கும், ஆசிரியருக்கும் – மாணவிகளுக்கும் இடையில் மெல்லிய திரையொன்று தொங்க விடப்பட்டு கரும்பலகை, மேஜை என இந்தப் பக்கமிருந்து (ஆண்) ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த மாதிரியான சூழலிலிருந்துதான் இன்றைக்கு பெருநகரங்களில் பணியாற்றக்கூடிய ஆராய்ச்சியாளர்களாக சில பெண்கள் இந்தச் சமூகத்திலிருந்து உருவாகி வந்துள்ளனர்.

நான் வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது என் மனைவி வந்ததும், போவதுமான (விமான) பயணங்கள் தனியாக(வும்) செய்திருக்கிறார். (ஊர்) வழக்கப்படி பர்தா அணிவதும் (சென்னை) சென்ட்ரலில் வந்திறங்கியதும் அதை கழட்டி பையில் போட்டுக் கொள்ளக்கூடிய வழக்கமும் நடைமுறையில் உள்ளது.

திருப்பூர் எப்படி துணி, ஆடை ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறதோ அது போல கடந்த 100/150 ஆண்டுகளாக வட தமிழக மாவட்டங்கள் தோல், தோலாடை, காலணி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. பல்லாயிரம் கோடி புழங்கும் இந்த தொழிலின் பெருமுதலாளிகள், தொழில்நுட்ப நிபுணர் (Technician), வடிவமைப்பாளர், (Designer) மேலாளர்கள், இடைநிலை மேஸ்திரிகள், கடைநிலை தொழிலாளர்கள என பெரும்பான்மையினர் முஸ்லிம்களே. நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் தொழிலாளிகள் இந்த காலணி தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர், அவர்களில் சரி பாதியினர் முஸ்லிம் ஆண்களும் பெண்களுமே. சமூக சூழலின் பொருட்டு இந்த (பர்தா) கறுப்பு அங்கி அணிந்து பஸ்ஸில், பைக்கில் வந்தாலும், உள்ளே தொழிற்சாலைக்குள் வெறுமனே தலைமுடியை மறைக்கும் ஸ்கார்ப் ஒன்றை கூடுதலாக போட்டுக் கொண்டு எல்லா பணிகளையும் செய்து வருகின்றனர்.

எங்கள் வாணியம்பாடி (ரயில் நிலையத்தையொட்டி) மகளிர் பூங்கா ஒன்றுள்ளது. மதிற்சுவர் சூழ்ந்த கோட்டையாக வெளியிலுள்ள அன்னியர் பார்வை ஊடுருவாதபடி போன்றிருக்கும். அதனுள்ளே நடைப்பயிற்சியும், சிறிய அளவிலான கேளிக்கைக்கும் காற்றோட்டமான பெரிய நிழல்தரும் மரங்களின் கீழே ஆசுவாசப்படுத்திக் கொள்ள நகரின் பிரதான இடம் நூறு ஆண்டுகளாக உள்ளது. முஸ்லிம் / முஸ்லிம் அல்லாதவர் என வேறுபாடின்றி மகளிர் அனைவருக்கும் பொதுவான அனுமதியைக் கொண்ட இந்த பூங்கா உருவாக தன் மாந்தோப்பு ஒன்றை அறக்கொடை செய்தவர் நெய்வாசல் அப்துல் வகாப்.

நவீன மருத்துவம், பொதுக்கல்வி என்பது அவ்வளவு எளிதாக இங்கு வந்துவிடவில்லை. ஆக்ரா தாஜ்மகால் கல்லறையில் (இறந்த பின்) புதைக்கப்பட்ட Mumtaz (1593 – 1631) ஷாஜஹானின் மனைவி. 14 வயதில் திருமணம் முடித்து 14 குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்து அந்த பிரசவ வலியிலேயே செத்துப் போனபோது பட்டத்து அரசிக்கு வயது வெறும் 38.பெண்கள் மகப்பேறு காலத்தின்போது முறையான சிகிச்சை பலனின்றி இறந்து போவதும், தாய்-சேய் சுகாதாரக் கேடும் மலிந்து இருந்தன. அப்போதும் கூட மருத்துவமனை செல்லத் துணியவில்லை என்று ‘Reminiscences’ – ‘பழைய நினைவலைகள்’ என்கிற தன் வரலாற்று நூலில் காணக் கிடைக்கிறது. மேலும், “அப்போதெல்லாம் மெட்ராஸில் இருந்த மருத்துவர்கள் எல்லாருமே ஆண்கள்தான். அதிலும் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். அவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மெட்ராஸைச் சேர்ந்த பெண்களிடம் தயக்கம் இருந்தது. சிகிச்சை எடுத்துக்கொள்வதிலேயே இவ்வளவு கூச்சம் என்றால், பிரசவ காலங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் நிலைமைதான் மிகவும் மோசம்” என்று ஆங்கிலேய பெண் மருத்துவர் எழுதிய டைரி 1924-ஆம் நூலாக வெளிவந்துள்ளது.

1666-ல் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கென சிறியதொரு மருத்துவமனை வந்துவிட்ட போதிலும் Madras Medical College என்பது 1835-ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. அப்பொழுது சென்னையில் தங்கி கன்னட, தெலுங்கு, தமிழ், உருது என்று பல்வேறு மொழியாக்கப் பணிகளை முன்னெடுத்தவர் சென்னை அருங்காட்சியகத்தின் Edward Green Balfour (1813 – 1889) ஆவார். அந்த கீழைத்தேய ஆய்வாளர் பால்போரின் செல்வாக்கிற்கு உள்ளான Mary Scharlieb (1845 – 1930) சென்னைப் பெண்களின் பேறுகால இடர்பாட்டை களையும் பணியில் பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றின் அவசியத்தை உணர்ந்தார். இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்திய துணைகண்டத்தில் மருத்துவ சேவையின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த நினைத்ததைக் கேள்விப்பட்ட டாக்டர் மேரி தன் செயல்பாடுகளை விக்டோரியா அரசி (1819 – 1901) கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

சென்னை மருத்துவக்கல்லூரி தொடங்கி ஏறக்குறைய ஐம்பதாண்டுகள் ஆகியிருந்த நிலையில் நுங்கம்பாக்கம் மூர் தோட்டத்தில் 1883-ஆம் ஆண்டு பெண்கள் மருத்துவமனை தொடங்கப்பட்டது. ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை என அந்தகால புறநகர்ப் பகுதியின் பெண் நோயாளிகள் வரத் தொடங்கினர். பெண் மருத்துவர்களால் மருத்துவம் பார்க்கும் வசதி இருந்ததால் (இஸ்லாமிய பெண்) நோயாளிகளின் வருகை ஒப்பீட்டளவில் அதிகரித்தது. இந்தப் பெண்கள் தங்களின் முகத்தை மூடிக்கொள்ள துணியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என்று Mary Scharlieb எழுதி வைத்திருப்பது இன்றைக்கும் ஆவணமாக காணக் கிடைக்கிறது.

சென்னைக் கடற்கரையில் கண்ணகி சிலை இருக்கும் இடத்திலிருந்து நேரெதிரே சேப்பாக்கம் அரண்மனைக்கு செல்லக்கூடிய பாதை பாரதி சாலை என்று அழைக்கப்படுகிறது. அங்கு செயல்பட்டு வரும் அன்னை கஸ்தூரிபா காந்தி அரசு பொது மருத்துவமனை என்பதே அதன் இப்போதைய அதிகாரப்பூர்வமான பெயர். ஆனால் மக்கள் மனதில் அதை இன்றைக்கும் கோஷா மருத்துவமனை என்றே அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Ida Sophia Scudder (1870 – 1960) எங்கள் மாவட்ட தலைநகரான வேலூரின் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC-யின்) நிறுவனர் என்கிற முறையில் அறியப்படுகிறார். உலகப் புகழ்ப்பெற்ற அந்த மருத்துவமனை உருவாகக் காரணமும் இங்கிருந்த (முஸ்லிம்) பெண்களின் துயரமிக்க வாழ்க்கை. அதாவது வேலூரில் மருத்துவராக இருந்த தந்தையுடன் தங்கியிருந்த ஐடா வை (பெண் மருத்துவர் எனக் கருதி) நள்ளிரவில் முஸ்லிம்களில் சிலர் பிரசவம் பார்க்குமாறு தம் வீட்டிற்கு அழைத்திருக்கின்றனர். தன் தந்தையே மருத்துவர், தான் மருத்துவரில்லை என்றும் சொன்னபோது ஆண் மருத்துவரிடம் பிரசவம் பார்க்க முடியாது என்று மறுத்து திரும்பிச் சென்றிருக்கின்றனர். மறுநாள் அவர்கள் (குறிப்பிட்ட இளந்தாய்) பிரசவத்தில் இறந்து போனதும், அந்த உடல் நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்ட ஐடா  ஸ்கட்டர் மருத்துவம் படிக்க தன் நாட்டிற்கு (அமெரிக்கா) உடனடியாகப் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்படி அவசர அவசரமாக சென்ற ஐடா  ஸ்கட்டர் தன் தோழி Annie Hancock ஆகியோருடன் இணைந்து 1900-ஆம் ஆண்டு வேலூரில் மருத்துவப் பணியை தொடங்கினார். அடுத்து வந்த சில ஆண்டுகளுக்குள்ளாக (1904-ல்) தென்னிந்தியாவில் பிளேக் பரவிய நிலையில் சி.எம்.சி.-யின் சேவை மக்களால் விளங்கிக் கொள்ளப்பட்டது. தொற்று நோயால் சுகாதாரத் துறையின் தட்டுப்பாடு, தேவை எவையெவை என கணக்கில் கொண்டு செவிலியர்களுக்கான கல்லூரியை தொடங்கினார். (மனித உடலைத் தொட்டு மருத்துவம் பார்க்கும்) இந்தப் பணிக்கு யாருமே வராத நிலையில் சுற்றுவட்டார மிஷனரி பள்ளிகளில் படித்த ஏழை (தலித்) மாணவிகளே அந்தக் காலத்தில் சேர்ந்தனர்.

சென்னை மாகாண அன்றைய ஆளுநர் Baron Pentland எனப்படும் John Sinclair (1860 – 1925) இந்த மருத்துவமனை வளர்ச்சியில் தனிக்கவனம் எடுத்துக் கொண்டவர். அவர் பெயரில் வேலூரில் ஒரு சாலை இன்றும் உள்ளது. Kaiser-i-Hind அந்தக் கால இந்தியாவின் உயர் சிவில் விருது, ஐடா  ஸ்கட்டருக்கு அளிக்கப்பட்டது. அதை பெற்றிருந்தவர்களில் ஒருவர்தான் காந்தியடிகள், பிறகு அதை அவர் திருப்பித் தந்துவிட்டார் என்பது தனிச் செய்தி. ஐடாவின் கல்லறை கொடைக்கானலில் உள்ளது.

’வகுப்பில் ஒரு வார்த்தைகூட கிறிஸ்தவ மதம் கற்பிக்கப்படாது என்று நாயர்கள், வேளாளர்கள், உயர்குடி நாடார்கள் அனைவரிடமும் J.Emlyn வாக்குறுதிகள் அளித்தார். ஜெபம் செய்ய வேண்டியதில்லை. மாறாக திருவாசகம் எழுத்தச்ச ராமாயணம் உள்ளிட்ட இந்து நூல்கள் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டது’ என்று எழுதியிருந்தீர்கள். மதப் பரப்புரை செய்ய வந்தவர்கள், அதுவும் 18, 19-ஆம் நூற்றாண்டில் இவ்வளவு தாராளமான நடந்து கொண்டிருந்த முன்மாதிரிகள் இருந்திருக்கின்றன.

பாரிஸ்-சில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு ஐரோப்பாவின் சில நாடுகளிலும், நம் பக்கத்திலுள்ள இலங்கையிலும் ஹிஜாபுக்கு எதிரான குரல்கள் அதிகரித்துள்ளதன் நீட்சியாகவே இங்கு – இந்தியாவில் இதே விவாதம் இப்பொழுது எழுந்திருக்கிறது. தனி மனிதச் சுதந்திரத்துக்குப் பேர்போன மேற்கும், உலகப் பண்பாடுகளின் தொட்டிலாக கருதப்படும் கீழை நாடுகளில் – குறிப்பாக இந்தியாவில் தார்மீக அறம் போன்றவை பொருட்படுத்தாத போக்கும், “பொது வெளி” சுருக்கப்படுவதும் துரதிர்ஷ்டவசமானது – அதிலும் அனைத்து சிறுபான்மையினருக்கும் தஞ்சம் அளித்த இந்த தொல்நிலத்தின் புதிய முகம் அகோரமாகி விடுமோ என்று கவலையாக இருக்கிறது.

என்னை வாரக்கணக்கில் உறங்கவிடாதபடி தொந்தரவு செய்த ஒற்றைச் சொல் Morisco என்பது. Moriscos were former Muslims and their descendants whom the Roman Catholic church and the Spanish Crown commanded to convert to Christianity or face compulsory exile after Spain outlawed the open practice of Islam by its sizeable Muslim population in the early 16th century என்கிறது விக்கிபீடியா.

Xenophobia என்பதை fear or dislike of the customs, dress, etc., of people who are culturally different from oneself என்கிறது அகராதி. “முஸ்லிம்தான், ஆனால் நல்லவங்க” என்றெல்லாம் சொல்வதை இப்பொழுது அடிக்கடி கேட்க முடிகிறது. இந்த உணர்வுக்கு அடிப்படையாக இருப்பது பயமும், வெறுப்பும்.

பரவலாகப் புரட்டியபோது கண்ணில் பட்டது. ’வரலாறு இத்தனை யூகிக்கத் தக்கதா!’ என்று தங்களின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலின் ஒரு பக்கத்தை தோழர் சிறில் அலெக்ஸ் இன்று முகநூலில் பதிவு செய்திருந்தார். கிரானடா நாவலை ஆங்கிலத்தில் படித்தபோதும், அதன் தமிழாக்கம் வெளியாக வேண்டும் என்று எண்ணியபோதும் ஏற்பட்ட பதற்றம் திரும்பவும் தொற்றிக் கொள்கிறது.

கொள்ளு நதீம், ஆம்பூர்.

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பவர்கள்…
அடுத்த கட்டுரைநான்கு பூங்கொத்துகள்- அருண்மொழிநங்கை