ஆய்வும் சழக்கும்

அன்புள்ள ஜெமோ,

ராவணன் அம்பேத்கர் என்னும் ஆய்வாளர் இதை எழுதியிருக்கிறார்

இரா.நாகசாமி அவர்கள்தான் தமிழர்கள் சொல்லிக் கொண்டிருந்த சங்க காலத்தைப் பற்றிய தொல்லியல் சான்றுகளை உலகின் முன் வைத்து நிரூபித்தார் என்கிறார் ஜெயமோகன். சரிதான் என்பதில் மாற்று கருத்தில்லை.

ஆனால் அதே இரா.நாகசாமி எந்த தொல்லியல் தரவுகளுமே இல்லாமல் வேத காலத்தை அப்படியே ஒப்புக் கொள்கிறார் அதை ஜெயமோகனும் வழி மொழிகிறார். அதே போல் சமஸ்கிருத மொழி தொன்மைக்கான எந்த தரவுகளும் இல்லாமல் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அத்தனைக்கும் அதுவே தாய் என்கிறார். அதிலும் ஜெமோவுக்கு மாற்று கருத்து இருப்பதாக தெரியவில்லை.

தமிழர்-தமிழ் தொன்மைக்கு பூதக் கண்ணாடியை வைத்துக் கொண்டு சான்றுகள் தேடுவதும், வேத கால/ சமஸ்கிருத கப்ஸாவை எந்த சான்றுகளும் இல்லாமலேயே ஒப்பு கொள்வதும் என்ன மாதிரியான கோக்குமாக்கான மனநிலை என்று ஆசானோ அவரது மாணாக்கர்களோ நமக்கு விளக்கம் சொல்வார்களா?

(ராவணன் அம்பேத்கர்)

உங்கள் கருத்து என்ன?

கா.எட்வின்

அன்புள்ள எட்வின்

இதெல்லாம் முகநூல் சழக்கு மனநிலை. எந்த வகையான ஆய்வு மனநிலைக்கும் எதிரானது. இவர்களை பொருட்படுத்தாமலிருப்பதே என் வழக்கம்.

ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் உடனே அதை ஓர் அரசியல்தரப்பாக, எதிரித் தரப்பாக உருவகித்துக் கொள்வதும்; அதையொட்டி தனக்குத்தோன்றியதை எல்லாம் அவர் மேல் ஏற்றி அவற்றை எல்லாம் அவர் கருத்தாகக் கொண்டு மறுமொழி சொல்லிக் கொண்டிருப்பதும் ஒரு வகை உளச்சிக்கல் மட்டுமே. அறிவுச்செயல்பாடு அல்ல. அறிவுச்செயல்பாட்டிலுள்ள ஒருவர் எதிர்த்தரப்பு என்ன சொல்கிறதென்பதையே எப்போதும் கூர்ந்து கவனிப்பார். அரசியல்நோயாளிகளால் இயலாதது அது.

நான் நாகசாமியின் சம்ஸ்கிருதம், வேதகாலம் பற்றிய கருத்துக்களை ஏற்பவன் அல்ல. சம்ஸ்கிருதமே இந்தியாவின் தொல்மொழி, அது இந்திய மொழிகளனைத்துக்கும் ஆதாரம் என்பது போன்றவற்றை மறுப்பவர்கள் என் ஆசிரியர்கள். ஒருவகையில் இந்தியச்சூழலிலேயே அந்த மறுப்பை முதலில் முன்வைத்தவர்கள்.சம்ஸ்கிருதத்தை மதித்து, அந்நூல்களை ஆராய்ந்து எழுதும்போதே அவர்களின் நிலைபாடு அது.

நான் பி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆய்வாளர் எழுதியவற்றை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். நானே அத்தரப்பை பலமுறை திட்டவட்டமாக பதிவுசெய்திருக்கிறேன். சம்ஸ்கிருதம் இந்தியமொழிகளின் அன்னையோ, இந்தியாவிலேயே தொன்மையான மொழியோ அல்ல என்றும் அது இந்தியாவின் அறிவுப்பரிமாற்றத்துக்கான மொழியாக வரலாற்றின் போக்கில் உருவாகி வந்ததனால்தான் முக்கியமானது என்றும் குறைந்தது இருபது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். அண்மையில் நாகசாமியின் அஞ்சலிக்குறிப்பில்கூட அதைச் சுட்டியிருக்கிறேன்.

நாகசாமி பற்றிய அஞ்சலிக் குறிப்பில் அவருடைய தொல்லியல் துறை சாதனைகளை ஏற்றும், அதேசமயம் சம்ஸ்கிருதம் வேதகாலம் குறித்த அவருடைய முன்முடிவுகளை மறுத்தும்தான் எழுதியிருந்தேன். வழக்கம்போல நாகசாமியை ஒட்டுமொத்தமாக மறுக்கும் கும்பலும் ஒட்டுமொத்தமாக தூக்கிக் கொண்டாடும் கும்பலும் என்னை வசைபாடின. இரண்டு தரப்பும் என்னை எதிர்த்தரப்பாக கூறின. நான் இந்த மனச்சிக்கல்களை பொருட்படுத்தாமல் இருக்கவே முயல்கிறேன்.

வேதங்களின் சொல்லமைப்பு (அவற்றிலுள்ள இலக்கண அமைப்பு கிட்டத்தட்ட பழங்குடி மொழி போன்றது. சொல்லிணைவுக்கான இலக்கணமே உருவாகாத காலத்தைச் சேர்ந்தது) பேசுபொருள் (அதில் இரும்பு பேசப்படுவதில்லை. மிகப்பிற்பட்ட ஒருகால வாழ்க்கையே அதிலுள்ளது) ஆகியவற்றால் அதை ஒரு தொல்பிரதி என கொள்கிறேன். அது ஒரு பண்படா பிரதியும் கூட. அது என் ஆய்வு அல்ல. அவ்வாறு கொள்ளும் ஆய்வாளர்களே உலகிலுள்ள முக்கியமானவர்கள் அனைவரும்- ஐரோப்பிய இந்தியவியலாளர் முதல் டி.டி.கோஸாம்பி, டி.தாமோதரன் போன்ற மார்க்சியர்கள் முதல் ஒரு பட்டியலே போடமுடியும்.

ஆனால் அது இலக்கிய ஆய்வின் முடிவு மட்டுமே. இலக்கிய ஆய்வின் ஊகங்கள், அல்லது மொழியியல் ஆய்வின் ஊகங்கள் ஒருபோதும் புறவயமான வரலாற்றுச் சான்று ஆவதில்லை. வேதகாலம் சார்ந்த வலுவான தொல்லியல் சான்றுகளேதும் இல்லாத நிலையில் அதைச் சார்ந்த எந்தக் கருத்துக்களையும் வரலாற்றாய்வாகக் கொள்ள முடியாது என்றே எப்போதும் சொல்லிவருகிறேன்.

இதுவே மகாபாரதம் முதலிய நூல்களுக்கும் பொருந்தும். அவற்றின் மொழிநடை, பேசுபொருள் ஆகியவற்றைக்கொண்டு அவற்றின் காலகட்டத்தை வகுக்கலாம்- ஆனால் அது இலக்கிய ஆய்வுதான். அந்நூல்களை வரலாற்றாய்வுக்குச் சான்றுகள் என கொள்ளவேண்டும் என்றால் திட்டவட்டமாக அவற்றுடன் இணையும் தொல்லியல் சான்றுகள் தேவை. அவ்வண்ணம் மகாபாரதத்தின் காலத்தைச் சேர்ந்தவை என  குறிப்பிடத்தக்க தொல்லியல் சான்றுகள் இதுவரை ஏதுமில்லை.

இங்கே எல்லா தரப்பிலும் வெறிகொண்ட பற்றுகள், அரசியல் நோக்கம் கொண்ட நிலைபாடுகள் சார்ந்து வரலாற்றை அறுதியாக வரையறுத்துக்கொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த தர்க்கத்துக்கும் கட்டுப்படாமல், மூர்க்கமாக விவாதிக்கும் பெருங்கூட்டம் நிறைந்துள்ளது. மண்டைக்குள் காற்றோட்டம் கொண்ட சிலராவது வரலாற்றாய்வென்பது இது அல்ல, வரலாற்றாய்வென்பது புறவயமான தரவுகளால் தர்க்கபூர்வமாக விவாதித்து உருவாக்கப்படுவது என்பதை உணர்ந்தாகவேண்டும். மீளமீள நான் சொல்வது இதை மட்டுமே.

*

இந்திய வரலாற்றாய்வில் உள்ள ’அகழி’ பற்றி சொல்லியிருக்கிறேன். லோத்தல், ஹரப்பா முதல் மொகஞ்சதாரோ, காளிஃபங்கன் வரையிலான பண்பாடு பற்றி நமக்குக் கிடைக்கும் ஏராளமான தொல்லியல்சான்றுகளை விளக்க திட்டவட்டமான நூலாதாரங்கள் இல்லை. மறுபக்கம், வேதங்கள் முதலிய தொல்நூல்களை விளக்க தொல்லியல் சான்றுகள் இல்லை. அதேபோல தமிழகத்தில்  ஆதிச்சநல்லூரையும் கொடுமணலையும் விளக்க இலக்கியச் சான்றுகள் இல்லை. சங்க இலக்கியக் குறிப்புகளை விளக்க தொல்சான்றுகள் மிகக்குறைவு. எங்கு தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றனவோ அங்கே அதை விளக்கும் மொழிச்சான்றுகள் இல்லை. கிடைக்கும் மொழிச்சான்றுகளை உறுதிசெய்ய தொல்லியல் சான்றுகள் இல்லை.

இந்த அகழியில்தான் சமநிலை அற்ற அத்தனை ஆய்வுகளும் சென்று விழுகின்றன. அவரவர் அரசியலுக்கும், சார்புநிலைகளுக்கும் ஏற்ப ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. இனப்பெருமிதங்கள், சாதிப்பெருமிதங்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. எந்தத் தரப்பிலிருந்தும் இதுவரை முன்வைக்கப்பட்ட ஊகங்களில் எவையும் அறுதியானவை அல்ல – அவை ஊகங்கள், விளக்கங்கள் மட்டுமே. வேதகாலப் பெருமிதமோ, ஆரிய இனவாதமோ, திராவிட இனவாதமோ எல்லாம் அரசியல் சார்ந்த நிலைபாடுகள் மட்டுமே.

எகிப்து அல்லது மெசபடோமியா பண்பாடுகளில் தொல்சான்றுகளும் மொழிச்சான்றுகளும் இணைந்து மறுக்கமுடியாதபடி உருவான வரலாற்றுவிவரிப்பு இங்கே நிகழவில்லை. ஆகவே எவர் முன்வைக்கும் எந்த ஊகத்தையும் அவருடைய தரப்பு என்பதற்கு அப்பால் பொதுவான பண்பாட்டு ஆய்வாளர்கள் கொள்வதற்கில்லை.

அத்துறை அறிஞர்கள் நடுவே நிகழும் விவாதங்களை கவனிப்பதும், பொதுவான ஆய்வுசார் முடிவுகள் வரும் வரை காத்திருப்பதுமே இலக்கிய- பண்பாட்டு ஆர்வம் கொண்ட எழுத்தாளனாகிய என் முறைமை. அன்றி நாமும் சென்று விழுந்து எனக்குரிய கருத்துக்களை உருவாக்கிக்கொண்டு கம்புசுற்றுவோம் என்றால் அது அறிவின்மை. நான் ஆய்வுகளை முன்வைப்பதில்லை, சர்வதேச அளவில் ஆய்வாளர் என்ன சொல்கிறார்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.

நான் எந்த மொழி பழமையானது, தொன்மையானது என்ற அபத்த விவாதங்களுக்குள் செல்வதில்லை. மொழிகளின் பரிணாமத்தை அறிந்த எவரும் அதையெல்லாம் செய்வதில்லை. பழங்குடி மொழிகள் உட்பட பெரும்பாலான மொழிகள் அறியமுடியா தொல்பழங்காலத்திலேயே வேர்கள் கொண்டவை. எல்லா மொழிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் உருமாற்றம் அடைந்துகொண்டிருப்பவையும்கூட. தோடர்களின் மொழியா சம்ஸ்கிருதமா தமிழா எது தொன்மையானது என இன்று ஓர் ஆய்வாளன் சொல்லிவிட முடியாது.

சம்ஸ்கிருதம் என நாம் இன்று சொல்லும் மொழி பல அடுக்குகள் கொண்டது. வேதகால மொழி அதற்கும் முந்தைய தொல்மொழி ஒன்றின் நீட்சி என அதன் சொல்லிணைவு இலக்கணத்தால் தோற்றமளிக்கிறது. பாணினிக்கும் பதஞ்சலிக்கும் பின் அது திட்டவட்டமான சொல்லிணைவு இலக்கணத்தை வகுத்துக்கொண்டு சம்ஸ்கிருதமாக ஆகியது. அதேபோல புறநாநூற்றுக்கும் தொல்காப்பியத்திற்கும் பின் நாம் இன்று அறியும் தமிழ்மொழியின் வடிவம் உருவானது. அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழுக்கு தாயான தொல்மொழி வடிவம் இங்கிருந்தது. அதுவும் தமிழே. அதுவே ஆதிச்சநல்லூரின் மொழி. இன்னும் ஆய்வுகளில் அதற்கும் முந்தைய வடிவங்களை நாம் கண்டடையக்கூடும்.

இவையெல்லாம் விவாதிக்கப்படவேண்டிய விதமோ மொழியோ இது அல்ல. ஏட்டிக்குப்போட்டி பேசுவது, நையாண்டி, வசை, திரிப்பு என சழக்கிட்டு நாம் அடைவது ஒன்றுமில்லை. நிதானமான, முறைமைசார்ந்த, புறவயமான, சார்பற்ற விவாதம் தேவை. அதில் ஈடுபடும் எல்லா தரப்பும் கற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு ஆழ்ந்த ஆய்வுலகம் ஒன்று உள்ளது, அதை கற்றுக்கொள்ளுங்கள் என இங்கே கொந்தளித்துக் கொப்பளிக்கும் முதிரா உள்ளங்களுக்குச் சொல்ல மட்டுமே முயல்கிறேன்.

*

தலித் ஆய்வாளர்களின் ஒரு பட்டியலை நான் போட்டபோது இந்த ராவணன் அம்பேத்கர் என்பவரை ஆய்வாளராக நான் ஏன் கருத்தில் கொள்ளவில்லை என என்னிடம் பலர் எழுதிக் கேட்டனர். நான் சுட்டும் தலித் ஆய்வாளர்கள் பண்பாட்டு ஆய்வின் நெறிகளும் முறைமைகளும் அதற்குரிய சமநிலைகளும் கொண்டவர்கள்.

ஆய்வு என்பது புறவயமான முறைமை சார்ந்தது. எந்த ஆய்வாளரும் தன்னை மறுக்கும் தரப்புடன்தான் பேசுகிறார். எதிர்த்தரப்பின் முன் தன் தரப்பை நிறுவவும், அவர் தன்னை மறுக்க வாய்ப்பளிக்கவும்தான் அந்த புறவயமான முறைமையை முன்வைக்கிறார். அந்த முறைமையே ஒருவரை ஆய்வாளராக ஆக்குகிறது. அவரை மறுப்பவர்கள்கூட அவரை கவனிக்கச் செய்கிறது. எதிர்த்தரப்பை திரிப்பவர், வசைபாடுபவர், நகையாடுபவர் ஆய்வாளரல்ல- சழக்கர் மட்டுமே.

இவருடைய பல கருத்துக்களை நான் கவனித்திருக்கிறேன். முழுக்கமுழுக்க அகவயமானவை. அவருடைய தனிப்பட்ட காழ்ப்புகள், பிறர்பற்றி ஏதுமறியாமலேயே கொள்ளும் முன்முடிவுகளில் இருந்து எழுபவை. இத்தகைய முன்முடிவு கொண்ட ஆய்வாளர்கள் தங்கள் மூளைக்கொதிப்பாலேயே சூழலில் சதா வெளிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். தன் எதிர்த்தரப்புக்கும் பொதுவான ஒரு முறைமையை கடைப்பிடிக்க, தர்க்கத்தை முன்வைக்க இவர்களால் இயலாது.

ஆகவே எப்போதும் தன் எதிர்த்தரப்பை, தன்னை ஏற்காதவர்களை, தன் எதிரியாக உருவகம் செய்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருக்கும் எதிரிக்கு என்னென்ன இயல்புகளுண்டோ அனைத்தையும் அவன்மேல் ஏற்றி வசை, ஏளனம், அவதூறு என சலம்புகிறார்கள். இவர்களிடம் பேசுவதென்பது குடிகாரர்களிடம் பேச்சுக்கொடுப்பதுபோல. அதன்பின் ஏண்டா பேச்சை ஆரம்பித்தோம் என்று நொந்துகொண்டு தப்பி ஓடவேண்டியிருக்கும்.

நான் பல ஆண்டுகளாக ஆய்வாளர்களை கூர்ந்து வாசித்து வருபவன். நானறிந்த ஆய்வாளர்களின் அடிப்படைத் தகுதி என்பது புறவயமான முறைமையும், எதிர்த்தரப்புடன் விவாதிக்கும் தர்க்கமுறையும்தான். இவரைப்போல தமிழ்த்தேசியம் சார்ந்து, திராவிடத்தேசியம் சார்ந்து, இந்துத்துவம் சார்ந்து, வைதிகம் சார்ந்து, இஸ்லாம் சார்ந்து, கிறிஸ்தவம் சார்ந்து மூளைக்கொதிப்புகளை ஆய்வுகளாக கொட்டிக்கொண்டிருப்பவர்கள் சமூக ஊடகங்களில் பலநூறுபேர் உள்ளனர். அவர்களுக்கும் ஆய்வுக்கும் தொடர்பில்லை

இது இவரைப் பற்றி என்னிடம் முன்னர் கேட்ட நண்பர்களுக்காக. இவரைப் பற்றிய கடைசி பதிவு  இது

ஜெ

***

அஞ்சலி:நாகசாமி

அறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

முந்தைய கட்டுரைசடம் மேலுமொரு கடிதம்
அடுத்த கட்டுரைஇந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப்