எரிமலர்-வாசிப்பு

எரிமலர் வாங்க

எரிமலர். வெண்முரசு எனும் மாபெரும் காவியத் தொடரை எழுதி முடித்த ஜெயமோகன் அத்தொடரின் பல கிளை நூல்களையும் எழுதினார். தொடரின் முதல் அங்கமான முதற்கனலின் கிளை நூல் தான் இந்த எரிமலர்.

ஆசிரியரின் முன்னுரையில் இந்த கிளை நூல்கள் அல்லது அவரின் சொற்களில் இந்த ‘நாவல் பகுதிகள்’, எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களை வெண்முரசு நோக்கி இழுக்க எழுதப்பட்டவை என்கிறார். நான் ஏற்கனவே ஈர்க்கப்பட்டவன். ஆனாலும், அதில் அவர் மற்றவரிடையேயும் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை.

மகாபாரதத்தில் சின்ன அங்கமாக மட்டும் வருவது அம்பையின் வஞ்சம். அந்த வஞ்சத்திற்கு விரிவான வடிவத்தை தருகிறது இந்நூல். அம்பை தான் அத்தினபுரத்தில் விழுந்த முதல் கண்ணீர்த் துளி. அந்தத் துளி தான் அந்நகரை எரித்தது. அந்த அம்பையின் கதை இது.மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று பீஷ்மர். அவரிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. ஒரு சுயம்வரத்தை ராட்சசமாக மாற்றி இளவரசிகளை கவர்கிறார் பீஷ்மர். கட்டளையின் பிரகாரமே! அவராக அல்ல!அவ் இளவரசிகளில் ஒருவர் அம்பை. இந்த அம்பையை நாம் அத்தருணத்திலிருந்த தொடர்ந்து செல்கிறோம். அவளின் வேதனையை அவமானத்தை உணர்கிறோம். அவளின் வஞ்சத்தில் நாமும் இணைகிறோம்.

தெய்வமாகி தன் ஆத்திரத்தை அடக்க முனைகிறாள் அம்பை. அவளின் கனலை சுமக்க வருகிறாள் சிகண்டினி. அவள் சிகண்டினி, அவனாக மாறி சிகண்டி ஆகிறான். சிகண்டி யார் என மகாபாரதம் படித்தவர்க்குத் தெரியும். சிறு நாவலாக இருந்தாலும் அபாரமான எழுத்து. ஜெயமோகன் பற்றி எல்லோர்க்கும் தெரிந்தது தானே! இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறத் தகுதி கொண்ட ஒரே தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தான் என பாவா செல்லதுரை கூட சமீபத்தில் கூறியிருந்தார்.

வெண்முரசு தொடர் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர். அதன் நாவல் பகுதிகளையும் தேடி வாசியுங்கள். எரிமலர் அவற்றில் ஒரு அருமையான பகுதி.முதற்கண் நூலும் என்னிடமுண்டு. அதை ஆரம்பிக்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை, எரிமலரை படித்த பின்பு!இதைப் பரிசளித்த என் அன்புத் தோழி க்ரிஸ்டீனாவிற்கு என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!

https://www.facebook.com/BilingualLibrary/

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம், சந்திப்பு
அடுத்த கட்டுரைகுமரியின் அழகு- கடிதங்கள்