குமரியின் அழகு- கடிதங்கள்

அன்புள்ள அப்பாவுக்கு,

நீங்கள் நலம் தானே.

குமரித்துறைவியின் காட்சிகள் என்னை கண்ணீர் நிறைந்த விழிகளுடன் வாசிக்க வைத்தது. உயர்ந்த தருணத்திலும் உயர்ந்த தருணத்தை தந்தது எனக்கு. மீனாட்சி அன்னையின் திருமண அரங்கத்தில், அன்னையின் தரிசனத்தை மெய்சிலிர்க்க கண்டு கொண்டேயிருந்தேன். அன்னையின் நாணம், விளையாடும் நிகழ்வுகள் மென்சிரிப்போடு கண்டேன்.

அம்மை அணிகள் பூண்டு, “தன் செல்லக்குட்டி மகள்னு தோணிப் போட்டுதே” என்னும் வரிகள் அம்மையை ததும்பிய குழந்தை வடிவில் காணச் செய்தது. அவள் சிறு குழந்தை போல சிரிக்கிறாள். “எனக்கு அவள் அடங்காப் பிடாரி மகள், அப்பப்ப நல்ல நாலு வார்த்தை சொல்லி கண்டித்து வைப்பேன் அடம்புடிச்சா ஒரு ரெண்டு அடிபோடுறதும் உண்டு” என்று ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் சொல்லும் போது அம்மை சிரித்தும், உற்சாகமாக இருக்கிறாள் என தோன்றுகிறது.

மேலும் பிள்ளையாரின் குறும்புகள் என்னை மிகவும் கவர்ந்தது. அம்மை திருமஞ்சன நீராட்டுக்கு செல்கையில் பிள்ளையார் வெளியே நின்று மோதகம் சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது. அரசர் மீனாட்சி அம்மையை மடியில் வைத்து உச்சி முகர்ந்தது. அரசரின் காய்ச்சல். அம்மை பல்லக்கில் சரிந்து சிரித்த விளையாட்டு கண்ணீருடன் காணச் செய்தது.

கண்ணீரூடன், மனத்தில் எதும் இல்லாமல் திகைத்து நின்று இருந்தேன் குமரித்துறைவியின் அரும்பெரும் விஸ்வரூபத்தால்…..

ஆசானுக்கு நன்றி. இப்பெரும் தரிசனத்தை அளித்ததற்காக… மிகவும் தெய்வீகமான புத்தகத்தை வெளியிட்ட விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்

காயத்ரி தனசேகரன்

***

அன்புள்ள ஜெ

குமரித்துறைவியின் வாசிப்பு என் நெஞ்சில் ஒரு பெரும் நிறைவை உருவாக்கியது. நான் நவீன இலக்கியங்களை தொடர்ந்து வாசித்து வருபவன். இலக்கியங்கள் எனக்கு ஒரு வகையான விடுதலையை அளிக்கின்றன. தியானம் என்றெல்லாம் பலவற்றை பயில்கிறார்கள். நான் நூல்வாசிப்பே நல்ல தியானம் என நினைக்கிறேன். உண்மையில் இதன் பயன் என்ன என்று பலருக்கு தெரியாது. அன்றாட வாழ்க்கையில் சின்னச்சின்ன சிக்கல்களும் சிறுமைகளும் நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. வம்புகள், குடும்பப்பூசல்கள், அரசியல் சில்லறைத்தனங்கள் என்று அதெல்லாம் பலவகை. நம் மனம் நம்மையறியாமலேயே அதிலெல்லாம் ஈடுபடுகிறது. அது நம்மை பலவீனப்படுத்துகிறது. நம்மை மனச்சள்ளைகளில் கொண்டுபோய் விடுகிறது. இலக்கியவாசிப்பு நம்மை அதில் இருந்து விடுவிக்கிறது. ஒரு விலகிய தன்மை வந்துவிடுகிறது. அந்த விலகிய தன்மை இருந்தாலே நாம் நம்மை படுத்தும் பாதி விஷயங்களில் இருந்து தப்பித்துவிடலாம்.

இதனால்தான் நாம் வாசிக்கிறோம். ஆனால் அந்த வாழ்க்கை ஆண்டிவைரஸ் சீரம் மாதிரி. வைரஸ்தான். ஆனால் வீர்யமிழந்தது. நிஜவாழ்க்கையிலுள்ள எல்லா அற்பத்தனமும் குரூரமும் அநீதியும் இலக்கியத்திலும் இருந்தால்தான் நம்மால் அதை உண்மை வாழ்க்கை என நம்ப முடியும். அதில் திளைக்க முடியும். அதேசமயம் அது இலக்கியமென அறிந்திருப்பதனால் அது நமக்கு துக்கம் அளிப்பதில்லை. நிஜவாழ்க்கை அளிக்கும் துக்கங்களை இல்லாமலும் ஆக்குகிறது. எனக்கு வயது அறுபத்தேழு. இதுவரை நான் வாழ்க்கையில் கண்ட அனுபவம் இது. வாசிப்பை பிடித்துக்கொள்ளுங்கள். அல்லது தன்னலமில்லாத ஏதாவது சேவையை. அல்லது அதுமாதிரி வேறேதாவது.

ஆனால் இந்த வாசிப்பிலேயேகூட குமரித்துறைவி ஒரு bliss என்பதைச் சொல்லத்தான் வேண்டும். முழுக்கமுழுக்க இலட்சியக்கனவு மாதிரியான நாவல். ஆனால் முழுக்கமுழுக்க வாழ்க்கை என்று நம்பவும் வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் சுபாவ முழுமையுடன் வருகிறது. தெய்வங்களுக்குக் கூட துல்லியமான குணச்சித்திரம் இருக்கிறது. திரும்பத் திரும்ப வாக்கவேண்டிய புத்தகம்.

எஸ்.ஆர்.என்.கிருஷ்ணன்

***

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைஎரிமலர்-வாசிப்பு
அடுத்த கட்டுரைசடமும் சித்தும் – அந்தியூர் மணி