குமரித்துறைவியின் விழா

ஆரல்வாய்மொழியில் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிழாவுக்குச் செல்லவேண்டும் என்று குமரித்துறைவி எழுதியதுமே முடிவெடுத்திருந்தேன். அங்குசெல்ல ஓரிரு நண்பர்களை மட்டும் அழைத்துச் செல்லலாம் என தோன்றியது. அதன்பின் வரவிரும்பும் நண்பர்கள் வரட்டுமே என முடிவுசெய்து இணையத்தில் அறிவித்தேன். ஏற்கனவே வருவதாகச் சொன்ன நண்பர்கள் தவிர புதியதாக நான்குபேர் வருவதாகச் சொன்னார்கள்.

அரவிந்தன் இராஜபாளையம், ராஜேஷ் கண்ணன், முருகேசன், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அவர் மனைவி கிருபா, நிகிதா, இளம்பரிதி, திருப்பூர் அழகுவேல், மாயவரத்தில் இருந்து யோகேஸ்வரன் ராமநாதன், திருவனந்தபுரத்திலிருந்து கே.பி.வினோத் ஆகியோருடன் நானும் ஷாகுலும் என பன்னிருவர். நிகிதாவுக்கும் கிருபாவுக்கும் தோவாளையில் ஓட்டலில் அறைபோடுகிறோம் என்று சொல்லியும் மறுத்துவிட்டு எங்களுடனேயே தங்கினர்.

ஆரல்வாய்மொழியில் ஏதாவது விடுதியில் தங்கலாமென நினைத்திருந்தேன், அங்கே விடுதிகள் ஏதுமில்லை. ஆரல்வாய்மொழியில் அறிஞர் அண்ணா கல்லூரி ஆய்வகத்தில் பணியாற்றும் செந்தில் என்னும் நண்பர் வழியாக சக்தி என்னும் நண்பரின் இல்லம் ஏற்பாடு செய்யப்பட்டது. சக்தி அருகிலேயே டீக்கடை வைத்திருக்கிறார். அது அவருடைய அம்மா தங்கியிருந்த வீடு. அம்மா மறைந்தபின் வீட்டை அப்படியே வைத்திருக்கிறார். (வீட்டுக்குப் பெயர் தாயகம்) சனிக்கிழமை மதியசாப்பாட்டுக்குப் பின் அங்கே சென்றோம்.

பனங்கை உத்தரம் மீது செங்கல் அடுக்கி டெரெஸ் போட்டு கட்டப்பட்ட அறுபதாண்டுகள் பழைய வீடு. அங்கு வாழ்ந்த அன்னையின் தடங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்கள் வழிபட்ட சாமிகள், அவர்களின் பிள்ளைகளின் படங்கள். இரண்டு சிறிய அறைகள். பழங்கால புகைப்படங்கள் மங்கலடைந்திருந்தன, ஐம்பதாண்டுகள் பழைய சிவகாசி காலண்டர்கள் மேல் புகைமூட்டம்போல ஒன்று. அடிப்படை வண்ணங்களில் ஒன்று மறைந்துபோய்விட்டிருக்கிறது. எளிதில் மறையும் அந்த வண்ணம் எது?

சட்டென்று ஓர் அயலூருக்கு வந்து அந்த வாழ்க்கையில் கலந்துவிட்ட உணர்வை அந்த வீடு அளித்தது. நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். மாலை நான்கு மணிக்கு எழுந்து வெயில் முறுகி சிவந்து நின்ற நேரத்தில் ஆரல்வாய்மொழியைச் சுற்றிவந்தோம். ஊர் அப்போதுதான் தூங்கி எழத்தொடங்கியிருந்தது. வெயில் ஓய்ந்ததும் தெருநிறைத்து கடைபோட்டிருந்தவர்கள் பொருட்களை பரப்ப ஆரம்பித்தனர். வாணலிகளில் ஜீரா கொதிக்க இனிப்புசேவுகள் பிழியப்பட்டன.

அது ஒன்பதாம்திருவிழா நாள். பெண்கள் எழுந்து முற்றங்களில் நீர்தெளித்து கோலம்போடத் தொடங்கியிருந்தனர். ஊர் முழுக்க தெளிக்கப்படும் நீர் எழுப்பும் நனைந்தபுழுதியின் வாசம், நீராவி காதில் வந்து தொட்டது. பெண்கள் குளித்து ஈரத்தலைமுடியுடன் இருந்தனர். இன்னமும் பழைய வீடுகளில் கருங்கல் திண்ணைகள் இருக்கின்றன. அங்கே அமர்ந்து சும்மா சாலையை பார்த்துக்கொண்டிருக்கலாம்

ஆரல்வாய்மொழி வழியாக விரைவாக ரயிலில் அல்லது பேருந்தில் கடந்துசெல்வதே என் வழக்கமாக இருந்தது. நான் கடைசியாகப் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்திற்கு வந்தது 1983ல், நாற்பதாண்டுகள் ஆகப்போகின்றன. அன்று பெரும்பாலான வீடுகள் ஓலைக்கூரை கொண்டவை. இன்று ஊர் மிகச்செறிவாக சந்துகள், தெருக்கள் என பிரிந்து சென்றுகொண்டே இருந்தது. நாகர்கோயிலின் ஒரு நெரிசலான பகுதிபோல இருந்தது.

ஆரல்வாய்மொழியை சுற்றித்தான் ஆசியாவிலேயே அதிகமான  மின்னுற்பத்தி விசிறிகள் உள்ளன. அவற்றுக்கான பணியாளர்களுக்காக அங்கே வீடுகள் ஏராளமாக வாடகைக்குச் செல்கின்றன. ஆகவே ஊர் செறிவாகிவிட்டது. இந்த ஊரை வடக்கூர் என்கிறார்கள். இது புதியதாக உருவாகி வந்த இடம். நூறாண்டுகளுக்கு முன்பு ஊர் கோயிலுக்கு தெற்காக மலையடிவாரத்தில் இருந்தது. அங்கே இப்போது காற்றாடிகள் சுழன்றுகொண்டிருந்தன. ஒவ்வொன்றும் வானில் இருக்கும் ஒரு வீடு அளவு பெரியது, ஒரு குடும்பம் தங்கலாம் என்று சக்தி சொன்னார்

காரில் ஏறி ஒரு கிலோமீட்டர் அப்பால் ஓடும் பேச்சிப்பாறை கால்வாய்க்குச் சென்று குளித்து வந்தோம். தெளிந்த நீர் நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது. மிக அருகே, தொட்டுவிடலாமென்பதுபோல மலைகள். கால்வாய் அதுவரை எந்த நகரம் வழியாகவும் வரவில்லை என்பதனால் நல்ல தூய நீர். நீண்டநாட்களுக்கு பின்னர் நீந்தித் துழாவி குளித்தேன்.

திரும்பிவந்து வேட்டி சட்டை மாற்றிக்கொண்டு கோயிலுக்குச் சென்றபோது சட்டென்று ஊரே பூத்துவிட்டதுபோல தெருக்களெங்கும் நூற்றுக்கணக்கான கோலங்கள். அண்மையில் கோலப்புத்தகங்கள் வழியாக கோலம் என்னும் கலைவடிவமே பலமடங்கு விரிந்துவிட்டது. விதவிதமான வடிவங்கள். கோலத்தின் தனித்தன்மை என்பது சமச்சீர் வடிவம்தான். எந்த திசையிலும் ஒரேபோல இருப்பது. ஆனால் அதையெல்லாம் இன்றைய கோலங்கள் உதறிவிட்டன. கோலத்திலேயே செவ்வியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாம் இருக்கும்போல.

பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயம் பின்பக்கம் அமைந்த வேளிமலையின் செங்குத்தான சிகரங்களுக்கு கீழே அமைந்துள்ளது. அங்கே உண்மையில் சாஸ்தாவாக இருந்தவை இரண்டு இயற்கையான சிறுபாறைகள். அவை சுயம்புவாக தோன்றிய சாஸ்தா என தொன்மம். சாஸ்தாவின் இரு துணைவியரும் அருகே உள்ளனர்.

சாஸ்தாவின் கருவறை சிறியது. பின்னர் ஒவ்வொரு தெய்வமாக வந்துசேர்ந்தனர். மீனாட்சிக்கு தனி கருவறை. பக்கவாட்டில் சுந்தரேஸ்வரரின் கருவறை. சுற்றுப்பிரகாரத்தில் பிள்ளையாருக்கும், பெருமாளுக்கும், முருகனுக்கும், காலபைரவனுக்கும், சனீஸ்வரனுக்கும் எல்லாம் சிறு சன்னிதிகள். மதுரை மீனாட்சிக்கு மதுரை தவிர இங்குமட்டுமே ஆலயம் உள்ளது என்று சொல்லப்படுகிறது

இது ஒரு நடுத்தர ஆலயம். இதேபோல பல கருவறைகள் கொண்ட நடுத்தர ஆலயங்கள் குமரிமாவட்டத்தில் பல ஊர்களில் உள்ளன. லக்ஷ்மி மணிவண்ணனின் தந்தைக்கான மோட்சதீபம் சடங்குக்காக தெங்கம்புதூரில் இருந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். இதேபோன்ற ஆலயம் அது. அங்கே பேசிக்கொண்டிருந்தபோது இந்த ஆலயத்தின் நினைவு வந்தது.

அன்று குமரித்துறைவிக்கு அடிப்படையான தொன்மம் பற்றி ஜி.எஸ்.எஸ்.வி நவீன், அஜிதன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதுவரை எண்ணிய எல்லாமே அலையலையாக எழுந்து வந்தன. அப்போதுகூட அதை எழுதுவேன் என நினைக்கவில்லை. மறுநாள் தோன்றிய அகஎழுச்சியில் மறுநாளே குமரித்துறைவியை எழுதிவிட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாபெரும் திருமணம் போலவே நிகழ்கிறது இவ்விழா. ஒவ்வொருநாளும் ஐந்தாயிரம் பேர் சாப்பிடுகிறார்கள். பின்பக்கம் சமையலறையில் இட்லி வேகவைத்து கொட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஊட்டுபுரையில் முந்நூறு பேர் அமரலாம். வெளியே ஐநூறுபேர் அமரும்படி நாற்காலிகளும் மேஜையும் போட்டிருந்தார்கள்.

தெப்பக்குளம், சுற்றிவரும் முற்றம் என விரிவான ஆலய வளாகம். முகமண்டபத்தில் குதிரை வாகனம் அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. அங்கே சித்திரைத் திருநாள் பாலராமவர்மாவுக்கு அண்மைக்காலச் சிற்பம் ஒன்று தூணில் உள்ளது. மலர் அலங்காரத்தில் ஊர்க்காரர்களே ஊக்கத்துடன் ஈடுபட்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள். இரவுபகலாக ஓடியாடி, வெயிலில் அலைந்து கருமையும் மெலிவும் கொண்ட உடல்கள். எலிக்குஞ்சுகளின் தீவிரம். செவிதுளைக்கும் கீச்சுக்குரல்கள்.

இத்தகைய சிறிய ஊர்களில்தான் ஊரே கூடி திருவிழா கொண்டாடுவது நிகழ்கிறது. சின்னப்பயல்களும் எல்லா வயதுப் பெண்களும்தான் மொத்தமாகவே உற்சாக நிலையில் காணப்பட்டனர். இளவயது பையன்கள் அதிகபட்சம் பிளஸ்டூ படிப்பு வயது வரை. அதன்பின் பெரும்பாலானவர்கள் ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அங்கே பெருமாள் பிள்ளை என்பவரின் மகன் கலிஃபோர்னியாவில் இருக்கிறார். அவரிடம் ஸூமில் பேசினேன். இன்னொருவர் குவைத்தில். அவரிடமும் பேசினேன். அவர் பழைய தொழிற்சங்கக்காரர். மனைவியுடன் ஆரல்வாய்மொழியிலேயே இருக்கிறார்.

இன்னொருவர் என்னைப்பார்க்க வந்தார். திரவியம், சுந்தர ராமசாமியின் கடையில் கடைப்பையனாக வேலைபார்த்திருக்கிறார். எழுபதுகளில் இருந்த இலக்கியச்சூழலில் அறிமுகம் ஏற்பட்டபின் வேளாண்மைத்துறையில் வேலைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் தொடர்ந்து இலக்கியம் வாசிக்கிறார், எழுதுகிறார். சித்தர்களின் ஆன்மிகம், இந்திய விடுதலைப்போரில் வ.உ.சி. என்னும் இரு நூல்களை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நாஞ்சில்நாடன் முயற்சி எடுத்து அவை வெளிவந்துள்ளன. நல்ல நூல்கள் என காலையில் படித்தபோது உணர்ந்தேன்

சாயங்காலம் கோயிலில் தீபாராதனை தொழுதுவிட்டு வந்தோம். ஆரல்வாய்மொழி தேர்வுநிலை பேருராட்சி தலைவர் முத்துக்குமார் உற்சாகமான இளைஞர். அப்பகுதி எங்கும் எல்லா வேலைகளிலும் அவர் முகம்தான். சப்பரம் தூக்குதல், தம்புரான் விளையாட்டு எல்லாவற்றிலும் அவர் ஈடுபடுவதைக் கண்டேன். ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டவர் (அதிமுக ஆதரவாளர் என நினைக்கிறேன். தளவாய் சுந்தரத்துடன் பல போஸ்டர்களில் தென்பட்டார்). அவர் என்னை மேடையேற்றி ஒரு பொன்னாடையை போர்த்தி என் வரவுக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஏழுமணிக்கு அருகிலிருக்கும் ஒரு வீட்டின் மொட்டைமாடியில் ஏறி நின்றுகொண்டோம். எட்டு மணிவரை நாதஸ்வரக் கச்சேரி. கன்யாகுமரி மாவட்டத்தில் பொதுவாக அபூர்வமான நல்ல நாதஸ்வர இசை. அதன்பின் தேவாரப் பண்ணிசை.

ஒன்பது மணிக்கு தம்புரான் விளையாட்டு என்னும் அனுஷ்டான கலை. அது ஒரு பெரிய சப்பரம். மூன்று தாங்குதடிகள் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஒரு பக்கத்திற்கு ஆறுபேர் வீதம் முப்பத்தாறுபேர் சேர்ந்து தூக்கவேண்டும். அத்தனைபேர் தூக்கினால்தான் அதை மேலேற்ற முடியும். ஒரு டன் எடை இருக்கலாம்.சப்பரத்தின் மேல் ஒரு மரக்குதிரை. அது தாவுவதுபோல முன்னும் பின்னும் அசையும். அப்போது அதன்மேல் ஆரோகணித்திருக்கும் தெய்வம் அசையாது. அந்த குதிரையை அப்படியே பிடித்துச் சுழற்ற முடியும். அப்போது குதிரையுடன் மேலிருக்கும் சாமியும் சேர்ந்து பம்பரம்போல சுழலும்.

அந்தச் சப்பரத்தை தூக்கி முன்னும்பின்னும் ஓடி சுழன்று சுழன்று வரும் ஒருவகை நடனம்தான் தம்புரான் விளையாட்டு. அதில் எழுந்தருள்பவர் சாஸ்தா. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பாதுகாவலரான அவர் தீயசக்திகளை துரத்தும்பொருட்டு நிகழ்த்தும் வீரவிளையாட்டு நிகழ்ச்சி அது.

இரண்டு மணிநேரம் செண்டையின் தாளத்துடன் அது நிகழ்ந்தது. முப்பத்தாறுபேர் எந்த கட்டளையும் இல்லாமல் உடல்வழியாக வந்தடையும் அசைவுகளையே தொடர்பாகக் கொண்டு ஒரே உள்ளமாக ஆகி அதை ஆடவேண்டும். கைதளர்ந்து ஒருவர் விலகினால் உடனே இன்னொருவர் செல்லவேண்டும். சிலர் விழுந்தார்கள், உடனே தூக்கி அப்பால் அகற்ற ஆளிருந்தது. உச்சகட்ட உடலாற்றலும் உளவிசையும் வெளிப்படும் ஒரு நிகழ்கலை.

பழங்காலத்து திருவிழாக்கள் எல்லாமே போரின் இன்னொரு வடிவங்கள்தான். திருவிழாக்கலைகள் எல்லாமே போர்க்கலைகளின் அணிவெளிப்பாடுகள். இதுவே போரில் சப்பரம் என்றும் மேடை என்றும் அரங்கு என்றும் சொல்லப்படும் ஒரு போர்முறைதான். குதிரைகள் குறைவான கேரளத்தின் பழைய சண்டைமுறைகளில் ஒன்று. மூங்கிலால் ஆன ஒரு மேடையை பலர் தூக்கிச் செல்வார்கள். அதன்மேல் முழு இரும்புக் கவசம் அணிந்த ஒருவரோ இருவரோ நால்வரோ இருப்பார்கள். அவர்கள் அங்கிருந்துகொண்டு அம்பு செலுத்தியோ அல்லது நீண்ட ஈட்டிகளாலோ எதிரிகளை தாக்குவார்கள். எதிரிகளிடமிருந்து அவர்களை இரும்புக் கவசம் காப்பாற்றும். அவர்கள் உயரத்தில் இருப்பதனால் அவர்களின் தாக்குதல்கள் துல்லியமாக இருக்கும்.

இரும்புக்கவசம் அணிந்த வீரன் அந்த எடையுடன் நடக்க முடியாது என்பதனால் சப்பரத்தில் ஏறிச்சென்றான். குதிரை வந்தபின் குதிரையில் கவசத்துடனும் நீண்ட வாளுடனும் செல்ல ஆரம்பித்தான்.

பத்தரை மணிக்கு தம்புரான் விளையாட்டு முடிந்ததும் பின்பக்கம் சென்று இட்லி சாப்பிட்டோம். அறைக்கு வந்து ஆடை மாற்றிவிட்டு மீண்டும் கோயிலுக்குச் சென்றபோது தம்புரான் ஊரை ஒருசுற்று சுற்றிவந்து வெளியே ஒரு முற்றத்தில் நின்றிருந்தார். அங்கே மாபெரும் வாணவேடிக்கை. அதன்பின் ஓட்டம், ஊசலாட்டம் ஏதுமில்லாமல் மெல்ல கோயிலுக்குச் சென்றார். அவருக்கு ஆடிய களைப்பு தீர விசிறி விட்டுக்கொண்டிருந்தனர்.

இரவு ஒரு மணிக்கு அறைக்கு வந்தோம். மேலும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரண்டு மணிக்கு தூங்கினோம். காலையில் நான்கு மணிக்கு எழுந்து கோயிலுக்கு செல்லலாம் என்று திட்டம். ஆனால் எழுந்தபோது ஏழு மணி. ஆகவே சக்தி கடையில் டீ குடித்துவிட்டு கால்வாய்க்குச் சென்று நீராடிவந்தோம். திருக்கணங்குடியில் இருந்து ஸ்ரீனிவாசன், சுதா வந்திருந்தார்கள். டாக்டர் தங்கவேலும் உடன் வந்தார்.

காலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் காளை வாகனங்களில் ஊரைச்சுற்றிவந்தனர். கூட்டமில்லை. ஊரே தூங்கி வழிந்து கிடந்தது. பெண்கள் மட்டும் வாசலில் நின்று சாமியை கும்பிட்டனர். ஆனால் எல்லா வீடுகளிலும் புதிய கோலங்கள் இருந்தன. விடியற்காலையில் எழுந்து கோலம்போட்டபின் மறுபடி தூங்கிவிடுவார்கள் போல.

மதியம் வரை பேசிக்கொண்டிருந்தோம். அதன்பின் ஒரு குட்டித்தூக்கம். ஐந்து மணிக்கு அருகே உள்ள அகலிகை ஊற்று என்னும் இடத்திற்குச் சென்றோம். அது திருவாவடுதுறைக்கு சொந்தமான ஒரு துணைமடம். அகஸ்தியலிங்கம் என்பவர் 1956ல் அதை எடுத்து கட்டியிருக்கிறார். அருகே என் நினைவேக்கங்களை கிளர்த்தும் பழைய கட்டிடம்.

அதில் உள்ளூர் சிறுவர்களின் இசைமேளங்கள் வந்து சேர்ந்திருந்தன. முரசு, முழவு, குழல், நாகரா, கொட்டு, கொம்புகள் எல்லாம். அருகே உள்ள தெப்பக்குளம்தான் அகலிகை ஊற்று. அதைச்சுற்றி படிக்கட்டுகளும் சுற்றுமண்டபமும். அதில் மறைந்த சித்தர் ஒருவரின் சமாதி கோயிலாக இருக்கிறது. அகத்தியர், முருகன், பிள்ளையார், காலபைரவன் என தெய்வங்களுக்குச் சிறு சன்னிதிகள்.

வடக்கூரில் இருந்து விலகி தனியாக  ஓர் ஏரிக்கரையில் அமைந்திருக்கிறது இந்த இடம். இதைச்சுற்றித்தான் பழைய ஆரல்வாய்மொழி அமைந்திருந்தது. அது நகர்ந்து வடக்கூராக ஆகிவிட்டது. இப்போது இந்த இடம் பழைய ஏதோ காலத்தில் பிரமைபிடித்ததுபோல இருக்கிறது.

அங்கே காளைவாகனத்தில் இரு சப்பரங்களில் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கும் முருகனுக்கும் அலங்காரங்கள் செய்துகொண்டிருந்தனர். பூவாலேயே மொத்த சப்பரமும் அலங்காரம் செய்யப்பட்டது. அதற்கென்றே தோவாளையில் இருந்து ஒரு கோஷ்டி வந்திருந்தது. உள்ளே பூசைகள் முடித்து வந்ததும் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் இருந்து மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் ஊர்க்கோலம் கிளம்பினார்கள். அவர்கள் ஆலயம்புகும்போது பத்துநாள் திருவிழா நிறைவுறும். பன்னிரண்டு மணிக்குள் கொடி இறங்கும்.

ஒன்பது மணிக்கு சக்தி வீட்டுக்குச் சென்று அவர் அளித்த டீயை அருந்தி நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம். ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். நான் பத்து மணிக்கு வீட்டுக்கு திரும்பினேன். வீட்டில் அருண்மொழி, சைதன்யா, அஜி மூவரும் திருவனந்தபுரம் திரைவிழா சென்றிருந்தனர். எனக்கு அதைவிட இதுவே முக்கியம் என தோன்றியது.

திருவிழா என்பதைப்பற்றி தொடர்ந்து சொல்லிவருகிறேன். ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் வாழ்பவர்கள் அந்தப் பத்துநாளும் இருக்கும் நிலை என்பது ஓர் அரிய விடுதலைநிலை. அப்படி ஒருவரின் ஆயுளில் நினைவறிய அறுபது எழுபது விழாக்களை பார்க்கமுடியும். வாழ்க்கை என்பதே அவ்வளவுதான். அதில் மகிழ்வுக்குரிய எந்த தருணமும் விடுதற்குரியவை அல்ல. சில்லறை ‘பகுத்தறிவு’, நம்மை ஒரு படி மேலாக எண்ணிக்கொள்ளும் பலவகை ஆணவங்கள் வழியாக சமூகத்தின் கூட்டுக்களியாட்டங்களை இழந்தால் உளச்சோர்வுக்கே செல்வோம்.

உலகியல்வாழ்க்கையில் செல்வம் ஈட்டுவதும் நுகர்வதும் முக்கியம்தான், ஆனால் அவற்றுக்கிணையானவை இத்தகைய களியாட்டுகளும். பழங்குடிச் சமூகங்கள் முதல் அதிநவீன சமூகங்கள் வரை அவை வெவ்வேறு வகையில் உள்ளன. இத்தகைய களியாட்டுகளை எழுபதுகளின் ‘இருத்தலியல்’ அலையால் தவறவிட்டுவிட்ட ஐரோப்பா ஒவ்வொரு ஊரிலும் இவற்றை மீண்டும் நிகழ்த்திக்கொண்டிருப்பதை, சொல்லப்போனால் அவற்றை செயற்கையாக மீண்டும் நடிக்க முயல்வதை, நேரில்கண்டு எழுதியிருக்கிறேன். அவை மீண்டும் இயல்பான களியாட்டுகளாக ஆக ஓரிரு தலைமுறை ஆகும்.

நாம் பல ஊர்களில் இவற்றை இழந்துகொண்டிருக்கிறோம். நகர்மயமாதல் ஒரு காரணம், நகரங்களில் வாழ்பவர்களுக்கு இவையெல்லாம் கிராமியத்தனமானவை, பிற்பட்டவை என்னும் எண்ணம் உள்ளது. பழைய ஊர்க்கட்டுப்பாடுகள் அழிந்துவிட்ட இடங்களில் திருவிழா என்றாலே குடிகாரர்களின் சலம்பல் என்றாகி மக்கள் விலகிச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மிதமிஞ்சிய வணிகமயமாக்கம் இன்னொரு அழிவு. இறுதியாக இந்தவகையான கொண்டாட்டங்களை அரசியலாக்குவது மிகப்பெரிய அழிவு. இவை ஒற்றுமைக்கானவை, அரசியல் பிளவுகளையும் சண்டைகளையுமே கொண்டுவரும். பல ஊர்களில் விழாக்கள் அரசியல் காரணமாக அடிதடியில் முடிந்து நின்றுவிட்டிருக்கின்றன.

இரண்டுநாட்கள் ஒரு தீவிரமான சிறு வாழ்க்கை. உச்சங்கள், கொண்டாட்டங்கள் மட்டுமே கொண்ட வாழ்க்கை. இதே மனநிலையில் மதுரை மீனாட்சி கல்யாண நிகழ்வுக்கும் செல்லவேண்டும். அங்கே அருகிலுள்ள இல்லங்களில் தங்கி அந்த மையத்தில் ஒருநாள் இருக்கவேண்டும் என திட்டம்.

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு – பதிவுகள்
அடுத்த கட்டுரைவெண்முரசு நிறைவுக்குப்பின்…