தங்கப்புத்தகம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள் வாங்க

தங்கப்புத்தகம் குறுநாவல். மூலநூல்களையும் அதன் வழி வரும் பாடபேதங்களையும் நாம் அணுகும் முறை கொண்டு உருவான கதை. ஒரு சாகசத்தன்மை மீதுரப்பெற்றுள்ள படைப்பு.

மனம்போன போக்கில் புரிந்து கொள்வதைப் பாடபேதம் என்று கூறுவர். அதற்கு வாசகன் மட்டுமே இருப்பான். இக்கதையும் அப்படியான ஒன்றுதான். அந்த இரண்டு வாசகர்கள் பற்றிய கதை இது.

திபேத் என்ற பீடபூமியை ஆக்கிரமிக்க பிரிட்டிஷ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலமாகவே விரும்பின. அதற்குள் ஒற்றர்களை அனுப்பி அதன் சமூக-அரசியல்-புவியியல் நிலைப்பாடுகளை அறிய முயன்றனர். எனினும் அதன் ஞான மரபுகளை யாராலும் திருட முடியவில்லை. களவு போகாத பொக்கிஷமாக நிலைத்து நின்றது.

மதங்களையும் சித்தாந்தங்களையும் விமர்சனம் செய்யும் வடிகாலாகவும் இக்கதையை அணுகலாம்.

உதாரணமாக கம்யூனிசத்தின் மூல நூலான கார்ல் மார்க்ஸின் மூலதனம் என்ற நூலை வெறும் ஆணவங்களை மோதவிட்டு பொய்யைப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பியிருக்கிற ஒன்றாகவே இக்கதையின் ஓரிடத்தில் கூறப்படுகிறது. உண்மையும் அதுதான்.

முக்தா என்பவர் திபெத் சென்றிருந்தார். அங்கு ஆஸ்ரமத்தில் இருக்கும்போது கனவில் ஒரு தங்கப்புத்தகத்தைக் காண்கிறார். அந்நூலை அடைவதற்கு முக்தாவும் பாட் என்கிற ரஷ்ய உளவாளியும் முனைகின்றனர். அதன் ஒரு பக்கமே ஓராயிரம் அர்த்தங்களாக விரிவுறுகிறது. அந்த மூல நூல் முடிவில்லாத ஒன்றாக அமைகிறது. பாடபேதமே உருவாக்க முடியாத நூல் ஒன்று என்பதை அவர் மிகத் தாமதமாகவே உணர்கிறார்.

“மனிதனின் அகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்தப்பொருளும் கொலைக்கருவியாகக் கூடும். உதாரணமாக, தன் நினைவின் மீதான நம்பிக்கை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பது. ஆனால் ஒரு சுழல்வழிப்பாதை அந்நம்பிக்கையைக் கொண்டே அவனைக் கொன்றுவிடும்… இந்த இடமும் இந்த புத்தகமும் அப்படிப்பட்டவை” என்று கதையில் ஒரு உரையாடல் வருகிறது. இக்கதையின் மிக முக்கியமான உரையாடல் பகுதி இதுவாகும். தங்கப்புத்தகம் பற்றிய உண்மையான கருத்து இது.

ஆனால் அவருடன் கூட இருக்கும் ரஷ்ய உளவாளி அந்த நூலை அப்படியே எடுத்துக் கொண்டு செல்ல முனைகிறான். அவன் திரும்பமுடியாத பாதாளத்தில் அகப்பட்டு காணாமல் போகிறான். முக்தா பூரணமாகாத பாடபேதங்களுடன் பழைய ஆஸ்ரமம் திரும்புகிறார்.

“நம்மால் வெறும்வெளியில் ஒரு நூலை உருவாக்கிக் கொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். முன்பே ஒரு நூல் இருக்கவேண்டும். அதை நாம் கனவு காணவேண்டும். அதைத்தேடி வரவேண்டும். அரியபொக்கிஷம் போல அடையவேண்டும். அதை அணுவணுவாக நகல்செய்தோம் என்று நாம் நம்பவேண்டும். அதை வழிபடவேண்டும். அதைத்தான் நாம் உலகுக்குச் சொல்லமுடியும்.”

இக்கதையின் மிகப் பெரிய அர்த்தமாகத் திருப்தியின்மை அல்லது முடிவின்மை முன்வைக்கப்படுகிறது. அது கற்றலின் தேடலின் ஊழ்கத்தின் முடிவின்மை என்று நாம் கருதலாம்.

சமகாலநூல்களை மட்டுமே படிக்கும் ஒருவனைப்போல மடையனையே நாம் பார்க்கமுடியாது. அவன் அலைகளை மட்டுமே கண்டு கடலை அறியாதவன் என்றும் கூறுகிறார். நிச்சயமாக இக்கதை ஜெயமோகனின் மிகச்சிறந்த குறுநாவல்களில் ஒன்று என்றே கருதமுடியும். இக்கதையைக் கூட தங்கப்புத்தகம் போல பல திசைகளில் இருந்து உருவாகும் முடிவின்மைக்குள் வகைப்படுத்தலாம்.

சுயாந்தன்

***

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைசடமும் சித்தும் – அந்தியூர் மணி
அடுத்த கட்டுரைஅந்த இருபதாயிரம் நூல்கள்…