நம் இனவெறி
நாம் நிறவெறி உடையவர்களே! குழந்தை பிறந்தது என்ற செய்தி கேட்டதும் முதல் கேள்வி பையனா, பொண்ணா? பொண்ணா இருந்தா, எப்படி கலர்? கல்யாண பேச்சு வார்த்தை ஆரம்பமே பெண் சிவப்பா? இல்லப்பா, பெண் மாநிறம் தான். ஆனால் நல்ல வசதி, நல்லா வேலை எல்லாம் செய்வாள்.
நம் பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களில் இந்த நிறவெறி வெளிப்படையாக தெரியும். தப்பித் தவறி யாரேனும் கருப்பு நிற கதாபாத்திரங்கள் தென்பட்டால், அவர்கள் ஏழைகள், வேலைக்காரர்கள், கேலி செய்யப்படக் கூடியவர்கள், அனுதாபத்துக்கு உரியவர்கள் அல்லது எதிர்மறை வில்லன் கையாட்கள்.
கவனிக்கவும், முக்கிய வில்லன்கள் கூட அல்ல. வெள்ளைக்காரன் நம்மை ஆட்சி செய்வதை விட்டுப்போய் 75 ஆண்டு ஆகிவிட்டாலும் நாம் மனதளவில் இன்னும் வெள்ளைக்கார அடிமைகளாகவே தான் இருக்கிறோம். Fair & lovely விற்பனை ஒன்றே போதும் இந்த தாழ்வு மனப்பான்மையினை அடையாளம் காட்ட.
ராமசாமி தனசேகர்
***
அன்புள்ள ராமசாமி,
சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு மகாபாரத தொடருக்கு எழுதுவதாக இருந்தது. அப்போது என் கற்பனையில் திரௌபதி கறுப்பு, ஒரு கரிய அழகியை தெரிவுசெய்யலாம் என்றேன். அய்யய்யோ என பாய்ந்து எழுந்து கத்திவிட்டார்கள். நினைத்தே பார்க்கமுடியவில்லை எவராலும்.
தமிழில் கதாநாயகன் கருப்பாக இருக்கலாம், கதாநாயகி கருப்பாக இருக்க முடியாது. தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது.
அன்று ‘ஒய் நாட்? வி கென் ட்ரை’ என்றவர் வட இந்தியரான தயாரிப்பாளர். ஆனால் நம்மூர்க்காரர்கள் அதை கற்பனைகூட செய்ய மறுத்துவிட்டனர்.
ஜெ