சடம் [சிறுகதை] ஜெயமோகன்
அன்புள்ள ஆசிரியருக்கு,
சடம் சிறுகதையையும் அதற்கு வந்த கடிதங்களையும் படித்தேன். அச்சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பு குறித்து இங்கு விவாதம் எழவேண்டும் என்று வந்த கடிதங்கள் உணர்த்துகின்றன. அதை இல்லாத நயம் கூறல் கடிதத்திற்கான உங்கள் பதிலும் உறுதி செய்கிறது. ஆனால் நீங்கள் எழுதிய எப்புனைவினைப் பற்றியும் நீங்களே விளக்கம் கொடுப்பதில்லை எனும் நிலைப்பாடு அச்சூழலினை இங்கு ஏற்ப்படுத்தப்போவதில்லை. ஆனால் இச்சிறுகதை தத்துவப்பொருளினைப் புனைவாக எப்படி உரைப்பது என்பதற்கான அடிப்படையினை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது. அதைப் பற்றியும் நண்பர்களுடைய கடிதங்களில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதிலாக என் வாசிப்பு இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றியதால் இக்கடிதம்.
முதலில் அக்கதை இங்கு இருக்கும் பலருக்கு கலாச்சார அதிர்வினை ஏற்படுத்தி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.இன்றிருக்கும் அறிவார்ந்த பொதுவெளியில் கிரேக்கத்தில் இராணிகளின் இறந்த உடலுக்கான சிலநாட்கள் பாதுகாப்பும், எதிரிகளிடம் தங்கள் உடல்கூட சிக்கக்கூடாதென முன்னர் இருந்த அரசிகள் செய்த காரியங்களும், மனிதனின் மோசமான இச்செயலினை உணர்த்துவன. ஐரோப்பா அதை நன்கறிந்தது. எனவே அச்செயலினை மோசமான மனப்பிறழ்வெனவே வகைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆகவே இன்று இந்தியாவின் பொதுப்பார்வையென இருக்கும் ஐரோப்பியப் பார்வையினை தங்கள் பார்வை எனக்கொண்டவர்களுக்கு இது கலாச்சார அதிர்ச்சியினைத்தான் ஏற்படுத்தும். ஆனால் எனக்கு அத்தகைய அதிர்ச்சியென எதுவும் இல்லை. இந்தியாவில் இது ஏற்கனவே சடங்காக இருந்தது என்னும் நான் அறிந்த தகவல் அதிர்ச்சியடைவதற்கான வாய்ப்பினைத் தடுத்துவிட்டது எனவே அச்சிறுகதையினை அத்தத்துவப் பொருளுக்கான விளக்கமாக அமைகிறதா என்று பார்க்கும் மனநிலை ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. அதன் வழியாக சிஜ்ஜடத்தினைப் பற்றிப் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்துவிட்டது. அதனை நண்பர்களின் கேள்விகளை நானே தொகுத்து அதற்கான பதிலாக என் வாசிப்பினைப் பதிவிடுகிறேன்.
சடம் சிறுகதை சைவசிந்தாத்தத்தின் சிஜ்ஜடம் எனும் கருத்துருவினைப் புரிந்து கொள்ள உதவும் புனைவு. ஆனால் அப்புனைவின் களமும் நிகழ்வும் சில கேள்விகளை நண்பர்களிடம் எழுப்பி உள்ளது. அதில் இருக்கும் விவாதத்திற்கு உரிய கேள்விகளாக நான் கருதுபவை.
1.சராசரி மனிதன் கூட ஏற்றுக் கொள்ளாத குற்றங்களை அதிகாரம் தன்னிடம் இருப்பதன் காரணமாகச் செய்யக்கூடியவன் மனப்பிறழ்வு என சமூகம் கருதும் மாபெரும் குற்றத்தினைச் செய்வதை சைவ சித்தாந்தத்தின் தத்துவக் கருத்துருவினை விளக்க எடுத்துக் கொண்டது சரியா?
2.அவ்வாறு எடுத்துக் கொண்டால் அது எம்மோசமான குற்றங்களையும் நியாயப்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லுமே. அது சரியானதா?
3.அச்செயல் மோசமான செயல் என மனதிற்குத் தெரிகிறது.ஆனால் சிறுகதையில் இருக்கும் தத்துவவிளக்கம் புரிபடாத காரணத்தால் தான் அறிந்த தத்துவ விளக்கங்களை வாசகர்கள் கூறுகிறார்களே அது சரியா? அவற்றினை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
4.பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்வது போன்று அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக சமூகம் பொதுவில் வைத்து எண்ணாதவை எழுதாதவைகளை எழுதி அதை எழுதியவரின் அறிவின் விரிவினால் தான் உயர்வென எண்ணும் அனைத்தையும் வாசகர்கள் அதற்குரிய விளக்கம் போல கருதிச் சொல்கிறார்களே அது சரியா?
என்று எடுத்துக் கொள்ளலாம்.
முதல் கேள்வி இன்றைய பொதுப்போக்கின் அரசியல் சரிநிலையின்படி எழுப்பக்கூடிய கேள்வி. அரசியல் சரிநிலை என்பது எதிர்கருத்துள்ளவர்களுக்கு எதிரான சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்தும் சூழலில் அதனைப் பயன்படுத்தாத நபர்களுக்குரிய விளக்கத்தினைக் கோரும் மிகச் சரியான கேள்வி. அக்கேள்வி பெண்களின் பார்வையில் சரியான கேள்வியும்கூட. அதற்கான சரியான விளக்கம் புனைவிற்கான வழிமுறைகளில் அரசியல் சரிநிலைகளுக்கு இடமில்லை என்பதே.
முதலில் இச்சிறுகதையின் இறுதிதான் இங்கிருக்கும் பலருக்கு பெரும் அதிர்வினைக் கொடுப்பதாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சிலசமயங்களில் நாம் எதிர்பார்க்காமல் ஏற்படும் அதிர்வுகள் நம்மை எவ்வகையிலும் சிந்திக்க விடாமல் நிலைகுலையச் செய்வது போல இங்கும் நடந்துவிடுகிறது. அந்நிலைகுலைவே இந்தக் கேள்வியினை எழுப்புகிறது.
அவ்வாறானால் இந்த நிலைகுலைவு ஏன் இங்கு சொல்லப்பட வேண்டும். காரணம் தெளிவானது நிலைகுலைவு மற்றும் ஒருங்கிணைவு ஆகிய இரண்டின் ஊடாட்டத்தில்தான் எத்தத்துவத்தின் கருத்தினையும் நாம் புரிந்து கொள்ளவே முடியும். இது அறிதலின் பொதுவிதி.
சிஜ்ஜடம் என்பது சித்தம் ஜடத்துடன் நடத்தும் பிணைப்பினைப விளக்கும் பொருட்டு புனைவினை உருவாக்க வேண்டும் என்றால் அதன் முன் இருப்பது இரண்டு வழிகள்
1.ஒருங்கிணைவு.
2.நிலைகுலைவு.
இதில் இச்சிறுகதை எடுத்திருப்பது இரண்டாம் வகையினை.
எந்நிகழ்வுகளிலிருந்து தத்துவத்தின் கருத்தினை நோக்கிச் செல்வதாக இருந்தாலும் அதில் இருக்கும் பொதுவானவை செறிவாக்கப்பட்டு அவை சிந்தனைகளாக மாற்றப்பட வேண்டும். பின் சிந்தனைகளின் ஊடாட்டத்தில் அவை தத்துவக் கருத்துவாக மாற்றப்படவேண்டும். அந்த தத்துவக் கருத்திலிருந்து மீண்டும் நிகழ்வாக மாற்றுவதற்கு இச்செயல்முறையினையே தலைகீழாக நிகழ்த்த வேண்டியது கட்டாயமாகிறது.
இங்கிருக்கும் சிஜ்ஜடம் என்னும் கருத்துரு சித்தம் ஜடத்துடன் நடத்தும் பிணைப்பினைக் கூறக்கூடியது. அது சிந்தனையாக மாறும் போது எக்காரணிகள் எவ்வாறு சித்தம் ஜடத்துடன் நடத்தும் பிணைப்பினை உருவாக்கும் என மாறும்.அதுவே நிகழ்வாக மாறும்போது எச்சூழலில் யார் எத்தகைய செயலினைச் செய்வார்கள் என்பதாக மாறும்.
பொதுவாக தான் கூறவருவதை புனைவு மூன்று வழிகளின் வழியாக இங்கு விளக்க முயலும்.
1.நேர்த்தன்மை
எந்தக் குறைவும் இல்லாத கதாபாத்திரம் பிற குறைபட்ட பாத்திரங்களோடு நடத்தும் ஊடாட்டத்தின் வழியாகச் சொல்வது.
2.எதிர்மறைத்தன்மை
குறைகளின் இருப்பிடமான கதாபாத்திரம் பிற குறைவுபட்ட அல்லது குறை இல்லாத பாத்திரங்களோடு நடத்தும் ஊடாட்டத்தின் வழியாகச் சொல்வது.
3.சமநிலைத்தன்மை.
நிறைவும் குறைவும் கலந்த கதாபாத்திரம் தன்னைப் போன்ற அல்லது தன்னைவிட மேம்பட்ட அல்லது கீழான கதாபாத்திரங்களோடு நடத்தும் ஊடாட்டத்தின் வழியாக நடத்துவது.
இம்மூன்று வகைகளில் தான் சொல்ல வருவதனைத் தெளிவாகச் சொல்லவே முதலிரண்டு வகைகளைப் பயன்படுத்த முடியும். கதாபாத்திரங்களின் தெளிவான குண அமைப்பு சொல்ல வருவதை தெளிவாக உணர்த்திவிடும்.ஆகவே இவை முதல் இரண்டையும் பெரும்பாலும் தான் சொல்ல வருவதைத் தெளிவாகச் சொல்ல விரும்புபவரும் பிரச்சார நோக்கில் எழுதுபவரும் மட்டுமே எடுத்துக் கொள்வர். எனவே நவீன இலக்கியத்தில் இத்தன்மை பெரும்பாலும் பிரச்சாரத்திற்கான படைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சொல்வதைத் தெளிவாகச் சொல்ல முயலும்வகையில் சொல்லப்பட்டது இச்சிறுகதை.
நவீன இலக்கியம் பெரும்பாலும் மூன்றாம் வகையினையே தன் களமாக எடுத்துக் கொள்கிறது. ஏனெனில் இதில்தான் பல்வேறு வகைகளான நிறைவும் குறையும் கலந்த குணங்களினைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்க முடியும் .அவைகளின் கலப்பில் ஏற்படும சிறு குணாதிசய மாற்றம் புரியும் பல்வேறுபட்ட செயல்களைச் சொல்ல முடியும். குணங்களின் மாற்றம் 1 சதவீதத்திலிருந்து 99 சதவீதம் என்று கொண்டால் அவைகளின் செயல்களில் ஏற்படும் மாற்றம் முடிவிலியாகவே இருக்கும். எனவே வாசகன் தனக்குத் தோன்றும் அனைத்து வகைகளிலும் இவ்வகையில் சொல்லும் புனைவினை எடுத்துக் கொள்ள முடியும். புனைவின் பெருவழிப்பாதை எப்போதும் இவ்வகையாகவே இருக்கிறது. நிறைவும் குறைவும் கலந்தே அனைத்து மனிதர்களும் இருப்பதால் முதலிரண்டு வகைகளின் கதாபாத்திரத்தோடு வராத நெருக்கம் இவ்வகையின் கதாபாத்திரங்களோடு உருவாகியும் விடும். எனவே நவீன இலக்கியத்தில் இருக்கும் எல்லா சிறுகதை மற்றும் நாவல்களிலும் இத்தன்மையினையே அனைவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு மாறான இரண்டாம் வகைச் சிறுகதையினை இங்கு காணும்போது பெரும் குழப்பம்தான் இங்கு ஏற்படும். இங்கு நிகழ்ந்ததும் அதுதான்.
இக்கருத்தினை நான் மணவாளனிடம் சொன்னபோது இக்கருத்து குழப்பத்தினை ஏற்ப்படுத்துவதாக இருக்கிறது. அதனை இச்சிறுகதையின் பாத்திரங்களைக் கொண்டே விளக்க முடியுமா என்று கேட்டான். அவனுக்குச் சொன்ன விளக்கத்தினையே இங்கும் வைக்கிறேன்.
சித்தம் சடத்துடன் கொள்ளும் பிணைப்பு என்பதற்கான சைவ சித்தாந்தத்தின் விளக்கம் என்பது சித்தம் தான் அறிந்த அறிதல்களின் வழியாக எவ்வாறு சடத்தினை உயிர் கொள்ள வைக்கிறது என்பதே. இது புனைவில் சொல்லப்படக்கூடிய சாத்தியம் உள்ள மூன்று வகைகளில் நேர்தன்மையாக்கம் வகைக்கு இச்சிறுகதையில் இருக்கும் சாமியாரின் கதாபாத்திரத்தினை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
புனைவின் அடிப்படையே நாடகத்தருணங்களை உருவாக்கல் என்பதால் எக்குறைவும் இல்லாத மேன்மையானது சூழலின் ஆடலின் பொருட்டே எக்காரியத்தினையும் செய்யும். விளைவினை உணர்ந்து முன்னரே உள் புன்முறுவலுடன் அக்காரியத்தினையும் இயற்றும்.இக்கதையில் இருக்கும் சாமியார் கதாபாத்திரம் நடக்கப்போவதை நன்கு அறிந்த கதாபாத்திரம். அதைத்தான் தான் அறிந்த தத்துவக் கருத்தால் கூறுகிறார். அக்கதாபாத்திரம் அப்பெண்ணினைத் தேடிச் செல்வது என்றால் அது அப்பெண்ணின் தகப்பனே அல்லது உறவினரில் யாரோ வற்புறுததி அழைத்துச் செல்வதாகவே உருவாக்க முடியும். ஏனெனில் அப்பெண்ணினைத் தேடும் செயலினை செய்ய வைக்க அவரினைப் பணத்தினைக் கொண்டோ அதிகாரத்தினைக் கொண்டே செய்ய வைக்கவே முடியாது. எச்செயலினையும் தான் துச்சமென எண்ணும் எதற்கும் செய்யாத நிறைவுக்குணத்தின் பலவீனமான பக்கமான கருணையினைத் தூண்டியே அக்காரியத்தினைச் செய்ய வைக்க முடியும்.
அவ்வாறு செய்ய வைத்து சாமியாரினை அழைத்துச் சென்று அப்பிணத்தின் முன் நிறுத்தி அப்பிணத்தினை பிறர் வரும்வரை காத்திருக்க வைத்தால் அங்கு என்ன நிகழும். காமம் நிகழுவதற்கான சாத்தியம் இல்லை. அப்பெண்ணின் இருப்பு அவரினை உடல் ரீதியாகத் தொந்தரவு செய்யும் வாய்ப்பில்லை. ஆனால் அப்பெண்ணின் உடலினை நல்லடக்கம் செய்யும் வரை காப்பாற்றும் கடமை அவருக்கு அங்கு உருவாகிவிடும். அக்கடமையினைச் செய்ய அவர் செய்யும் அனைத்து செயல்களும் அவ்வுடலுக்கும் அவருக்குமான பிணைப்பினை உருவாக்கும். அப்பிணைப்பு பிறர் வரும்வரை அச்சடத்திற்கு உயிர் கொடுத்துவிடும். பிறர் வரும்வரை அச்செயலினைச் செய்வது குறித்து அவருக்கு எவ்வகையான இன்பமோ துன்பமோ இருக்காது. இது நேர்தன்மையாக்கத்தின் சிஜ்ஜடம்.
இச்சிஜ்ஜடத்தினைக் கவனித்துப் பாருங்கள். எச்செயலின் விளைவினையும் நன்கு அறிந்த சித்தம் சூழல் ஏற்படுத்தும் தேவையின் காரணமாக தன்நிலையில் இருந்து சற்று கீழிறங்கி சடத்துடன் தொடர்பு கொள்கிறது. சடத்துடன் தொடர்பு கொள்வதால் அதற்குரிய அறிதலோ இன்பமோ எதுவும் இல்லை சூழலின் காரணமாக தான் செய்யும் அச்செயலினைச் கண்டு புன்னகைக்கவும் கூடும். ஏனெனில் அது எக்குறைவும் அற்ற கதாபாத்திரம். ஆனால் சூழல் அதன் மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் அது சிஜ்ஜடம் என்பதற்கான புனைவின் செயலினைச் செய்கிறது. இது தத்துவ விளக்கத்திற்கான புனைவின் வழியில் ஒருங்கிணைவின் வழி.
இரண்டாம் வழியான எதிர்தன்மையாக்கத்தின் வழிமுறையில்தான் சிஜ்ஜடம் சிறுகதை சொல்லப்படுகிறது. குறைகளை மட்டுமே குணமாகக் கொண்ட சுடலைப்பிள்ளைக் கதாபாத்திரம் தன்னை விட உயர்வான சாமியார் மற்றும் அவரின் சீடன் பாந்தன் தன்னை விடக் குறைவான தரகு நாராயணன் ஆகியோரின் ஊடாட்டத்தின் படி செயல் புரிகிறது.
சுடலைப்பிள்ளையின் குணம் கதையின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கீழ்மையின் அடியாழம் வரை செல்வதாகவே இருக்கிறது. சுடலைப்பிள்ளையின் இயல்பு தனக்கு எது இன்பம் எனக் கருதுகிறதோ அதைச் செய்யும் குணம் கொண்டது. தனக்கு கிடைத்த அதிகாரத்தினை பிறரைத் துன்புறுத்த எப்போதும் பயன்படுத்தும் மனநிலையே சுடலைப்பிள்ளையிடம் இருக்கிறது. தன்னிடம் கொடுக்கப்பட்ட மனநிலை பிறழ்ந்த பெண்ணினைத் தேடும் பொறுப்பினை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்க்காக எவ்விசாரணையும் இன்றி யாரையேனும் குற்றவாளியாகப் பிடித்து முடித்து வைக்க வேண்டும் என்றே எண்ணுகிறான். அவ்வாறுதான் சாமியாரையும் பாந்தனையும் அணுகுகிறான். ஆனால் அவர்கள் சுடலைப்பிள்ளையினை விட மேலானவர்கள் என்பதால் அடங்கூ அவர்கள் சொல்லும் வழியில் அப்பெண்ணினைத் தேடிச் செல்கிறார்கள். அப்போது காட்டில் கிடைக்கும் அப்பெண்ணின் சடம் சுடலைப்பிள்ளைக்கு அப்பிணத்தினைக் காக்கும் பொறுப்பினைக் கொடுக்கிறது. தரகு நாராயணன் தகவல் சொல்லச் சென்றபிறகு அப்பிணம் அவனுக்கு காமத்தினை ஊட்டுகிறது. ஆகவே புணர்வில் ஈடுபடுகிறான். அங்கே சிஜ்ஜடம் நிகழ்கிறது. இதற்கும் முதல் வகைக்கும் இருக்கும் வித்யாசம் கீழ்மையோடு சித்தம் ஜடத்துடன் ஏற்படுத்தும் பிணைப்பு பெரும்துயரினைக் கொண்டுவரும் என்பதே.
சுடலைப்பிளளை தன்னுடைய இன்பமாகச் சொல்வது வல்லுறவினையே. பெண்களைத் துன்புறுத்தும் போது அவர்கள் படும்துயரினால் வரும் வேட்டையின் மிருக இன்பமும் இதனை நான் செய்தும் எவ்விளைவும் என்னைப் பாதிக்காமல் இருப்பவன் என்ற மனித மனத்தின் குரூர இன்பத்தினையும் அடைவதையே தனக்குரிய இன்பமாகவும் கொண்டவன். அவனுக்கு உறவின்போது துயருராத பெண் இன்பத்தினைக் கொடுப்பதில்லை. ஆனால் இங்கு இருப்பதோ சடம். சடம் போன்ற நிலையில் உள்ள உயிருள்ள பெண்களே அவனுக்குத் தேவையில்லை எனக்கருதும் நபருக்கு உண்மையான சடத்தின் மீது எவ்வாறு காம உணர்வு எழுகிறது? சூழலால் என்று நண்பர்கள் கருதலாம். ஆனால் அது அல்ல.
மனிதனின சித்தம் எப்போதும் உடலின் கருவிகள் வழியாக அடையும் இன்பங்களையும் துன்பங்களையும் தொகுத்து அறிந்து கொண்டே இருக்கிறது. தொகுத்து அறிதலின் வழியாக எது துன்பம் எது இன்பம் எனத் தனக்கு உகந்த வகையில் முடிவெடுக்கிறது. உயர் தன்மையுடைய சித்தம் நிகழ்வுகளையும் அதன் விளைவுகளையும் உணர்ந்து இன்பம் துன்பங்களிலிருந்து விலகி நிற்கும். கீழ்மையுடைய சித்தம் எப்போதும் துன்பங்களினை நீக்கி அனைத்திலும் இன்பத்தினையே எதிர்பார்த்து நிற்கும். எதன் பொருட்டு துன்பம் நேர்ந்தாலும் அதன் மீதான கோபம் எல்லை மீறிச் செல்லும். தங்களால் முடிந்தவரை எது அப்பொருளினை இழிவுபடுத்தும் செயலில் மிகக் கீழ்மையென எண்ணுகிறதோ அதைச் செய்யும். அதனால் வரும் துயரினைக்கூட கணக்கில் எடுக்காது. தொகுத்து அறிதல் இல்லையென்பதால் பின்விளைவுகளையும் அறியாது. தனக்கான இன்பத்தினை மட்டுமே நாடும். சித்தம் எதிரில் இருக்கும் பொருள் தனக்கு இன்பத்தினை அளிக்காது என்று உணர்ந்த பின்னரும் அதன் இருப்பால் பாதிக்கப்பட்டு தன்னிலை மறந்து சிஜ்ஜடத்தினை உருவாக்கும். சுடலைப்பிள்ளை அப்பெண்ணினைத் தேடும் படலத்தில் அடைந்த அத்தனை துன்பங்களும் அவ்வுடலின் இருப்பும் அவரினைப் பாதிக்க அவர் அறிந்த வழிகளில் மிகக் கீழான இழிவுபடுத்தும் செயலினைச் செய்கிறார்.
இச்சிறுகதைக்கு வந்த வாசிப்பில் அப்பெண்ணின் உடல் சுடலைப்பிள்ளையினை இறுக்கிப் பிடித்தது என்பது சடலத்தின் விறைப்பு என்பதாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் மிகப்பிடித்திருந்தது. அது என் வாசிப்பினைப் பொறுத்தவரை விருப்பம் அல்ல. அது பிணத்தின் விறைப்பு என்பதுதான் என்பார்வையில் சரியான வாசிப்பு.பிணம் இறுக்கிப் பிடித்த பிறகு அதிலிருந்து சுடலைப்பிள்ளை தப்பிக்க முடியாது. அதுவரை நடந்தது போல் நடக்காது. இழிவுபடுத்தப்பட்ட உடலின் உறவினர்களின் அதிகாரம் சுடலைப்பிள்ளையின் அதிகாரத்தினை விட பலமடங்கு அதிகம். அதனால் செய்த தவறிலிருந்து சுடலைப்பிள்ளை தப்புவதற்கான வாய்ப்பே கிடையாது. இவ்வகை நிலைகுலைவின் மூலமாக சிஜ்ஜடம் என்பதன் தத்துவ விளக்கத்தினைக் கொடுக்கிறது.
மூன்றாம் வகைப் புனைவின் வழியில் நிறை குறை இரண்டும் கலந்த கதாபாத்திரம் எவ்வாறு அச்சூழலில் வினை புரியும் என்பதற்கான வழிமுறையினை யோசித்தால் முதலில பாந்தனைக் குறித்துச் சொல்லலாம். பாந்தன் சாமியாரின் சீடனாக இருநதாலும் நிறைகுறை இருகுணமும் இணைந்து இருக்கும் நபராகவே இருக்கிறான். மற்றவருக்கு உதவும் குணம் கொண்டவனாக எங்கு தேட வேண்டும் என்பதனைச் சொல்லும் நபராக இருந்தாலும் சுடலைப்பிள்ளை அதிகாரத்தினைச் செலுத்த முயலும்போது அழித்துவிடுவேன் எனும் அளவு கோபம் கொண்டவனாகவும் இருக்கிறான். அத்தகையோனை அழைத்துவந்து சடத்திற்கான காப்பாற்றும் பொறுப்பினைக் கொடுக்குமாறு சூழல் நிகழ்நதால் என்ன நடக்கும்? அவனுடைய குருவின் ஆணையன்றி எதுவும் அச்செயலினைச் செய்ய வைக்க முடியாது. அப்படி அச்செயலினை அவன் செய்யும்போது குருவின் ஆணையினைக் காக்க வேண்டும் எனும் கட்டாயம் ஒருபுறம் தனக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத சடத்தினைக் காக்கும் பொறுப்பும் இடையே ஊசலாட்டம் ஏற்பட்டு சிஜ்ஜடம் நிகழும். பாந்தன் தத்துவத்தினைப் புரிந்து கொள்ள முடிந்தவன் என்பதால் வாழ்வு அல்லது சாவு குறித்தான எண்ண ஓட்டங்கள் வழியாக சிஜ்ஜடம் எவ்வாறு செயல்படும் என்பதைப் புரிந்து கொள்வதான செயல்களைச் செய்வதுபோலவே கதை நிகழ்வினை அமைக்க முடியும்.ஏனெனில் இரண்டு குணங்களும் கலந்ததாக மேற்பார்வைக்கு இருந்தாலும் பாந்தன் நிறையின் பெரும்பகுதியும் குறையின் சிறுபகுதியும் மட்டுமே கொண்டவன் என்பதால் ஓரளவு உயர்வான செயலினைச் செய்வதன் வழியாகவே அவன் சிஜ்ஜடத்தினைப் புரிந்து கொள்ள முடியும்.சடத்தோடு இருப்பதன் துன்பமும் சிஜ்ஜடத்தினைப் பற்றிய அறிதலின் இன்பமும் இக்கதாபாத்திரத்திற்கு அமையும்.
இச்சிறுகதையில் இருக்கும் தரகு நாராயணன் கதாபாத்திரம் குறைவான நிறையும் அதிகமான குறையும் கொண்ட கதாபாத்திரம். தனக்கு அதிகாரத்தால் மேற்பட்டோரை அண்டி வாழ்ந்து தனக்கான லாபத்தினை அடைய முயலும் வகையினைச் சார்ந்தவன். சடத்தினைக் காப்பதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டால் இறப்பு குறித்தான அச்சமும் சடத்தின் மீதான அருவருப்பும் சூழலின் இருப்பும் துயரளிக்க அப்பெண்ணின் உடலினை அவளுடைய குடும்பத்தில் கொண்டு சேர்த்தால் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தான எண்ணம் எவ்வாறு அச்சடலத்தோடு எவ்வகையில் அவனைச் சிஜ்ஜடம் கொள்ள வைக்கின்றது என்பதே புனைவாக அமைய முடியும்.
நவீன இலக்கியம் பெரும்பாலும் இவ்வழிமுறையினையே எடுத்துக் கொள்கிறது. உயர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் பாந்தனையும் இழிவு நோக்கிச் செல்வதற்கு தரகு நாராயணனையும் எடுத்துக் கொண்டு நிகழ்வினை உருவாக்கும். இழிவு நோக்கிச் செல்வதற்கு எவ்வாறு நாராயணனை எடுத்துக் கொள்ள முடியும் என்றால் கட்டாயத்தின் பேரில் அப்பெண்ணினைத் தேட வந்தவன் என்றாலும் உதவி செய்யும் எண்ணமும் அவனுக்குச் சிறிது இருக்கிறது. அவ்வுடலினைக் காக்கும் பொறுப்பினை எடுத்துக் கொள்ளும்போது அச்செயலினால் ஏற்படும் வாய்ப்புகள் குறிததான எண்ணம் கீழானதே. ஆனால் அது முழுக்கீழ்மையும் அல்ல. இரண்டும் கலந்த குணங்களின் தன்மை காரணமாக எது எவ்வாறு அமையும் என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் முழுமையாக உணர முடியாமல் புகை மூட்டமாகவே நிகழ்வுகளும் செயல்களும் அமையும். இத்தன்மையே பல்வேறு தளத்தினில் திறக்கும் வாய்ப்புள்ளதாக நவீன இலக்கியத்தினை மாற்றுகிறது. இது ஒருங்கிணைவு அல்லது நிலைகுலைதல் இரண்டு வழியாகவும் செயல்படக்கூடியதே
இவ்வகையின் கதைகளையே அதிகம் படித்திருக்கும் எந்த நபருக்கும் இதற்கு மாறான இரண்டாம்வகை கதையினை இதைப்போலவே தவறாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது. பெரும்பாலான கடிதங்களில் இருக்கும் சிஜ்ஜடம் பற்றிய உயர்வான எண்ணங்கள் அனைத்தும் இவ்வழியிலேயே தோன்றியவை.
இவைகளே புனைவின் வழியாக தத்துவப் பொருளினைக் கூறுவதற்கான வழிமுறைகள் என்ற புரிதலோடு முதற் கேள்விக்கான பதிலினைத் தேடும்போது அரசியல் சரிநிலை என்பதற்கான இடமே இங்கு இல்லை என்பது புரியும். எப்போதும் தத்துவப் பொருளுக்கான எவ்விளக்கமும் தெளிவுற அமையும் படியே அமைய வேண்டும் என்பதன் காரணமாக இச்சிறுகதை அமைக்கப்பட்டு இருப்பதே அடிப்படைக் காரணம் என்று உணர முடியும்.
நிலைகுலைவின் வழிமுறையில் சிறுகதை அமைக்கப்பட்டு விட்டதால் அந்த நிலைகுலைவானது ஏன் அமைக்கப்பட்டது என்பதனை தத்துவப்படுத்திப் புரிந்து கொள்ளாத நபர்களால் தவறான வாசிப்புக்கு இடமளித்தது படைப்பின் போதாமையல்ல.வாசகனின் தத்துவப்படுத்தல் பற்றிய அறிவுக்குறை என எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து இரண்டாம் கேள்விக்கான பதில். சிஜ்ஜடத்தினை புனைவின் வழியாகச் சொல்ல இருக்கும் வழிமுறைளைப் பார்த்துவிட்டோம். அவ்வாறான வழிமுறையில் சொல்லப்ட்டு இருக்கும் இச்சிறுகதை எவ்வண்ணமாவது சுடலைப்பிள்ளையின் செயலினைச் சரியெனச் சொல்கிறதா என்று பார்த்தால் எவ்விடத்திலும் இல்லை. அங்கு நிகழும் சிஜ்ஜடத்தினை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதன் இடர் காரணமாகவே இக்கேள்வி எழுந்திருக்கிறது. அச்சிஜ்ஜடத்திற்கான காரணத்தினையும் பின்விளைவுகளையும் புரிந்து கொள்ளும்போது இக்கேள்விகளுக்கான பதில் கிடைத்துவிடுகிறது.
எக்குற்றமாக இருந்தாலும் அது தண்டிக்கப்படாமல் விடப்படுவதுதான் அதனை நியாயப்படுத்தும் செயலாக இருக்கும்.இங்கு குற்றமானது தண்டிக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்டிருக்கிறது. அவையனைத்தையும் புரிந்து கொள்ள முடியாத கற்பனை இல்லாத நபருக்குக் கூறவேண்டும் என்றால்
அ.சடமானது சுடலைப்பிள்ளையினை இறுக்கிப் பிடித்திருக்கிறது.
ஆ.உடற்சூடு முழுமையாக ஆறாமல் இருப்பதால் வல்லுறவுக்கான அனைத்து சான்றுகளும் உடற்கூறாய்வில் கிடைத்துவிடும்.
இ.அதிகாரத்தினைப் பயன்படுத்தி சுடலைப்பிள்ளை தப்பிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அவரை விட மேலான அதிகாரம் கொண்டது அப்பெண்ணின் குடும்பம்.
எனவே சுடலைப்பிள்ளை தப்பிப்பதற்கான வாய்ப்பில்லை என்பதால் இது அக்குற்றத்தினை நியாயப்படுத்தவில்லை.
அடுத்து மூன்றாம் கேள்விக்கான பதில். எக்காரணத்தால் இதுமாதிரியான வாசகப்பார்வைகள் இங்கு உருவாகின்றன என்பதை மேலேயே பார்த்துவிட்டோம். என்னுடைய பார்வை தான் சரியானது என நான் நிறுவவேண்டும் என்றால் அதனை மறுக்கும் பார்வையாகச் சொல்லப்பட்டவை எவ்வாறு தவறானவை என்பதற்கான காரணங்களினைக் கூறவேண்டும்.அவ்வாறான பார்வைகள் என நான் கருதுபவை.
அ.இழிவான செயலினைச் செய்யும் சுடலைப்பிள்ளை தான் புணர்வதை தானே அதிர்ச்சியுடன் பார்க்கிறார். தன்னைக் கவனிப்பவன் யாராயினும் அவன் ஞானத்தின் பாதையில் பயனிப்பவன். இதுவரை மிக மோசமாக நடந்து கொண்டிருந்தாலும் சுடலைப்பிள்ளையின் தன்னைப் பார்க்கும் செயல் அவனுக்கு ஞானத்தின் பாதையினைக் காட்டியிருக்கிறது என ஏன் எண்ணக்கூடாது?.
இது சரியான பார்வையினைப் போலவே அனைவருக்கும் தோன்றும். ஏனெனில் நாம் இதுவரை ஆயிரம் நிகழ்வுகளில் கொள்ளையர்களும் பெண்பித்தர்களும் அடங்கா ஆசை கொண்டவர்களும் திடீரென ஞானமடைந்ததைப் பார்த்திருக்கிறோம். கொள்ளையில் ஈடுபடும் வேடன் மாபெரும் கவிஞனாகிறான். முன்தினம் வரை பெண்பித்தனாக இருந்தவன் ஒற்றை நிகழ்வில் மாபெரும் பக்தனாகிறான். பெரும் செல்வம் சேர்த்தவன் அதனை விட்டுத் துறவியாக ஒற்றைச் சொற்றொடர் போதுமானதாக இருக்கிறது அவ்வாறு இருக்கும் போது ஏன் சுடலைப்பிள்ளை ஞானமடைதலின் பாதையில் செல்லக்கூடாது என்பது நல்ல கேள்வியே.
என் இருபதுகளில் எனக்குள் தோன்றிய கேள்வி நான் பெரிதென எண்ணும் துறவிகளும் ஞானியரும் தங்களைக் கேவலமானவர்களாகவே ஏன் சொல்லி இருக்கிறார்கள் என்பது. பிறருக்காக அவர்கள் கருணையோடு தங்களைத் தாழ்த்தி என்னால் முடிந்தது உன்னாலும் முடியும் என்று சொல்வதற்கும் எளியவர்கள் அனைத்தையும் அடைவதற்கான வழிகளை உரைப்பதற்கும் என அக்கேள்விக்கான பதிலை மரபு எனக்குக் கொடுத்தது.ஆனால் எனக்கு அப்பதில் போதுமானதாக இல்லை.
பின்னர் அவர்களின் வாழ்வினைக் கவனித்து நான் அறிந்தது அவர்கள் இரண்டு வகைகளில் தங்களுக்குள் செயல்பட்டனர் என்பதை. அவை
1.சூழலினைக் கவனித்து கிடைப்பதை கவிதையாக தங்களுக்குள் தொகுப்பது
2.கிடைக்கும் அனைத்து அறிவையும் தங்களுக்குள் தத்துவமாகத் தொகுப்பது
இந்த இரண்டும் இல்லாத எந்த நபரும் ஞானியாகவில்லை. எந்தத் தத்துவமும் அறியாத கொள்ளையினை தன் செயலாகச் செய்த வேடனான வால்மீகி அதிலிருந்து மாறியபோது கவிஞனாக எப்படி மாறமுடிந்தது. அதுவரை இல்லாத கவித்தன்மை திடீரென வந்தது கடவுளின் அருள் என மரபு சொல்லும். என்னைப் பொறுத்தவரை வால்மீகி சிறுவயதில் இருந்தே இயற்கையினைக் கவனித்து நடப்பதினை கவிதையாக தன்னுள் தொகுத்துக் கொள்பவன். அதேசமயம் சூழலினால் கொள்ளையினைச் செய்து வருபவன். இந்த இரண்டுக்கும் நடுவில் அல்லல்பட்டுக் கொண்டிருப்பவனை அறுக்கும் கட்டு மட்டுமே அந்நிகழ்வினில் நடக்கிறது. அருணகிரிக்கும் பட்டினத்தாருககும் நடந்தது அத்தன்மையதே. அவர்கள் இருவரையும் படிப்பவர்களுக்குத் தெரியும். அன்றைய சமகால தத்துவ அறிவு முழுமையும் அவர்களிடம் இருப்பது. அனைத்தையும் துறந்தபின் யாரும் தத்துவம் கற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏற்கனவே ஞானத்தினை அடைந்தவன் அடையவேண்டியதென எது இருக்கிறது? எதுவும் இல்லை. அனைத்தையும் துறப்பதற்கான அடிப்படையினை அடைய தத்துவம் தேவையானதாக இருக்கிறது. எண்ணிலடங்கா பெண்பித்தர்கள் அத்தனை பேரும் ஏன் அருணகிரி ஆகமுடிவதில்லை. நடக்கும் அனைத்தையும் கவிதையாகவோ தத்துவமாகவோ தொகுக்காத எந்தப் பெண்பித்தனும் அதிலிருந்து வெளிவரவே முடியாது. உடல் கொண்ட போதாமையாலும் சூழல் தரும் கட்டாயத்தாலும் வேண்டுமானால் வெளிப்பார்வைக்கு மாறலாம்.
சுடலைப்பிள்ளை கவிஞனாகவோ தத்துவத்தின் சாயலினைக் கொண்ட எவற்றினையும் அறிந்தவனாகவோ இக்கதையில் காட்டப்படவில்லை. எனவே அவன் ஞானம் அடைவதற்கான எந்தத் தகுதியும் இல்லாதவன். அப்படியானால் ஏன் அதிர்ச்சி அடைவது கதையில் சொல்லப்பட்டிருக்கிறது? கீழ்மை தனக்கு இன்பம் தராத எச்செயலினையும் தான் செய்வதை அதிர்ச்சியுடன்தான் பார்க்கும்.
ஆ.கீழ்மை இன்னும் கீழ்மையினை நோக்கிச்சென்று அதன் எல்லையில் அதனைத் துறக்கும் நிலை என்பது எப்போதும்இலக்கியத்தில் உள்ளது தானே. இதையும் ஏன்அவ்வாறு எடுத்துக் கொள்ளக்கூடாது?
கீழ்மையின் எல்லைக்குச் செல்லுதலைப் பற்றிய எக்கதையினையும் கவனித்துப் பார்த்திருந்தால் அக்கதாபாத்திரங்களும் கீழ்மையின் வழியாக கிடைக்கும் அனைத்தையும் அவனுக்குள் தொகுப்பவனாக இருப்பதைப் பார்க்கலாம். தன் எல்லையினைத் தானேதாண்டிச் செல்பவனாக இருப்பவன் தொகுக்காமல் அதைச் செய்ய முடியாது. சுடலைப்பிள்ளை தற்செயலாகக் கிடைத்த கீழ்மையின் இன்பத்தினை பேரின்பமாக எண்ணி அது மீண்டும் கிடைக்க முயல்பவன் மட்டுமே. ஏன் அவ்வின்பத்தினை ஆராய்ந்து அதில் தன் எல்லைகளைக் கண்டறிந்து மேலே செல்வதற்கான எந்தச் செயலையும் சுடலைப்பிள்ளை செய்வதில்லை.
இ. இக்கதையில் சிஜ்ஜடம் நிகழ்வதே சுடலைப்பிள்ளையால்தான் எனும்போது சிஜ்ஜடத்திற்கான தத்துவப் பொருளாக சுடலைப்பிள்ளையினைப் பார்ப்பது எவ்வகையில் தவறு. செயல் சுடலைப்பிள்ளை மூலமாக நடக்கும்போது அதற்கான விளைவும் சுடலைப்பிள்ளையைத்தானே சாரும்?.
எச்சிறுகதைக்கும் யாரின்பார்வையில்கதை சொல்லப்படுகிறது என்பது மிகமுக்கியமான அம்சம். ஒருவேளை இக்கதை சுடலைப்பிள்ளையின் பார்வையில் சொல்லப்பட்டு இருந்தால் அதற்கான சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது.இக்கதையினைச் சொல்லும் கதைசொல்லி யார் என்பது கதையில் சொல்லப்படவேயில்லை. கதைசொல்லிக்கு நடக்கும் நிகழ்வின்மீது நன்றிது தீதிது என்பது குறித்தான எந்த விமர்சனமும் இல்லை. அதேசமயம் சூழலினைச் சொல்லும்போது கவித்துவத்தினை அடையும் சொற்கள் கதைசொல்லிக்கு சிஜ்ஜடம் பற்றியான புரிதல் உண்டு என்பதினைச் சொல்கின்றன. ஆகவே செயலினைப் புரிவது சுடலைப்பிள்ளையாக இருந்தாலும் அதன் மூலம் அடையப்படும் அறிதல் கதைசொல்லியினுடையதே.
இம்மூன்று கேள்விகளுக்குள் நணபர்களின் பார்வைகள் அடங்கிவிடுகின்றன. எனவே என் பார்வையின்படி அடையும் அறிதல் கதைசொல்லிக்கானதே. அதை நண்பர்கள் உணராமல் தவறான புரிதலை அடைந்திருக்கிறார்கள்.
நான்காவது கேள்விக்கான பதிலாக பொதுவாக சமூகம் பொதுவெளியில் விவாதிப்பதற்குத் தகுதியாக ஏற்றுக்கொள்ளாதவைகளைப் பற்றிய நிகழ்வுகளைக் கூறி அதிர்ச்சியளிப்பது படைப்புகளை வாசகனுக்குள் நிலை நிறுத்தப் பயன்படுத்தும் உத்தி. ஆனால் அது எல்லா இடத்திலும் பயன்தரும் என்பதற்கான சாத்தியம் இல்லை. படைப்பு வெளியிடப்படும் காலமும் மக்களின் மனநிலையும் அதைத் தீர்மானிப்பதால் நிலை சற்று மாறினாலும் அப்படைப்பே கைவிடப்படும். கூடவே அந்நிகழ்வு அப்படைப்பின் மையத்தருணமாக அமைந்தாலும் சிந்தனையினை நோக்கியே தத்துவத்தினை நோக்கியோ செல்லாது. அதிர்ச்சியின் மூலமாக இதுவரை இருக்கும் மன ஒழுங்கினை உலுக்குவதை மட்டுமே அவை செய்யும் அவ்வாறில்லாமல் இதன் நிகழ்வு தத்துவ விளக்கத்தினை நோக்கிச் செல்வதால் வெறும் அதிர்ச்சி நோக்கில் எழுதப்பட்டதல்ல.
இவைகளே அந்த நான்கு கேள்விகளுக்கான பதில்கள்.
இச்சிறுகதைக்கு வந்த நண்பர்களுடைய பார்வைகளில் யாரும் தந்த்ராவினைக் குறிப்பிடவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏனெனில் வந்த வாசிப்புகளில் இருக்கும் வாசிப்புகளை விட தந்த்ராவின் பிணத்தோடான உறவு எனும் சடங்கு உண்மையில் சிஜ்ஜடத்தினைப் புரிந்து கொள்ள உதவக்கூடியது. ஆனால் அதனை யாரும் குறிப்பிடவில்லை. சுடலைப்பிள்ளை செய்த செயலும் தந்த்ராவின் சாதகன் செய்யும் அச்சடங்கும் அடிப்படையில் ஒன்றுதான். செய்பவனின் உளநிலையும் உளம் மீதான கவனமும்தான் ஒரே செயலினை மிக இழிவானதாகவும் உயர்வானதாகவும் மாற்றுகிறது.
இறுதியாக இச்சிறுகதையினைப் பற்றி விவாத்தபோது ஈரோடு கிருஷ்ணன் இது விவாதிக்கத் தகுந்த சிறப்பான சிறுகதை அல்ல என்றார். இறுதியில் கதை உருவாக்கும் மயக்கத்தின் காரணமாக அதிகமான கடிதங்கள் வந்ததாகவும் கூறினார். என் பார்வை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. ஏன் கிருஷ்ணன் இத்தகைய முடிவுக்கு வந்தார் என சற்று யோசித்தேன். எப்படைப்பிலும் நடக்கும் தற்செயல் நிகழ்வுகள் மேல் எப்போதும் கிருஷ்ணனுக்கு ஒவ்வாமை உண்டு. தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளே கதையின் மையமாகத் திகழுவதை படைப்பின் குறையாகக் கருதும் மனநிலை அவருக்கு உண்டு. இச்சிறுகதையிலும் தற்செயல் பெரும்பங்கு வகிப்பது போன்ற தோற்றம் இருக்கிறது.
முதலில் மனவளர்ச்சி குன்றிய பெண் காணாமல் போவதே கதையின் ஆரம்பப்புள்ளி. அவள் தற்செயலாகவே கதை நிகழும் களத்திற்கு வந்தாளா என்பது முதன்மைக் கேள்வி. அதற்கு இல்லை என்பதே பதில். மனவளர்ச்சி குன்றிய எந்த நபரும் பொதுவாக தங்களுடைய எல்லை எனக்கருதும் இடத்தினைத் தாண்டிச் செல்பவர்கள் அல்ல.புதிய இடங்களைத் தேடிச் செல்பவர்கள் அதில் இல்லை. தங்களுடைய எல்லை என அவர்கள் தீர்மானித்து இருக்கும் எல்லையினைத் தாண்டிக் கொண்டுபோய் விட்டால் அவர்கள் மீண்டு வர முடியாமல் இருப்பதைக் காரணமாகக் கொண்டால் அவர்கள் வந்து செல்லும் இடத்தினைத் தவிர்த்து பிற இடங்களுக்கு தற்செயலாகச் செல்வது இயலாத காரியம் என்பது உண்மை. அவ்வாறு இங்கு தற்செயலாக நடந்திருக்கிறதா என்றால் அது நடக்கவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பம் அக்காட்டிற்குச் சிலமுறை வழிபட வந்திருக்கிறார்கள். எனவே அவள் வந்தது தற்செயல் அல்ல. பின் தொலைந்து போன அப் பெண்னைத்தேடும் நபர்கள் அப்பெண் எங்கு போயிருப்பாள் என்று தீர்மானிக்க முடியாமல் இருக்கும்போது அங்கிருக்கும் சாமியாரின் குடிலுக்குச் செல்வது தற்செயல் அல்ல. அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையால் எங்கு எப்படித் தேடுவது என்பதும் தற்செயல் அல்ல. அப்பெண்ணின் உடலைக் காண்பதும் தற்செயல் அல்ல. அங்கிருந்து நாராயணப்பிள்ளை கீழே செல்வதும் தற்செயல் அல்ல.சுடலைப்பிள்ளை அதனுடன் உறவு கொண்டதால் அவரைப் பற்றிக் கொள்ளுமளவிற்கான உடலின் நிலை அமைந்தது எப்படி? சற்று முன்னர் என்றால் சுடலைப்பிள்ளையினை உடலின் நரம்புகள் விறைத்துக் கட்டிப்பிடிப்பது சாத்தியம் இல்லை. உடல் விறைத்திருந்தால் சுடலைப்பிள்ளையின் செயல் வெளித்தெரிவதற்கு வாய்ப்பும் இல்லை. சரியாக அத்தருணம் அமைந்தது முற்றிலும் தற்செயல் போலவே பார்வைக்குத் தெரிகிறது. தத்துவமாக்கப்படும் நிகழ்வின் உச்சம் தற்செயலென அமைவது சிறப்பானதல்ல. ஆனால் வாழ்க்கையினைக் கவனித்தால் இடர்பாடான நேரங்களில் என்ன செய்வதென திகைத்திருக்கையில் தான் இயல்பாக செய்யும் செயலினை சற்றும் சிந்திக்காமல் செய்வது மனித இயல்பு என்பதனைப் புரிந்து கொள்ளமுடியும். அவ்வியல்புதான் சுடலைப்பிள்ளையின் செயல் தற்செயல் அல்ல என்று உணர்த்துவது. ஆகவே இதில் தற்செயலுக்கான பங்கு இல்லை என்பதே என் கருத்து.
தத்துவப்பொருளின் விளக்கத்தினை புனைவின் வழியாகச் சொல்வதற்கான இலக்கணமாக இக்கதையினை எடுத்துக் கொள்ள முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது. எத்தகைய கருத்துருவினை கோட்பாடு போல் வைத்தாலும் அவற்றினை மிக எளிதாகத் தாண்டி தான் சொல்ல வந்த தத்துவப் பொருளினை உரைத்த கதைக்கு நன்றி ஜெ.
இப்படிக்கு
அந்தியூர் மணி