கதைக்குரல்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் கதைகளை பலர் யூடியூபில் வாசிக்கிறார்கள். சொல்கிறார்கள். பவா செல்லத்துரை, ஃபாத்திமா பாபு போன்றவர்கள் மிகப்புகழ்பெற்றிருக்கிறார்கள். கிராமத்தான் சிவக்குமார் இதற்கெல்லாம் முன்னே உங்கள் கதைகளை ஒலிவடிவமாக்கிக் கொண்டிருக்கிறார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது சரியானதா? கதைகளை திரும்பச் சொல்வது கதைகளை சிதைப்பதாகாதா? கதைகளை வாசித்துக் கேட்பதனால் வாசகர்கள் கதைகளை வாசிக்காமலாகிவிடுவார்கள் அல்லவா?

ராஜ்குமார்

அன்புள்ள ராஜ்குமார்,

நான் ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். மிகக்கறாராக ‘காப்பிரைட்’ விஷயங்களை கடைப்பிடிக்க எனக்கு விருப்பமில்லை. என்ன காரணம் என்றால் இன்னும் இங்கே வாசிப்பு 2 சதவீதம் பேரைக்கூட எட்டவில்லை. காப்பிரைட் கட்டுப்பாடு செய்து அதை மேலும் குறைப்பது இலக்கியம் ஒரு இலட்சியவாதச் செயல்பாடு என நம்பும் என் இயல்புக்கே எதிரானது.

சென்ற பல ஆண்டுகளில் காலச்சுவடில் வந்த எந்தக் கதையாவது, கட்டுரையாவது பேசுபொருளாகிப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால் அது பணம் கேட்டு பூட்டு போட்டு வைத்திருக்கிறது. எதையும் பகிர முடியாது. இணையத்தில் காலச்சுவடு என்னும் இதழே உண்மையில் இல்லை.

ஆகவே கதைகளை வாசிப்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. அதனால் இழக்கும் வாசகர்களை விட வரும் வாசகர்கள் மிகுதி. ஏனென்றால் நவீன இலக்கியம் செவ்வியல் கலைகளைப் போல. அவற்றை ரசிக்க ஒரு மனநிலை வேண்டும். ஒரு பயிற்சி வேண்டும். அந்த மனநிலையையும் பயிற்சியையும் அடைய மிகச்சிறந்த வழி அதை கொஞ்சநாள் கவனிப்பதே.

நீங்கள் கர்நாடக சங்கீதம் கேட்க என்ன செய்யவேண்டும்? கொஞ்சநாள் ‘சும்மா’ கேளுங்கள். ஒருமணிநேரம் கேட்டே ஆகவேண்டும் என ஒரு ஆண்டு கேளுங்கள். போதும். அதேபோலத்தான் எந்த செவ்வியல் கலையும்.

நவீன இலக்கியம் இன்னமும்கூட இங்கே பொதுவாசகர்களுக்கு அன்னியமானதாகவே உள்ளது. அதன்மேல் ஒரு மிரட்சியும் விலக்கமும் உள்ளது. பவா செல்லத்துரை வழியாக மாயப்பொன் போன்ற ஒரு கதையை கேட்பவர் நவீன இலக்கியம் அவர்கள் ஏற்கனவே நினைத்திருப்பதுபோல ஒன்றும் மிரட்சியடையவைக்கும் பூடகப்பேச்சு அல்ல என உணர்வார். ஏதேனும் ஒரு புள்ளியில் தன் வாழ்க்கையை அவர் அதில் கண்டடைந்தார் என்றால் அவர் நவீன இலக்கியத்திற்குள் வந்துவிடுகிறார்

அக்கதையைப் பற்றி ஒரு தையல்காரர் பேசினார். ஓர் இரவில், தனிமையில், ஒரு கவுனை தைத்ததும் தான் உணர்ந்த நிலை பற்றி. ’தெய்வநிலை சார்’ என்றார். அவ்வளவுதான் அந்தக்கதை. அவர் நவீன இலக்கியத்திற்குள் வந்துவிட்டார். எளிமையான கதையோட்டமும் திருப்பமும் கொண்ட வணிகக்கதைகளில் இருந்து படிமங்கள் வழியாகவே பேசும் நவீனக்கதையின் சூட்சுமத்தை தொட்டுவிட்டார்.

சொல்லப்படுகையில் கதைகள் மாறுபடலாமா? ஆமாம். உலகம் முழுக்க கதைகள் வேறு கலைவடிவுகளுக்கு மாறுகின்றன. நாடகம், அரங்கநிகழ்வு, சினிமா என மாற்றுவடிவம் கொள்கின்றன. அவ்வடிவுக்கு ஏற்ப மாறுகின்றன. ஷேக்ஸ்பியர் கதைகளை நீங்கள் பெரும்பாலும் நிகழ்கலைகளாகவே கண்டிருப்பீர்கள். அதுவும் இலக்கியத்தின் பயணமே அதை எவராலும் தடுக்கவும் முடியாது. ஒரு கதையை வாசித்தவர் அதை இன்னொருவரிடம் சொல்வதை தடைசெய்வீர்களா என்ன?

கதையை கேட்பதென்பது இன்னொரு அனுபவம். சிலருக்கு செவிநுண்ணுணர்வு அதிகம், கேட்பவை நினைவில் தங்கும். இன்னும் சிலர் கல்லூரியில் பள்ளியிலும் தவிர்க்கவேண்டிய பாடமாக தமிழ்கற்றவர்கள். விரைவாக தமிழை வாசிக்கமுடியாதவர்கள். அவர்களுக்கு வாசிப்பு மிக உதவியானது. வேறுவேலை செய்தபடி கதைகளை கேட்கமுடியும் என்பதும் மிக உதவியானது

கிராமத்தான், ஃபாத்திமா இருவரும் அழகாக வாசிக்கிறார்கள். ஃபாத்திமாவின் குரலில் இயல்பாக கூடும் உணர்ச்சிகளும், மிகையில்லா நடிப்பும் கதைகளை மேலும் தீவிரம் கொண்டவையாக ஆக்குகின்றன. இப்படித்தான் பலவகைகளில் கதைகள் சென்று சேரமுடியும்.

நமக்கு இன்று தேவை தமிழகத்தில் ஒரு பத்துசதவீதம் பேருக்காவது நவீன இலக்கியத்தின் ருசி சென்று சேர்வதுதான். அதில் இவர்களெல்லாம் ஆற்றும் பணி மிகமிக முக்கியமானது. நான் எழுதவந்தபோது எவருமே இலக்கியத்தை பொருட்படுத்தியதில்லை. இன்று அது மக்களியக்கமாக மாறுகிறது என நினைக்கிறேன். மாற்றுபவர்களில் கதைசொல்லிகள், கதைவாசிப்பாளர்களின் பங்கு மிகுதி. வரலாறு அவர்களை அடையாளப்படுத்தும்

ஜெ

முந்தைய கட்டுரைசிக்கவீர ராஜேந்திரன் – மஞ்சுநாத்
அடுத்த கட்டுரைஎழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு உதவி