நம் இனவெறி

சி.வி.வேலுப்பிள்ளை, தபால்தலை

அன்புள்ள ஜெ,

நான் ஆப்ரிக்க நாடான கென்யாவுடன் வணிகத் தொடர்பு உள்ளவன். ஒரு பார்ட்டியில் நன்கு படித்த ஓர் ஆப்ரிக்கர் சொன்னார், அவருடைய அனுபவத்தில் இந்தியா மிகமிக இனவெறி கொண்ட நாடு. இந்தியாவில் எங்கு ஓர் ஆப்ரிக்கன் சென்றாலும் இரண்டாம் தரமாகத்தான் நடத்தப்படுவான். கேலிசெய்யப்படுவான். அதில் தமிழகமும் கேரளமும் மிக மோசமானவை என்றார். அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் ஊரான கோவையில்கூட கறுப்பின மக்களை இழிவாகவும் கேலியாகவும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது உறைத்தது. உங்கள் கருத்து என்ன?

சுப்ரமணியம்

அன்புள்ள சுப்ரமணியம்,

நீங்கள் இதை எழுதும் இன்று நான் இலங்கை மலையகத்து எழுத்தாளரும் தொழிற்சங்க முன்னோடியுமான சி.வி.வேலுப்பிள்ளையின் வாழ்க்கையை வாசித்துக் கொண்டிருந்தேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இணையத்தில் உள்ளன. அவர் மனைவி பற்றி திரும்பத்திரும்ப ஒரு வரிதான். அவர் ஒரு சிங்களப் பெண்மணி. பெயர் கிடையாது, எந்த குறிப்பும் இல்லை. எழுதிய அத்தனைபேரும் முற்போக்குப் புயல்கள்.

அந்தப் பெண்மணி மலையகத் தொழிற்சங்க இயக்கத்தில் செயல்பட்டவர். சி.வி.வேலுப்பிள்ளையின் அத்தனை பணிகளிலும் உடன் நின்றவர். ஆனால் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதியவர். ஆனால் தமிழர்களின் பார்வையில் அவர் சிங்களர் மட்டுமே.சி.வி.வேலுப்பிள்ளைக்கு ஒரு மலர் போடப்பட்டுள்ளது, அதில்கூட ஒரு வரி இல்லை. பெயர் குறிப்பிடப்படவில்லை.

நாம் இனவெறிகொண்டவர்கள். ஆனால் இனமாக அன்றி சாதியாக அந்த வெறியை பகுத்துக்கொண்டிருக்கிறோம். யார் நமக்கு என்ன செய்தாலும் நமக்கு அது ஒரு பொருட்டல்ல. நம் சாதி, நம் இனம், அதைத்தவிர எதையுமே நாம் வரலாற்றில் எஞ்சவிடமாட்டோம்.

ஜெ

முந்தைய கட்டுரைஎண்பதுகளின் தமிழ் சினிமா – ஸ்டாலின் ராஜாங்கம்
அடுத்த கட்டுரைஅச்சம், மடம்