முதுநாவல்- கடிதம்

அன்புள்ள ஜெ,

முதுநாவல் தொகுதியை இன்று வாசித்துக் கொண்டிருந்தேன். எல்லா கதைகளுமே முன்னர் வாசித்தவை. ஆனால் அச்சில் தொடர்ச்சியாக வாசிக்கையில் ஒரு தீவிரமான மிஸ்டிக் நூலுக்குள் சென்ற உணர்ச்சி உருவானது. கதைகளை இப்படி அடுக்கும்போது அதற்கு உருவாகும் மௌனமான தொடர்ச்சி ஆச்சரியப்படச் செய்வது.

முதல்கதை சிந்தே. அந்தக்கதையை தொடரில் வாசித்தபோது பிற கதைகள் அதை மறைத்துவிட்டன. அந்தச் சிங்கம் ஒரு மாயம். ஒரு உருவகமாயம். அது என்ன என்று அப்போது யோசிக்கவே இல்லை. அது அப்படியே அத்தனை காலத்துக்கு அப்பாலும் பெருகி உயிர்வாழ்கிறது. காமம் அல்லது குரோதம். அது அதற்கான மனிதர்கள் இல்லாவிட்டாலும் உயிர்வாழ்கிறது

அப்படியே கதைகள் நீண்டு சென்றன.எல்லா கதைகளுக்கும் ஒரு மாயம் உள்ளது.தூவக்காளி, ஆபகந்தி, அருள், மணிபல்லவம். மணிபல்லவம் சிந்தே கதைக்கு மிக நெருக்கமானது. இந்தக்கதைகள் 130 சிறுகதைகளில் அதிகம் வாசிக்கப்படாதவை. அல்லது அதிகம் பேசப்படாதவை. இவற்றில் உள்ள மிஸ்டிக் அம்சம் அன்றைக்கு பிரபலமாக ஆன பல நகைச்சுவைக்கதைகள், ஸ்பிரிச்சுவலான கதைகளில் இல்லாத ஒன்று. அதற்கு ஒரு தனி கவனம் தேவைப்படுகிறது.

மாயம் ஏறி ஏறிச் செல்லும் படி கதைகள அமைந்துள்ளன. மலைவிளிம்பில் ஒரு திகைக்கவைக்கும் கதை. காலம் ஊஞ்சலாக மெய்யாகவே ஆடிக்கொண்டிருந்தது. கடைசியாக முதுநாவல். மாயங்களுக்கெல்லாம் அப்பாலுள்ள மெய்யான மாயம். ஞானம் எய்தும் கணம். ஒரு மகத்தான சிறுகதை அது.

நான் உங்கள் தொகுப்புகளில் பலவற்றை வாசித்துவிட்டேன். ஆனையில்லா நான் சிரித்தபடியே வாசித்த தொகுப்பு. ஆனால் முதுநாவல்தான் எனக்கு கிளாஸிக்.என் மனநிலையும் காரணமாக இருக்கலாம்.

ராஜ் குமாரசாமி

***

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரையாதெனின் -கடிதம்
அடுத்த கட்டுரைஈரோடு சந்திப்பு -கடிதங்கள்