சமச்சீர் கல்வி-கடிதம்

அன்புமிக்க ஜெ.மோ.,

வணக்கம். தொடர்ந்து உங்களது கட்டுரைகளை வாசித்து வருகிறேன். உங்களது நிலைப்பாடுகளில் பல எனக்கு உடன்பாடில்லை என்றாலும்,  உங்களது நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்தான் இதை எழுதுகிறேன். மாணவன் சீனிவாசனின் மரணம்  எந்தவொரு கல்நெஞ்சையும் கலங்கடித்துவிடும். உங்களது கோபத்தில் உள்ள நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

ஆனால், சீனிவாசனின் இறுதிக் கோரிக்கையான, அரசுப் பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த என்ன செய்யவேண்டும் என்பது குறித்துத் தங்களைப்போன்றவர்கள் சரியான திசையில் தமது கருத்துக்களை முன்வைத்துப்  பொதுக்கருத்தாக வளர்த்தெடுக்க முயற்சிப்பதே சீனிவாசனுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். ஏனெனில் இன்று இது மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆனால்  நீங்களோ, அரசுப் பள்ளிகளில் நேர்மையாகப் பணியாற்றும் ஆசிரியர்களும்  உள்ளனர் என்பதைக் கவனத்திலெடுக்காமல் கருத்துரைத்திருப்பது சரியல்ல. அதே போல சமச்சீர் கல்வி குறித்தும் மிகமேம்போக்கான பார்வையை நீங்கள் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

எதையும் ஆழமாக விவாதித்துக் கருத்துக்களை நிலைநாட்டும் உங்களுக்கு இது பொருத்தமாக இல்லை. எதைப் பேசினாலும் அதில் இடதுசாரிகளைச் சாடியே தீருவது எனக் கங்கணம் கட்டிச் செயல்படுவது ஏன்?.

இன்று அரசுப் பள்ளிகள் ஏன் இவ்விதமாக உள்ளன என்பது குறித்து ஆழமாக விவாதிப்பதும், மாற்றியமைக்க ஆக்கபூர்வமான பங்களிக்க, உங்களைப் போன்றவர்கள் முன்வரவேண்டும் என்பதுமே எனது கோரிக்கை.எனது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கவைத்த அனுபவத்தில் கூறுகின்றேன், அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலைமைக்கு ஆசிரியர்களை மட்டும் குறைகூறுதல் பிரச்சினையை மிகவும்  எளிமைப்படுத்துவதாகும். ஒட்டுமொத்தமாக அனைத்து விசயங்களையும் சேர்த்தே பரிசீலிக்கவேண்டும். தனியார் பள்ளிகளும் மாணவர்களை இழிவாக நடத்துவதில் ஏராளமான உதாரணங்களைப் படைத்துள்ளன. அவை,ஜனநாயகபூர்வமாக ஒருபோதும் மாணவர்களை நடத்துவதில்லை.

எனக்குத் தேவைப் படுவது ஒன்றுமட்டும்தான், ஜனநாயகபூர்வமான கல்விமுறையாக நமது கல்விமுறை மாறவேண்டும். இதைத்தான் மாணவர் சீனிவாசனின் தற்கொலையும் இந்த சமூகத்திடம் கோருகிறது. தோன்றியதை சரியாக சொல்லிவிட்டேனா என்பது தெரியவில்லை, குறையிருந்தால் பொறுத்தருள்க. நன்றி

sridharan E L

அன்புள்ள ஸ்ரீதரன்

என்னுடைய கருத்து,அரசுப்பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகளில் உள்ள ஒரே ஒரு அம்சத்தின் வேறுபாட்டைப்பற்றித்தான். பொறுப்பேற்றுக்கொள்ளல். ஒரு பிளஸ் டூ வகுப்பில் பாடம் எடுக்காமல் தூங்க ஆசிரியர் அங்கே அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வியை மட்டும் கேட்டுக்கொண்டாலே போதும், நான் சொல்வது புரியும்

மற்றபடி தனியார் பள்ளிகளில் உயர்ந்த கல்வி அளிக்கப்படுகிறது என்றோ அரசுப்பள்ளிகளின் நிலைக்கு ஆசிரியர் மட்டுமே காரணம் என்றோ நான் கூறவில்லை. ஆனால் முதன்மைக்காரணம் ஆசிரியர்களின் பொறுப்பின்மை என்றே நான் என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்

சமச்சீர் கல்வி என்றெல்லாம் பேசப்படும் பெத்தாம் பெரிய பேச்சுக்கள் இந்த உண்மையை மறைப்பதற்கான புகைமூட்டங்கள் மட்டுமே என்பதுதான் என் எண்ணம்

ஜெ

அரசு ஊழியர்களுக்கு வேலை போகும் பயம் அறவே இல்லாத நிலையே இத்தனை பிரச்சனைக்கும் காரணம். Job security at any cost. தனியார் பள்ளிகளில் ஒழுங்கா வேலை செய்யாட்டா வேலை போய்விடும். எனவே பணித்திறன் நல்லா,
ஒழுங்கா வெளிவருது. இந்த விசயத்தில் சட்டத்தை மாற்றாமல், வேறு ஒரு தீர்வும் சாத்தியம் இல்லை. மேலும் decentralisation முன்பு போல் இருக்க வேண்டும். அதாவது பஞ்சாயத்துப் பள்ளி ஆசிரியர்களை நீக்க, தண்டிக்க அந்தந்தப் பஞ்சாயத்துகளுக்கு
முழு அதிகாரம் வழங்கினால் பாதிப் பிரச்சனை தீரும். இன்று சாத்தியமில்லை.
இதைப் பற்றி ஒரு அருமையான ஆய்வு :

http://www.accountabilityindia.in/accountabilityblog/2235-case-incentive-payments-teachers-government-schools


Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்

 

ஒரு தற்கொலை

முந்தைய கட்டுரைபீர் புட்டியும் கம்ப்யூட்டரும்-கடிதம்
அடுத்த கட்டுரைகருணாமிர்த சாகரம்