ஹிஜாபும் கல்வியும்

அன்புள்ள ஜெ,

ஹிஜாப் தடையை சட்டபூர்வமானது என ஆதரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த விவாதம் ஒரு செய்திப்பரபரப்பாக இருந்தபோது ஆவேசமாக டிரெண்ட் செய்தவர்கள் அதைத்தான் பேசியாயிற்றே என அடுத்தடுத்த விஷயங்களில் பிஸி ஆகிவிட்டார்கள். உங்கள் வழக்கப்படி ‘சூடு’ ஆறிவிட்டதனால் இப்போது உங்கள் கருத்தைச் சொல்லலாமே.

ரவிக்குமார்

***

அன்புள்ள ரவி,

வழக்கம்போல என் பார்வை இரண்டுபக்கமும் பார்ப்பது. 1990 கள் வரை இந்திய இஸ்லாமியர்களில் மிகச்சிலர், பெரும்பாலும் உயர்குடிகள், மட்டுமே ஹிஜாப் அல்லது புர்க்கா அணிந்தனர். எஞ்சியவர்கள் அணிந்ததில்லை. இன்றும் காஷ்மீரில் மிக அரிதாகவே புர்க்கா கண்ணுக்குப்படும். சுடிதார் முதல் ஜீன்ஸ் வரை இஸ்லாமியப் பெண்கள் அணிந்து சுற்றிவருவதைக் காணலாம்

கேரளத்தில் தலையில் போடப்படும் ஒரு துணி (தட்டம்) மட்டுமே இஸ்லாமியப் பெண்களின் ஆடைகளில் கூடுதலாக இருந்தது. குமரிமாவட்டத்தில் அதுவும் இருந்ததில்லை. இந்திய இஸ்லாமியர் பெருவாரியாக வாழும் உத்தரப்பிரதேச கிராமங்களிலும் ஹிஜாப் அல்லது புர்க்கா நடைமுறையில் இல்லை. ஒரு சுற்று பயணம் சென்று வந்த எவருக்கும் இது தெரியும்.

உலகளவில் இஸ்லாமியர் பெரும்பாலும் வாழும் பலநாடுகளுக்குச் சென்றுள்ளேன். மலேசியா, இந்தோனேசியா, ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பாலும் புர்க்கா முறை இல்லை. அவர்களெல்லாம் கடுமையான இஸ்லாமிய ஆசாரவாதிகள்.

புர்க்கா முறை இந்தியாவில் 1985ல் ஷா-பானு வழக்கை ஒட்டி உருவான ஷரி-அத் பாதுகாப்புக் கிளர்ச்சியில்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வலியுறுத்தப்பட தொடங்கியது. 1992ல் ராமஜன்மபூமி -பாப்ரி மஸ்ஜித் பூசலை ஒட்டி இஸ்லாமியர் நடுவே உருவான பாதுகாப்பின்மையை இஸ்லாமிய அடிப்படைவாதம் பயன்படுத்திக் கொண்டபோது அது பரவலாகியது. இன்று இஸ்லாமியர் தங்கள் அடையாளத்தை முன்வைத்து தொகுத்துக் கொள்கையில் ஒரு அரசியல் நடவடிக்கையாக ஆகியுள்ளது

இந்த ஹிஜாப் கிளர்ச்சிக்கு பின்னால் மங்களூர் பகுதியில் வலுவாக வேரூன்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் உள்ளன என்பதும், மிகச்சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட இஸ்லாமியச் சிறுமிகளைக்கொண்டு இது முன்னெடுக்கப்படுகிறது என்பதும் எவரும் அறியாதது அல்ல.

இன்று மூர்க்கமான இருமுனைப்படுத்தல் நடந்துகொண்டிருக்கிறது. தன் பெண்குழந்தைகளுக்கு புர்க்கா போட்டு ‘முற்போக்கு’ இந்துக்கள் புகைப்படம் பகிர்ந்தார்கள். அறிவுஜீவிகள் புர்க்காவை புகழ ஆரம்பித்தனர். அதை ஓர் எதிர்ப்புவடிவமாக ஊடகங்களில் காட்டினர். தங்கள் குடும்பங்களில் புர்க்காவுக்கு எதிராக ஓரிரு சொற்கள் பேசத்துணிந்த இஸ்லாமியப் பெண்கள் மேல் அச்சொற்களை பெரும் பாறாங்கற்களாக ஏற்றி வைத்து புதைத்தனர்.

இச்சூழலில் நடைமுறை யதார்த்தத்தைப் பேசுவதற்கே இடமில்லை. ஆயினும் கூறவேண்டியவற்றை சிலராவது கூறியாகவேண்டும்.

ஹிஜாப் புர்க்கா அல்ல என்றுதான் போராட்டக்காரர்கள் கூறினர். ஆனால் அப்பேச்சுகளில் புகைப்படங்களில்  முன்னிறுத்தப்பட்டது முழுக்கமுழுக்க புர்க்காதான். ஹிஜாப் மிக எளிதாக புர்க்கா நோக்கிச் செல்கிறது என்பதை எவரும் உணரமுடியும். ஒருவர் எங்கும் தன் மத அடையாளத்துடன் செல்வது என்பதே சரியானது அல்ல என்பது என் எண்ணம். சென்றேயாகவேண்டும் என்பது வன்முறை.

புர்க்கா இஸ்லாமியப் பெண்களின் நடமாட்ட உரிமையையும் பொதுவெளி உரிமையையும் பறிக்கிறது, அதன்வழியாக அவர்களின் பொருளியல் உரிமையையும் பறிக்கிறது. அவர்கள் ஆண்களை நம்பி வாழவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. இன்றைய சூழலில் அதை உணரவேண்டியவர்கள் இஸ்லாமியப் பெண்களே.

*

உண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உருவாக்கிய சூழலை பாரதியஜனதா தனக்காக பயன்படுத்திக் கொண்டது. அது விரித்த வலையில் ‘லிபரல்கள்’ எளிதில் விழுந்தனர். பாரதிய ஜனதாவின் இன்றைய பணி என்பது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஆதரிக்கும் மிதவாத இந்துக்களில் ஒருபகுதியை தன்பக்கம் இழுப்பதே. தீவிரப்போக்குள்ளவர்கள் ஏற்கனவே அங்குதான் உள்ளனர். அதை இந்த ஹிஜாப் சர்ச்சை வழியாக சாதித்துவிட்டனர்.

மிதவாத இந்துக்களிலும் பெரும்பான்மையினரை, குறிப்பாக பெண்களை, தங்களை நோக்கி இழுக்க பாரதியஜனதாவால் இயன்றுள்ளது என்பதே உண்மை. அவர்களால் லிபரல்கள் புர்க்காவை ஆதரிப்பதை ஏற்கவே முடியவில்லை. பாரதிய ஜனதாவை கடுமையாக கண்டித்துவிட்டு புர்க்கா ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று சொன்ன லிபரல்களைக்கூட தீவிரலிபரல் வேடமிட்ட மதவாதிகளும், லிபரல்நடிகர்களும் துவம்சம் செய்தனர். அதை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. தங்கள் பிம்பங்களை மட்டுமே அவர்கள் கருத்தில்கொண்டனர்.

அது உருவாக்கிய விளைவுகள் பாரதிய ஜனதா மகிழக்கூடியவையாகவே இருந்தன. இந்துக்களில் காங்கிரஸ் ஆதரவாளர்களான மிதப்போக்கு கொண்டவர்களில் பலர் அவர்களை ஆதரித்தனர். இஸ்லாமியப் பெண்களிலேயே பாரதிய ஜனதாவுக்கு ரகசிய வாக்குகள் விழும் என்கிறார்கள்.  அந்த விளைவை கண்டபின்னர்தான் லிபரல்கள் அடக்கிவாசிக்கின்றனர்.

*

மறுபக்கம் ஒன்றுண்டு. நான் முன்வைக்க விரும்புவது ஜேம்ஸ் எம்லின் (J. Emlyn) என்னும் ஆளுமையை. 1838 ஏப்ரல் 7 ல் இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் கார்டிகான்ஷயர் என்னும் ஊரில் பிறந்த எம்லின் வெஸ்டெர்ன் ஹைகேட் கல்லூரியில் இறையியல் படித்தார். கிராவன் சர்ச்சில் 9 ஜூன் 1867ல் குரு பட்டம் பெற்றார்

லண்டன் மிஷனரி சொசைட்டி (London Missionary Society -LMS ) மதப்பரப்புநராக 11 செப்டெம்பர் 1867ல் எம்லின் இந்தியா வந்தார். 11 ஜூன் 1868 ல் நாகர்கோயிலை வந்தடைந்தார். அன்றைய திருவிதாங்கூரின் பாறசாலை மிஷன் மாவட்டத்தின் பொறுப்பை ஏற்று 1892 வரை பணியாற்றினார்.

1850 களில் குழித்துறை கோயில் மையமாக்கிய ஓர் ஊராக இருந்தது. அதனருகே இருந்த குன்று தொடுவட்டி என அழைக்கப்பட்டது. அக்குன்றின்மேல் ஒரு சந்தை இருந்தது. திருவட்டார் பகுதியில் இருந்தும் கருங்கல் பகுதியில் இருந்தும் வந்த ஒற்றையடிப்பாதைகள் அங்கே இணைந்தன. (திருவனந்தபுரம் நாகர்கோயில் பாதை கடலோரமாக அமைந்திருந்தது) குன்றின்மேல் ஏற படிகள் வெட்டப்பட்டிருந்தமையால் தொடி (படி) வெட்டி என்னும் பெயரில் அந்த ஊர் அழைக்கப்பட்டது.

எம்லின் அந்த இடத்தை மகாராஜாவிடமிருந்து கொடையாகப் பெற்றார். அருகிருந்த இடங்களை விலைகொடுத்து வாங்கினார். அங்கே மிஷன் ஆஸ்பத்திரி, மிஷன் தலைமையகம், பள்ளிகள் மற்றும் ஒர் ஆலயம் ஆகியவை அமைந்தன. இல்லங்கள் உருவாயின. இன்றைய மார்த்தாண்டம் எம்லின் அவர்களால் உருவாக்கப்பட்டது

1882ல் இங்கு பள்ளிகள் உருவாக்கப்பட்டன. 1898ல் பெண்களுக்கான தனிப் பள்ளிகள் உருவாயின. எம்லின் எழுதிய குறிப்புகள் வழியாக நாம் காண்பது அன்றைய கல்வியின் சித்திரத்தை. ஒன்று, அன்றைய நாயர் மற்றும் வேளாளப்பெண்கள் பிற குடியினருடன் சேர்ந்து அமர்ந்து படிப்பதை அவர்களின் குடும்பத்தினர் விரும்பவில்லை. பிறர் தொட்டு சமைக்கும் உணவையோ நீரையோ அருந்த அனுமதிக்கவில்லை.

பல நாயர்குடும்பங்களில் மட்டுமல்ல செல்வந்தர்களாகிய நாடார் குடும்பங்களிலும் இற்செறிப்பு முறை இருந்தது. கிட்டத்தட்ட கோஷா முறை. பெண்களை அவர்கள் மூன்றாம்நபர் பார்க்க அனுமதிப்பதில்லை. அதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை உயர்குடிப் பெண்ணை தாழ்ந்தகுடியினன் கண்ணால் பார்த்து ‘பார்த்தேன்’ என அறிவித்தால் அவளை அவனுடனேயே அனுப்பிவிடும் மண்ணாப்பேடி புலைப்பேடி என்னும் கொடிய முறை இருந்தது. அதை ராணி கௌரி பார்வதிபாய் நிறுத்தினார். அந்த உளநிலைகளும் அச்சங்களும் நீடித்தன.

அனைத்துக்கும் மேலாக பெண்கள் மதம் மாறிவிடுவார்கள், கல்வியில் பைபிள் கற்பிக்கப்படும் என குடும்பத்தவர் அஞ்சினர். ஆகவே பெண்கள் பள்ளிக்கு வரவில்லை. தொடக்கத்தில் வெறும் ஏழு மாணவிகளே வந்தனர், அவர்களும் மிக வறிய குடும்பத்தில் இருந்து கைவிடப்பட்ட குழந்தைகள்.

எம்லின் நாயர்கள், வேளாளர்கள், உயர்குடி நாடார்கள் அனைவருக்கும் வாக்குறுதிகள் அளித்தார்- வகுப்பில் ஒரு வார்த்தைகூட கிறிஸ்தவ மதம் கற்பிக்கப்படாது. ஜெபம் செய்யவேண்டியதில்லை. மாறாக திருவாசகம் எழுத்தச்ச ராமாயணம் உள்ளிட்ட இந்துநூல்கள் கற்பிக்கப்படும்.

பெண்கள் வந்துசெல்ல கோஷா வண்டிகளை ஏற்பாடு செய்தார். வகுப்பில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. சாதிக்கட்டுப்பாடுகள் கொண்ட பெண்கள் அச்சாதி ஆசாரங்களை கடைப்பிடிக்க ஏற்பாடு செய்தார். பள்ளி முழுக்க ஒரு ஆண்கூட இருக்கமாட்டார்கள் என்று வாக்களித்தார். அவர் உருவாக்கிய தங்கிப்பயிலும் இடங்களில் சமையல் முழுக்க பிராமணர்கள், பணியாட்கள் நாயர்ப்பெண்கள்.

எல்லாம் எப்படியாவது அவர்கள் கல்விக்குள் வரவேண்டும் என்னும் விழைவால் அவர் செய்தது. அதற்கு அவர் செய்துகொண்ட சமரசங்கள் அவை. மறுபக்கம் குமரிமாவட்ட தலித் மக்களின் வாழ்க்கையில் பெரும் வெளிச்சமாக திகழ்ந்தவரும் அவரே.

ஓய்வுக்கு பின் மார்த்தாண்டம் அயனிவிளை வடக்குத்தெருவில் ஓலைவேய்ந்த ஒரு இல்லத்தில் முனிவரைப்போல எம்லின் வாழ்ந்தார். எம்லினின் மனைவி எமிலி செய்மோர் (Emily Seymeir)  5 நவம்பர் 1882 ல் திருவனந்தபுரத்தில் ஒரு பெண்குழந்தையை பெற்றுவிட்டு இறந்தார். அவர் பாறசாலை கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ஐந்து வயதில் அந்த பெண்குழந்தை சின்னம்மை நோயில் மறைந்தது. காஞ்சிரகோடு என்னும் ஊரில் அது அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் பாறசாலை கல்லறைத்தோட்டத்துக்கு அதன் எச்சங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

எம்லின் 26 ஜூன் 1917ல் தன் 79 வயதில் மறைந்தார். அவரை இறுதிக்காலத்தில் பார்த்துக்கொண்டவருக்கு அவருடைய இல்லம் வழங்கப்பட்டது அவர் உடல் பாறசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர் மனைவியின் கல்லறைக்கு அருகே அடக்கப்பட்டது. அருகே அவர்களின் மகளின் சிறிய கல்லறையும் உள்ளது

எம்லின் விலைக்கு வாங்கிய நிலத்தில் 1964ல் மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரி உருவாகியது. இப்போது நேசமணி கிறிஸ்தவக் கல்லூரியாக உள்ளது.  எம்லின் நினைவாக மார்த்தாண்டத்தில் ஒரு சிறிய தனியார் சாலை உள்ளது. மற்றபடி ஒரு நல்ல புகைப்படம்கூட இல்லை.

எம்லின் கொள்கைவெறியுடன் இருந்திருந்தால் என்னுடைய பாட்டிகள், அன்னையர் வெளிவந்திருக்க மாட்டார்கள். உயர்பதவிகளில் அமர்ந்திருக்க மாட்டார்கள். எம்லின் முன்வைத்த விழுமியத்தையே நான் உயர்வென நினைப்பேன். ஹிஜாபோ புர்க்காவோ எதுவானாலும் கல்வி, தடையற்ற குறைவற்ற கல்வி என்பதே ஓர் அரசின் நிலைபாடாக இருக்கவேண்டும். கல்விச்சாலையில் ஒரு பெண்குழந்தை வெளியே நிறுத்தப்படுவதென்பது அரசியல்பிழை மட்டுமல்ல அறப்பிழை மட்டுமல்ல நம் மூதாதையருக்கு எதிரான பாவமும் கூட.

ஆகவே பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் துணை அமைப்புகளும் கர்நாடகத்தில் நிகழ்த்திய ஹிஜாப் அரசியல் கீழ்மையானது, நம் தலைமுறைகள் எண்ணி நாணவேண்டியது என்றுதான் சொல்வேன்.

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருப்பூர் கட்டண உரை- அறிவிப்பு