எஸ்.வி.ராஜதுரையும் நானும்

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

எஸ்.வி.ராஜதுரை வழக்கு, சில நடைமுறைகள் சில வினாக்கள்

அன்புள்ள ஜெ,

நான் பத்தாண்டுகளாக எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்குமான விவாதம், வழக்கு ஆகியவற்றை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் மன்னிப்பு கோரியிருப்பது ஆச்சரியமும் கொஞ்சம் வருத்தமும் அளித்தது. நீங்கள் அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு செய்தியைச் சொன்னீர்கள். அதற்காக ஏன் மன்னிப்பு கோரவேண்டும்? அதிகப்பிரசங்கித்தனம் என்றால் மன்னிக்கவும்

அர்விந்த்

***

அன்புள்ள அர்விந்த்

உண்மையில் எஸ்.வி.ராஜதுரை வழக்கு சார்ந்து தேவையான அச்சுவடிவ ஆவணங்களை திரட்டத் தொடங்கும்போதுதான் அதிர்ச்சியான அல்லது வருத்தமான ஒரு விஷயம் தென்பட்டது. எஸ்.வி.ராஜதுரை மீது அவருடைய கருத்தியல் எதிரிகளாக தங்களை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர்கள், அதாவது க,நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், அனைவரும் அவருடைய அறிவியக்கக்கொடை, பண்பாட்டு பங்களிப்பு பற்றி பெருமதிப்புடன் மட்டுமே பேசியிருக்கிறார்கள். அவருடைய ஆளுமை பற்றியோ பங்களிப்பு பற்றி மட்டம்தட்டும் ஒரு சொல் கூட அவருடைய எதிர்த்தரப்பிலிருந்து கண்ணுக்குப்பட்டதில்லை. பெரும்பாலானவர்கள் அவருடைய கருத்துக்களை மிகக் கடுமையாக நிராகரிக்கும்போது கூட அறிஞரென்றும் ஆய்வாளரென்றும் அவருடைய இடத்தை வலியுறுத்தி சொல்லிவிட்டு மேலே பேசுவதைக்கண்டேன். அவர்கள்தான் என் ஆசிரியர்கள்.

ஆனால் மறுபக்கம் அவரைப்பற்றிய மிகக்கீழ்மையான, அருவருக்கத்தக்க குற்றச்சாட்டுகளையும் வசைகளையும் அவமதிப்புகளையும் எழுதியவர்கள் அவருடைய முன்னாள் தோழர்கள். நெடுங்காலம் அவரோடு தோளோடு தோள் நின்று பல களங்களில் போராடியவர்கள். அவற்றைப் படிக்கப்படிக்க வியப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது. இந்த வழக்கின்போது அவருடன் நின்றவர்களே இன்று அவரை துரோகி என்கிறார்கள். ஆனால் ஒருவகையில் அது அதிர்ச்சியானது அல்ல. இடதுசாரி இயக்கங்களில் வழக்கமாக நிகழ்வதுதான்.

இடதுசாரிச் சிந்தனையாளர்கள் மிக எளிதில் சில கருத்துவேறுபாடுகளால் பிரிகிறார்கள். பிரிந்த அக்கணமே பிரிந்தவர் மற்றவர்களுக்கு துரோகியும் எதிரியும் ஆகிவிடுகிறார். அந்தத் ’துரோகி’ இடதுமுகாமுக்கு எதிராகக்கூடச் செல்லவேண்டியதில்லை. இவர்கள் நம்புவதை அப்படியே நம்பி, இவர்கள் சொல்வதை அப்படியே சொல்லி, இவர்கள் வெறுப்பவர்களை தானும் முழுமையாக வெறுத்து, கூடவே நின்றிருக்காவிடில் துரோகிதான்.  அதன் பின் அவரை வசைபாடவேண்டியது ஒரு அரசியல் நடவடிக்கையாக மாறிவிடுகிறது. அவதூறு ஒரு ஆயுதமாக ஆகிவிடுகிறது. அவரை ஆதரிப்பவர்களை தன் பக்கம் இழுத்தல், தன்னுடன் இருப்பவர்களை அவரை வெறுக்க வைத்தல் ஆகிய இரண்டும் இன்றியமையாத தேவையாகிவிடுகின்றன. இதை இடதுசாரிகள் ஓர் அரசியல் நடவடிக்கையாகவே செய்கிறார்கள். மேலிருப்பவர்கள் திட்டமிட்டுச் செய்ய கீழிருப்பவர்கள் உணர்ச்சிகரமாக எகிறி அடிக்கிறார்கள்.

மார்க்ஸிய முன்னோடிகள், ஆசான்கள் அனைவருக்குமே இந்த நஞ்சு கொஞ்சமேனும் ஊட்டப்படுகிறது. பின்தொடரும் நிழலின் குரல் நாவலை இன்று படிக்கையில் என்னை அறியாமலேயே இந்த உளநிலைகளை, அதற்குப் பின்னிருக்கும் அரசியல் ஆடல்களை, அதன்விளைவாக தியாகிகளும் அறிஞர்களும் பலிகொள்ளப்படுவதை மிகுந்த உளக்கொதிப்புடன் நான் எழுதியிருப்பதை நானே கண்டேன். எந்த மார்க்சியரும் அதை எழுதவில்லை. மார்க்சியரல்லாத நான் அந்தப் புனைவுகக்ளத்திற்குள் சென்று, அதிலொருவனாக என்னை புனைந்து கொள்ளும்போது, அங்கிருந்து பெற்ற உணர்வுகளாலேயே அந்த சீற்றத்தை அடைந்திருக்கிறேன். மிகுந்த அறவுணர்வுடன் அதைப் பதிவு செய்திருக்கிறேன்.

ஒரு மூத்த மார்க்சிய தோழருக்கு எளியமுறையில் ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொன்னபோது அத்தோழர் அஞ்சி, பதறியடித்துக்கொண்டு அதை அழித்துவிடும்படி கோரியதை சென்ற ஆண்டு ஓர் இளம்தோழர் சொன்னார். ஆள்சேர்க்கிறார் என்னும் பிம்பம் வந்துவிட்டால் அவ்வளவுதான், ஒழித்துவிடுவார்கள் என அந்த மூத்த தோழர் பதறினாராம்.

எதைப்பற்றியும் கவலைப்படாமலிருப்பவர்கள் அமைப்புக்கு வெளியே பொருளியல் சார்ந்து, சமூகம் சார்ந்து இன்னொரு வாழ்க்கை உடையவர்கள். அமைப்பு அவர்களுக்கு ஓர் புற அடையாளம் மட்டுமே, முழுவாழ்க்கையும் அல்ல. அவர்கள் அமைப்புக்கு ‘கொடுப்பவர்கள்’ ஆகவே அமைப்பு அவர்களுக்கு பணியும். அவர்களே பொதுவெளியில் முண்டா தட்டுபவர்கள். பெரும்பாலும் இவர்கள் முகநூல் போன்ற பொதுவெளியில் இடதுசாரிகளாக மிகைநடிப்பு வழங்குபவர்கள். அவர்கள் எதையும் எதன்பொருட்டும் இழந்தவர்கள் அல்ல. இழந்தவர்கள் வாழும் உலகமே வேறு.

இப்போது எண்ணிப்பார்க்கிறேன். மார்க்சிஸ்ட் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு, ஏதேனும் ஒரு கட்டத்தில் கருத்தியல் ரீதியான சிறு முரண்பாடுகள் அடைந்து, விலகி, பின் கௌரவமாக உயிர் விட்ட எவரேனும் உண்டா? ஒரு கட்டத்தில் முற்றாக தன்முனைப்பையும் தனியடையாளத்தையும், அறவுணர்வையும்கூட ரத்து செய்துவிட்டு அமைப்பின் பிரிக்க முடியாத உறுப்பாகத் தன்னை மாற்றிக்கொண்டாலொழிய அவர்களால் வாழ முடிவதில்லை. அவ்வண்ணம் இருந்தாலும் கூட அமைப்பு தன்னை மாற்றிக்கொள்ளும்போது உடனடியாகத் தன்னை மாற்றிக்கொள்ளாமையாலேயே அமைப்பு பலரைக்கைவிட்டு சென்றுவிடுகிறது.

எம்,சாத்துண்ணி மாஸ்டர்

கேரள கம்யூனிஸ்ட் கட்சியில் கே.சாத்துண்ணி மாஸ்டர் அவ்வண்ணம் கட்சியிலிருந்து வெளியே தள்ளப்படுவதை நான் கட்சிக்குள் நுழைந்த உடனே வெளிவந்த சில காலங்களுக்குள் கண்டேன். 1985ல் அவர் கட்சியின் ஜனசக்தி சினிமா நிறுவனம் மற்றும் கிசான் சபையின் நிதியை கையாடல் செய்தார் என குற்றம் சாட்டி வெளியேற்றப்பட்டார். ஐந்தாண்டுகளில் மனமுடைந்த நிலையில் மறைந்தார். இன்றும் அவர் உருவாக்கிய கூட்டுறவு நிறுவனங்கள் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. அவை மிகப்பெரிய பொருளியல் பங்களிப்பாற்றியவை. அவருடைய குடும்பம் அவற்றுடன் தொடர்பில்லாத எளிய பொருளியல் நிலையில் உள்ளது.

சாத்துண்ணி மாஸ்டர் என்கிற பெரும் தியாகி, கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர், எப்படி தொடக்கத்திலிருந்தே ஊழல்வாதியாகவும் துரோகியாகவும் இருந்தார் என்பதை பி.கோவிந்தப் பிள்ளை காசர்கோட்டில் எங்கள் கம்யூனுக்கு வந்து வகுப்பெடுத்து எங்களுக்குப் ‘புரிய’ வைத்ததை நினைவுகூர்கிறேன். ஒரே ஒரு வகுப்பு, இரண்டரை மணி நேரம், முடிந்தவுடனே அதுவரை சாத்துண்ணி மாஸ்டரை தெய்வப்பிறவியாகக் கருதிவந்த இடதுசாரித் தோழர்கள் அனைவருமே மந்திரத்தால் வசியம் செய்யப்பட்டவர்களைப்போல அவரைத் துரோகி என்று சொல்ல ஆரம்பித்ததைப் பார்த்து துணுக்குற்றேன்.

1986-அந்த துணுக்குறலை இப்போது எண்ணிப்பார்க்கும்போது நான் எப்போதுமே எந்த அமைப்புக்குள்ளுமே எழுத்தாளன் என்கிற அகங்காரத்தால் முழுதாக இணைய முடியாதவனாகத்தான் இருந்தேன் என உணர்கிறேன். அந்த அகங்காரம்தான் கருத்தியல் எனும் பிரம்மாண்டமான மாயச்சூழலில் ஒரு போதும் சிக்காதவனாக என்னை ஆக்கியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஜெயகாந்தனை, சுந்தர ராமசாமியை, கி.ராஜநாராயணனை, யஷ்பாலை காத்த அதே அகங்காரம். அதுதான் இன்றும் கவசம், பீடம்.

(எம்.வி.ராகவன்)

அடுத்த ஆண்டு கேரள கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்து ‘கண்ணூரின்றே படக்குதிர’ எம்.வி.ராகவன் வெளியேற்றப்பட்டார். பிணராயி விஜயனுக்கும் அவருக்குமான போரில் எம்.வி.ராகவன் தோற்றார். மீண்டும் அதே கதை. அதே பழிசுமத்தல், அவதூறு, மிகையுணார்ச்சிகள். அதன்பின் எத்தனை மாற்றங்கள், கேரள இடதுசாரி இயக்கத்தின் அன்னை என அழைக்கப்பட்ட, பெரும்புரட்சியாளரான கே.ஆர்.கௌரியம்மா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கட்சியில் நாற்பதாண்டுகளாக  துரோக வேலைகளை மட்டுமே அவர் செய்துகொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

(கே.ஆர்.கௌரி)

இறுதிக்காலத்தில் வாழ்நாள் முழுக்க தன்னைச் சூழ்ந்திருந்த ஆதரவாளர்கள் முழுக்க, தான் ஏறிநின்ற மொத்த வரலாறும் தன்னைக் கைவிட்டதை அவர் கண்டார். ஒரே கணத்தில் வரலாற்றுநாயகி என்ற இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட வெறும் பெண்மணியாகத் தன்னை உணர்ந்து குருவாயூரப்பனிடம்  சரணடைந்தார். அதையே அவருக்கு எதிரான ஆயுதமாக ஆக்கிக்கொண்டார்கள். அவர் எப்போதும் குருவாயூரப்பன் பக்தையாகத்தான் இருந்தார், அதை இத்தனை நாள் மறைத்துவைத்தோம் என்று பிரச்சாரம் செய்தார்கள்.

சாத்துண்ணி மாஸ்டருக்கு எதிராக வகுப்பெடுக்க 1986-ல் எங்கள் கம்யூனுக்கு வந்த பி.கோவிந்தப்பிள்ளை இ.எம்.எஸ் மறைவுக்குப்பின் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஏனென்றால் இ.எம்.எஸ் மறைவுக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சி இன்னொரு முகத்தை எடுத்தது. அதற்கு அறிஞர்கள், கொள்கை விளக்கம் செய்பவர்கள் தேவையற்றவையாக ஆயினர். அது ஒரு நேரடிக் களநடவடிக்கைக் கட்சியாக பினராயி விஜயனின் கீழ் மாறியது. பி. கோவிந்தப்பிள்ளை போன்ற கோட்பாட்டாளர்கள் உதறப்பட்டனர்

பி.கோவிந்தப்பிள்ளை
.

வெளியே சென்று தனிமைப்பட்டு வருந்தி இறந்த பி.கோவிந்தப்பிள்ளை தமிழ் நன்றாக வாசிக்கத்தெரிந்தவர். பின்தொடரும் நிழலின் குரல் வாசித்திருக்கிறார். அதைப்பற்றி எனக்கொரு கடிதமும் அனுப்பியிருக்கிறார். பின்னால் கே.கே.எம் நிலையில் தான் இருப்பதாகவும், நான் எழுதியது சரிதான் என்று வருந்தி இன்னொரு கடிதமும் அனுப்பியிருக்கிறார்.

ஆந்திரத்தின் தீவிரஇடதுசாரி முகங்களில் தீவிரமானவரான பாலகோபால் கட்சியால் ஓரம் கட்டப்பட்டு, அவதூறு செய்யப்பட்டு, தனிமைப்பட்டு சென்னையில் தலைமறைவாக இருந்தார். அவருடைய கட்சியும் போலீசுடன் சேர்ந்து அவரை வேட்டையாடியது. பேரறிஞரான அவர்  நூலகத்தில் இரவுபகலாக வாசித்தபடி பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவர் மறைந்தபோது அது மாவோயிஸ்ட் இயக்கத்துக்குக்கிடைத்த வெற்றி என்று கூட ஒரு கட்டுரை எழுதப்பட்டது.பாலகோபால் பற்றி எஸ்.வி.ராஜதுரை ஓர் அரிய அஞ்சலிக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

பாலகோபால்

அன்று பாலகோபால் பற்றி அவ்வாறு பேசிய, அந்த இயக்கத்தின் முகமாக இருந்த கத்தார் அவ்வியக்கத்தாலேயே துரோகி என சுட்டிக்காட்டப்பட்டு, தன் தங்கி வாழ்தலுக்காக சாதி அரசியலுக்குள் புகுந்து, இன்று மேடைமேடையாக சாதி வாக்குகளுக்கு அலைந்துகொண்டிருக்கும் காட்சியை காண்கிறோம். திருப்பதி வெங்கடாசலபதியைப் பற்றி மேடையில் அவர் பாடுவதைக் கேட்க முடிகிறது.

மிக ஆவேசமாக பின்தொடரும் நிழலின் குரல் பேசுவது இதைப்பற்றித்தான். இன்று கே.கே.எம் பேச்சிப்பாறையில் கொடியேற்றும் நிகழ்வு முதல் அருணாச்சலத்திற்கு அவர் எழுதும் கடிதம் வரையிலான பகுதிகளை வாசிக்கையில் செறிவான ஒரு நிகர்வாழ்க்கை என்றே பார்க்கமுடிகிறது. கண்ணீருடன் அன்றி என்னால் வாசிக்க முடியவில்லை.

இந்தச் சரிவு அவர்கள் வாழ்க்கையில் நிகழ்வதற்கு முதன்மைக் காரணம் அவர்கள் கருத்தியலால் வேட்டையாடப்படுவதுதான். தொடர் அவதூறுகள், வசைகள், சிறுமைப்படுத்தல்களுக்கு பின் அவர்கள் உள்ளொடுங்கிக்கொள்கிறார்கள், அல்லது நேர் எதிரான அடையாளங்களை தேடிச்செல்கிறார்கள்.

கத்தார், பழசும் புதிசும்

இது அறவுணர்வை கருத்தியல் வெறி அழிப்பது பற்றிய விஷயம் மட்டும் அல்ல. மார்க்சிய அமைப்புக்குள்ளேயே இந்த சிக்கல் இருக்கிறது. ஒருபக்கம் அது அறிவார்ந்த தன்மையுடன் இருக்கிறது. அதில் அறிவார்ந்த விவாதம் நிகழ்ந்துகொண்டே இருந்தாகவேண்டும், ஏனென்றால் அது இவ்வுலகை முழுக்கமுழுக்க தர்க்கபூர்வமாக விளக்கியாகவேண்டும். ஆனால் அறிவார்ந்த எவரும் தனித்தேடல் கொண்டவராக, மேலும் மேலும் உசாவிச் செல்பவராக, அனைத்தையும் பலகோணங்களில் விவாதிப்பவராகத்தான் மாறிக்கொண்டிருப்பார்.

இன்னொரு பக்கம் மார்க்ஸிய அரசியல் உறுதியான ராணுவ அமைப்பு போன்ற ஒரு கட்சியைக் கட்டமைக்கிறது. அந்த  அமைப்பில் எந்த சிந்தனையுமின்றி அதன் அடிப்படையான ஒற்றை வரிகளை நம்பி உள்ளே செல்பவர் மட்டுமே வாழமுடியும். அது எடுக்கும் எல்லா முடிவுகளையும் அங்கீகரிப்பவர், அதனுடைய அத்தனை மாற்றத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்பவர், மாற்றுச்சிந்தனை என்பதை எந்நிலையிலும் முன்வைக்காதவரே அங்கே உள்ளே இருக்க முடியும்.

இந்த முரண்பாடை சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் சரி, உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரி, மூர்க்கமாகவே எதிர்கொண்டன.ஆகவே அவற்றில் இருந்து தொடர்ச்சியாக எழுத்தாளர்களும் கவிஞர்களும் அறிஞர்களும் தூக்கி வீசப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதிலுள்ள அடிப்படை லட்சியவாதத்தால் கவரப்பட்டு உள்ளே செல்கிறார்கள். அதன் அறிவார்ந்த தன்மையால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து பங்களிப்பாற்றுக்கிறார்கள். தங்களுக்கென்று தனிச்சிந்தனையோ தனியடையாளமோ உருவாகும்போது வெளியே தள்ளப்படுகிறார்கள்.இதுதான் வழக்கமான வரைகோடு

அவர்களில் குறைவான காலமே கட்சிக்குள் இருந்தவர்கள், கட்சிக்கு வெளியே வந்தபின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முழுக்க முழுக்க கலையிலக்கியங்களில் செயல்பட்டவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். எஞ்சியவர்கள் அரசியல் களத்திலிருந்து அவதூறு வசை வழியாக அழிக்கப்படுவார்கள். பின்தொடரும்  நிழலின் குரலில் ராமசுந்தரத்திடம் வீரபத்ரபிள்ளை கேட்கிறார். ’ராமசுந்தரம் நீங்கள் அவதூறுக்குத்தானே அஞ்சுகிறீர்கள்?’ ஒருகணம்  திகைத்து நின்று கண்கலங்கி அப்படியே திரும்பி சென்றுவிடுகிறார் ராமசுந்தரம். எந்த மார்க்சிய சிந்தனையாளனையும் திகைக்க வைப்பது அந்தக் கேள்விதான்.

எஸ்.வி.ராஜதுரை மீது அவருடைய தோழர்கள் எழுதிய கட்டுரைகளை படிக்கப் படிக்க அந்தப்பட்டியலில் நான் இடம் பெறக்கூடாது என்றே எனக்கு எண்ணம் வந்தது. எஸ்.வி.ராஜதுரையின் கருத்துக்கள் மீதான என் ஏற்பையும் மறுப்பையும் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

அவருடைய மார்க்சிய ஆய்வுக் கருத்துக்களின்மீது மதிப்பும் ஈடுபாடும் உடையவன் நான். மார்க்சியத்தின் அணையாத லட்சியவாதத்தையும், மார்க்சியத்தின் விரிந்த வரலாற்று ஆய்வுக்கருவிகளையும், இலக்கியத்தில் மார்க்சிய மெய்யியல் அளிக்கும் பங்களிப்பையும் அவர்தான் தமிழில் எழுதி விளக்கியிருக்கிறார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின் மொத்த மார்க்சியமுமே அழிந்துவிட்டது என்னும் திகைப்பு தமிழில் மார்க்சியர் சார்ந்தே உருவாகும்போது மார்க்சிய அரசியல் ,மார்க்சிய அதிகாரம் ஆகியவற்றுக்கு மாற்றாக மார்க்சிய அழகியல், மார்க்சிய லட்சியவாதம் இரண்டையும் மிக வலுவாக தமிழில் ஆழ்ந்த நூல்கள் வழியாக முன்வைத்தவர் எஸ்.வி.ராஜதுரை.

அந்நியமாதல் நூல் வழியாக மார்க்சியத்தின் அடுத்த கட்ட பரிணாமம் என்ன என காட்டியவர் எஸ்.வி.ராஜதுரை. அது தனிமனித அகத்தை ஆய்வு செய்வதில், சமூகப்பரிணாமத்தை அகவயமாகவும் வகுப்பதில் பெரும்பங்களிப்பாற்ற முடியும் என்று விளக்கியவர். அறுதியான அரசியல் மாற்றம் நிகழ்ந்து, அரசதிகாரம் மூலம் மட்டுமே சமூக மாற்றங்கள் நிகழமுடியும் என்னும் எளிய இயந்திரவாத மார்க்சியப் பார்வைக்கு மாற்றாக  எல்லா அறிவார்ந்த செயல்பாடுகளும் சமூகமாற்றங்களை உருவாக்கியபடியே முன்னகர்கின்றன என்று விளக்கியவர். எளிய ஆண்டான்-அடிமை, முதலாளி- தொழிலாளி வர்க்க வேறுபாட்டு அரசியலுக்கு அப்பால் மார்க்சியம் என்ன பங்களிப்பாற்ற முடியும் என்பதைம் தமிழில் நிறுவியவர் எஸ்.வி.ராஜதுரை.அதற்கு அவருடைய பின்புலமாக ஞானியும் எஸ்.நாகராஜனும் இருந்தனர். எனக்கு மார்க்ஸிய இலட்சியவாதம் மேல் ஏற்பு உண்டு, அதன் வரலாற்று ஆய்வுமுறையே நவீனமானது என்னும் எண்ணமும் உண்டு. நான் அவரை ஏற்பது, அவரிடம் கற்பது அந்த தளத்தில்தான்.

அவர் திராவிட இயக்க ஆதரவாளராக மாறியிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இன்றும் அவருடைய ஈ.வெ.ரா பற்றிய நூல் முழுமையாகவே என்னுடைய மறுப்புக்குரியதாகவே உள்ளது. அதை முன்வைப்பதில் எப்போதும் எந்த தயக்கத்தையும் நான் காட்டியதில்லை. இக்கருத்துக்களை உருவாக்குவதில் WAC போன்ற அமைப்புகளின் பங்கைப் பற்றி சொல்ல வரும்போது அந்நூலை தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பதனால் நான் அதைச் சொன்னேன். அது ரகசியமென்றெல்லாம் எண்ணவில்லை. அவதூறாகவும் சொல்லவில்லை.எஸ்.வி.ராஜதுரையை  வருத்தும் நோக்கம் என்னிடம் இல்லை.

எஸ்.வி.ராஜதுரையின் சமூக -அரசியல் பார்வையில் என்னால் ஏற்கமுடியாதவை என்ன என்று என் எழுத்துக்களை படிப்பவர் எவரும் உணரமுடியும். நான் வாழ்க்கையை அரசியலை முன்வைத்து அணுகுபவன் அல்ல. அரசியலுக்கு ஓர் இடமுண்டு, ஆனால் தீர்மானிக்கும் விசை அது அல்ல என்று நினைப்பவன். அரசியல், சமூகவியல் வழியாக மனித அகத்தை வகுத்துக் கொள்ள முடியாது என்னும் பார்வை கொண்டவன். ஆகவே மார்க்சியம் வரலாற்றையும் சமூகத்தையும் ஒரு புறவயப்பார்வையில், ஓர் எல்லை வரை மட்டுமே தொட்டறியமுடியும் என நினைப்பவன்.

நான் நாராயணகுருவின் வழிவந்த நித்யசைதன்ய யதியின் மாணவன். அத்வைதம் என்னுடைய தத்துவம். அது பிரபஞ்ச இயக்கத்தையும் மானுடனின் இருப்பையும் இணைத்து பார்க்கும் ஒட்டுமொத்த தரிசனங்களில் இதுவரை மானுடம் உருவாக்கியதிலேயே உச்சமானது என அறிந்தவன்.என் அகவய அறிதல் அத்வைதம் சார்ந்தது. புறவய அறிதலுக்கு மார்க்சியத்தை கையாள்வதில் அத்வைதிகள் வழிகாட்டியுமுள்ளனர். என் ஆசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் நேரடியாக நான் கண்ட உதாரணம்.

இலக்கிய அழகியலில் என் வழி க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி, எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவிவர்மா வழிவந்தவன். அவர்களிடமிருந்து என் வழியை மேலெடுத்தவன்.

எஸ்.வி.ராஜதுரைரைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட அவரை ஒரு கூலிப்படையாகவே சித்தரித்த அவருடைய முன்னாள் தோழர்களின் வசைப்பெருக்கின் நீட்சியாக அவர் என்னை எண்ணியிருக்கக் கூடும்.  அவருடைய உள்ளம் அடைந்த துயரத்தை அவ்வாறுதான் நான் புரிந்துகொள்கிறேன். நான் அதில் இணையலாகாது என நினைக்கிறேன்.

இப்படி ஓர் உறவே எனக்கும் ஞானிக்கும் இடையே இருந்தது. அவர் என் ஆசிரியர், ஆனால் நான் அவருடைய அரசியலில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டவன் அல்ல. அவருடைய இறுதிக்கால தமிழ்த்தேசிய அரசியலை முழுமையாகவே நிராகரித்தேன். சிந்தனையில் ஆண்டான் அடிமைகள் என்னும் உறவு அன்றி வேறு ஒன்று இயல்வதே இல்லை என்று நம்பும் கருத்தியலடிமைக் கூட்டத்திடம் அதைச் சொல்லிப்புரியவைக்க முடியாது.

மீண்டும் சொல்கிறேன் எஸ்.வி.ராஜதுரை என்னுடைய மாற்றுத்தரப்புதான்.  அவரில் நான் ஏற்பவையும் மறுப்பவையும் உள்ளன. ஆனால் என்னுடைய மதிப்புக்குரியவராகவே அவர் என்றும் இருந்தார். சுந்தர ராமசாமிக்கும் கநாசுவுக்கும் அவர் பெருமதிப்புக்குரியவர் என்பதனால் என்றும் அது அப்படித்தான் தொடரும் என்னுடைய வழி வந்தவர்கள் என்று நான் நம்பும் அடுத்த கட்ட எழுத்தாளர்களிடமும் அது அப்படியே நீடிக்கும்.

ஜெ

க.நா.சுப்ரமணியம்

ஆசிரியர்கள் -கடிதம்

எஸ்.வி.ராஜதுரை வழக்கு- கடிதங்கள்

எஸ்.வி.ராஜதுரை,விடியல் சிவா, மற்றும்…கடிதம்


விஷ்ணுபுரம் பதிப்பகம்

v[email protected]

https://www.vishnupurampublications.com/

முந்தைய கட்டுரைசிவனி சதீஷின் முதற்சங்கு
அடுத்த கட்டுரைபிரயாகை, வாசிப்பு