பிரயாகை, வாசிப்பு

வாசிக்கும் தோறும் ஒரு ஆழங்காணா முடியாத நீர்சுழல் போல உள்ளிழுக்கும் ஆற்றல் கொண்டவை வெண்முரசு நாவல் வரிசை நூல்கள். அது ஒரு வசீகரிக்கும் ஆழம்.மீள மீள சென்று மீளவிரும்பாது விழ விரும்பும் ஆழம். அதிலிருக்கும் ஒவ்வொரு சொல்லும் ஏந்திக் கொண்டிருக்கும் மன ஆழ நுண்மைகளின் ஆற்றல்கள் அளவிடமுடியாதது. அவை விரித்தெழுப்பும் பெருவெளி ஆற்றல்களையும் பெருவினாக்களுக்கான பதில்களையும் உய்த்தறிவதே ஒரு தவம்.விரிந்து விரிந்து கிளைத்தெழும் அந்த சொற்காடுகளின் நீள அகலங்களில் நிலைமறந்து எத்தனையோ நாட்கள் சுற்றியலைந்திருக்கிறேன்.

வெண்முரசு நூல் வரிசைகளின் மையம் அவை முன்னிறுத்தும் மானுடர்களே. பாரதம் ஒவ்வொருவரின் பார்வையிலும் வெவ்வேறு வடிவங்கொள்ளும் ஆற்றலுடையது.கிட்டத்தட்ட மானுடம் என்னும் ஒற்றை பேராற்றல் தன்னளவில் பல வடிவங்கொண்டிருப்பது போல.என் சிறிய வாசிப்பனுபவத்தில் இத்தனை விரிவாகவும் வலுவாகவும் மகாபாரதத்தின் கதை மாந்தர்களை நான் உணர்ந்தது வெண்முரசில் மட்டுமே.

திரவுபதி மகாபாரதத்தின் மைய ஆற்றல். அவளின் மூலம் விதி களமாடி முடித்தமர்வதே பாரத கதை.ஆனால் இக்கட்டுரை திரவுபதியின் அணுக்க சேடியாக பிரயாகையில் அறிமுகமாகும் மாயை பற்றிய என் தேடலில் எழுந்தது.பெண்களின் அகத்தினையும் அதன் அலுங்கல்களையும் இன்னொரு பெண்ணால் மட்டுமே கூர்ந்தறிய முடியும்.இந்நாவலில் மாயையை பார்த்து திரவுபதி கூறுவது போல் ஒரு வரி வரும்

“நீ நானேதான். எனக்கிருக்கும் அழகின் ஆணவமும் இளவரசியென்ற பொறுப்பும் இல்லாத நான்தான் நீ”

அப்படியென்றால் எது மாயையை வெறும் ஒரு சேடியாகவும் திரவுபதியை பேரரசியாகவும் மாற்றி விளையாடுகிறது.??இந்த அத்தியாயம் திரவுபதி தன் மணதன்னேற்புக்கு முதல் நாள் சடங்குகளுக்கிடையே தனக்குரிய ஆண் மகனை கண்டடைவதற்கு இடையான அலைக்கழிப்புகளிலும் மன கொந்தளிப்புகளிலும் பெருகும் உணர்வலைகளின் தொகுப்பு. இதில் மாயை அந்த படகின் துடுப்பென வந்தடைகிறாள்.மாயை அத்தனை நுணுக்கமாக திரவுபதியின் தேவைகளை பகுத்தறிந்து காட்டுகிறாள்.

திரவுபதியை கொற்றவையின் வடிவென நிலைநிறுத்தும் பிம்பங்களுக்கு அடியில் அவளை ஒரு சலனங்கள் நிறைந்த கன்னியென அறிவது மாயை மட்டுமே. அதை அறியும் தோறும் மாயை கொள்ளும் விடுதலையும் நிறைவையும் இன்னொரு பெண்ணால் மட்டுமே உணர முடியும். ஆம் இதோ பேரரசி என்றும் காவிய தலைவி என்றும் பிறப்பிலிருந்தே கூறி வளர்க்கப்பட்ட ஒரு பேராற்றல் வடிவு இறுதியில் வழக்கமான காதல் கோபம் காமம் பொறாமை என்னும் அத்தனை சிறுமைகளும் நிறைந்த ஒரு சராசரி பெண் வடிவு என்பதை உணரும் அந்த எளிய மனதின் கண்டடைதலின் விடுதலை அது.

ஆனால் மாயையும் திரவுபதியும் எங்ஙனம் வேறுப்படுகிறார்கள்? திரவுபதியும் மாயையும் ஒரே ஆற்றலின் வடிவங்கள். ஆனால் அவை வெளிப்படும் வகைகளில் மட்டுமே வேறுபாடு கொள்கின்றன. திரவுபதி தன் இளம் வயதிலிருந்தே தன்னை பாரதவர்ஷத்தின் பேரரசியென்று கூறப்படும் சூழலில் வளர்கிறாள்.அவளின் நிமிர்வு அவளின் அழகு அவளின் அறிவு அவளின் ஆற்றல் அவளின் செயல்கள் என அத்தனையும் அந்த சொல்லின் வீரியத்தில் எழுந்து அவளை சூழ்ந்த தோற்றங்களோ என உளமயக்கம் ஏற்படுகிறது. எனில் உண்மையில் அவள் யார் ? அவளென நாமறியும் அனைத்தும் அவளாக நாம்அறிய வேண்டியவை என்று வெளிப்படுபவை மட்டுமா?

எனக்கு எப்போதும் இந்த ஐயப்பாடு உள்ளது. உண்மையில் நாம் அரிதென நினைப்பவர்கள் அகத்தில் எத்தகையவர்கள்? மாறாக மாயை நம் இயல்பின் வெளிப்பாடு. திரவுபதி பேரரசி என்று சமைக்கப்படுகையில் மாயை வெறும் சேடியாக வளர்த்தெடுக்கப்படுகிறாள். அவள் இருளின் நிழலென வெளித்தெரியாது இருக்கிறாள். அதுவே அவளை தன்னியல்பறிந்து அதன் உண்மைத்தன்மையோடு வளர்த்தெடுக்கிறது. அவள் காவியம் கற்பது அந்நிழலிலிருந்து ஒரு ஒளியென வெளித்தெரிவதற்காகவே. அவ்வொளி வழியாகவே அவள் திரவுபதியின் அணுக்க சேடியாகிறாள். எளியோர் என நாம் எண்ணும் எத்தனையோ பெண்கள் உண்மையில் வெளித்தெரியா பேராற்றல் வடிவங்களே. மாயை திரவுபதியிடம் அவளுக்கு உகந்தவன் யார் என்று விளக்குவதில் வெளிப்படுகிறது அவளின் கூர்ந்த அவதானிப்பும் அறிவாற்றலும். அங்கிருந்தே தன் பிறப்பின் காரணமாக எண்ணப்படும் முடிவை நிர்ணயிக்கிறாள் திரவுபதி. ஆக அங்கு திரவுபதியின் அகமென வழிநடத்தியது மாயையின் ஆற்றல் அல்லவா? ஆக பலவென்று உருமாறி வெளித் தெரிவது ஒன்றென மட்டுமாக இருக்கக்கூடிய பேராற்றல் தான் அல்லவா!! அப்படியென்றால் மாயை திரவுபதியின் அகத்தின் ரகசிய ஆற்றல். திரவுபதி மாயையின் உள்ளிருந்த வெளிவரவியலாத பேராற்றல். அவ்வளவே!

இக்கட்டுரை எழுதும்போது எனக்கு தோன்றிய முதல் வரியையே இங்கு முடிவாக எழுதுகிறேன்.””சரியான சொற்கள் மீது எழுந்தமைக என் எண்ணங்கள்” எழுந்தமைந்திருக்கிறனவா என்று நிஜமாகவே உணர முடியவில்லை!அத்தகைய முடிவில்லா அகவெளி திறப்பை தரக்கூடியது வெண்முரசு!

திவ்யா சுகுமார்

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரையும் நானும்
அடுத்த கட்டுரையாதெனின் -கடிதம்