அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
கூட்டுறவு மருத்துவமனைகளை தமிழகத்தில் பரவல்படுத்தி சேவையளித்தவரும், இந்தியச் சூழலியல் முன்னோடிகளுள் ஒருவருமான மருத்துவர் ஜீவா அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் எக்காலத்தும் வணங்கத்தக்கது. பலநூறு பசுமை இயக்கங்களைத் தோற்றுவித்த ஜீவா அவர்களின் மனதுக்கு மிக அணுக்கமான கதைகளில் ஒன்று ‘யானை டாக்டர்’. ‘ஆவணப்படங்களைவிட அதிக தாக்கம்தரவல்ல ஒரு எழுத்துப்படைப்பு தமிழில் நிகழ்ந்திருக்கிறது’ என அவர் அடிக்கடி அக்கதையைப்பற்றி குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. அதனாலேயே, அக்கதையை பல்லாயிரம் பிரதிகள் அச்சிட்டு விலையில்லா பிரதிகளாக தோழர்களுக்கும் பொதுசனங்களுக்கும் கிடைக்கச் செய்தார்.
காந்தியக்கம்யூனிஸ்ட்டாக தனது வாழ்நாள் இறுதிவரை சேவைசார்ந்த வைராக்கியத்தோடு செயலாற்றிய பேராளுமை மருத்துவர் ஜீவா அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ஈரோட்டில் நிகழவுள்ளது. வருகிற 19.03.2022 அன்று சித்தார்த்தா பள்ளியில் நிகழும் இந்த நினைவேந்தல் கூடுகையில், உங்களுடைய ‘யானை டாக்டர்’ சிறுகதையானது நாடகவடிவில் நிகழ்த்தப்படுகிறது. நாடகக்கலைஞர் ராம்ராஜின் இயக்கத்தில் அவருடைய நாடகக்குழு மாணவர்களால் இந்த நிகழ்த்துவடிவம் நிகழ்கிறது.
ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது தங்கையான ஜெயபாரதி அம்மா வெவ்வேறு விதமான அறப்பணிகளை முன்னெடுத்து வருகிறார். ஜீவா விட்டுச்சென்ற பணிகளின் நீட்சிப்படுத்த வேண்டி நிறைய நல்மனிதர்களை ஒருங்கிணைத்து ‘மருத்துவர் ஜீவா அறக்கட்டளை’ துவங்கப்பட்டுள்ளது. தன்னகத்தில் சுடர்ந்தெரிந்த ஜீவாவின் அணையா ஜோதியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்லும் பெரும்பொறுப்பை கையிலெடுத்துப் பணியாற்றுகிறார் ஜெயபாரதி அம்மா. அவருடைய விழைவின் காரணமாகவே இந்நாடக நிகழ்வும் இந்நினைவேந்தலில் இடங்கொள்கிறது.
அறத்தின் பெருமாந்தர்களாக இம்மண்ணில் நிலையுயரா்ந்த வரலாற்றுவரிசையில், யானை மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய வாழ்வுப்பங்களிப்பு என்பது இந்தியச்சமூகம் வணங்கிப் பின்பற்றத்தக்கது. அவரைப்பற்றிய மிகச்சிறந்த ஆக்கமென தமிழில் நெடுங்காலம் நிலைநிற்கும் இக்கதையை மீண்டும் இச்சமகாலத்தில் இன்னொரு கலைவடிவில் நிகழ்த்துவதை அவருக்கான நினைவஞ்சலி என மனங்கொள்கிறோம். படைப்பாசிரியர் உங்களுக்கும் நண்பர்களுக்கும் இதற்குரியத் தகவலைப் பகிரந்துகொள்வதில் மனதார நிறைவுறுகிறோம். வாய்ப்புள்ள தோழமைகள் இந்த நினைவேந்தல் கூடுகையில் பங்குபெற வேண்டுகிறோம்.
மருத்துவர்கள் ஜீவா மற்றும் கிருஷ்ணமூர்த்தி போன்ற மூத்த ஆளுமைகளின் செயற்தடம் தொடர்வதற்கான சிற்றசைவுகளில் ஒன்றாக இத்தகைய நிகழ்வுகள் குணங்கொள்ள பேரியற்கையைத் தொழுகிறோம்.
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி