எஸ்.வி.ராஜதுரை வழக்கு, சட்டக்குறைபாடுகள் -கடிதங்கள்,

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

எஸ்.வி.ராஜதுரை வழக்கு, சில நடைமுறைகள் சில வினாக்கள்

அன்புள்ள ஜெ

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் சட்டநடவடிக்கைகள் பற்றி ஈரோடு கிருஷ்ணன் எழுதியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. குற்றபத்திரிகை அளித்து குற்றம்சாட்டுபவர் நீதிமன்றம் வராமலேயே விசாரணையை ஆரம்பிக்க அனுமதி கொடுக்கும் வழக்கமெல்லாம் நான் இதுவரை கேள்விப்படாதது. அப்படி விசாரணை தொடங்கி பாதியில் குற்றம்சாட்டுபவர் வந்து நான் குற்றம் சாட்டவில்லை, கையெழுத்து என்னுடையதில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்யமுடியும்? எஸ்.வி.ராஜதுரை என்ற பேரில் எழுதுபவர் இன்னொருவர் என்று ஆனால் என்ன செய்ய முடியும்? இதையெல்லாம் கூடவா நீதிமன்றம் யோசிக்காது? ஆச்சரியமாக இருக்கிறது.

அதேபோல ஒரு முக்கியமான நடவடிக்கையை வழக்குதாரர்களில் ஒரு தரப்பிற்கு தெரிவிக்காமல் முடிவெடுப்பதும் ஆச்சரியமானது. அப்படியும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. அந்த வழக்கறிஞர் அறிவிக்கை. நிஜமாகவே ஆச்சரியம். அப்படி ஒன்றை இதுவரை வாசிக்க நேர்ந்ததில்லை. அது ஏன் நம் அறிவுச்சூழலில் பெரிய ஆச்சரியத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கவில்லை என்று அதைவிட ஆச்சரியப்படுகிறேன். ஏன் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் வக்கீல்கள் இதைப்பற்றிச் சும்மா இருக்கிறார்கள் என எண்ணி ஆச்சரியப்பட்டேன். இணையத்திலே வாசித்தால் யாரோ ஒருவர் இதை வெளியிட்டது சட்டப்படி குற்றம் என்கிறார்- எந்த சட்டம் அவர் படித்தது என தெரியவில்லை. பத்த்ரிகையாளர் ஞாநி அந்த வக்கீல் அனுப்பிய அறிவிக்கை ‘அப்பாவித்தனமானது’ என்கிறார்.

பத்தாண்டுகளாக இணையத்தில் இருக்கிறது அது. இதை நம் எதிரிக்கு ஒருவர் செய்யும்போது நாம் ஆதரித்தால் நாளை நமக்கும் இதுவே வரும். எவரும் எவரையும் சட்டநடவடிக்கை என்றபெயரில் ஆபாசமாக எழுதி அவமதிக்கலாம். (அந்த வழக்கறிஞர் அறிவிக்கையை நீங்கள் நீதிமன்றத்தில் நம்பர் செய்திருந்தால் மேலமை நீதிமன்றங்கள் சுமோட்டாவாகவே கேஸ் எடுக்கலாம்) இதே போன்ற ஒரு அறிவிக்கை வலதுசாரிகளிடமிருந்து ஏதாவது இடதுசாரிக்கு போனால் இதை இந்நேரம் தேசியப்பிரச்சினையாக ஆக்கியிருப்பார்கள். இதிலுள்ள சாதிசார்ந்த வசைகள் எல்லாம் சட்டப்படி குற்றம். அதைச் சொல்பவருக்குத்தான் இழிவு. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் ஓர் அறிஞன் பெயரை இழுத்துவிட்டு இழிவுசெய்துவிட்டார்கள். (எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….எஸ்.வி.ராஜதுரையின் சட்ட அறிவிக்கை )

வக்கீல் வேலை எவ்வளவோ தரம் தாழ்ந்துவிட்டது. என்னென்னவோ செய்கிறார்கள். ஆனாலும் இன்றும் வேறெந்த தொழிலை விடவும் வக்கீல் வேலைக்கு ஒரு கௌரவம் உள்ளது. அது இந்த தொழிலில் உள்ள அறிவுபூர்வமான அம்சம் காரணமாகத்தான். எந்த சிறிய ஊரிலும் அறிஞர்கள் என்றால் நாலைந்து வக்கீல்கள்தான் இருப்பார்கள். வக்கீல்களுக்கு இன்றைக்கும் படித்தவர்கள், சொற்களில் கவனம் கொண்டவர்கள் என்னும் சித்திரம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகம், ஆந்திராவில் சட்டம்படித்தவர்களை எல்லாம் உள்ளே கொண்டுவந்தபோது அந்த தரம் அடிவாங்கியது. இன்றைக்கு மீண்டும் கண்டிப்பாக ஆக்கிவிட்டார்கள். இந்த அறிவிக்கை வழக்கறிஞர் தொழிலுக்கே அவமானம். நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இதை வைத்து வாசகர்கள் எவரும் வழக்கறிஞர்களை பொதுவாக எடைபோட்டுவிடவேண்டாம் என்றுதான்.

ஆர்.ராகவன்

அளவை- சட்ட இதழ்

அன்புள்ள ஜெ

ஈரோடு கிருஷ்ணன் எஸ்.வி.ராஜதுரை பற்றி எழுதியிருந்த கட்டுரை பொறுப்பான மொழியில் நிதானமாக எழுதப்பட்டிருந்தது. தெளிவாக புரியும்படி என்னென்ன நடந்தது, என்னென்ன சிக்கல் என்று சொன்னது. ஆனால் அவர் நடத்தும் அளவை இதழில் சட்டப்பிரச்சினைகள் பற்றிய குறிப்புகள் இதேபோல தெளிவாக இல்லை. அவை மிகச்சுருக்கமான ஃபைல் குறிப்புகள் போல உள்ளன. வாதி, பிரதி, தொடுக்கப்பட்ட வழக்கு, எழுப்பப்பட்ட பிரச்சினைகள், தீர்ப்பின் சுருக்கம் ஆகியவை அளிக்கப்படவேண்டும். அதன்பின் முழுத்தீர்ப்புக்கும் இணைப்பு கொடுக்கப்படலாம். அனைவரும் படிக்கும்படி இருக்கும். அதேபோல அந்த இதழின் முதல் பக்கத்திலுள்ள 3 கட்டுரைகள் மட்டுமே முதலில் தெரிகின்றன இதழின் அடுத்தபக்கம் இருப்பது தெரியவில்லை. அங்கே 4 கட்டுரைகள் உள்ளன. முதல்பக்கத்திலேயே ஏழு கட்டுரைகளும் தெரியும்படி அமைக்கலாம்

எம்.ராஜேந்திரன்

எஸ்.வி.ராஜதுரை,விடியல் சிவா, மற்றும்…கடிதம்

எஸ்.வி.ராஜதுரை வழக்கு- கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசின் சிறு விஷயங்கள்
அடுத்த கட்டுரைபா.பிதலீஸ் நினைவுகள் – சே.ராகுல்