வெண்முரசு தினசரி வாசிப்பை கடினமாக்கும் முதல் விசயமே இதில் வரும் கணக்கற்ற கதாப்பாத்திரங்கள். உதிரிக்கதாப்பாத்திரங்கள் கூட அவர்கள் இடத்திற்கேற்ப ஒரு அழுத்தமான தடத்தை பதிவார்கள். கெளரவர் நூறு பேருக்கும் கல்யாணம் நடப்பது விவரிக்கப் படுகிறது. பேரரசுகள், இளவரசிகள், குதிரைகள் மேல் நிரை நிரையாக செல்வம் நகருள் வருவது சொல்லப்படுகிறது. அங்கே அரசர்களுக்கும் ராணிகளுக்கும் தங்குமிடங்களை ஒருங்கிணைக்கும் ஒரு சுங்கத்துறை அதிகாரிக்கும் இடம் இருக்கிறது. நகருள் நுழைவோரை நீங்குபவரை பதிவேட்டில் பதிந்து தகவல் கொடுத்து இடம் ஒருங்கிணைத்து ஒரு பிழையின்றி நிகழ்வு அரங்கேற உழைக்கும் ஒரு சுங்க அதிகாரி நன்றாகத் தூங்கி பலநாட்கள் ஆகிறது என்று புலம்புவதற்கு இடம் இருக்கிறது.
வேறொரு நிகழ்வை ஒருங்கிணைக்க படைவீரர்களை திரட்டி வைத்து வேலைவாங்கும் ஒரு சிறிய தலைவன் ” இந்நிகழ்வு அமங்கலமின்றி நடந்தேற வேண்டுமே” என்று உள்ளங்கை வியர்த்து பதைபதைத்தபடி வாயிலில் காத்திருக்கிறான். அவனுடைய குரல் பதிக்கப்பட்டிருக்கிறது. சமையல்காரன் வெயிலுக்கு உலர்த்தி கவிழ்த்து வைத்திருக்கும் உருளிகள், சருவங்களிடையே நடந்து செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உச்சி வெயிலுக்கு சுட்டு வைத்துவிடும் கவனம் இளவரசே என்று எச்சரிக்கிறான். என்றோ ஒரு நாள் நடக்கவிருக்கும் போருக்காக காத்திருக்கும் கத்தி, கேடயம், ஈட்டிகள் துருப்பிடிக்காமல் இருக்க செய்யப்படும் பக்குவங்கள் விவரிக்கப்படுகின்றன. மீன் நெய்யும் பன்றிக் கொழுப்பும் கலந்து பூசப்பட்டுவிட்டால் துருப்பிடிக்காது. அவை வைக்கப்பட்டிருக்கும் அறையை திறந்து பார்த்து அங்கே எழும் குப்பென்ற கவிச்சி மணத்திற்கு மூக்கைப் பொத்துகிறார் விதுரர். தொலைதூரம் செல்லக்கூடிய தேர்கள் கற்பாதைகளில் அழுங்காமல் குலுங்காமல் செல்வதற்கு என்ன சிரத்தை எடுக்கப்படுகிறது என்ற குறிப்பு வருகிறது. மூங்கிலை வளைத்துப் பக்குவம் செய்து பாதையில் செல்லும் போது ஏற்படும் அதிர்ச்சிகளை உறிஞ்சி பயணத்தை சொகுசாக்கும் என்று எழுதுகிறார்.
பல்லாயிரயம் மக்கள், ஐம்பது நூறு ராச்சியங்களின் முக்கிய பிரமுகர்கள், வந்து திருவிழா போல கல்யாணங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே வினயபுத்தி கொண்ட ஒரு போர்வீரன் சின்ன சேட்டை செய்கிறான். பிறர் ஒரு விழியசைவைக்கூட செலவு செய்து அதை உற்று நோக்க முனையாத அந்த செயலை அவனை விட குறும்பு கொண்ட மூவர் கண்டுகொள்கிறார்கள். ஜெயமோகன், சாத்யகி, கிருஷ்ணன். எவ்வளவு பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும் ” ஆமா அவன் பெரிய இவன்” என்ற மிதப்பில் தானே பேசுவோம் அப்படிப்பட்ட குரல்களும் கிண்டல்களும் நிறைய இடங்களில் வருகின்றன நம்மைப் போன்ற பொதுமக்கள் “வெண்முகில் நகரம்” நாவலில் வரும் பூரிசிரவஸ் இவ்வளவு பெரிய பாத்திரமாக வளர்வான் நெஞ்சு மிக நெருக்கமான ஆளாவான் என்று அறியவில்லை. இந்த நாவல்களில் ஜெயமோகன் ஒரு எறும்பாக, மனிதக் கண்களாக, பருந்தின் கண்களாக, ஒரு சடத்தின் கண்களாக, ஒரு ஞானியின் கண்களாக எல்லாக் கோணங்களிலும் எல்லா dimensionகளிலும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார். கங்கை அளவிற்கே பெரிய கம்பளி ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றையும் தவறவிடாமல் வடிகட்டி எழுத்தில் பதிந்து கொண்டேயிருக்கிறார்.
நான் மேல சொன்ன காட்சிகளை வேறொரு வெண்முரசு வாசகரிடம் பகிர்ந்து கொள்வேன் என்றால் அவர் இதையெல்லாம் நான் படிக்கவேயில்லையே என்று குழம்புவார். குழம்பிவிட்டு அவர் பல பல உச்ச காட்சிகளை எடுத்துச் சொல்லி இதெல்லாம் பயங்கரம் என்று சொல்வார். நான் அவற்றை முதன்முதலாக கேட்பது போல கேட்டு ஆச்சர்யப்படுவேன். நானே கூட பத்துநாள் முன்பு எழுதியிருந்தால் வேறு பல நிறங்களுடைய வைரங்களை அள்ளியெடுத்திருப்பேன். இதுதான் நடக்கும். அத்தனை உச்சங்கள் நினைவில் தக்க வைக்க முடிந்த வரை நம் பாக்கியம். நின்று நிறுத்தி அவற்றை மனதில் நன்று பதிக்க வேண்டும் என்று முயன்றால் கதை ஓட்டம் நின்று விடும். இங்கிருந்து அசை போடுவதா மேலே சென்று இன்னுமின்னும் அள்ளிக்கொள்ளவா என்று ஊசலாடும்.
இந்த நாவல்களில் குறிப்பிடப்படும் நகரங்களை, நதிகளை, குல வரலாறுகளை குறிப்படப்படும் ராகங்களை, மலர்களை, மது வகைகளை, தேவர்கள், தெய்வங்களை, பறவைகளை நிலக்காட்சிகளை நிறுத்தி நிதானித்து மனதில் நிறுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டால் 29ஆம் வயது துவங்கிய இரவில் படிக்க ஆரம்பித்த வெண்முரசு,40 வயதிலும் படித்து முடிக்கப்படாமலே இருக்கும்.
அது போக பளார் பளார் என முகத்தில் அறையும் அழகிய உவமைகள். இருவது வரிகள் படித்து முடிக்கும் முன்னமே இந்த நாளுக்கு சுமக்கக் கூடிய எடையை தூக்கிக் கொண்டாகிவிட்டது அசை போடப் போ என்று உள் மனம் சொல்லும். அப்படி ஒவ்வொரு இருவது வரிக்கும் நிறுத்த முடியாது என்று தொடர்ந்து சென்று கொண்டே இருக்கத் தூண்டும். கனவிலும், தனிமையிலும், நிதானத்திலும் எதிர்பாராத தருணத்திலும் நம்முள் உள்ளே இறங்கிய வரிகள் ஒரு புதுச்சொல் போல கொப்பளித்து அடிக்கும் போது இருந்த இடத்தில் குன்றமடித்து இரண்டு குதிகுதித்து அந்த உவமைகளை கையில் வாங்கி கொண்டிடாட வேண்டியது தான்.
என் செல்ல மகள் வீட்டு வாசலில் நின்று படியேறி உள்ளே செல்ல நின்று கொண்டிருக்கிறாள். வண்டியில் உட்கார்ந்தபடி அவள் படிவழியே ஏறுவாளா, தத்தித் தத்தி வண்டியேற்றும் சறுக்கில் ஏறுவாளா என்று யோசிக்கிறேன் என்று கணக்குப்போட்டுக் கொண்டிருக்கிறேன். படிவழியே ஏறுவதில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை என்று நினைக்கூடியவளாக என் மகள் இருக்கவேண்டும் என்றே உள்ளூர ஆசைப்படுகிறேன். அதைத் தான் ரகசியமாக ஊக்குவிக்கவும் செய்வேன். சேட்டையும், சுழியும் கோணலும் இல்லாமல் என்ன வாழ்க்கை. சறுக்கலில் கால் வைக்கப்போகும் கணத்திற்காக ஒரு சிறுவனாக காத்துக்கொண்டிருந்தவன் அவள் சறுக்கலில் ஏறி ஒரு முறை சறுக்கி சுதாரித்து அடுத்த காலடியை எடுத்து வைத்த கணம் நான் அந்த முந்தைய கணத்தில் இருந்தவனில்லை. வண்டி நிலைகுலைய ஓடினேன் அவளைத் தூக்கி மேடேற்றி வாசலில் இறக்கிவிட்டேன். அவளது அந்தச் செய்கைக்காக கூச்சலிட்டு கண்டித்தேன். என் கைகளில் அன்றி வேறெங்கும் இவளால் பாதுகாப்பாக வாழ்ந்துவிடமுடியாதென்றும் நினைக்கிறேன். இராமேஸ்வரம் கடல்கரையில் இறக்கிவிட்டாய் பறந்தே இலங்கை சென்று வரக்கூடிய ஆள் என்றும் கொஞ்சுகிறேன். இப்படி நான் நடந்து கொள்வது முதல் முறையும் அல்ல. அந்த கணம் அந்த கணம் என்னுள் ஒரு குரல் கேட்டது. அது ராதையின் குரல். மகன் கர்ணனிடம் சொல்கிறாள் அந்தத் தாய். “தத்தித் தத்தி நடந்து செல்லும் குழந்தையின் பின்னே நெஞ்சில் கைவைத்த படி பதறிக்கொண்டு செல்லும் அன்னையைப் போல உன் பின்னே அறதேவதை துணை வருவாள்” என்று.
துரியோதனன் தருமனின் ஒரு சுடு சொல்லால் அவமானப்படுத்தபட்டு அவையை விட்டு வெளியேறுகிறான். அவனும் அவனது தம்பியரும் ஒற்றை உடலென செல்லது பெரிய கருநாகம் ஒன்று அறையை நிறைத்துக்கொண்டு வேகமாக ஊர்ந்து செல்வதைப் போலிருந்தது என்று எழுதுகிறார்.
காலை பிரம்மமுகூர்த்தில் எழும் முதல் சங்கொலி கேட்டு நகரம் பசுமாட்டின் அடிவயிறு சிலிர்த்துக்கொள்வதைப் போல எழுந்துகொண்டது என்று ஒரு வர்ணனை. கண்னன் சூடியிருக்கும் மயிற்பீலி அவனது தாயின் புன்னை என்றொன்று.கடற்கரையோர துவாரகை நகர் பற்றிய வர்ணனை இது கடலின் இளநீல மார்பில் சூடியிருக்கும் ஒரு அழகிய பதக்கம் துவாரகை. கடலென்னும் பருந்தின் உகிர்கள் தூக்கிச் செல்லும் அழகிய பொன்மணி துவாரகை. இன்னும் சொல்லி முடியவில்லை. பத்திருபது பக்கங்களுக்குப்பிறகு திருஷ்டத்துய்மன் மேலும் சொல்கிறான் அந்நகரம் கடலென்னும் நீலக்கூந்தல் சூடிய மலரென்று. படகுத்துறையொன்றில் படகுகள் அணிவகுத்து நிற்பது பன்றியிடம் பாலருந்தும் குட்டிகளைப் போலிருந்தது என்று.
ராதை கண்ணனை நினைத்து ஏங்கி உடல் மெலிகிறாள். பித்தளை குடத்தின் வளைவில் எதிரொளிக்கும் நம் முகப்பிம்பம் எப்படி மெலிந்திருக்குமோ அப்படி மெலிந்தாள். துவாரகை நகரத்துப் பெண்களின் மூக்கு எப்படியிருக்கதென்றால் வாழைத்தண்டில் மெல்ல ஒழுகிச் சொட்டி நிற்கும் நீரைப் போல.இந்திரநீலத்தில் வரும் அந்த அத்தியாயம் முழுக்கவே வர்ணணைகளின் உச்சம் தான்.
ஜாம்பவதி கண்ணனின் மனைவி. கரிய நிறத்தவள். அவளது அழகு காராமணியென, கருங்கள் உடைவென ஒளிர்விட்டது என்று சொல்கிறார். உடைந்த கருங்கல் என்றெழுதினால் இந்த அர்த்தம் வராது. படித்து முடித்த பிறகு இதுபோன்ற உவமைகள் நினைத்த நேரமெல்லாம் மனதில் தோன்றி எழுந்து வந்தபடியே இருக்கும்.
பாவ்லோ கொய்லோவின் “ஆர்ச்சர்” படித்துக் கொண்டிருந்தேன். மிக மென்மையான ஞானிக்குரிய குரல் கொய்லோவிற்கு. வில்லாளி எப்படி கற்கவேண்டும் என்று சொல்லச் சொல்ல நான் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றுமே வெண்முரசில் கிருபரும், துரோணரும், பீமனும், அதிரதனும் சொன்ன வார்த்தைகள் என்று கண்டேன். ஒரு வில்லாளன் தன் துறையில் மட்டுமே தனித்து கவனம் செலுத்தாமல் எல்லா துறைகளையும் ஆர்வமாக கவனிப்பான். இரும்பு ஆசாரியிடம் நெருங்கிப் பழக விரும்புவான். அவரது கை சுத்தியலைத் தூக்கி எந்த இடத்தில் ஓங்கி அடிக்கிறார் எந்த இடத்தில் பதமாக அடிக்கிறார் என்று கூர்மையாக அவதானிப்பான் என்று அந்நாவலில் ஓரிடத்தில் வரும். துரோணர் அர்ஜூனனிடமும், அஸ்வத்தாமனிடமும் சொல்கிறார். ” இந்த கங்கையில் ஓடம் வைத்திருக்கும் ஒரு குகன் தன் துடுப்பைக் கொண்டே பிரம்மத்தை அடைய முடியும். பாலைக் கடைந்து தயிராக்கும் ஆய்ச்சி தன் மத்தைக் கொண்டே பிரம்மத்தை நெருங்கமுடியும். என்று
ஒரு போர் நடக்கிறது. அந்தப்போரின் மிக உக்கிரமான கட்டத்தில் கொலை வெறியுடன் செயலில் ஒன்றிப்போய் அஸ்வத்தாமன் அம்பெய்த அவன் முகம் சாந்தம் ஏறி ஏறி தியானத்தில் இருக்கும் யோகியைப் போல மாறியது என்று சாத்யகி காண்கிறான். இன்றைக்கு நான் வரிந்திருக்கும் லட்சியமே அஸ்வத்தாமனின் அந்த முகம் தான். என் செயலில் ஒன்றிப்போய் தோய்ந்து போய் அஸ்வத்தாமனின் முகத்தை அடைய வேண்டும். பிரம்மத்தை அடைய வேண்டும். இந்த முகத்தில் பல நாட்கள் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். யான்னியின் புகழ்பெற்ற “the rain must fall”பாடலில் உச்சகட்டத்தில் பைத்தியம் பிடிக்கவைக்கும் வயலின் இசையை வாசிக்கும் இந்த பெண்ணின் முகத்தில் தவழும் சிரிப்பைப் போலத் தான் இருக்கும் என்று கண்டுகொண்டேன். இந்த இசைக்கோர்வையில் ஒவ்வொரு கலைஞரது முகமும் இப்படித்தான் பொலிவுற்றிருக்கும்.
“பட்டுச் சரிகை..” “பட்டுச் சரிகை ..” என்று அரற்றாமல் ஒரு நாளும் வெண்முரசு எனக்கு படிக்க முடிந்ததில்லை. நெய்யும் போது ஒரு நூல் மாறினால் விலகி நெய்தால் மொத்த வடிவும் குலைந்துவிடும். ஒவ்வொரு புள்ளிநூலின் முழுமையும் அமைந்தாலன்றி அந்த சரிகை வடிவம்கொள்ளாது. முழுமை கொண்டுவிட்டாளோ அந்த அழகைபார்த்துத் தீராத படி இருக்கும். ஒரு வட்டமும் ஐந்தாறு அரைவட்டமும் தாளில் வரைந்தால் ஒரு பூ வடிவம் வரும்.தாளில் அதைப்பார்த்தால் ஒரு உணர்வும் எளாது. அதையே பட்டுச்சரிகையாகப் பார்த்தால், அந்த நேர்த்தியும், முழுமையும், நூல் அழகும் அந்த வட்டங்களை கோடுகளை எளில் கனவாக்கும். அந்த நேர்த்தி எதிலிருந்து வந்தது? துணியைத் திருப்பிப் பார்த்தால் அந்த நெசவின் தலைகீழ் வடிவம் தெரியுமே அதைப் பார்த்தும் “அது ஒரு அழகு இது ஒரு அழகு..” என்று குழைவோமே அது போலத் தான் வெண்முரசுடன் குழைந்து கொண்டிருக்கிறேன். வெண்முரசின் ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் முழுமையை நோக்கி எழுதப்பட்டவை. ஒவ்வொரு அத்தியாயமும் கடிகாரத்தில்இருக்கும் பற்சக்கரங்களைப் போன்ற கச்சித அழகைக் கொண்டவை. இவை மொத்தமாக எழுதப் படாமல் ஒவ்வொரு நாளாக எழுதப்பட்டவை என்பது தான் நம்பவே முடியாதது.
கே.கே.குமார்