புரட்சியின் மீம்ஸாம்ஸம்

திருப்பூர் குணா என்பவர் தமிழகத்தின் இடதுசாரிப்புரட்சிக்கு இனியிருக்கும் ஒரே நம்பிக்கை என நேற்று ஒரு நண்பர் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் அறிந்த பரவசம் இரண்டு மணிநேரம் நீடித்தது. யமுனா ராஜேந்திரனும் புரட்சியை எக்கணமும் உண்டுபண்ணிவிடும் வெடிநிலையில் நீடிப்பவரே என்றாலும் இவர் உள்ளூர் என்பதனால் வாய்ப்பு மிகுதி. என்னையும் எஸ்.வி.ராஜதுரையையும் ஒருங்கே வசைபாடி தி.கு ஒரு முகநூல் பதிவு போட்டிருந்தார். அது இது

திகு பதிவு

எஸ். வி.ஆர் பத்தாண்டுகளுக்கு முன்னால் ஜெயமோகன் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். ஜெயமோகன் அதற்காக எஸ்விஆரின் பாதம் பணிந்து வணங்கியுள்ளார். இருவரும் இவ்வகையில் சமரசமாகிவிட்டனர். ஆனால், தொடுக்கப்பட்ட வழக்கு இருவருக்குமான தனிப்பட்ட பிரச்சனையின் காரணமானதல்ல. “எஸ்விஆர் அந்நிய நிதியை பெறுகிறவர், ஆகவே அவரது எழுத்துக்கள் சந்தேகத்திற்குரியது” என்று ஜெயமோகன் பொதுதளத்தில் குற்றம் சாட்டினார். எஸ்விஆர் இருபது இலட்சம் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இப்போது, அந்த குற்றச்சாட்டை ஜெயமோகன் திரும்பப் பெறவும் இல்லை. தான் அப்பழுக்கற்றவன் என்று எஸ்விஆர் நிரூபிக்கவும் இல்லை. இருவரும் சமரசமாகிவிட்டனர். இவர்களுக்கிடையிலான முரண்பாடு அவ்வளவுதான். அதாவது, ஜெயமோகன் அந்நிய நிதியின் அழிவு வேலைகளால் அறச்சீற்றம் கொண்டு எஸ்விஆரை சீண்டவில்லை. எஸ்விஆரும் சமூக பொறுப்புணர்வோடு வழக்கு தொடுக்கவில்லை. என்றால், இவர்கள் இருவருக்குமான முரண்பாடுதான் என்ன?

எஸ்விஆர் சமூக மாற்றத்திற்கான மார்க்சியத்தை அகற்றிவிட்டு நிலவும் சமூகத்தை பாதுகாக்கும் பெரியாரியத்தையும் தலித்தியத்தையும் நிறுவுவதற்காக உழைக்கிறார். ஜெயமோகன் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதோடு நிலவும் சமூகத்தில் வர்ணாசிரமம் செல்வாக்கு செலுத்த உழைக்கிறார். இருவருக்குமே சமூக மாற்றம் தேவையானதல்ல. அதற்கு எதிரானவர்களும் கூட. இவர்களுக்கிடையில் அரசியல் ரீதியாக முரண்பாட்டை விட உடன்பாடுதான் முதன்மையானது.ஆக ஏற்பட்டிருந்த பிரச்சனை ஒரு நட்பு முரண்பாடு.

இந்த நட்பு முரண்பாடு என்பது பத்தாண்டுகளாக இழுத்துக்கொண்டு போனதுதான் பரிதாபத்துக்குரியது.

*

இவருடைய புரட்சி வழிமுறை என்ன என்று பார்த்தேன். பொன்னுலகம் என்னும் பதிப்பகம் வைத்திருக்கிறார். அதில் சுருக்குவழியில் புரட்சி கொண்டுவரும் வழிமுறைகள் பற்றிய நூல்கள் வெளியிடுகிறார். தமிழ்மக்கள் அதைப் படிக்க படிக்க புரட்சிக்கான சுருக்குக் கயிறு இறுகியிறுகி வருகிறது.

ஆனால் படிக்கவேண்டுமே. நம்மாட்கள் போர்ன் கதைகளிலேயே மேலே கதைச்சுருக்கம் இருந்தால் நல்லது என நினைப்பவர்கள். ஆனால் புரட்சி மனம்தளர்வதில்லை. திகு பல புதிய வழிகளைக் கண்டடைகிறார்.

ஆம், மீம்ஸ்!

திகு எழுதிய தாய் (ரூ 300)  வன்னிக்குடிசை (200) வீழ்த்தப்பட்டவர்களின் புனித நூல் (145) உள்ளிட்ட 15 புதிய நூல்கள் அதிரடி சலுகை விலையில். அஞ்சல் கட்டணம் இல்லை. இவ்விளம்பரத்தை அதிரடியான பல சினிமா மீம்ஸ் வழியாக முகநூலில் பரப்புரை செய்கிறார்

அற்புதமான மீம்ஸ். தேவயானி, சரத்குமார் உள்ளிட்டோர் தோன்றும் புரட்சி மீம்ஸ். இன்றே, ரசிக்கத்தவறாதீர்.

என் கவலை எல்லாம் இவர் இப்படி சுருக்குவழியில் புரட்சியை நடத்திவிட்டால் பாவம் யமுனா ராஜேந்திரன் என்ன செய்வார்? கார்ல் மார்க்ஸுக்கு பின் அவர் லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்வது வீணாகி விடுமா?

முந்தைய கட்டுரைநெடுஞ்சாலையில் ஓர் இடம்
அடுத்த கட்டுரைதங்கப்புத்தகம்- கடிதம்