ஈரோடு சந்திப்பின் கற்றல் அனுபவம்

பேரன்புக்குரிய ஜெ அவர்களுக்கு,

கோவை புதிய வாசகர் சந்திப்பு குறித்த பதிவு பிப்ரவரி மாதம் தளத்தில் வந்ததை பார்த்து மறுகணமே விண்ணப்பித்து பதிலுக்காக காத்திருந்தேன். இடையில்  இதேபோன்ற நான் தவிர்க்க விரும்பாத மற்றுமொரு முக்கிய நிகழ்விற்கான அறிவிப்பும் வெளிவர மிகவும் குழம்பிப் போனேன்.

தளத்தில் மீண்டும் ஒரு பதிவு, கோவை சந்திப்பிற்கு அதிக அளவில் விண்ணப்ப படிவங்கள் வந்து சேர்ந்து விட்ட காரணத்தால் வாய்ப்பு கிடைக்காத மற்ற வாசகர்களுக்கு ஈரோட்டில் மார்ச் மாதம் நடைபெற உள்ள சந்திப்பில் வாய்ப்பளிக்கப்படும் என்ற தகவல் வந்ததும் அக்குழப்பத்தில் இருந்து என்னை விடுவித்தது அப்பதிவு.

முதல் முறை விண்ணப்பித்த போது அதில் கொடுக்கப் பட்டிருந்த கைப்பேசி எண்ணை குறித்து வைக்க தவறிவிட்டேன். ஆயினும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு மணவாளனிடம் கோவை சந்திப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அதற்கான உறுதி செய்யப்பட்ட பதில் எதுவும் வரவில்லை என்றும் ஒரு வேளை எனக்கான இடம் உறுதி செய்யப்படாத பட்சத்தில் ஈரோடு சந்திப்பில் எனக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்தேன்.

மின்னஞ்சல் அனுப்பிய சில நிமிடங்களில் மணவாளன் என்னை தொடர்பு கொண்டு கோவை சந்திப்பிற்கான இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது என்றும் எனக்கு ஈரோடு சந்திப்பில் நிச்சயம் முன்னுரிமை கூடிய வாய்ப்பு அளிப்பதாகவும் வாக்களித்தார்.

அதன்படியே சில நாட்களில் என் இடம் உறுதி செய்யப்பட்டது என்ற தகவலை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். உடன் கூடுகையின் போது விவாதிக்க புதிய எழுத்தாளர்களின் சில சிறுகதைகள் மற்றும் கவிதைகளை அனுப்பி நிச்சயம் வாசித்து வர கேட்டுக் கொண்டார்.

மொத்தம் எட்டு சிறுகதை மற்றும் இரண்டு கவிதை தொகுப்புகள். நிகழ்வு தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவே நான் வருகிறேன் என்று மணவாளனிடம் கேட்க அவரும் சம்மதம் தெரிவித்தார். நிகழ்வு நடக்கும் இடத்தின் வரைபட இணைப்பின் தகவலையும் பகிர்ந்து இடத்தை அடைவதற்கான சில வழிகளையும் பரிந்துரைத்தார். ஒரு சாகசப் பயணமாக காஞ்சிக்கோவிலில் இருந்து நிகழ்வு நடக்கும் இடத்தை அறிமுகம் இல்லாத இரண்டு மனிதர்களின் பேருதவியுடன் இரவு 9.30 மணியளவில் அடைந்தேன்.

இதற்கு முன்பாகவே கடந்த சில நிகழ்வுகளில் நாம் சந்தித்திருந்தமையால் என்னை பார்த்தவுடன் “நீங்கள் புதிய வாசகர் சந்திப்பிலா” என்று வியந்து கேட்டு வரவேற்க பின்னர் அன்று நள்ளிரவு வரை நடந்து கொண்டிருந்த விவாதத்தில் நானும் ஒரு அங்கமாக அமர்ந்திருந்தேன். அன்றைய விவாதம் இறைத் தோன்றல்கள் பற்றியது. வரலாற்று ரீதியாக இறை நம்பிக்கைகள் எப்படி உருவானது, இறை தூதர்களின் வருகை, இன்றைய சூழலில் நாம் எப்படி நமக்கு கிடைத்த கிடைக்கின்ற தகவல்களை ஆராய்ந்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்தது.

இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு வாசகனின் பங்களிப்பு என்ன, எப்படி ஒரு படைப்பை அனுக வேண்டும், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன, அவர்களை இணைக்கும் மையப்புள்ளி எது. விவாதங்களுக்கான அடிப்படை தேவைகள் என்னென்ன, விவாதங்கள் எப்படி இலக்கியமாக வடிவம் கொள்கிறது. விவாதிக்கும் முறைகள் என அடுத்தடுத்து நீண்டது உரையாடல்கள்.

நுட்பமாக வாசிப்பதெப்படி, அர்ப்பணிப்புடன் கூடிய வாசிப்பு எப்படி ஒருவனை அறிவார்ந்த பக்குவப்பட்ட மனிதனாக மாற்றும், கருத்து பரிமாற்றங்கள் – எழுத்து, எண்ணம், தர்க்க ரீதியாக எழும்போது அதனை எப்படி கையாள்வது, அறிவார்ந்த சமூகம் உருவாக வேண்டிய தேவை, அச்சமுதாயத்தில் இலக்கிய வாசகன் சேர்ந்து இயங்க அவசியம் என்ன, அதில் ஒரு வாசகனின் நிலைப்பாடு, அவன் ஆற்றவேண்டிய செயல் என்ன, அது இப்பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன என மிக ஆழமான உரையாடல்கள், விவாதங்கள், தொடர்ந்த வண்ணம் இருக்க நான் இவ்விலக்கியச் சூழலில் ஒரு வாசகனாக என்னை சுய மதிப்பீடு செய்து கொண்டு என் நிலைப்பாட்டை உணர முடிந்தது.

தங்களின் வாசிப்பு அனுபவம், வாழ்க்கை அனுபவம், ஆசான்களுடனான பயணம், செயல் அனுபவங்கள், எழுத்தின் எதிர்காலம், அறிவார்ந்த சமூகம், எழுத்தாளர்களின் பங்கு

சிறுகதை, கவிதை எழுதுவதில் உள்ள நுணுக்கங்கள். நேர்த்தியான ஒரு படைப்பை படைப்பதற்கான வழி முறைகள், அதன் வழியாக ஒரு எழுத்தாளன் மேம்படுத்தக்கூடிய மொழி வளர்ச்சி என எண்ணில் அடங்கா கற்றல் அனுபவம் நான் என்னை இன்னும் மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நிகழ்வின் சாராம்சமாக இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விவாதம். அதி முக்கியமாக சிறுகதைகள் எழுத நுட்பமாக கையாள வேண்டிய விதிமுறைகள், அதற்காக ஒரு படைப்பாளி மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், ஆகச்சிறந்த படைப்பிற்கு உலக இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டுடன் கூடிய சிறுகதைகள் பற்றிய விவாதங்கள் என நிகழ்வின் சுவாரஸ்யங்கள் முற்றிலும் வேறு வகையான கற்றுல் அனுபவத்தை அளித்தது.

சக வாசக எழுத்தாளர்களுடனான அறிமுகங்கள், அவர்களின் வாழ்க்கைப் பயணம் பற்றிய சிறு சிறு உரையாடல்கள், நிகழ்வு நடந்த இடத்தின் சூழல், மணவாளன் மற்றும் அந்தியூர் மணி அண்ணன் அவர்களின் உபசரிப்பு, நேரத்திற்கு தரமான உணவு என பல நிறைவான அம்சங்கள் நிறைந்ததாக அமைந்தது இச்சந்திப்பு.

நன்றி கலந்த பேரன்புடன்

இரா.மகேஷ்

முந்தைய கட்டுரைதங்கப்புத்தகம்- கடிதம்
அடுத்த கட்டுரைநெல்லை புத்தகக் கண்காட்சி