இயல்பான உங்களது ஆரம்ப உரையாடலான “அறிவு சார்ந்து தன்னை மேம்படுத்துதல்” எண்ணங்களையும் மனிதர்களையும் சுமக்கும் ஒட்டகங்களிருந்து விதைகளை சிதறடிக்கும் யானைகளாக்க பயிற்சி கொடுக்கும் முகாம் என தெளிவாக புலப்பட்டது.
(கொரோனா) காலத்தில் பவா மூலமாக உங்களை அடைந்து கோவை விஷ்ணுபுரம் விழாவில் இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டு 5ம் தேதி சனி காலை 7 மணி அளவில் ஈரோடு பண்ணை வீட்டிற்குள் செல்ல இருந்த எங்களை ஏர்போர்ட்டில் இருக்கும் செக்யூரிட்டி போல அங்கிருந்த லாப்ரடார் (Labrador Retriever) பரிசோதனை செய்தது. பிறகு தெரிந்தது அது அனுமதி இல்லாமல் வந்த வாசகர் என்று ஆனாலும் ஆசான் சொற்களால் லாப்ரடார் வகைகளின் திறமை, கனடாவில் அது பிறந்த மாகாணம் கேட்டு பெருமிதம் அடைந்து வெளியேறியது.
முகாமில் மிகையாக சித்தரிக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறுகளையும், புனைவாக உருவாக்கப்பட்ட குறுஞ்செய்திகள் உருவாக்கும் பிம்பங்களை உடைக்கும் கருவிகள் உங்களால் அடையாளப்படுத்தப்பட்டது. உங்களின் பயண அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள் மற்றும் திரைப்பட அலுவல்கள் மூலம் சமகால மனிதர்களிடம் நீங்கள் காணும் கற்பனை திறனற்ற அனுபவங்களும், புதினங்களை உருவாக்குவதில் உள்ள தொய்வு குறித்த பகிர்தலும் வேதனையளித்தது.
பூவண்ணா சந்திரசேகர், சீரா மற்றும் இளம் வாசகர்களின் கதைகள் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. தொன்மையான படைப்புகளில் நவீனத்துவத்தை கையாளும் முறை, சிறுகதையின் முடிவு வாசகனுக்கு உண்டாக்கும் எல்லையில்லா கற்பனைத்திறன் மற்றும் ஐரோப்பிய நடை மொழியில் மாற்றங்கள் இல்லாமல் தமிழில் எழுதுவதால் வாசகர்கள் அடையும் தடைகள் இளம் வாசகர்களுக்கு தெளிவாக உலக புகழ் பெற்ற (சிறுகதைகள்) மூலம் விளக்கமளித்தீர்கள். கதைகளை உங்கள் எழுத்துக்கள் மூலம் பயின்ற எங்களுக்கு சொற்கள் மூலம் வந்தடைந்து புதிய அனுபவமாக இருந்தது.
வாழ்க்கையில் செட்டில் (settle) ஆவது குறித்து நீங்கள் கொடுத்த விளக்கம், எங்களுடன் இருந்த 22 மணி நேரத்தில் ஒரு முறை கூட செல்பேசியை உபயோகிக்காமல் இருந்தது புதிய சம கால தலைமுறை பின்பற்ற சிறந்த உதாரணங்களாகும்.
மஞ்சள் மனம் சூழ்ந்த மாலை நேர நடை பயிற்சி, நானும் இந்த சந்திப்பில் உள்ளேன் என பல உத்திகள் மூலம் உணர்த்திய காற்றும், உறுதியான ஈரோடு கிருஷ்ணன், அன்பான மணவாளன், பிரபு, அந்தியூர் மணி மற்றும் நண்பர்களின் ஒருங்கிணைப்பு நிறைவானதொரு நிகழ்வை கொடுத்தது.
இரவு வீடு திரும்பும் போது அகமெங்கும் நிறைந்திருந்திர்கள். என் புத்தக அலமாரி முழுக்க நிரம்பியிருக்கும் உங்கள் நூல்களில் பல ஆசான்கள் பேரூரவமாகி கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஒரு சீடனாக தயாராகி விட்டேன் எனும் உணர்வின் பேருவகையுடன்
அதியமான்
சென்னை