அபி கவிதைகளுடன் எனக்குத் தொடர்பு உருவாவது 1988-ல். சுந்தர ராமசாமியின் நூலகத்திலிருந்து அந்தர நடை என்னும் தொகுதியை எடுத்து படித்தேன். மிஞ்சிப்போனால் இருபது நிமிடங்களில் அதைப் படித்து முடித்தேன். ஒரு படைப்பை படிப்பதற்கான உளநிலைகளைப்பற்றிய ஒரு தெளிவை இன்றுநான் அடைந்திருப்பது அத்தகைய சில வாசிப்புகளினூடாக. அன்று அபி எப்படியோ வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டிருந்தார். அவருடைய நண்பர்களாக வானம்பாடிக் கவிஞர்கள் சிலர் இருந்தனர். அவருடைய சில கவிதைகள் வானம்பாடி இதழில் வெளிவந்ததும் அதற்கு காரணம்.
அன்றைய இலக்கியப்பேச்சுக்களில் வானம்பாடிப் பட்டியலில் அவர் பெயர் இயல்பாக சேர்க்கப்பட்டிருந்தது. அ,த்துடன் அக்கவிதைகளும் எழுத்து வகை புதுக்கவிதைகளின் ’அந்தரங்கக் குறிப்பு’ என்ற தன்மையை அடையாமல் கலில் கிப்ரான், ரூமி வகையான ஒரு தன்வெளிப்பாட்டு முறையில் அமைந்திருந்தன. நான் அவற்றை வானம்பாடிக் கவிதைகளின் வாசாலாகத்துடன் உடனடியாகத் தொடர்பு படுத்திக்கொண்டேன். எனக்கு அவை பெரிதாக எதையும் அளிக்கவில்லை.
எப்போதுமே நான் கூறுவது கவிதை என்பது அடிக்கோடிடப்பட்ட வார்த்தை என்பதுதான். வாசகன் அந்த அடிக்கோடை இடவேண்டியிருக்கிறது. அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தன் கற்பனையை செலுத்தி கூர்ந்து படிக்காவிட்டால் அவனால் அப்படைப்பை பெற்றுக்கொள்ள முடியாது. பெருங்கவிஞனின் யுகங்களை உலுக்கும் வரியைக்கூட கவனமற்ற வாசிப்பு எதையும் பெற்றுக்கொள்ளாமல் கடந்து செல்லக்கூடும். வாசிப்பவர் மிக அரிதான வாசகராக இருந்தாலும் கூட. இது வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.. பாரதியின் கவிதைகளை அவை எழுதப்பட்ட போது அன்றிருந்த தமிழின் தலைசிறந்த வாசகர்கள் கூட பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார்கள். அவற்றிலுள்ள சில இலக்கணப்பிழைகளோ வட்டார உச்சரிப்பின் சில சாயல்களோ மட்டுமே அவர்கள் கண்களுக்குப் பட்டிருக்கின்றன.
அந்தர நடை அபியை சரியாகக் காட்டும் தொகுப்பு என்று சொல்ல முடியாது. எனினும் அது அவருடைய தனித்த வெளிப்பாடு கொண்ட சில கவிதைகளை உள்ளடக்கியிருந்தது. இயல்பாகவே அத்தொகுப்பு தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் குறிப்பிடப்படும்படியான கவனமெதுவும் பெறவில்லை. சுந்தர ராமசாமியின் பட்டியலிலேயே அபி இருக்கவில்லை.
பின்னர் அபியை நான் கவனித்தது பால்ராஜ் கென்னடி என்னும் திரை ஒளிப்பதிவாளர் தனது திருமணத்தை ஒட்டி வெளியிட்ட வீடு என்னும் தொகுப்பில். மிக அழகிய முறையில் அச்சிடப்பட்டு அக்காலத்தில் வெளிவந்த அந்த தொகுதியில் கி.ராஜநாராயணன் உட்பட தமிழின் பல முதன்மை படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. அதில் அபி வாசிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தனி அனுபவம் படைப்பெனும் பொது அனுபவமாகி மீண்டும் வாசிப்பெனும் தனி அனுபவமாகும் விந்தையை செறிவான மொழியில் விளக்கிய அக்கட்டுரை அன்று தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கோட்பாட்டு கட்டுரை என்று எனக்குத்தோன்றியது. அதை எழுதியவர் அபி என்பது வியப்பூட்டியது.அதே இதழிலேயே அபி அந்தி எனும் கவிதையை எழுதியிருந்தார். அக்கவிதை மீது மேலதிக கவனம் குவிவதற்கு அக்கட்டுரை காரணமாகியது. ஆகவே அது எனக்கு மிக ஆழமான உளநகர்வை அன்று உருவாக்கியது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் அபி கவிதைகளைப்பற்றி தமிழினி ஆசிரியர் வசந்தகுமார்தான் விவாதித்தார். தமிழ்க்கவிதைகளைப் பற்றி நான் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தபோது அபி பற்றி நான் எழுதவேண்டும் என்று வசந்தகுமார் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்காக அபியினுடைய முழு கவிதைகளையும் தொகுத்து படித்தேன். அபியைப்பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றையும் எழுதினேன். அதிலிருந்து இன்றுவரை அபியின் படைப்புலகத்துடன் ஒரு அணுக்கமான தொடர்பு இருந்து வருகிறது.
அண்மையில் 2019 க்கான விஷ்ணுபுரம் விருது அபிக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி அவரைப்பற்றிய நூல் ஒன்றைத் தொகுத்தபோது அக்கட்டுரையை அதில் இடம்பெறச் செய்தேன். அபி பற்றி ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டது. நான் அபியை நேரில் சந்திப்பதும் உரையாடுவதும் அப்போதுதான். அதற்கு முன்னர் ஒரு பொது நிகழ்வில் ஒருமுறை பார்த்ததுடன் சரி. தன் கவிதையைப்போலவே உள்ளடங்கிய அமைதியான மனிதராக அபி இருந்தார். அபியின் கவிதைகளைப்பற்றி ஒரு விரிந்த பொது விவாதம் உருவாக விஷ்ணுபுரம் விருது வழி வகுத்தது. இளம் தலைமுறையினர் அபியைப் பற்றி எழுதினார்கள். .நானும் மீண்டும் விரிவாக பேசி எழுதி விவாதித்தேன்.
அபிக்கு எண்பது அகவை நிறையும் இத்தருணத்தில் இந்நினைவுகளை தொகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.. அபி பற்றி நான் ஏற்கனவே எழுதிய கருத்துக்களையே திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. அபியுடைய படைப்புகளை அரூபக் கவிதைகள் என்று கூறலாம். அருவக்கவிதை என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கவிதை முற்றிலும் வேறொரு பொருளில் அமைந்துள்ளது. வடிவ ஒருமையற்ற அல்லது சொல்லும்படியான வடிவமற்ற ஒருவகைக் கவிதை அது. அருவ ஓவியத்திலிருந்து பெற்றுக்கொண்ட சொல்.
இங்கு அபி கவிதைகள் பற்றிச் சொல்லும்போது தூலமான புற உலகு சார்ந்த அனுபவங்களைச் சாராத, முற்றிலும் அகவயமான அனுபவங்களை சார்ந்து எழுதப்படும் கவிதைகள் என்ற அர்த்தத்திலேயே அச்சொல்லாட்சி பயன்படுத்தப் படுகிறது. தமிழில் இச்சொல்லை பிரமிள் பயன்படுத்தினார். அதன் நீட்சியாக தமிழில் இது ஒரு தனிக் கலைச்சொல்லாக புழக்கத்தில் உள்ளது.
மனித உள்ளம் கொள்ளும் உணர்வுகள் இருவகை. புறவுலகில் உள்ள அனுபவங்கள் சார்ந்து அடையும் திட்டவட்டமான உணர்ச்சிகள், சிந்தனைகள், எதிர்வினைகள் ஆகியவற்றாலானது பெரும்பகுதி .இன்னதென்று அறியாமல் நிகழும் அகச்சலனங்களாலானது ஒரு மிகச்சிறு பகுதி. அனைவரிடமும் அது இருக்கும். காலம் பற்றி, வெளி பற்றி, மனிதனது இருப்பு பற்றி, சகமனிதனுடனான உறவு பற்றி அதை விரித்தெடுத்துக்கொள்ளலாம். எனினும் அடிப்படையில் அது ஒரு புரிபடாத உள நகர்வு மட்டும்தான்.
அது மொழியை சந்திக்க முடியாத ஒரு நிலை.மொழி என்பது புறவயமானது. புற உலகமே மொழி என ஆகியிருக்கிறது என்று எமர்சன் இயற்கை எனும் கட்டுரையில் சொல்கிறார். மொழியியலாளர் அதை வழிமொழிகிறார்கள். மொழி என நாம் உணரக்கூடிய அனைத்துமே தூலமான பருப்பொருட்களுடன் தொடர்பு கொண்டவை. பருப்பொருட்களுக்கு இடப்பட்ட இடுகுறிபெயர்களும் தொழில்பெயர்களும்தான் மொழியின் சொற்கள். அந்தச் சொற்களுக்கு வெவ்வேறு வகையில் கூடுதல் உருவகப்பொருள் அளிப்பதன் வழியாகவே புறஉலகுக்கு அப்பாற்பட்ட எதையாவது நாம் சொல்ல முயல்கிறோம்.
இங்கு பயன்படுத்தப்படும் சொல்லே அக நகர்வு என்பதுதான்.அகம் என்பது மிகத்தெளிவான பருப்பொருள் சார்ந்த சொல். நகர்வு என்பதும் ஒரு பொருண்மை சார்ந்த சொல்லே. அவற்றை இணைப்பதன் வழியாக நாம் பிறிதொன்றை கூற முயல்கிறோம். மொழியில் அருவமான உணர்வுகளை கொண்டு வந்து சேர்ப்பது ஒரு வகையான சொற்பயிற்சியாக முடிந்துவிட வாய்ப்புண்டு. புற உலகிலிருந்து படிமங்களை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு அளிக்கப்படச் சாத்தியமான புற உலகு சார்ந்த அனைத்து அர்த்தப்படுத்தல்களையும் ரத்து செய்து, பிறிதொன்றை வாசகன் கற்பனை செய்யும்படி கட்டாயப்படுத்துவதே அதன் வழி .ஒரு வகையான அகப்பரிமாற்றம் அது. வாசகனும் கவிஞனும் இணைந்து செய்துகொள்ளும் ஓர் அகப்பயிற்சி.
அபியின் கவிதைகளில் அந்தி என்பது அந்தி என்பதற்கு அளிக்கப்படும் எல்லா புறஉலகம் சார்ந்த பொருட்களையும் தொடர்ந்து ரத்து செய்வதன் வழியாக அந்தியை பிறிதொன்றாக மாற்றி, வாசகனுடைய கற்பனையை அதன் எல்லை வரைக்கும் அவன் கொண்டு போகச் செய்து ,அந்த அகநகர்வை சொல்ல முயல்கிறது. இத்தகைய கவிதைகள் மிக சிக்கலான சில இடர்களை சந்திப்பவை. ஒன்று, ஏற்கனவே பல முறை சொல்லப்பட்ட வழக்கமான மீபொருண்மை சார்ந்த கருத்துக்களை வாசகன் சென்றடையும்படி அவை செய்துவிடக்கூடும் ஏனெனில் இந்த அகநகர்வென்பது தொன்மையானது, என்றுமுள்ளது. பல்லாயிரம் பேரால் பலநூறு முறை விளக்கப்பட்டுவிட்டது.
அந்தி என்பதையே இயல்பாக காலத்தின் மயக்கமும் அழிவும் என்று ஒருவர் பொருள் கொண்டுவிட்டாரென்றால் அந்த கவிதை அங்கு முடிந்துவிடுகிறது. வாசகன் அக்கவிதையை அர்த்தமாக அன்றி அனுபவமாக ஆக்கும்படி கட்டாயப்படுத்தவேண்டிய பொறுப்பு அக்கவிதைக்கு உண்டு. இல்லையேல் அக்கவிதை வெறும் மெட்டஃபிசிக்கல் கவிதையாக மாறிவிடும் மெட்டாஃபிசிக்ஸின் மிகப்பெரிய சிக்கலே அது அனுபவத்தை நோக்கிச் செல்லாமல் கருத்தை நோக்கிச் செல்லும் என்பதுதான். ஜான் டன் எழுதிய மீபொருண்மை கவிதைகள் காலம் வெளி குறித்து ஆங்கில மரபு, கிறிஸ்தவ மரபு உருவாக்கிய வரையறுக்கப்பட்ட பழைய கருத்துக்களை நோக்கி வாசகனை கொண்டு செல்கின்றன. அக்கருத்துகளுக்கு மிகச் சரியான உருவகங்களை உருவாக்கினார் என்பது தான் ஜான் டன்னிடம் நமக்கு வரும் அணுக்கம் அல்லது வியப்புக்குக் காரணமாக அமைகிறது. தூய அனுபவமாக ஆவதில்லை.
இன்னொரு இடர் என்பது அத்தகைய அக அனுபவங்களை சொல்லத் தொடங்கும்போது ஆசிரியர் தனக்கேயுரிய தேய்வழக்குகளில் சிக்கிக் கொள்வார். சொல்லாட்சிகளிலும் சரி, படிமங்களிலும் சரி, அவருக்கே உரித்தான சில படிமங்கள் திரும்ப வரும். ஓரிரு படிமங்களையே திரும்ப திரும்ப பயன்படுத்த நேரிடும். அந்நிலையில் மிகக்குறைவாக எழுதி நின்றுவிடுதல் என்பது பாதுகாப்பானதாக இருக்கும்.
அபி அந்தி தொடர் கவிதைகளை சரியான இடத்தில் நிறுத்திவிட்டிருப்பதைக் காணலாம் .அதே வரிசையில் அவர் ஐம்பது கவிதைகள் எழுதியிருந்தாரென்றால் சலிப்பூட்டும் தேய்வழக்காக அந்தி மாறியிருந்திருக்கும். இந்த இரு இடர்களிலிருந்தும் இயல்பாக மீண்டு நுண்ணிய அக அனுபவங்களை, அருவ அனுபவங்களை தன் கவிதைகளினூடாக கூற முயன்றார் என்பது தான் அபியின் வெற்றி. முயன்றார் என்றே அதைச் சொல்ல முடியும். கூறி முடித்துவிட கூறி நிறுத்திவிட எவராலும் இயலாது. இங்கு மனிதர் தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருக்கும் நிலை அது ,அனைத்து மதங்களுக்கும் அடிப்படையான உள்ளுசாவல் அது. அதை அடையாத ஒருவர் கூட இங்கிருக்க வாய்ப்பில்லை. மிக அரிதாக சிலரே அதை பிற அனுபவங்களிலிருந்து பிரித்து தங்களுக்கான ஒரு தனி அனுபவமாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த அனுபவம் பலவகைகளில் மீள மீள சொல்லப்படுகிறது எனினும் மொழி ஒவ்வொரு முறையும் ஒரு சுட்டு ஆகி அதைக் காட்டிவிட்டு முன்னரே நின்றுவிடவே செய்கிறது. ஆகவே எப்போதுமே சொல்லப்படாத ஒன்றாகவே அது எஞ்சிவிடுகிறது.
அபியின் அருவ உலகம் இக்கவிதைகள் அனைத்திற்கும் வெளியேதான் உள்ளது. இக்கவிதைகள் அவ்வாறு ஒன்று அங்கு இருக்கிறதென்று சுட்டுபவை. அங்கு செல்வதற்கான ஒரு வழித்தொடக்கத்தை உருவாக்குவபை. தமிழில் உணவில் உப்பென எல்லா நல்ல கவிதைகளிலுமே இந்த அக அனுபவம் உள்ளது எனினும் உப்பு மட்டுமேயாக நின்றிருக்கும் கவிதைகள் என அபியின் படைப்புகளை சொல்ல முடியும். இந்த அக அனுபவம் மட்டுமே நிகழக்கூடிய கவிதைகளால்தான் தமிழில் அபி தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு மாற்றாக பிறிதொருவர் இல்லை. ஓர் ஊசி குத்தும் இடத்திற்குள் உருவாக்கப்பட்ட உலகம் என்று அதை சொல்லலாம் காலம் சார்ந்தோ ஜியோமிதி வடிவங்கள் சார்ந்தோ தான் அடையும் சில தனிப்பட்ட சித்திரங்களினூடாக அபியே நிகழ்த்துகிறார்.
கவிதையை அரசியல், சமூகவியல் பேசவைக்கிறோம். இருத்தலியல் துயரங்களை அதனூடாக சென்று அடைகிறோம். இப்புவியில் உள்ள அனைத்திற்கும் கவிதையில் இடமுண்டு. ஒன்றொன்றாய் தொட்டெண்ணி தொட்டெண்ணிய பொருளனைத்தும் ஒடுங்கிய பிறகு எஞ்சியிருக்கும் இவ்வினாக்களுக்கும் தமிழ் கவிதையில் ஒரு இடத்தை உருவாக்கியவர் அபி.
(அபி 80 மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை)