எஸ்.வி.ஆர் வழக்கு – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நாம் பழைய நண்பர்கள். பழைய என்.எஃப்.பி.டி.இ. ஞாபகமிருக்கலாம். நான் அறிந்த பழைய ஜெமோ இல்லை இந்த எஸ்.வி.ஆர் கட்டுரையை எழுதியது. பழைய ஜெமோ ரொம்ப அக்ரஸிவ் ரொம்ப ஜாலி. இரண்டும் கலந்த மனுஷன். நான் அன்றைக்குச் சொல்வதுண்டு, ஒரு பத்துவயசு பசங்களிடம்தான் இந்த அபூர்வமான கலவை இருக்கும் என்று. அதுதான் இந்தளவுக்குச் செய்யவைத்திருக்கிறது. அந்த அக்ரஸிவ்னெஸ் இல்லை இப்போது. பொதுவாக ஒரு winding up மூடுதான் தெரிகிறது. அதுதான் இந்தக்கட்டுரையிலும் உள்ளது. போறவழியை பார்ப்பதுபோல ஒரு பேச்சு.

ஆனால் ஒரு பழைய மார்க்ஸியனாக எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இந்தமாதிரி எழுதி நீங்கள் இடதுசாரிகளுக்குப் பெரிய சிக்கலை அளிக்கிறீர்கள். இந்தக்கட்டுரையை தனிப்பட்ட காழ்ப்பு, சாதிவெறி, வன்மம், இந்துத்துவம், ஏகாதிபத்தியச் சதி எல்லாம் கண்டுபிடிக்க அவர்கள் எவ்வளவு உழைக்கவேண்டும். ஆனால் எனக்கு அவர்கள்மேல் நம்பிக்கை உண்டு. வந்துவிடுவார்கள்

ஆர்.ராகவன்

***

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு படிக்க ஆரம்பிக்கையில் ஒரு பத்தற்றதுடனே இருந்தேன். வழக்கு திரும்பப்பெற்றதின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்பதை 10ந் தேதியே கிருஷ்ணன் செய்தி அனுப்பினார். வெற்றி பெருமிதத்தில் இருந்தேன் இருப்பினும் இதற்கு நீங்கள் என்ன எதிர்வினையாற்ற போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் இவ்வழக்கினால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை நன்கறிவேன்.

உங்கள் கட்டுரையில் பெருமிதமோ, நான் நிரூபித்து விட்டேன் என்ற செருக்கோ, அனைவர்க்கும் இது ஒரு பாடம் என்ற சவாலோ இன்னும் வேறுவகையான வெற்றி களிப்புகளோ இருந்திருந்தால் படிப்பதற்கு உணர்ச்சிகரமாய் இருந்திருக்கும். உங்கள் வாசகராய் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம். ஆனால் நீங்கள் கோரிய மன்னிப்பு என்னை கண்ணீரில் ஆழ்த்தியது. சிறந்த எழுத்தாளன் மட்டுமல்ல ஒரு மகத்தான ஆளுமை என்பதை காட்டிவிட்டீர்கள். ஒரு ஆசிரியராக நீங்கள் எங்களுக்கு  எவ்வளவோ கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறீர்கள். எழுத்தில் மட்டுமல்ல செயலிலும். என் ஆசிரியருக்கு வணக்கங்கள்.

V.S.செந்தில்குமார்.

பி.கு:
வழக்கு தரப்பினர் ஒரு கட்டத்தில் வழக்கை திரும்ப பெறவோ, சமரசமாக முடித்துக்கொள்ளவோ விருப்பட்டாலும் வழக்குரைஞர்கள் தன்  சொந்த நலனுக்காக அவ்வாறு செய்ய விடாமல் தடுப்பது மிக இழிவானது ஆனால் எங்கள் தொழிலில் தற்போது இது பெருமளவில் நடைபெறுகிறது. குறிப்பாக குடும்ப வழக்குகளில்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பகம்- கடிதம்
அடுத்த கட்டுரைஎண்பதுகளின் தமிழ் சினிமா – ஸ்டாலின் ராஜாங்கம்