ஆசிரியர்கள் -கடிதம்

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

பின்னிரவில் தூக்கம் கலைந்து எழுந்து, இரண்டு மணிக்கு உங்கள் தளத்தைத் திறக்கையில், ‘எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு’ முதல் பதிவாய் நின்றிருந்தது. அதன் துவக்ககாலகட்டம் பற்றி ஓரளவுக்குத் தெரியுமென்பதால் அப்பதிவை வாசிக்கத் தொடங்கினேன். ‘என் மரபுப்படி என் தலை உங்கள் பாதங்களில் பட நிலம்படிய வணங்குகிறேன். மன்னித்துவிடுங்கள்.’ என்கிற வரியை வாசித்து முடித்தபின், அந்த இரவைக் காட்டிலும் அடர்வுகூடிய ஏதோவொரு மனச்சூழலுக்குள் நான் அமிழ்ந்திருந்தேன். கடக்கவே முடியாதபடி நினைவுகள் ஊடுபாவென பின்னிச் சுழன்றன. காரணம், உங்கள் மீதான அவ்வழக்கின் தொடக்க காலத்திலேயே, எனது வெவ்வேறு நண்பர்களிடம் அதுசார்ந்த பல உரையாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்தன. ஒரு அறிவுச்சமூகம் எத்தகைய எதிர்வினைகளால் தன்னை முன்செலுத்துகிறது என்பதற்கான கூர்ந்த அவதானிப்பை நான் அவ்வழக்கின் விவாதநீட்சிகளில் கண்டடைந்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவர் ஜீவா அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் அப்பொழுதான் எஸ்.வி.ராஜதுரை அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பியிருந்தார். இவ்வழக்குபற்றி பேச்சு எழுகையில் என்னிடம், “உலகம் முழுக்க இருக்க எல்லா தத்துவங்களையும், இசங்களையும், இலக்கியங்களையும் எல்லா தரவுகளோடும் தர்க்கங்களோடும் உரையாடல் தளத்தில் முன்னெடுத்து வைக்கிற அவர்களால், தங்களைப்பற்றி சின்னதான விமர்சனங்களைத் தாங்குமளவுக்குக்கூட மனம் அமையவில்லை. தான் எப்பொழுதுமே மிகச்சரியாக இருக்கிறோமென்ற அதீத நம்புதலுக்குள் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த சுயநம்பிக்கையை உரசும் எதையும் அவர்கள் தூற்றுகிறார்கள். நாளடைவில், இளகுத்தன்மை இல்லாமல் இறுக்கமுடையவர்களாக ஆகிப்போகிறார்கள். இந்த வழக்கில், எஸ்.வி.ராஜதுரை அவர்கள் அனுப்பிய அந்த வழக்கறிஞர் கடிதத்தின் தொனி கீழ்மையானது. ஒரு முன்னோடி அறிவியக்கவாதி அப்படி வெளிப்படக்கூடாது. அந்தச் சூழலை அவர் தடுத்திருக்க வேண்டும். இன்னொருபுறம், ஜெயமோகனிடமிருந்து எதிர்வினையாக வருகிற ஒவ்வொரு பதிலும், மனம்திறந்த உரையாடலுக்கு எப்பொழுதும் அவர் தயாராக இருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.” என்றார் மருத்துவர் ஜீவா.

எஸ்.வி.ராஜதுரை அவர்களால் இவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் மருத்துவர் ஜீவாவின் வார்த்தைகள்தான் என் நினைவுக்குள் அதிர்ந்துகொண்டே இருக்கிறது. உங்கள் பதிவை வாசித்ததிலிருந்து மீளமீள எனக்குள் ஒரு எண்ணம் மட்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. இவ்வழக்கு உங்களுக்குச் சாதகமானதாகவே நிறைவுற்றிருக்கிறது. கிட்டத்தட்ட உங்கள் தரப்பு அதற்கு நியாயம் செய்திருக்கிறது. ஆனால், எந்நிலையிலும் நீங்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களை ஆசிரிய நிலையிலிருந்து சிறிதும் விட்டுக்கொடுக்கவில்லை. எல்லா அறிவுத்தளத்திலும் அதை நீங்கள் தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கிறீர்கள்.

எழுத்தாளர் தேவிபாரதிக்கான தன்னறம் விருதளிப்பு விழாவில் நீங்கள் ஆற்றிய உரையில், ஆங்கிலேயே நாவலாசிரியர் வில்லியம் மேக்பீஸ் தாக்கரேவின் மேற்கோள் குறித்து நித்ய சைதன்ய யதி அவர்கள் சொன்ன அனுபவம்  ஒன்றைப் பகிர்ந்தீர்கள். அடிப்படையில் தாக்கரே மானுட வெறுப்பாளர். மனிதனென்பவன் ஓர் கீழ்மகன் என்ற எண்ணத்திலிருந்து அவர் சொன்ன, ‘நான் ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறேன். அதில் ஒரே ஒரு தோட்டா ஏற்றிவைத்திருக்கிறேன். இனி தாளமுடியாது என எப்பொழுது இந்த மனிதனைப்பற்றி தோன்றுகிறதோ, அந்தக்கணம் அதை வாயில் வைத்து ட்ரிகரை அழுத்துவேன்” என்ற மேற்கோள்.

அம்மேற்கோளின் தொடர்ச்சியாக யதி, “அத்தகைய துப்பாக்கியை வைத்திருப்பதற்கான லைசென்ஸ் தஸ்தாயேவ்ஸ்கியிடம் மட்டும்தான் உண்டு. ஆனால், அவர் கடைசிவரைக்கும் தன் பையில் ஒரு ரோஜா மலரைத்தான் வைத்திருந்தார்” என்று சொன்னதாகக் குறிப்பிட்டீர்கள். அந்த ஞாபகநினைவு தந்த தாக்கத்திலிருந்து நாங்கள் எவரும் இன்னும் மீளவில்லை. தோட்டாக்களை செலுத்த ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தும், இம்மானுடத்திடம் மனமுவந்து ஓர் மலரை நீட்டுகிற அகம் எத்துணை உன்னதவுச்சம். உண்மையில், யதியுடைய அந்த வாக்கின் சாட்சியநீட்சி என்றே இவ்வழக்கும் முடிந்திருக்கிறது. அவதூறின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஓர் அரவணைப்பு வென்றிருக்கிறது.

இக்கணத்தில் என் மனது நம்பும் உண்மையில் நின்று இதை ஓங்கிச் சொல்வதற்கு எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை, ‘நீங்கள் என் ஆசிரியர். உங்கள் ஆசிரியமனம் கைதொழத்தக்கது!’. ஏனென்றால், தனக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிற தரப்பிலுள்ள ஆசிரிய மனதின்மீது கூட எவ்வகையிலும் காழ்ப்பையோ கசப்பையோ வளர்க்காத, அந்த உளநிலையையே தன்னைப் பின்தொடர்பவர்களுக்கும் சிந்தனைத் தொடர்ச்சியாய் வழங்குகிற உங்கள் ஆசிரியத்துவம் என்றும் எங்களுக்கான பெருவிளக்கு. காந்திக்கு நேர்ந்திருந்தாலும்கூட அவர் அணுகியிருக்கக்கூடிய வரலாற்று ரீதியான அறவழிமுறை இதுவாகத்தான் இருக்கும்.

‘ஒரு மனிதரை நிகழ்கால சலனங்களைக் கொண்டு அடையாளப்படுத்தாமல், அவருடைய கடந்தகால செயல்கள், சிந்தனைப்போக்கு மற்றும் செயல்திட்டங்களை நினைத்து அவர்முன் பணிதலே நம் மரபு’ என்ற கருத்தியலைத்தான் நாங்கள் இப்பொழுதும் எப்பொழுதும் பற்றிக்கொள்ள நினைக்கிறோம். தன்னறத்தின் வழிகாட்டி மனிதரான பழனியப்பன் அண்ணா ‘உரையாடும் காந்தி’ புத்தகத்தை பார்த்துவிட்டு, “சமர்ப்பணம் அ.மார்க்ஸ்க்குன்னு போட்டப்பவே ஜெ வேறொரு தளத்துல இருக்காருன்னு தெரிஞ்சுக்கிட்டேன். காந்திய உரையாடல் அந்தப் பக்கத்தில இருந்தே துவங்கிடுது. அதுதான் சமகாலத்துக்குத் தேவையான சமூகப்பார்வை’ என்றார்.

இப்படிப்பட்ட ஓர் அறிவியக்கச்சூழலை எங்களுக்குப் பயிற்றுவித்து அழைத்துச்செல்லும் உங்கள் கனிவுமனத்திற்கு என்றென்றைக்குமான நன்றிகள். இவ்வழக்கினை உங்கள் தரப்பு அணுகிய கோணத்திலிருந்து நாங்கள் நிறையக் கற்றடைகிறோம். இதைப் பொதுவெளியில் அகப்பூர்வமாக வெளிப்படுத்தியதற்கு வணக்கங்கள். முன்விசை மனிதர்களென சிலர் இங்கு நின்றமைவதற்கு அவர்களின் உள்ளெழுகிற ‘நிபந்தனையற்ற பணிதல்’ முக்கியக் காரணியாகிறது. மானுடப்பிரவாகம் தன் ஆழத்திற்குள் காப்பாற்றிவைத்திருக்கும் ஞானத்தை, ஏதோவொரு ஆசிரியமனம் காலத்தால் வெளிப்படுத்துகையில், அருகமர்ந்து அதை கற்றுணர்ந்திடும் அறிவுக்கு நிகரில்லை. தரப்புகள், தர்க்கங்கள் பேதமேதுமின்றி எல்லா ஆசிரியர்களையும் இக்கணம் கரங்குவித்துப் பணிகிறோம்.

நன்றியுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைஊடகங்கள், அரசியல், விவாதங்கள்
அடுத்த கட்டுரைஈரோடு வாசகர் சந்திப்பு கடிதம்