பெருங்கவிதைத் தொகுதிகள்

மிஸ் யூ வாங்க

அன்புள்ள ஜெ

மீண்டும் இக்கடிதத்தை எழுதுகிறேன். மனுஷ்யபுத்திரன் மிஸ்யூ என்ற பெயரில் மாபெரும் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் பலரும் அதை வாங்கினார்கள். நான் கேட்கவிரும்புவது இதுதான். உங்களைப் போன்றவர்கள் அதைப்பற்றி ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? ஒரு விமர்சகனாக நான் கேட்க விரும்புவது இதுதான். இத்தகைய பெரிய கவிதைநூல்களை எப்படி வாசிப்பது? அதற்கு ஏதாவது வழி உள்ளதா? (சுந்தர ராமசாமி யானைத்தலையளவு புனுகை உருட்டித் தந்தால் அது புனுகு தானா என்று சந்தேகப்படுவேன் என்கிறார்)

கே.அன்பழகன்

***

அன்புள்ள அன்பழகன்,

பல கடிதங்கள் இதே பாணியில். பெயர் வெளியே தெரிந்த, என் நண்பர்களான, சிலர் கூட கடிதத்தை வெளியிட்டால் தங்கள் பெயர் வெளியே தெரியவேண்டாம் என்று எழுதுகிறார்கள். அதில்தான் பிரச்சினை இருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு என் இணையதளத்தில் கடலூர் சீனு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் போகிறபோக்கில் மனுஷ்யபுத்திரன் பற்றி ஒரு குறிப்பு இருந்தது. அது புதுவாசகர் எழுதியது என்றால் வெட்டியிருக்கலாம். ஆனால் அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் எழுதியது. ஆகவே விட்டுவிட்டேன்.

ஆனால் அந்த வரிகளை நான் எழுதியதாக எடுத்துக்கொண்டு மனுஷ்யபுத்திரன் முகநூலில் பொங்கிவிட்டார். மனுஷ்யபுத்திரன் எழுதியது இதுதான். எனக்கு அவர் மிஸ்யூ வழியாக அடைந்த புகழ் மற்றும் இலக்கிய வெற்றி மேல் பொறாமை. ஆகவே நான் அவரை தாக்குவேன் என அவர் முன்னரே எதிர்பார்த்திருந்தார். அதை ‘நண்பர்களிடம்’ ஏற்கனவே சொல்லியிருந்தார். அதன்படி நான் அவரை ’வன்மமாக’ தாக்கியிருக்கிறேன். கூடவே ஆள் பிடிக்க இலக்கிய விமர்சனம் செய்கிறேன் என்றும் இன்னும் பலவும் வசைகள்.

கவனியுங்கள், நான் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அதற்கு இந்த எதிர்வினை. இந்த மனநிலையில் ஒருவர் இருக்கையில் கவிதை பற்றி அல்ல, எதைப்பற்றியாவது ஏதாவது விமர்சனம் செய்ய முடியுமா? கண்மூடித்தனமான பாராட்டு அன்றி ஏதாவது ஒரு வரி விமர்சனம் வந்தால்கூட மனுஷ்யபுத்திரன் உடனே கண்ணீருடன் கூச்சலிட ஆரம்பிக்கிறார். அவருடைய அரசியல் வெற்றி, இலக்கிய வெற்றி ஆகியவற்றைக் கண்டு பொறாமைகொண்டு அவரை ஒழித்துக்கட்ட கூட்டமாகச் சதிசெய்து சூழ்ந்துகொண்டு தாக்குகிறார்கள்—இதுதான் அவருடைய எப்போதுமுள்ள கூச்சல்.

இத்தனைக்கும் சென்ற பத்தாண்டுகளில் அவர்மேல் பொருட்படுத்தத் தக்க எவரும் எந்த விமர்சனத்தையும் வைத்து நான் பார்த்ததில்லை. பெரும்பாலானவர்களுக்கு அவருடைய இயல்பு தெரியும். பலருக்கு அவர் மேல் உண்மையான மதிப்பு உண்டு. அவருக்கு அரசியல் எதிரிகள் உண்டு. ஆனால் இனி திமுக அரசு இருக்கும் வரை வாயே திறக்க மாட்டார்கள்.

சரி, அவர் கவிஞர். கவிஞர்களே அப்படித்தான். ஆனால் முகநூலில் உடனே நாலைந்து அரைவேக்காட்டு எழுத்தாளர்கள் சென்று அவரை விசிறி விடுகிறார்கள். அய்யய்யோ அடாடா என்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனுஷ்யபுத்திரனை திமுகவில் தொற்றிக்கொள்வதற்கான கொக்கி என மட்டுமே பார்க்கும் பிழைப்பாத்மாக்கள். அத்தனைபேரையும் எதிர்கொள்வதென்பது கொசுக்களுடன் போராடுவதுபோல. நாமே துள்ளிக்குதித்து நடனமாடி அப்பால் நின்று பார்ப்பவர்களுக்கு கோமாளியாக தெரிவோம்.

ஆக, நானும் இன்னும் ஒரு பத்தாண்டுகள் (திமுக பத்தாண்டுகள் பதவியில் இருக்கும் என நினைக்கிறேன்) மனுஷ்யபுத்திரனை ஒன்றும் சொல்லப்போவதில்லை. எதற்கு வம்பு?  பத்தாண்டு கழிந்தால் எனக்கு எழுபது வயதாகியிருக்கும். இருப்பேனோ என்னவோ. இருந்தாலும் கருத்துசொல்ல வாய்ப்பில்லாத கிழமாகியிருப்பேன்.

அந்நிலையில் கருத்து சொல்வதென்றால் ஒரு வழி இருக்கிறது. ஒரு பழைய கதை. என்.டி.ஆர் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாள் விழாவுக்கு கவிஞர் ஸ்ரீஸ்ரீயை அழைத்தார். ஸ்ரீஸ்ரீக்கு என்.டி.ஆரை சுத்தமாக பிடிக்காது. ஆனாலும் வந்தார். மைக்கின் முன் நின்று சம்பிரதாயமான ஒரு வாழ்த்துக்குப் பின் பல்செட்டை கழற்றிவிட்டு அரைமணிநேரம் வசைபாடினார். ஒரு வார்த்தை எவருக்கும் புரியவில்லை. சென்றுவிட்டார்.

*

சரி. பெரிய தொகுதி பற்றி.

அன்புள்ள அன்பழகன், தமிழில்தான் புனுகை டைனோசர் தலையளவு உருட்டி அளித்த பெருங்கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். கம்பன் வாழ்ந்த மண் இது. சுந்தர ராமசாமிக்கு அவ்வளவு போதுமென்றால் அது அவர் பிரச்சினை.

பெரிய கவிதைத் தொகுதிகளை எப்படி வாசிப்பது?

(இது பெருந்தொகுதிகளை வாசிக்கவேண்டிய முறை பற்றிய ஒரு குறிப்புதான். இதில் மனுஷ்யபுத்திரனை ஒழித்துக்கட்டி அந்த சிம்மாசனத்தில் அமரும் நோக்கம் ஏதும் இல்லை என்று உளப்பூர்வமாக உறுதிமொழி சொல்கிறேன்)

நான் சொல்வதை விட முன்னோடிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கிறேன். டி.எஸ்.எலியட் ஒரு கவிஞனின் அத்தனை தனிக்கவிதைகளையும் ஒரு காவியமாக இணைத்து வாசிக்கலாம் என்கிறார். அதுதான் சரியான வழி. ஒரு பெரிய தொகுதி அப்படி தொகுக்கப்பட்டதனாலேயே ஒற்றைப் ‘பிரதி’ ஆகி விடுகிறது. அதன் கவிதைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்கின்றன. ஒரே பெருங்கூற்றாக, அல்லது ஒற்றைப்பெருஞ்சித்திரமாக ஆகிவிடுகிறது.

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை வாசிக்கையில் ஏற்படும் இடர் ஒன்று உண்டு. அதில் உள்ள ‘நான்’ என்பதை கவிஞரின் ஆளுமையுடன் இணைத்துக்கொள்கிறோம். அக்கணமே அக்கவிதை ஒரு நேரடிக்கூற்றாக மாறிவிடுகிறது. ஒரு கவிதைத் தொகுதியில் உள்ள ’நான்’ என்பது அத்தொகுதியால் புனையப்படும் ஓர் ஆளுமை மட்டுமே. அதற்கு வெளியே இருந்து எந்த ஆளுமைப்பண்பையும் அதில் சேர்க்கவேண்டியதில்லை. அப்துல் ஹமீதோ மனுஷ்யபுத்திரனோ அல்ல அது. அது கவிதையால் உருவாகும் ஓர் ஆளுமை, ஒரு புனைவுக்கதாபாத்திரம்.

கவிதையில் இப்படி உருவாகும் ஆளுமைகள் எப்போதுமே ஒரே உணர்வுநிலையும் ஒரே தோற்றநிலையும் கொண்டவர்கள். உலகமெங்கும் அப்படித்தான். நாம் நேரில் அறிந்த மனிதர்களைப்போலவோ புனைகதைகளின் கதைமாந்தர்போலவோ அகச்சிக்கலும் மாறும்தன்மையும் கொண்டவர்கள் அல்ல. ஏனென்றால் அவர்கள் முழுமையான கதைமாந்தர் அல்ல. அவர்கள் கவிதையை வெளிப்படுத்தும் வாசல்கள். கவிதைகளை புரிந்துகொள்ள உதவும் கருவிகள். அவர்களை key என்று விமர்சனம் குறிப்பிடுகிறது. கவிதைகளை இணைக்கும் ஒரு பொதுவான சரடுதான் அந்த ஆளுமை. கூறுநர், வெளிப்படுபவர், பேசப்படுபவர் என மூன்றுநிலைகளில் நம் முன் வருபவர்.

கலீல் கிப்ரான் கவிதைகளிலுள்ள நான் (அல்லது அவன்) தேடுபவன் என்னும் ஆளுமை மட்டுமே கொண்டவன். அதைப்போல இறைஞ்சுபவன், அன்னியன் என அந்த ஆளுமைச்சித்திரம் கவிஞருக்குக் கவிஞர் பலவகையாக மாறுபடலாம். ஆனால் அது அக்கவிதைக் களத்துக்குள் அக்கவிதைகளால் புனையப்பட்டதாக மட்டுமே இருக்கவேண்டும். பொதுவாசகர்கள் அப்படி எடுத்துக்கொள்ள கொள்ள மாட்டார்கள். இலக்கியவாசகன் அவ்வாறுதான் வாசிக்கவேண்டும்.

அந்த மைய ஆளுமையின் வெளிப்பாடுகளாக அமையும் கவிதைகளில் எவை ஒன்றோடொன்று தொட்டுக்கொள்கின்றன என்று பாருங்கள். அவற்றை தொடுத்துக்கொண்டு  வாசித்துச் செல்லலாம். அவ்வாறாக முன்னும்பின்னும் தறி என ஓடும் ஒரு வாசிப்பினூடாக நாம் ஒரு பிரதியை நாம் உருவாக்கி கொள்ளலாம். இப்படிச் சொல்கிறேன். கண்ணுக்குத்தெரியாத ஒரு புனைவுவெளி ஒரு தொகுப்புக்கு அடியில் உள்ளது, அதன் உரையாடல்களின் சில பகுதிகளே அக்கவிதைகள். ஒரு பெரிய நாடகத்தின் சில வசனங்கள் மட்டும் தரப்படுவதுபோல. அவற்றில் இருந்து கதைமாந்தரை, கதைக்களத்தை, கதையை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்

அவ்வண்ணம் நாம் உருவாக்கும் பிரதியில் பின்னிச்செல்லும் பல சரடுகளை அக்கவிதைகளைக்கொண்டு நாம் உருவாக்கிக் கொள்வதே பெரிய தொகுதிகளை வாசிப்பதற்கான மிகப்படைப்பூக்கமான வழி. அதன்பொருட்டு அது அளிக்கும் அடுக்குமுறைகளை நாம் கலைத்துக்கொள்ளலாம். தொட்டுத்தொட்டு தாவிச்சென்று நமக்கான அடுக்குமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

பெருந்தொகுதிகளின் மிகப்பெரிய பலம் ஒன்று உண்டு. ஒவ்வொரு தனிக்கவிதையுடனும் அந்த ஒட்டுமொத்த பெரும்பின்புலமும் வந்து நின்று அர்த்தம் அளிக்கிறது. ஒரு கவிதை ஆயிரம் கவிதைகளால் உணர்வேற்றம் பெறுகிறது. ஒவ்வொரு கவிதையும் மிகப்பெரிய ஒரு நாடகத்தின் ஒரு பகுதியாக திகழமுடிகிறது.

ஜெ

முந்தைய கட்டுரையானை டாக்டர் நாடகம்– ஈரோடு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பகம்- கடிதம்