அறத்தின் எதிர்த்தரப்பு எது? -கடிதம்

அன்புள்ள ஜெ

அறம் கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மிக எளிமையாக எந்த ஒரு நேர்மையான மனமுள்ளவரையும் சென்று தொடும் கதைகள் இவை. இந்தக்கதைகளை நான் கேள்விப்பட்டு பத்து ஆண்டுகளாகின்றன. இதுவரை படிக்கத் தோன்றவில்லை. ஏனென்றால் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் ஓர் இடதுசாரிக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அங்கே இந்தக்கதைகள் எல்லாமே வன்மத்துடன் எழுதப்பட்ட அவதூறுக்கதைகள், சாதிமேட்டிமையை முன்வைப்பவை, பிற்போக்கானவை என்று நாலைந்துபேர் ஆவேசமாக பேசினார்கள்.

அந்த அரங்கிலேயே ஒரு இளைஞர் அப்படி கதைகளில் இல்லையே என்று சொன்னார். அவரை பேசிப்பேசி ஓயவைத்தார்கள். நான் கதைகளை படிக்கவில்லை. ஆனால் அன்று பேசிய அந்த தோழர்களின் உணர்ச்சிகள் நிஜமானவை என்பதைக் கண்டேன். அவர்களில் ஒருவர் உண்மையிலேயே கண்ணீர் மல்கி அதைச் சொன்னார். ஆகவே என் மனசில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

நான் இப்போதுதான் இந்த கதைகளை படிக்கிறேன். இந்தக்கதைகள் இப்படி அப்பட்டமாக இருக்கையில் எப்படி அந்த தோழர்களால் புரிந்துகொள்ள முடியாமலாயிற்று என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களில் ஒருவர் இன்றைக்கு கடும் பா.ம.க ஆதரவாளர். அவரிடம் இந்தக்கதைகளைப் பற்றி கேட்டேன். ’அப்ப மெய்யாகவே அப்டி தோணிச்சு சார்’ என்றார். பொய் அல்ல. உண்மையாகவே அப்படி தோன்றியிருக்கிறது.

அறம் என்பதற்கு நேர் எதிரான உணர்ச்சி என்றால் சுயநலம் அல்ல. இதேபோன்ற கருத்தியல் கண்மூடித்தனம்தான். அவர்களுக்கு எதுவுமே கண்ணில் படாது. எந்த தர்க்கமும் புரியாது. எந்த உணர்ச்சியும் புரியாது. ஆகவேதான் சகமனிதனின் சங்கை அறுக்கிறார்கள். இதில் இடது வலது எல்லாம் ஒன்றே. சகோதரனையே வெறுக்கிறார்கள். அறம் அவர்களுக்கு மட்டும்தான் கொஞ்சம்கூட புரியாது. அதை அவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது. எந்த சுயநலமிக்கும் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கும். மூர்க்கமான கருத்தியல்நம்பிக்கை கொண்டவரிடம் அது இருக்காது. வாய்ப்பே இல்லை.

மிகமிக கொந்தளிப்பாக இதை எழுதுகிறேன். என்னவென்று சொல்லி முடிக்கவேண்டும் என தெரியவில்லை. இந்த நூலை பத்தாண்டுகள் வெறுத்ததற்காக ஜே.ஹேமச்சந்திரன் முதல் பூமேடை வரை அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்

முகுந்தராஜ்

திரு ஜெ,

அவர்களுக்கு நடந்து முடிந்த சென்னை புத்தக காட்சியில், அறம் கதையின் நாயகர் தொகுத்து ‘சகோதரர்கள் பதிப்பகம்’ வெளியிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பற்றிய அறிமுக நூல்களைப் பார்க்க நேர்ந்தது. பல மறு பதிப்புகள் கடந்து இன்னும் அவருடைய பெயரிலேயே வெளியிட்டு இருக்கிறார்கள். தற்சமயம் தமிழ் விக்கிக்காக ஆர்வலர்கள் தொகு க்கும் தகவல்கள் இணையம் எங்கும் கொட்டிக் கிடைக்கும் நிலையில் அக்காலத்தில் அவர் நூலகத்தில் பல மணி நேரம் இருந்து தகவல்கள் சேகரித்து இருக்கலாம். அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும், தங்களுக்கு நன்றியும்.

அன்புடன் சேது வேலுமணி

சென்னை.

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள்- வாசிப்பு
அடுத்த கட்டுரைஉ.வே.சா போற்றுதலுக்குரியவரா?