அச்சம், மடம்

அன்புள்ள ஜெமோ.

ஈரோடு புதுவாசகர் சந்திப்பு பற்றிய படத்தை பார்த்தேன். என் நண்பர் ஒருவர் சொன்னார். ’ஜெமோ நாக்காலியிலே உக்கார மத்தவங்கள்லாம் தரையிலே ஒக்காரணும்னு ரூல் இருக்கு பாத்தியா. அதான் இத மடம்னு சொல்றோம்’ இதற்கு உங்கள் விளக்கம் என்ன? (உண்மையைச் சொன்னால் அந்த நண்பரே நான்தான்)

சாம்

அன்புள்ள சாம்,

உங்கள் நண்பரை கேட்டதாகச் சொல்லவும். உங்களால் பேணி வளர்க்கப்படுபவர் என நினைக்கிறேன்.

பொதுவாக இந்த மாதிரியான கூட்டங்களைச் சிறப்பாக நடத்தத் தேவையான நிபந்தனைகளில் முக்கியமானது குறைந்தபட்ச செலவில் நடத்தவேண்டும் என்பது. அப்படியென்றால்தான் இங்கே இதெல்லாம் நீடிக்கும். ஆடம்பரமாக ஒரு கெத்துக்காக நடத்தலாம்தான். ஆனால் செலவை என்ன செய்வது? தமிழில் இதற்கெல்லாம் ஸ்பான்சர்கள் கிடைக்க மாட்டார்கள். கேரளத்திலும் கர்நாடகத்திலும் இதற்கெல்லாம் அரசு அமைப்புகள், தனியார் பண்பாட்டு அமைப்புகள் உருவாக்கிய இடங்கள் உண்டு. தமிழகத்தில் அப்படி ஒரு இடம்கூட இல்லை. வருபவர்களே செலவழிக்கலாம் என்றால் எங்களிடம் வரும் இளம் வாசகர்களில் வசதியானவர்கள் குறைவு. பலர் மாணவர்கள்.

ஆகவே இலவச இடம் கிடைக்கையில் மட்டுமே இலக்கியச் சந்திப்புகளை நடத்துகிறோம். இலவச இடத்தில் கொஞ்சம் இடநெருக்கடி இருக்கும். ரொம்பவே வசதிக்குறைவுகள் இருக்கும். எல்லாருடனும் நானும் அதே வசதிகளுடன்தான் தங்குகிறேன். (இதை ஒருநாளைக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் வாடகை உள்ள விடுதியில் அமர்ந்து எழுதுகிறேன்). உணவுச்செலவை பகிர்ந்துகொள்கிறோம். இரண்டு நாளுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாயை ஒட்டி செலவு வரும். நிறைய நாற்காலிகளை வாடகைக்கு எடுக்கலாம்தான். செலவு மிகுதியாகும்.

இருந்தாலும் அதை ஒருமுறை செய்தோம். எவராலும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் நெடுநேரம் அமர முடியவில்லை. காலைநீட்டி ஜமக்காளத்தில் அமரவே விரும்பினார்கள். நாற்காலிகள் காலியாக கிடந்தன. இங்கும் கயிற்றுக்கட்டில்கள், நாற்காலிகள் இருந்தன. அவற்றில் ஓரிருவரே அமர்ந்தனர். மற்றபடி எவர் எங்கு அமரவேண்டும் என்றெல்லாம் ஏதுமில்லை. என் மேல் அமராமல் இருந்தால் சரி என்பதே நிபந்தனை. நிறைவுதானே?

சிலவற்றை நடைமுறையில் கண்டறிந்துள்ளோம். பலர் அமர்ந்துதான் பேசமுடியும். முகத்தை மற்றவர்கள் பார்க்கட்டும் என எழுந்து பேசினால் குளறுவார்கள். ஏனென்றால் பெரும்பாலானவர்கள் புதியவர்கள். ஆகவே எப்படி முடியுமோ அப்படி வசதிப்படி அமரலாம் என்பதே விதி. பேசுபவர்கள் கத்திப்பேசும்படி அவ்வளவு தள்ளி அமரக்கூடாது, அவ்வளவுதான்.

இதையெல்லாம் நான் ஆரம்பித்தது 1998ல். அப்படியென்றால் கால்நூற்றாண்டு ஆகப்போகிறது. அப்போதுதான் நீங்கள் பிறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த புதுவாசகர் சந்திப்புகள் ஏழாண்டுகளாக நடக்கின்றன. பழைய பதிவுகளை எடுத்துப் பார்த்தால் இதைப்பற்றி என்னென்ன விமர்சனங்கள், கேலிகள் , காழ்ப்புகள் வந்துள்ளன என்று தெரிகிறது. அது ஓயாதென்றும் தெரிகிறது.

கடைசியாக, ஒரு மடம் கட்டி பலபேரை தரையில் அமரச்செய்யவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை. தாடி எனக்கு தோதுப்படவில்லை. அதுதான் பிரச்சினை.

ஜெ

முந்தைய கட்டுரைநம் இனவெறி
அடுத்த கட்டுரைஅஞ்சலி பா.பிதலீஸ்