ஈரோடு வாசகர் சந்திப்பு கடிதம்

ஈரோடு வாசகர் சந்திப்பு பதிவு

அன்புள்ள ஜெ,

கோவை வாசகர் சந்திப்பில் இடம் கிடைக்காமல் ஈரோட்டில் தான் கிடைத்தது. கோவையிலிருந்து காலை 7 மணிக்கு நண்பர் விஜியுடன் காரில், நானும் டாக்டர்.கோவிந்தராஜும் இணைந்து கொண்டோம்.  மணவாளன், 10 மணியளவில் சந்திப்பு தொடங்கும் எனக் கூறியிருந்தார். நாங்கள் வந்து சேர்ந்தபோது சமயம் 9.15. உங்களைச் சுற்றி கூட்டம். சந்திப்பு தொடங்கி விட்டிருந்தது. ஜெயகாந்தன் தன் சபையைப் பற்றிச் சொன்னது ஞாபகம் வந்தது.

விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளில் உணவு தரமாகவும், சுவையாகவும் இருக்கும், அது கோவை, ஈரோடு, ஊட்டி எங்கிருந்தாலும். சென்னை நிகழ்வுகளில் மட்டும் நான் கலந்து கொண்டதில்லை. காலை உணவு முடித்து, மாடியில் கூடினோம்.

ஒரு விவாதத்தில் பேசுவதில், கேட்பதில் உள்ள Dos and Don’ts ஐ முதலில் விளக்கினீர்கள்.

பேசுவதில்,

1/ முதலிலேயே மையக் கருத்தைச் சொல்லி, பிறகு அதற்கான logical points ஐ விளக்கி அதை நிறுவ வேண்டும்.

2/ பொய்ப்பித்தலுக்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

3/ எதிர்தரப்பின் கருத்துக்களை தொகுத்து சொல்லி அவர் ஒப்புதல் பெற்ற பிறகே அதை மறுத்து நம் கருத்தைச் சொல்ல வேண்டும்.

கேட்டலில்,

1/ எதிர்தரப்பை முழுவதுமாகத் தன் கருத்தை நிறுவ அனுமதிப்பது.

2/ Association Fallacy – தனக்குள் எதிர்வினை ஆற்றிக்கொண்டோ அல்லது  வேறு வேறு சம்பவங்களுடன் தொடர்புறுத்திக் கொண்டே கேட்பது கூடாது.

3/ எதிர்தரப்பின் தர்க்க முறையைக் கவனித்து அதே தர்க்கத்தின் அடிப்படையில் விவாதித்தல்.

பிறகு, செய்திகளுக்குப் போலி அறச்சீற்றம் கொள்பவர்களோ,  திரிபு வரலாற்றை உண்மைத்தேடல் இல்லாமல், போலி பெருமிதத்தைப் பரப்புகிறவர்களோ அறிவார்ந்த தன்மை அற்றவர்கள் என்றும், மைய அறிவார்ந்த தேடல் கொண்டவர்களுக்கும் விளிம்பு நிலை சராசரிகளுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொன்னது உணரும்படி இருந்தது.

Creativity இல்லாத இன்றைய கல்விமுறை மீதும், முற்றிலும் லௌகீகமான குடும்ப சூழலில் வளர்ந்து பொறுப்பின்மையும், மூளைசோம்பலும் கொண்ட இளைய தலைமுறைமீதான உங்கள் விமர்சனத்தையும் பதிவு செய்தீர்கள்.

முதல்நாள் மதியத்திற்குப் பின் தொடங்கிய, புதிய வாசகர்களின் கதைகள், கவிதைகள் கலந்துரையாடலில், கதைகளின் குறைகளையும், அதன் வெவ்வேறு புதிய சாத்தியங்களையும் கூறி, ஒவ்வொரு Genre க்கும் இரண்டு, மூன்று உதாரண சிறுகதைகளைச் சொல்லி நீங்கள் விளக்கியதில், சிறுகதை பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட அனுபவம் கிடைத்தது.

இரவு உணவின்போது, உங்கள் விமர்சனங்களை அவர்கள் சவாலாக ஏற்றுக்கொண்டு சிறப்பாக எழுத முயல வேண்டும் என்றும் புண்பட்டுப் பின்னகரக் கூடாது எனக் கூறி தோளில் கை வைத்துப் பேசும்போது அவர்கள் கொஞ்சம் நெகிழக் கண்டேன்.

பிறகு, க. நா. சு, சுந்தர ராமசாமி மற்றும் சில எழுத்தாளர்களுடனான உங்கள் அனுபவங்கள், நகைச்சுவைக் கதைகள்.என் இயல்புப்படி எல்லாரிடமும் பேசவில்லை.  விஜி, கோவிந்தராஜ் இருவரிடம் மட்டும் தான் பேசினேன். விஜியை சொல்முகம் மாதாந்திரக் கூடுகைக்கு அழைத்தேன். இந்த மாதம் முதல் வருவதாகச் சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள், என்ன பலன் இருக்கும் உங்களுக்கென்று யோசிக்கும்போது, பெரும் லட்சியவாதமும், இலக்கிய இயக்கத்தின் மீதான அர்ப்பணிப்புமே கண் முன் மலையென நின்றிருக்கிறது.

இத்தனை சுவாரசியமாக, நகைச்சுவையுடன், நிறைய கதைகளைச் சொல்லி இலக்கியத்தில் புத்துணர்ச்சி நீடிக்கச் செய்யும் இரண்டு நாட்களைத் தந்தமைக்கு நன்றி ஜெ.

அமைப்பாளர்களான மணவாளன், பாரி, பிரபு, ஈரோடு கிருஷ்ணன், வழக்கறிஞர் செந்தில் அனைவருக்கும் நன்றி.

ரதீஷ்

முந்தைய கட்டுரைஆசிரியர்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைகவிதைகள் -இதழ்