எஸ்.வி.ராஜதுரை வழக்கு- கடிதங்கள்

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

பணிவான வணக்கங்கள்.

‘எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு’ – படித்தேன்.  அதன் இறுதி பத்தி என்னை உலுக்கிற்று

முரண் கொண்ட நிலையில், வீட்டில் பெரியவர்கள் உணர்ச்சி மேலீட்டில் சச்சரவு செய்துகொள்ளும் போது, மனதில் உயர்ந்தவரும், தன் அரண் என நினைத்தவருமாகிய ஒருவர்,  மனம் நெகிழ்ந்து இதயத்தின் ஆழத்திலிருந்து ஒன்றைக் கூறி நிறைவு செய்கையில் அங்கு ஒரு அமைதி தங்கும். அது ஆனந்தமற்ற ஒரு அமைதி.  அதில், சச்சரவின் சாரம் அறியா, அவ்வீட்டின் குழந்தை அலமலந்து அலறும். அதைப்போல் ஆனேன்.

வழக்கு நிறைவுற்றது எனும் செய்தி நிறைவு தந்தது.  கால மற்றும் பொருள் விரயம் இனி இல்லை.

தங்கள் மீதான அன்பும், மரியாதையும் இன்னும் பல மடங்கு உயர்ந்தது.

கணநாதன்

***

திரு ஜெமோ,

உங்களுக்கும் எஸ்.வி.ராஜதுரைக்குமான நட்போ பகையோ எனக்கு முக்கியம் அல்ல. நீங்கள் கேட்ட ஒரு கேள்வி. அதைத்தான் பழையகால நேர்மையான இடதுசாரி எம்.எல் காரர்களும் கேட்டார்கள். ‘பெரியார் பற்றிய ஆய்வுக்கு WAC என்ற சர்வதேச கிறிஸ்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதி எதற்கு?” அதற்கு மட்டும் பதில் இல்லை. மற்ற எல்லா விஷயங்களும் பேசப்பட்டுவிட்டது

அர்விந்த் நாராயணன்

***

அன்பு ஜெயமோகன்,

எஸ்.வி.ராஜதுரை அவர்களுடனான வழக்குப்பிணக்கு முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. மார்க்சியத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்தான் என்றாலும், அதன் ‘அரசியல் வடிவ அதிகாரத்துவத்தையும்’, ‘சித்தாந்தக் குளறுபடிகளையும்’ பொதுச்சமூகத்துக்கு சான்றுகளோடு எடுத்துச் சொன்னவரும் அவர்தான். கோட்பாட்டைத் தலையில் சுமந்து கொண்டு ஒரே இடத்தில் நின்றுவிடாமல் இன்றுவரை தொடர்ந்து வாசித்தும் சிந்தித்தும் எழுதியும் வருபவர். நான் பெரிதும் மதிக்கும் அறிவியக்கவாதிகளில் முதன்மையானவர்.

எஸ்.வி.ராஜதுரையின் அந்நியமாதல் நூல் மிக முக்கியமானது. மார்க்ஸ் 1844-இல் எழுதிய குறிப்புகளைக் கொண்டு மார்க்சியத்தை மறுவிசாரணைக்கு உட்படுத்தி இருப்பார் அவர். ஒரு புனைவை வாசிக்கும் ஆர்வத்துடன் அந்நூலின் கட்டுரைகளைப் பலமுறை வாசித்திருக்கிறேன். அடிப்படையில் மார்க்சியர் என்பதால் எங்கு சென்றாலும் அவர் திரும்பவும் மார்க்சிடமே வந்துவிடுவார். ஆனாலும், மார்க்சே உலகின் ஒரே ஒரு தீர்க்கதரிசி என்பதாகப் பிலாக்கிணம் செய்பவரல்ல என்பதே அவரின் சிறப்பு. வாசகர்கள் வாய்ப்பு அமைத்து அந்நியமாதலை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜார்ஜ் தாம்சனின் மூன்று முக்கியமான நூல்களைத் தமிழுக்கு அளித்த பெருமை எஸ்.வி.ஆரையே சாரும். மனித சாரம், முதலாளித்துவமும் அதன் பிறகும், மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை எனும் மூன்று நூல்களும் முக்கியமானவை. மார்க்சியத்தை வரலாற்றுப் பின்னணியோடும், பல்வேறு சித்தாந்தங்களின் ஊடாகவும் பயில விரும்புபவர்கள் கட்டாயம் வாசித்தாக வேண்டும். மொழிபெயர்ப்பில் புலப்படும் எளிமைத்தன்மை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றிய விளக்க நூல் ஒன்றை எஸ்.வி.ஆர் மொழிபெயர்த்து இருக்கிறார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு. அவ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலைச்சொற்களை வரலாற்றுப் பின்னணியில் வைத்து விளக்குவதோடு அக்கால உலகச்சூழலையும் தெளிவாகச் சித்திரப்படுத்தி இருப்பார். மார்க்ஸ்-க்கு முன் பின்னான காலச்சூழலை உற்றுநோக்கி எழுதப்பட்டிருக்கும் அவ்விளக்க நூலை ஒரு மார்க்சியன் கட்டாயம் வாசிக்க வேண்டும்(உலக வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் வாசிக்கலாம்). இதுவரை வாசித்திராத தோழர்கள் நேரம் ஒதுக்கி வாசித்துப் பாருங்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் காலப்பின்புலம் பற்றிய மேலதிகத் தெளிவு கிட்டும்.

பெரியார் மீது எனக்கு மதிப்புண்டு. அரசியல் பெரியாரியத்தின் மீது இல்லை. ஏனென்றால், பெரியார் தனது கருத்துக்களைத் தொடர்ந்து பரிசீலித்துக் கொண்டே இருந்தவர். ஒரேயடியாகத் தனது தரப்பு இதுதான் என அவர் முன்வைத்ததில்லை. காந்தியும் அப்படியாகவே இருந்தார். இருவரும் தங்களின் கருத்துக்களைத் தவறு என ஒப்புக்கொள்ளவோ, மாற்றிக்கொள்ளவோ தயங்கியதே இல்லை. பெரியாரியவாதிகளோ அப்படி இல்லை. ஒரே பிடியில் வம்படியாய் நிற்பவர்கள்(விதிவிலக்குகளைத் தவிர்த்து விடலாம்). மத அடிப்படைவாதிகள் ‘இந்துமதத்தை’க் கொச்சைப்படுத்தி இருப்பது போன்றே, பெரியாரிய அடிப்படைவாதிகள் ‘பெரியாரின் சிந்தனைகளை’ச் சீரழித்து இருக்கின்றனர்.

பெரியாரியத்தைத் தமிழ்அறிவுச் சமூகத்தில் நிலைநிறுத்தியதில் எஸ்.வி.ராஜதுரையின் பங்கு மகத்தானது. அவரின் பெரியாரியமும், தற்கால அரசியல் பெரியாரியமும் ஒன்றன்று. அதற்காக அவர் மேற்கொண்ட அறிவுழைப்பு மதிக்கத்தக்கது. பெரியார் : சுயமரியாதை சமதர்மம் எனும் நூலின் வழியாக பெரியாரை ஆய்வுவாசிப்புக்கு உட்படுத்தியவர் அவர். அந்நூலை எங்கள் ஊருக்கு அருகே உள்ள கிராமநூலகம் ஒன்றில் அமர்ந்து முழுமையாய் வாசித்திருக்கிறேன். பெரியாரின் செயல்பாடுகளை மார்க்சியப் பார்வையில் அணுகி இருக்கும் எஸ்.வி.ஆரின் கட்டுரைகளை இன்றைக்குப் பெரியாரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. பெரியாரின் சிந்தனைகளை மறுவிசாரணை செய்வதற்கான வாயில்களைத் திறந்து விட்டதாகவே அம்முயற்சியைக் கருதுகிறேன்.

பெரியாரியம் தொடர்பான அவர் கட்டுரைகளை விமர்சிக்கும் சூழலை மேலதிகமாய் நாம் வளர்த்தெடுக்கவில்லை அல்லது தவறவிட்டு விட்டோம். அதை ஒரு அறிவுக்குழு செய்திருக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்த்தேசிய ஆய்வுக்களத்தில் இருப்பவர்கள் அப்படியான ஆய்வை முன்னெடுத்துச் சென்றிருந்தால், ஒரு ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்திருக்கும். அதன்வழி பெரியார் ஒரு தமிழ்த்தேசிய விரோதியாகக் கருதப்படும் அபத்தமாவது களையப்பட்டிருக்கும்.

எஸ்.வி.ராஜதுரையின் சொல்லில் நனையும் காலம் கட்டுரைத் தொகுப்பைச் சமீபமாய் வாசித்தேன்(அடையாளம் 2003). மார்க்சியப் பார்வையிலான கலை இலக்கியம் தொடர்பான கட்டுரைகள். அத்தொகுப்பில் பல கட்டுரைகள் முக்கியமானவை. எனக்கு இருகட்டுரைகள் பிடித்திருந்தது. ஒன்று, தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய கட்டுரை(தஸ்தாயேவ்ஸ்கி:பலகுரல் தன்மை). மற்றொன்று, கோ.கேசவனின் வறட்டு மார்க்சியத்தைத் கட்டுடைப்பது(ஸ்தானோவிசமும் தமிழக எதிரொலிகளும்).

கடந்த இரு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மார்க்சியர்களை, பெரியாரியர்களைச் சந்தித்திருப்பேன். அச்சமயம் அவர்களிடம் நான் தவறாது ஒரு கேள்வி கேட்பேன், “எஸ்.வி.ஆரைத் தெரியுமா?”. ஒருசிலரைத் தவிர பலருக்கு அவர் யார் என்பதே தெரியவில்லை. இதுதான் நம் அறிவுச்சூழல். பல வறட்டு மார்க்சியர்களுக்கு கோ.கேசவனையே தெரியவில்லை. சங்கிகளோடு மல்லுக்கட்டுவதையே புரட்சி என நம்பும் தலைமுறையை வேகமாக உருவாகி வருகிறது. இப்படியான சூழலில், எஸ்.வி.ஆர் போன்றோரை நினைவுகூர்வதும் கொண்டாடுவதும் அவசியம்.

முருகவேலன்,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஈரோடு வாசகர் சந்திப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள், வாசிப்பு