எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு
அன்புள்ள ஜெ
எஸ்.வி.ராஜதுரை விஷயம் முடிந்ததைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அது அப்படித்தான் முடியும். அதைப்பற்றி சட்டம் தெரிந்தவர்கள் அப்படி மட்டுமே சொல்வார்கள். எஸ்.வி.ஆர் எந்த டாக்குமெண்டையும் நீதிமன்றத்தில் வைக்க முடியாது. உங்கள் தரப்பில் அச்சிடப்பட்ட நூல்கள் உண்டு. எல்லாமே கோர்ட்டில் பதிவாகவும் வாய்ப்புண்டு. WAC அமைப்பையே நீதிமன்றத்துக்கு இழுக்கமுடியும். எஸ்.வி.ஆர் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார் என்றுதான் நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இன்று அவர் தனித்துவிடப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த வழக்கு தொடங்கியபோது ஒரு கும்பல் அவருடன் இருந்தது. அவர்கள் நீங்கள் ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வதாக நினைத்தார்கள். இப்போது நான் நினைத்துக்கொள்வது என் நண்பர் விடியல் சிவா மறைந்தபோது அவர் உங்களுக்கு அனுப்பியதாக வெளிவந்த போலிக் கடிதம் பற்றித்தான். விடியல் சிவா எஸ்.வி.ராஜதுரைக்கு ஆதரவாக மிகமிகக் கடுமையாக உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினார். அவர் உங்கள் நண்பர் என்பதனால் நீங்கள் அதிர்ச்சி அடைந்து பதில் எழுதினீர்கள். அதற்கும் ஒரு பதில் வந்தது.
ஆனால் கொஞ்சநாள் கழித்து இலங்கையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், இந்த எந்த விஷயத்துக்கும் சம்பந்தப்படாதவர், வேறு எதையோ எழுதும்போது அந்த கடிதம் விடியல் சிவா எழுதியது அல்ல என்றும் அப்படி தன் பெயரில் வேறு ஆட்கள் கடிதம் எழுதியது சிவாவை வருந்தச் செய்தது என்றும் அப்போது அவர் மிக வலியுடன் மரணப்படுக்கையில் இருந்தார் என்றும் எழுதியிருந்தார். விடியல் சிவா மறைவுக்குப்பின் விடியல் பதிப்பகத்தை கைப்பற்றிக்கொண்டவர்கள் செய்தது அந்த மோசடி. விடியல் பதிப்பக உரிமை பற்றிய சர்ச்சையில் இந்த விவாதம் வெளிவந்தது
நீங்கள் விரிவாக அதை உங்கள் தளத்தில் பதிவிட்டிருந்தீர்கள். பலர் அதைப்பற்றி கேட்டார்கள். எஸ்.வி.ராஜதுரையோ, அவர் சார்ந்தவர்களோ ஒரு வார்த்தைகூட பதில் சொல்லவில்லை. அப்படியே அமைதியாக இருந்துவிட்டார்கள். திருடனுக்கு தேள் கொட்டிய கதை. நானே சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டேன். அது ஒரு சின்னப்பையன் ஆர்வக்கோளாறில் செய்தது என்று சமாளித்தார்கள்.
அந்தக்கூட்டமே இன்றில்லை. அப்படியே கலைந்துபோய் திமுகவில் பாதிப்பேர் இருக்கிறார்கள். பாதிப்பேர் ஆளே காணாமலாகிவிட்டார்கள். அவர்கள்தான் உசுப்பேற்றி சிக்கலில் எஸ்.வி.ஆரை கொண்டுபோய் விட்டவர்கள். அவர்கள்தான் அந்த வக்கீலிடமும் பேசியவர்கள். எஸ்.வி.ஆர் உங்களிடம் சமரசமாகப்போக அனுமதிக்காதவர்கள். நீங்கள் அந்த வக்கீலை மட்டும் குற்றம் சொல்வது சரி கிடையாது.
எஸ்
***
அன்புள்ள எஸ்,
உண்மை. எனக்கு விடியல் சார்பாக வந்த கடிதம் ஒரு சின்ன தகவல்பிழையை பெரிய தர்க்கப்பிழையாக கட்டமைத்து என் தரப்பு மொத்தமாக பிழை, மொத்தமாக நான் சொல்வது மோசடி என காட்டும் வழக்கமான இடதுசாரி விவாதத்தந்திரம். எஸ்.வி.ராஜதுரை ஈவேரா பற்றிய ஒரே ஆய்வை ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களாக எழுதினார். ஆங்கில நூலில் அதற்கு நிதியுதவி செய்த கிறிஸ்தவ நிறுவனமான WAC க்கு நன்றி சொல்லப்பட்டிருந்தது. நான் அக்குறிப்பு தமிழ் நூலில் இருந்ததாகச் சொல்லிவிட்டேன். பின்னர் திருத்திக்கொண்டேன். அந்தக் குறிப்பு தமிழில் நூலில் இல்லை. அந்த நினைவுப்பிழையை ஒரு மாபெரும் மோசடி என்றும், ஆங்கிலநூல் தமிழ்நூலின் மொழிபெயர்ப்பு அல்ல, அது தனியாக எழுதப்பட்ட வேறு நூல் என்றும் பலவாறாக வாதிட்டு எழுதப்பட்ட கடிதம் எஸ்.வி.ராஜதுரை பற்றிய புகழ்மொழிகள் நிறைந்ததாக இருந்தது.
சிவா அப்படி எழுதுபவர் அல்ல. அவருக்கு அவ்வகை தர்க்கம் மேல் ஏளனமும் இருந்தது. மேலும் அவர் மிகமிக நோயுற்றிருப்பதாக வசந்தகுமார் சொல்லிக்கொண்டும் இருந்தார். சொல்லப்போனால் அவருடைய மரணச்செய்தி எக்கணமும் வரும் என சொன்னார். ஆகவே இக்கடிதம் அவர் எழுதியதா என எனக்கே திகைப்பு. சரி, அவர் எழுதியதாகவே கொள்வோம் என நினைத்தேன். நான் பதில் எழுதியபோதே நண்பர்கள் அழைத்து அதற்கும் சிவாவுக்கும் சம்பந்தமில்லை என்றனர். ஆகவே மேலே பேசவில்லை. ஆனால் பின்னர் இணையதளத்திலேயே சிவாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் அதை தற்செயலாக பதிவுசெய்தார். வேறு சில கட்டுரைகளிலும் குறிப்பிட்டார். ஆகவே நான் அந்த செய்தியை பதிவுசெய்தேன். ஏனென்றால் சிவா எனக்கு எழுதியதாக அனுப்பப்பட்ட மோசடிக் கடிதத்தில் அவர் எனக்கு ‘என் பிணத்தைக்கூட நீங்கள் பார்க்க வரக்கூடாது’ என சாபம் போட்டிருந்தார். மூன்றுமாதம் முன்புகூட தாந்தேயின் டிவைன் காமெடி மொழியாக்க நூலை அனுப்பி கடிதம் எழுதியவர். ஆகவே அந்த மோசடியின் உண்மை பதிவாகவேண்டும் என நினைத்தேன். மற்றபடி அதனுடன் நான் எஸ்.வி.ராஜதுரையை சம்பந்தப்படுத்தவில்லை. அல்லது அதற்கு எனக்கு மனமில்லை
ஜெ