ஈரோடு வாசகர் சந்திப்பு

ஈரோடு வாசகர் சந்திப்பு பதிவு

ஈரோடு காஞ்சிகோயிலில் நண்பர் வி.எஸ்.செந்தில்குமாரின் பண்ணைவீட்டில் மார்ச் 5,6 ஆம் தேதிகளில் நடந்த விஷ்ணுபுரம் இளம் வாசகர் சந்திப்பு எத்தனையாவது என்று கிருஷ்ணன் என்னிடம் கேட்டார். என்னிடம் கணக்குகள் இல்லை. என்னுடைய தளத்திலிருக்கும் குறிப்புகளினூடாக எண்ணிக்கையைத் தொகுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒன்றிரண்டு குறித்து எழுதாமல் விட்டிருக்கலாம் எனும் ஐயம் உள்ளது.

2016 முதல் தொடர்ச்சியாக இச்சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இருநூறுக்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் கலந்துகொண்டு இலக்கியம் குறித்து உரையாடியிருக்கிறார்கள். பெரும்பான்மையோர் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள். பல புதியவாசகர் சந்திப்புக் குழுக்கள் அப்படியே விவாதக்குழுக்களாக ஆகி நீடிக்கின்றன.

இன்று இதன் பேசுபொருட்கள் ஓரளவுக்கு தெளிவடைந்துள்ளன. தொடக்கத்தில் இயல்பான ஒரு சந்திப்பாக அமையட்டும் என்று நினைத்தோம் .இன்று இதில் வலியுறுத்தப்படவேண்டியதென்ன என்பது ஓரளவுக்குத் திரண்டுள்ளது. இலக்கியம் எனும் லட்சியவாதத்தை குறித்தே முதன்மையாக பேசவேண்டியுள்ளது.

தற்கசப்பும் அவநம்பிக்கையும் கொண்டவர்கள் நிறைந்த இலக்கிய சூழலில் நின்றுகொண்டு இதைப்பேசுகிறோம். இலக்கியச் சூழலில் அவர்களுக்கான இடம் உண்டு எனினும் அவர்கள் ஒருபோதும் முதன்மைப்படைப்பாளிகள் அல்ல. முதன்மைப்படைப்பாளிகள் இவ்வுலகத்தின் மேல், இதுவரையும் இங்கு நிகழ்ந்த கருத்தியக்கத்தின் மேல் ,இலக்கிய மரபின்மேல் ஆழ்ந்த நம்பிக்கையை கொண்டவர்கள்.

இவ்வுலக வாழ்க்கை ஒன்றும் எளியதோ வரையறுக்கத்தக்கதோ அல்ல என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். அதன் அள்ள அள்ள விரியும் பிரம்மாண்டத்தையும் ,வரையறுக்க முடியாத உட்சிக்கலையும், ஒவ்வொரு முறையும் அறிபவனைத் தோற்கடிக்கும் அதன் விளையாட்டையும் பிறிதெவரைவிடவும் அறிந்திருப்பார்கள். எனினும் இங்கு அவர்களை செயல்பட வைப்பது அறிந்துவிட முடியும், கூறிவிட முடியும் எனும் நம்பிக்கையே. அறிந்து கூறியவற்றால் இவ்வுலகம் எவ்வகையிலோ தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது என்னும் உள்ளுணர்வே.

அதன் மேல் நின்றுகொண்டு தான் டால்ஸ்டாயோ, தாமஸ் மன்னோ, ஐசக் பாஷவிஸ் சிங்கரோ, சுந்தர ராமசாமியோ ,புதுமைப்பித்தனோ நம்மிடம் பேசுகிறார்கள். ஒளி என்றுமிருக்கும் என்ற புதுமைப்பித்தனின் வரிதான் அனைவரிடமும் உள்ளது. அதை அடுத்த தலைமுறை வாசகர்களிடம் கொண்டு செல்வதே இச்சந்திப்புகளின் முதன்மை நோக்கம்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான இடர்கள் தீவிர அறிவியக்கத்திற்கும், தீவிர இலக்கியத்திற்கும் உள்ளன. சென்ற காலகட்டத்தில் முழுப்புறக்கணிப்பு இங்கு இருந்தது.பேரிதழ்களில் உருவாகும் நட்சத்திர எழுத்தாளர்களை மட்டுமே தமிழகம் அறிந்திருந்தது. ஏழு லட்சம் பிரதிகள் குமுதம் அச்சிடப்பட்ட காலத்தில் இருநூறு பிரதிகள் எழுத்து அச்சிடப்பட்டது. கசடதபற முந்நூறு பிரதிகள்.அவற்றில் தான் இலக்கியம் வெளியானது. அன்று அந்தப் பேரலைக்குமுன் தன்னந்தனியாக நின்றிருக்கும் அகத்துணிவை எழுத்தாளர் ஈட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. புறக்கணிக்கப்படுதலால் தன்னுள் திரளும் கசப்பு தன்னை அழித்துவிடாமலிருக்க அவன் நம்பிக்கையின் கவசத்தை ஏந்திக்கொள்ள வேண்டியிருந்தது.

இன்று முற்றிலும் புதிய அறைகூவல் உருவாகியுள்ளது. இன்று இணையம் வழியாக, சமூக வலைத்தளங்கள் வழியாக, பொது ஊடகங்கள் வழியாக இலக்கிய எழுத்தாளன் மேலோட்டமாக அறியப்பட்டவனாக இருக்கிறான். அவன் மேல் வாசிப்பு குவிவதில்லை எனினும் அவனை பல்லாயிரம் பேர் அறிந்திருக்க வாய்ப்பு அமைகிறது. அவனைப்பற்றிய விவாதங்களில் அவனுடைய பெயர் மட்டுமோ, அல்லது ஓரிரு சொற்களோ மட்டுமோ அறிந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் ஊடாடி அவனைப்பற்றி பேசும் வாய்ப்பு அமைகிறது.

இணையத்தில் எந்த ஒரு எழுத்தாளனைப் பற்றி எந்த ஒரு விவாதத்திலும் அவனுடைய ஒரு படைப்பையேனும் படித்திராதவர்கள், படிக்கும் நோக்கம் இல்லாதவர்கள், எதையேனும் படித்து புரிந்துகொள்ளும் அடிப்படை அறிவுத்தகுதியோ ரசனையோ இல்லாதவர்கள், படிப்புக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் எல்லாம் வந்து பேசுகிறார்கள். சொல்லப்போனால் அவர்களே பத்துக்கு ஒன்பது பேர். அவர்கள் கட்சி, அரசியல், சாதி, மதம் சார்ந்து எளிதில் திரளக்கூடியவர்கள். இலக்கிய வாசகனுக்கு உரிய அடிப்படைத் தகுதியான தனித்து நின்றிருக்கும் துணிவும் திமிரும் அற்றவர்கள்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து எழுத்தாளனை வரையறை செய்கிறார்கள். பெரும்பான்மை நெறிகளின்படி  அந்த எழுத்தாளன் அங்கே பொதுவாக மதிப்பிடப்படுகிறான். இன்று இவ்வண்ணம் ஒரு எழுத்தாளனை வரையறுக்க முடியும் என்னும் வாய்ப்பு அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. நேற்று சி.சு.செல்லப்பாவை முற்றாகப் புறக்கணித்தவர்கள் இன்று என்றால் கும்பல்கூடி அவதூறு செய்து கூச்சலிட்டு வரையறை செய்து அவர் குரல் ஒலிக்காதபடி செய்துவிடுவார்கள்.

இவர்கள் ஒவ்வொரு எழுத்தாளனைப்பற்றியும் பொதுப்படையான சில வ்ரையறைகளை தங்கள் அரசியல் அடிப்படையில், அதிகார நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கி பொதுக்கும்பலுக்கு அளிக்கிறார்கள். இங்கு இன்று பெரும்பாலான எழுத்தாளர்களைப் பற்றி பொதுச்சூழலில் புழங்கும் வரையறைகள் இலக்கிய வாசகர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல, அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை என்பது விந்தையானது.

கநாசுவும் சுந்தர ராமசாமியும் உருவாக்கிய இலக்கிய வரையறைகள், அவற்றில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் போதாமைகள் ஆகியவற்றைப்பற்றி நாம் இன்னமும் பேசிக்கொண்டிருக்கும்போது ஓர் இலக்கியவாதி என்ன எழுதினான் என்றே தெரியாதவர்கள் தன் அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கிய வரையறைகளை இன்றைய இலக்கியவாதி சுமந்தலையக்கூடிய சூழல் இன்று வந்திருக்கிறது.

இன்று ஒரு இளம் எழுத்தாளன் எழுத வரும்போது அவன் இந்தப்பெரும் கூச்சலிடும் கும்பல் முன். சென்று நிற்கவேண்டியிருக்கிறது. தன்னுடைய சொந்தத் தேடல் சார்ந்தோ, ரசனை சார்ந்தோ அவன் ஒரு படைப்பை தேர்ந்தெடுக்க முடிவதில்லை. மாறாக சூழலின் அழுத்தம் சார்ந்து அவன் தேர்ந்தெடுக்கிறான். தன்னுடைய ஆளுமையை மறைத்துக்கொண்டு, தனக்கான அடையாளத்தை இச்சூழலிலிருந்து அவன் உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்.

சிந்தனைச் சுதந்திரமே எழுத்தாளனை தன்னைக் கண்டடையச் செய்கிறது. இன்று இருபக்கமும் இரு பாறைகள் அழுத்துகின்றன. ஒருபக்கம் மத, சாதி வெறிகள். எழுத்தாளனை அவை உற்றுப்பார்க்கின்றன. ஒரு வார்த்தைகூட அவன் தங்களுக்கு எதிராக எழுதிவிடக்கூடாது, அப்படி தொனிக்கக்கூட கூடாது என வன்முறையை ஏந்தி அருகே நின்றிருக்கின்றன. மறுபக்கம், தாங்கள் உருவாக்கிய எளிமையான அரசியல்சரிநிலைகள் மற்றும் அரசியல்நிலைபாடுகளுடன் இன்னொரு தரப்பு. அவர்கள் தங்களை முற்போக்கு, திராவிட இனவாதம் (இனவாதம் முற்போக்காக இருக்கும் ஒரே நிலம் தமிழகம்தான் என நினைக்கிறேன்) கலகம் என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். ‘இங்கே வந்து நின்று, நாங்கள் சொல்லும்படி எழுது, இல்லையேல் நீ அந்தத்தரப்பு’ என்கின்றன.

இருபக்கமும் யானைகள் நெரிக்கும் அழுத்தம் மிக்கச் சிறிய வெளி இன்று எழுதுபவனுக்குரியது. புகழ் இல்லை, பணம் அறவே இல்லை. ஆனால் காழ்ப்பும் கசப்பும் பலமடங்கு. எதிர்ப்புகள் சமாளிக்க முடியாத அளவு. நேற்று யாரென்றே தெரியாமல் எழுதிக்கொண்டிருந்த சிற்றிதழ் முன்னோடிகள் எல்லாம் மிகமிக நல்லூழ் கொண்டவர்கள் என்று தோன்றுகிறது.

இந்த கல்லாப்பெருஞ்சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதும், அதன் முன் எப்படி தனித்தன்மையை இழக்காமல் நிலைகொள்வது என்பதும், அதற்கான தன் முனைப்பை (ஆணவத்தை என்றே சொல்வேன்) எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதும், தொடர்ந்து செயல்படுவதற்கான நம்பிக்கையையும் தீவிரத்தையும் எப்படி திரட்டிக்கொள்வது என்பதும் குறித்தே  இன்று பேசியாகவேண்டியிருக்கிறது. தீவிர இலக்கியவாதிகள் ‘நாம்’ என பேசவேண்டிய காலம் வந்துள்ளது. பார்வை மாறுபாடுகள், பலவகை போட்டிகளுக்கு அப்பால் நாம் ஒரு அறிவியக்க மையம் என உணர்ந்தாகவேண்டியிருக்கிறது.

இன்று உலகெங்கும் தீவிர இலக்கியமென்னும் சிறு வட்டம் கரைந்தழிந்து விற்பவை- விற்கப்படாதவை என்ற பிரிவினை வணிகச் சூழலால் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இணையத்தில் எத்தனை க்ளிக் என்பதே ஒரு படைப்பை தீர்மானிப்பதாக மாறியிருக்கிறது. இன்று போர்ஹேஸ் எழுதியிருந்தால் பதிமூன்று வாசகர்கள் மட்டுமே தன்னை வாசித்தார்கள் என்று அவர் அடையும் பெருமிதம் பொருளற்ற ஒன்றாக கருதப்பட்டிருக்கும்.

எழுது, எழுதிவிட்டு ஈஃபிள் கோபுரத்திலிருந்து குதி, உயிர் தப்பினால் புகழ்பெற்ற எழுத்தாளராவாய் என்று கேலியாக இலக்கிய விமர்சகர் ஒருவர் கூறிய சூழல் இன்று மெய்யாகவே அமைந்துவிட்டிருக்கிறது. சூழலின் புறக்கணிப்பிலிருந்து எழுந்து வந்துவிட்டோம், சூழலின் மேலோட்டமான கவனிப்பிலிருந்து தப்புவது எப்படி என்ற அறைகூவலை இன்று அடைந்திருக்கிறோம். அதற்கான உளநிலைகளை உருவாக்குவதற்காகவே இன்றைய சந்திப்புகள் தேவையாகின்றன.

இன்னொரு தளத்தில் விவாதம் என்பதே இயல்வதல்ல என்னும் சூழல் உருவாகியுள்ளது. எவரும் உலகம் அனைத்துடனும் நான் விவாதிக்கிறேன் என்று வந்து நிற்க முடியாது. தன் தரப்புக்கு நிகரான மறுதரப்புடன், தன் தரப்பை புரிந்துகொள்ளும் தகுதியும் அக்கறையும் கொண்ட மறுதரப்புடன் மட்டுமே எவரும் விவாதிக்க முடியும். ஆகவே என்று விவாதமென்னும் ஒன்று தொடங்கியதோ அன்று முதல் விவாதிப்பவன் தன்னுடன் விவாதிப்பவர்களை தானே வரையறை செய்துகொள்ள வேண்டிய நிலையே உள்ளது.

ஆனால் சமூக வலைதளங்கள் உலகிலுள்ள அனைவரிடமும் விவாதி என்று சொல்கின்றன. ஒருவன் மிகத்தீவிரமாக கற்று ஆராய்ந்து முன்வைக்கும் ஒரு கருத்தை எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல், அவன் சொன்னவற்றையே முழுதும் கவனிக்காமல், ஒருவர் வந்து மறுத்து விவாதிக்க முடியும். அதிலிருந்து நான்கு வரிகளை வெட்டி எடுத்து தன் விருப்பப்படி பொருளளித்து பரப்ப முடியும். அனைத்து கருத்துக்களையும் தன் அரசியல் சாதி மதக்காழ்ப்புகளுக்கேற்ப திரிக்க முடியும்.

இலக்கியத்துக்கான விவாதம் தனித்தன்மை கொண்டது. இங்கே புறவயமான ஆதாரங்களை வைத்து விவாதிக்க முடியாது. புறவயமான தர்க்கம் கூட ஓரளவுக்குமேல் இயல்வதல்ல. எதையுமே ‘நிரூபிக்க’ முடியாது. இது தனிப்பட்ட ஆளுமைகளின் இயல்புகள், ரசனைகள், வாசிப்புப்புலம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு செய்யவேண்டிய விவாதம். க.நா.சு அவர் முன்வைத்த எந்த நூலையும் ஏன் அது நல்லது என்று சொன்னதில்லை. அந்நூலை வாசித்தால் அவரையும் அவர் அதுவரை முன்வைத்த நூல்பரிந்துரைகளையும் அறிந்த வாசகன் அவர் ஏன் சொல்கிறார் என புரிந்துகொள்வான். அப்படித்தான் இலக்கிய விவாதம் நிகழமுடியும்.

இலக்கிய விவாதம் ஒருவர் சொல்வதை அவர் உத்தேசிப்பதென்ன என ஊகிக்கும் வல்லமை கொண்ட மறுதரப்பால் எதிர்கொள்ளப்படுகையில் மட்டுமே நிகழ்வது. பெரும்பாலான இலக்கிய வாசகர்கள் தங்கள் வாழ்வனுபவங்களையே வாசிப்புக்கான கருவியாகக் கொள்கிறார்கள். தங்கள் அகவயமான புரிதல்களையே முன்வைக்கிறார்கள். எண்ணி, தயங்கி, கோவையாக இல்லாமல் பேசுவார்கள் பலர். தனக்கே உரிய படிமங்களை பயன்படுத்துவார்கள் சிலர். அவர்களுடன் விவாதிக்க அவர்களை புரிந்துகொள்ளும் கூர்மை கொண்டவர்கள் மறுதரப்பில் இருக்கவேண்டும். அரசியல்விவாதத்தின் மூர்க்கம் ஒரு துளி வெளிவந்தால்கூட அங்கே இலக்கிய விவாதம் நிகழாது.

ஆனால் விவாதம் என்பது இலக்கியத்திற்கு மிக இன்றியமையாத ஒன்றாக இருந்தது. நான் எழுத வந்தபோது அன்றைய தலைமுறையின் தீவிர எழுத்தாளர் ஒவ்வொருவருடனும் தொடர்ந்த விவாதத்தில் இருந்தேன். கடிதங்கள் வழியாகவும் நேரிலும் அவ்விவாதங்கள் என்னை உருவாக்கின. இன்றைய வாசகனும் சரி, இளம் எழுத்தாளனும் சரி விவாதமே அற்றவனாக இருக்கிறார்கள். விவாதிப்பதற்கான மறுதரப்பை அவர்களால் கண்டடைய முடிவதில்லை. அவன் எதிரே கொந்தளித்துக்கொண்டிருப்பது எதையும் கவனிக்காமல், எதையும் பொருட்படுத்தாமல், தன் காழ்ப்புகளையும் கசப்புகளையும் சார்புகளையும் மட்டுமே கக்கி கொந்தளித்துக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பெருந்திரள். கண்ணற்ற காதற்ற மூக்கற்ற, நா மட்டுமே கொண்ட ஒரு ராட்சதப் பிண்டம்.

ஆகவே தனக்கான ஒரு சிறு வட்டத்தை அவன் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இணை உள்ளங்களை கண்டடைய வேண்டியிருக்கிறது. அதன்பின் அந்த தளத்துக்கான நெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி விவாதிக்க வேண்டும். எப்படி சொல்லப்படுவதை கவனிக்க வேண்டும் எதை முன்வைக்க வேண்டும் எப்படி அதை நிறுவவேண்டும் என்பதை இந்த சூழலுக்காக மீண்டும் நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வாதத்துக்கான இந்த விதிமுறைகள் உருவாகி இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியிருக்கலாம். இன்றிருக்கும் இந்த சூழல் எக்காலத்திலும் உருவானதில்லை. இதற்காக நாம் அவற்றை கூர்மைப்படுத்தி தொகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றுக்காகவே இந்த சந்திப்புகள் இன்று உதவுகின்றன. இளம் எழுத்தாளர் கொண்டு வந்த படைப்புகளை செம்மைப்படுத்தும் நோக்கத்துடன் குறைகளைச் சுட்டிக்காட்டி, குறைகளை வென்ற பிற படைப்புகளை கூறி அவர்களுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் விவாதங்கள் அமைந்திருந்தன.

இந்த விவாதங்களின்போது நான் உணரும் நிறைவென்பது நானே மறந்து போன கதைகளை இந்த எழுதிக்கொண்டு வரப்படும் கதைகள் நினைவூட்டி சொல்ல வைக்கின்றன என்பது தான். மனிதன் கதைக்கருக்களை சிறு சிறு வேறுபாடுகளுடன் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறான் என்ற பிரக்ஞையை நான் அடைந்தேன். அத்துடன் இரண்டு நாட்கள் எழுந்து வரும் புதிய தலைமுறையுடனான உறவுகள் அவை அளிக்கும் புதிய நம்பிக்கையும் ஊக்கமும் இவை மிக முக்கியமான வரலாற்றுப் பங்களிப்புகள் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.

குமுதம் ஏழு லட்சம் பிரதிகள் விற்ற போது இருநூறு பிரதிகள் எழுத்து விற்றது .இன்று தேடும் போது குமுதத்தில் எழுதிய எழுத்தாளர்கள், அது பேசிய விஷயங்கள் எதைப்பற்றியும் எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. துமிலன் என்ற ஒரு எழுத்தாளர் இருந்தார், அவருடைய இயற்பெயரென்ன என்று பல நாட்களாக தேடி என்னால் கண்டடைய முடியவில்லை ஆனால் எழுத்து இதழின் ஒவ்வொரு பக்கமும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. பலகோணங்களில்பலர் பதிவு செய்திருக்கிறார்கள். எழுத்து இதழ் அழியவில்லை ,அழியாது. தீவிர இலக்கியத்தின் இயல்பு அது.

தீவிர இலக்கியம் தன் பரப்பால் அல்ல, தீவிரத்தால் நிலைகொள்வது. உயர் அழுத்தம் திகழும் புள்ளி அது. ஓர் இசைத்தட்டின் எல்லாப்பக்கங்களிலும் பாடல் இருந்தாலும் அதை தூக்கிச் சுழற்றுவது மையத்திலிருக்கும் அந்த மையப்பிடிப்புதான். தீவிர இலக்கியம் என்பது அந்த மையப்பிடிப்பு மட்டும்தான் .மொத்த செயல்பாடையும் சுழலவைக்கும் விசை அங்குதான் உள்ளது. அங்கு திகழ்வது எப்படி, அதன் பயன்கள் என்ன என்று வலியுறுத்தவே இச்சந்திப்புகள்.

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை,விடியல் சிவா, மற்றும்…கடிதம்
அடுத்த கட்டுரைஅளவை- சட்ட இதழ்