எஸ்.வி.ராஜதுரை வழக்கு, சில நடைமுறைகள் சில வினாக்கள்

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

ஆசிரியருக்கு,

உங்கள் மீது ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு திரு S.V. ராஜதுரை தொடுத்த  பத்தாண்டுகளாக நீடித்து வந்த அவதூறு வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை இவ்வழக்கில் நிகழ்ந்தது என்ன என உங்களுக்கு முழுமையாக தெரிவிக்கவும், உங்கள் வாசகர்களுக்காகவும் இந்த விளக்கமான கடிதம், கிட்டத்தட்ட இது ஒரு வெள்ளை அறிக்கை.

ஆனால் அதைவிட முக்கியமாக இவ்வழக்கை முன்வைத்து இந்தவகையான அவதூறு வழக்குகளை கையாளும் நம் நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் கவனத்தில்கொள்ளாத, கவனத்தில் கொண்டே ஆகவேண்டிய சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..

2012 ஆம் ஆண்டு நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில் திரு S.V. ராஜதுரை அந்நிய நிதி பெற்று இந்திய தேசிய கலாச்சார எதிர்ப்பு கட்டுரைகளை எழுதுகிறார், புத்தகங்களை வெளியிடுகிறார் என கூறி இருந்தீர்கள் என்றும்;  “கூலி” என்கிற பதத்தை பயன்படுத்தி இருந்தீர்கள் என்றும் குற்றம்சாட்டிய எஸ்.வி.ராஜதுரை உங்கள் கட்டுரை தன்னை அவமதித்து விட்டதாகச் சொல்லி முதலில் ஒரு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினார். அந்த அறிவிப்பு ஒரு தொழில்புரியும் வழக்கறிஞர் வெட்கி தலைகுனியும் மொழியில் இருந்தது. இதுபோன்ற கொச்சையான ஒரு வழக்கறிஞர் அறிவிப்பை என் 22 ஆண்டு தொழில் அனுபவத்தில் பார்த்ததில்லை.

அதன் பின் ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் எஸ்.வி.ராஜதுரை C.C.No.66/12  ல் ஒரு வழக்கு தொடுத்தார், அதில் மேற்சொன்ன அவதூறுக்காக உங்களை தண்டித்து அபராதமும் சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் வெளியூரில் இருந்தால் சிறப்பு விசாரணை நடத்திய பின் தான் வழக்கை கோப்புக்கு எடுக்க வேண்டும் என குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தம் பிரிவு 202 கூறுகிறது. (இந்த பிரிவு பற்றி அடுத்த “அளவை” இதழில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஒரு கட்டுரை எழுதுகிறார்). இந்த வழக்கில் இந்த நடைமுறையை நீதிமன்றம் பின்பற்றவில்லை, ஆனால் கோப்புக்கு எடுத்தது. இது முதல் பிழை.

அடுத்தது இது போன்ற தனிப் புகாரில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 244 படி குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜர் ஆனவுடன் அவருக்கு வழக்கு நகல் அளிக்கப்படும். அதற்கு அடுத்த கட்டம் என்பது புகார்தாரர் ஆஜர் ஆகி தான் பாதிக்கப்பட்டதாகச் சொல்லி முறையிட்டு சாட்சியம் அளிக்க வேண்டும், அத்துடன் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் இது அடுத்த கட்ட விசாரணைக்கு உகந்தது என நீதிமன்றம் திருப்தியுறும் பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா மறுக்கிறீர்களா என வினவும். அதன் பின்னர்தான் குற்றச்சாட்டு பதியப்படும். பிறகுதான் புகார்தாரரை குற்றம் சாட்டப்பட்டவர் குறுக்கு விசாரணை செய்யவார்.

ஆனால் உங்கள் வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப் படாமல் நீங்கள் வழக்கு நகல் பெற்றவுடன் அங்கேயே குற்றச்சாட்டு  பதியும் வினாவை தொடுக்க நீதிமன்றம் தயாரானது, ஓர் உத்தரவும் பிறபித்தது. இது இரண்டாவது பிழை. பின்னர் நம் ஆட்சேபத்தின் பேரில் இந்த உத்தரவை கைவிட்டு திரு எஸ்.வி.ராஜதுரையை விசாரிக்க உத்தரவிட்டது.

இதற்கு பின் இந்த வழக்கை விசாரணைக்கு முன்பே ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றம் சென்றீர்கள். உங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை, விசாரணையை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உங்கள் மனுவை தள்ளுபடி செய்தது. இது 2013 ல் நிகழ்ந்தது.

உச்சநீதிமன்ற ஆணைப்படி திரு எஸ்.வி.ராஜதுரை சாட்சியம் அளித்து   உரிய ஆவணங்களை உரிய முறையில் வழங்கி வழக்கை நிலைநிறுத்த வேண்டும். முன்பே சொன்ன படி அதன்பின் தான் உங்கள் மீது குற்றச்சாட்டு பதிய முடியும். ஆனால் பல ஆண்டுகள் நீதிமன்றம் வராமல் தவிர்த்து வழக்கை இழுத்தடித்து 5 ஆண்டுகளுக்கு பின்பு ஒரே ஒரு நாள் சாட்சியம் அளிக்க வந்தார். ஆனால் உரிய சட்ட நடவடிக்கையை பின்பற்றாமல் ஆவணங்களை சமர்ப்பித்தார். நாம் ஒரு சென்னை உயர்நீதிமன்ற முன் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆட்சேபணை செய்தோம். நம் தரப்பை ஏற்றுக் கொண்ட ஊட்டி நீதிமன்றம் அவர் முன்வைத்த ஆவணங்களை ஏற்க மறுத்து விட்டது. திரு. எஸ்.வி.ராஜதுரை பாதி அளவில் சாட்சியத்தை நிறுத்திவிட்டு கால அவகாசம் கேட்டார், நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

அதன் பின் சில ஆண்டு சென்றது. பின்னர் உடல் நிலை சரியில்லை, தன்னால் நேரில் வர இயலாது, எனவே ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமித்து தன் வீட்டுக்கு வந்து எஞ்சிய சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என எஸ்.வி.ராஜதுரை மனு செய்தார். அதே சமயம் அவர் பொதுமேடையில் பேசிய நாளிதழ் புகைப்படத்தையும் செய்தியையும் இணைத்தும், அதுபோக குற்ற வழக்கில் வழக்கறிஞரை ஆணையராக நியமிக்க சட்டத்தில் இடமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற முன் தீர்ப்பை மேற்கோள் காட்டியும் எதிர்வாதம் செய்தோம். இதை ஏற்ற நீதிமன்றம் திரு எஸ்.வி.ராஜதுரையின் மனுவை தள்ளுபடி செய்தது.

மேற்கொண்டு எஞ்சிய சாட்சியத்தை அளிக்க திரு S.V. ராஜதுரை நேரில் வரவேண்டும். ஆனால் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சாக்குப் போக்கு சொல்லிவிட்டு 2021 ஆம் ஆண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் ஆகவே கோத்தகிரியில் இருந்து கொண்டே இணையம் வழி சாட்சியம் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும்  மீண்டும் ஒரு மனு அளித்தார்.

இந்த மனுவை நமக்கு நகல் அளிக்காமல் நமக்குத் தெரியாமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், இதை நீதிமன்றம் ஏற்று மனுவை அனுமதித்தது. இது மூன்றாவது பிழை. நாம் இதை அறிந்து அதே நீதிமன்றத்தில் முறையிட்ட பின் அதே மனுவில் நம் எதிர்வாதத்தை தாக்கல் செய்ய அவகாசம் அளித்தது. இப்படி உத்தரவு பிறப்பித்த மனுவை அதே நீதிமன்றம் மீண்டும் கோப்புக்கு எடுக்க அதிகாரம் இல்லை, இருந்தும் இதை செய்தது, இது நான்காவது பிழை. பின்னர் நாம் எதிர் வாதத்தை தாக்கல் செய்தோம், ஆனாலும் பழைய உத்தரவை மீண்டும் பிறபித்து திரு. எஸ்.வி.ராஜதுரை அவர்களை இணையம் வழி எஞ்சிய சாட்சியம் அளிக்க அனுமதித்தது.

நான் கூறும் இந்த நான்கு பிழைகளும் அசாதாரணமானவை, இது வெவ்வேறு காலத்தில் மாறுதலாகி வந்த வெவ்வேறு நீதிபதிகளால் நிகழ்ந்தது. இதை இணையத்தில் ஊட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற இணைய தளத்தில் C.C.66/2012 வழக்கில் காணலாம். உங்கள் தளத்தை உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், சில முக்கிய வழக்கறிஞர்கள் படிப்பதை அறிவேன். இது அவர்கள் கவனத்திற்கு.

இப்போது திரு எஸ்.வி.ராஜதுரை இணையம் வழி எஞ்சிய சாட்சியத்தை அளிக்க வேண்டும். இந்நிலையில் இதுவரை இப்படி இந்த வகை சாட்சியம் பதிவு செய்த அனுபவம் நீதிமன்றத்திற்கு குறைவு என்பதால் இந்த நடைமுறை பற்றி திரு எஸ்.வி.ராஜதுரையிடம் கேள்வி எழுப்பியது, நம்மிடமும் கேட்டது. நாம் இந்த வழக்கறிஞர் அறிவிப்பும் அவர் தாக்கல் செய்த புகாரும் அவதூறானது என்றும், அவர் சாட்சியத்திற்கு பிறகு அவர் மீது அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம் என்றும் கூறினோம், முந்தைய  எதிர்வாதத்திலும் இதை கூறி இருந்தோம். இதற்கு சட்டத்தில் இடம் உண்டு.

மேலும் 6 மாதங்கள் அவகாசம் பெற்ற திருஎஸ்.வி.ராஜதுரை கடந்த 8.3.22 அன்று 10 ஆண்டுகளுக்குப் பின் வேறு வழியின்றி நேரில் வருகை தராமல் தன் வழக்கை திரும்பப்பெற மனு கொடுத்தார். இதை ஏற்ற நீதிமன்றம் உங்கள் மீது குற்றச்சாட்டு பதியாமலேயே இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஒரு வழக்கு 10 ஆண்டுகள் நீள்வது நான் இதுவரை காணாதது. இதுபோன்ற 4 அடிப்படை பிழைகளுடன் ஒரு கீழமை நீதிமன்றம் ஒரு வழக்கை நடத்துவதும் நான் இதுவரை காணாதது. இதுபோன்ற சகிக்க இயலாத கொச்சையான அவதூறான வழக்கறிஞர் அறிவிக்கையும் நான் இதுவரை காணாததுதான்.

இந்த வழக்கு நடந்த முறையில் உள்ள கவனப்பிழைகளும் சட்டப்பிழைகளும் நம் விவாதத்திற்கு உரியவை. மறுமுறை இவ்வண்ணம் நிகழலாகாது என்பதனால் இதை பதிவு செய்கிறேன். இதை சட்டநடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏ.எஸ்.கிருஷ்ணன்,

வழக்கறிஞர், ஈரோடு.

எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்

முந்தைய கட்டுரைஅம்மாவின் திருமணம்
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள் -வாசிப்பு