வேதங்களை வாசிப்பது…
அன்புள்ள ஜெ
நலம்தானே?
வேதாந்தம் கற்க என்னும் கட்டுரை உதவியாக இருந்தது. ஆனால் என் அணுகுமுறையில் வேதாந்தக் கல்விக்கு சிறந்த உதவியாக இருப்பவை ராமகிருஷ்ண மடம் ஆசுதோஷானந்தா எழுதிய உபநிடத அறிமுக நூல்கள்தான். ஏனென்றால் அவை அடிப்படையான புரிதலை முன்வைப்பவை. பெரிதாக எந்த திரிபுகளும் அவற்றில் இல்லை. இந்நூல்களை வாசிக்கையில் நாம் மிக கவனமாக இருக்கவேண்டும்
அ.அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் எழுதுவது அரசியல். வேதம் படிப்பது பாரதிய ஜனதாவுக்கு கொடிபிடிப்பதற்காக அல்ல.
ஆ. பெரும்பாலான வேதவேதாந்த உரைகள் பசுவை தங்கள் கொல்லையில் கொண்டு கட்டும் முயற்சிதான். அதற்காக பசுவை அடித்து உதைத்து குண்டுகட்டாக தூக்கி செல்வார்கள். தங்கள் சொந்த மதக்குழு, சாதிக்குழுவுக்குள் எல்லாவற்றையும் கொண்டுசெல்லும் முயற்சிகளை பற்றி கவனமாக இல்லாவிட்டால் குளிக்கப்போய் சேற்றைப்பூசிக்கொண்ட கதை ஆகிவிடும்.
இ. அதீத விளக்கங்கள் எல்லாம் வெறும் மூளைக்கொதிப்புகள் மட்டுமே. சொல்லுக்கு சொல் அர்த்தம் சொல்லி கமா புள்ஸ்டாப்புக்கெல்லாம் அர்த்தம் சொல்லும் கூட்டம் உண்டு.
ஆகவே நமக்கு தேவை எளிமையான கவித்துவமான நேரடி விளக்கம். மேலே படிப்பதும் புரிந்துகொள்வதும் நம் தேடலைப்பொறுத்து
மகாதேவன்
அன்பு ஜெயமோகன்,
வேதம், வேதாந்தம் பற்றி வாசிக்க விரும்பியவருக்கு நீங்கள் சில நூல்களைப் பரிந்துரை செய்திருந்தீர்கள். அவற்றோடு இந்து மதம் – சில விவாதங்கள்(ஜெயமோகன்) எனும் நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். கடலூர் சீனுவின் சொல்புதிது வெளியீடு.
வேதாந்தம் கற்க விரும்புவர்கள், சமயத்தத்துவ வரலாற்றுப் பின்னணியைக் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். கூடவே, இந்துமதத் தரிசனங்கள் மற்றும் பிற மதக்கோட்பாடுகள் பற்றிய குறைந்தபட்ச அறிமுகமேனும் வேண்டும். இல்லாவிடில், வேதாந்தத் தத்துவத்தின் தனித்துவத்தை அறிய முடியாமல் ஆகிவிடும். இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்(ஜெயமோகன்) நூல் அதற்கு உதவும்.
இந்தியத் தத்துவங்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்வதும் நல்லது. அதற்கு கி.இலட்சுமணனின் இந்தியத் தத்துவ ஞானம்(பழனியப்பா பிரதர்ஸ்) உதவும்.
முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.
https://www.suyaanthan.com/2018/06/blog-post_11.html