பத்துலட்சம் காலடிகள் -வாசிப்பு

விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்பு

இக்கதையை பாதி மட்டுமே வாசித்த நிலையில் வெறும் குடிமகன்களின் சம்பாஷனை என்று ஆர்வம் காட்டாமல் விட்டு விட்டேன். கதிர் அவர்களின் ஆலோசனைக்குப் பிறகு மீண்டும் வாசித்தேன்.

ஔசேப்பச்சன் பெயரே வித்தியாசமாக இருந்தது. (நமக்கு அபிஷேக்பச்சனை தான் தெரியும்.) நண்பர்களுடன் “ஆலாலோகுளிகா” என்று கூவியபடி காய்ச்சும் சாராயத்தின் மகிமையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். பேச்சு திசைமாறி பத்தேமாரி எனும் படகு பற்றி நீள்கிறது. மாப்பிள்ளைக் கலாசிகள் உள்ளூர் தச்சர்களிடம் இணைந்து பத்தேமாரிகளை செய்கிறார்கள். அதை சிறு பிழை இல்லாமல் கச்சிதமாக செய்து முடிக்க ஒரு கணக்கு உண்டாம். மாப்பிள்ளைகளின் சமூக அமைப்பு பற்றி சிலாகித்து கூறுகிறார். அதன் தொடர்ச்சியாக மங்களூர் ரயில் விபத்து பற்றி கூறி அதே காலகட்டத்தில் நடந்த ஒரு கொலையைச் பற்றி கூறுகிறார்.

இங்கே ஒரு சின்ன திருப்பம், அப்போது ஔசேப்பச்சன் க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி. இளைஞனின் கொலையைத் துப்பு துலக்கும் போது கிடைக்கும் சின்ன துருப்பை வைத்து எவ்வாறு கொலையின் முடிச்சை அவிழ்க்கிறார் என்பதை பற்றி நிறைய நண்பர்கள் கூறிவிட்டார்கள். இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு சில இடங்கள்.

பத்தேமாரி படகின் உறுதி, அனுபவ அறிவு மற்றும் எப்படி மரச்சட்டங்களை வைத்து வலிமையான கடல் அலைகளை எதிர்கொள்வது எப்படி என்ற கணக்கு அற்புதம்.

அடுத்து அரேபிய கட்டிட கலையின் சிறப்பு. பீஜப்பூர் கோல்கும்பாஸ் மசூதியின் வளைந்த கூரையைப் பற்றி குறிப்பிடுவது நேரில் காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

மாப்பிள்ளை சமூகத்தின் தலைமை, தொழில் கூட்டமைப்பு மற்றும் துணை சாதி இப்படி பல விஷயங்களை அலசுகிறார் நம் ஆசிரியர்.

1988ல் நடைபெற்ற பெருமண் ரயில் விபத்து, பிற்பகுதியில் 60அடி ஆழத்தில் இருக்கும் 14 ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்த அப்துல்லா சாகிப் உதவியுடன் செயற்படுத்தும் விதத்தை கூறும் இடம் அற்புதம்.

பிறன் மனை நோக்கினால் வரும் அழிவை பற்றி நேரடியாக சொல்லாமல் சொல்கிறார் சீதையை கவர்ந்து சென்றது இராவணன் என்ற சொல்லாடல் மூலம்.

ராதாமணி முகமது ஹாசிம் என்ற இளைஞரின் செயலை கண்டிக்கிறாளே ஒழிய உள்ளுக்குள் அவனது தூய்மையான அன்பை எண்ணி ரசிக்கிறாள்.அவள் கண்களை கண்ட டிஎஸ்பி உணர்கிறார்”சில சமயங்களில் மனித மனதை நேருக்கு நேராக பார்த்து நாம் நடுங்கி விடுவோம்”, அவள் மரணநாள் வரை இனிமையாக நினைத்திருப்பேன் என்றுரைக்கிறாள்.

தவறு செய்தவன் தனது செல்ல மகன் என்றாலும் அறம் காக்கிறார் சாகிப், மனமும் கனக்கிறது இவ்வளவு பெரிய தண்டனை தேவையில்லை என்று. அறிவுரை கூறி நல்வழிப் படுத்தியிருக்கலாம்.

“தொடங்கி விட்டால் பின் நிறுத்தவே முடியாத தப்பு. என் காலத்தில் அது தொடங்காது என சாகிப் கூறிவிட்டு அரபிக் கடலின் ஆழத்தை பார்த்துக் கொண்டிருந்தார் என ஔசேப்பச்சன் கூறும் இடம் துயரம்.

இறுதியில் அப்துல்லா சாகிப் செய்தது சரியா என ஔசேப்பச்சன் மூலம் நம்மையும் வினவுகிறார் ஜெயமோகன் அவர்கள்

ப்ரியா

***

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை வழக்கு, சில நடைமுறைகள் சில வினாக்கள்
அடுத்த கட்டுரைகதையும் புனைவும்- கடலூர் சீனு