குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே அதிகமாக வாசிக்கப்பட்ட ஒரு கதை தற்போதைக்கு ‘பத்து லட்சம் காலடிகள்’ ஆக தான் இருக்க முடியும். அந்தக் கதையிலிருந்த சர்ச்சையான வரிகளைப் பற்றி பலர் பேசியிருக்கின்றனர். ஆனால், அதன் அழகியல் சார்ந்த, அதனுடைய போதாமைகள் குறித்த விமர்சனங்கள் குறைவாகவே இருக்கின்றன.
உண்மையில் இந்தக் கதை ஒரு துப்பறியும் கதை போல தோன்றினாலும், அது இந்தக் கதையை சுவாரசியமாக சொல்வதற்காக கையாளப்பட்ட ஒரு யுத்தி மட்டுமே. உண்மையில் அதன் மையச் சரடு, ‘பத்தேமாரி’ கப்பலின் கட்டுமானமும் ‘மாப்பிளா’ சமூகத்தை பற்றிய சித்திரமும் தான்.
பத்தேமாரி கப்பல் பத்து டன் எடை கொண்ட அலையை வெறும் ஆறு இன்ச் தடிமனுள்ள ஒரு பலகையில் எதிர்கொள்கிறது என்றால், அதற்கு காரணம் அங்கே ஒரு கணக்கில் அடுக்கப்பட்ட மரக்கால்கள் தான் அது அறிவியல் சூத்திரம் அல்ல. அது ஒரு அனுபவ அறிவால் கட்டப்படுவது. அது பிற சமூகத்திற்கு புரியாத ஒன்று. ஆனால், அந்தக் கணக்கின் படி அந்தக் கால்களை அடுக்கவில்லை என்றால், அந்த மொத்தக் கப்பலும் மூழ்கி விடும்.
அது போலவே தான், மாப்பிளா சமூகமும், அதுவும் அந்தக் கப்பலை போன்றே ஒரு பலமான, பிரம்மாண்டமான அமைப்பு. அதன் உறுதியான நெறிகள் என்கிற பல தலைமுறைகளாக அடுக்கப்பட்ட கால்களில் தான் அந்தச் சமூகம் தொடர்ந்து நிற்கிறது. ஒரு வேளை அந்தக் கணக்கில் சிறு பிசகு ஏற்பட்டாலும் அந்த மொத்த சமூகமும் மூழ்கி விடும். அதனை காப்பதற்காகவே அந்த அப்துல்லா சாகிப்பின் மகன் முன்னோர்களின் சம்மதத்துடன் அரபிக்கடலில் புதைக்கப்படுகிறான்.
இது கிட்டத்தட்ட மணி அடித்த பசுவிற்காக மகனை தேரிலேற்றி கொன்ற ஒரு புராதான கதை தான். ஆனால், அதனை ஆசிரியர் சொல்கிற முறையில் தான் இந்தக் கதை இன்னுமொரு சிறந்த கதையாக இருக்கிறது.
இந்தக் கதையை பற்றி சர்ச்சைகள் உருவாவதற்கான காரணம், இந்தக் கதையில் வருகிற ‘சாதி படி நிலை குறைய குறைய அழகு குறையும்’ என்கிற ஒரு வரி தான். ஆனால், அந்த வார்த்தைகளை யார் சொல்கிறார்? அந்த கதாப்பாத்திரத்தின் அமைப்பு, போன்றவற்றை பார்ப்பது மிக முக்கியமான ஒன்று.
இந்தக் கொரானா காலத்தில் அமேசான் பிரைம் ஒரு மாத ட்ரையலில் மலையாளப் படங்களை பார்த்தவர்கள் ஒன்றை உணர்ந்திருக்கக் கூடும் அதில் சாதிப் பெயரை வைத்து ஒருவரை கேலி செய்வதும் தீண்டாமையை பின்பற்றுவதும் இன்றும் மிகச் சாதாரணமாக நடக்கிற ஒன்று அதைத் தான் அந்தக் கதாப்பாத்திரம் பேசுகிறது. மேலும் அந்த ஔச்சப்பனுக்கு ஐஸ்வர்யாராய் அழகாக தெரிகிறாள் அதனால் வெள்ளைத் தோல் அழகாக தெரிகிறது. அதுவே ஒரு சிலுக்கு ரசிகனுக்கு அழகை பற்றிய மதிப்பீடு மாறவே செய்யும் அதனால், ஔச்சப்பனுடைய கருத்தை எழுத்தாளனுடைய கருத்தாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.
அப்படி, கதாப்பாத்திரங்களின் கருத்தை ஆசிரியரின் கருத்தாக எடுத்துக் கொண்டால், ஒரு கதையில் அனைத்து பாத்திரங்களும் ஒரே குரலில் பேசக்கூடிய ஒரே ஊரில் வசிக்க கூடிய ஒரு குமாஸ்தாவாக மட்டுமே இருக்க முடியும். பல தரப்பட்ட பாத்திரங்களை ஒரு எழுத்தாளனால் உருவாக்கவே முடியாது.
இந்தக் கதையில் அப்துல்லா சாகிப்பின் நீதி, அநீதியாக தோன்றுகிறது. அது பத்தேமாரி கப்பலை போன்று நினைவு பொக்கிஷமாக நிறுத்திக் கொள்ளலாம், மற்றபடி இன்றைய நடைமுறையில் அதனை பயன்படுத்த முடியாது. கூடாது. ஏனென்றால் அது ஒரு அனுபவ அறிவு மட்டுமே, தர்க்க (அறிவியல்) ரீதியான ஒரு தீர்வு அல்ல. இந்த சிந்தனைகள் மேற்கத்திய கல்வி முறையால் உருவானது தான். ஆனால், அது தான் இன்றைக்கு சரியானதாக இருக்க முடியும்.
சபரிராஜ் பேச்சிமுத்து
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307