இன்றைய சிந்தனைகளின் வயல்

அன்புள்ள ஜெ

பின்தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலகாலமாக நான் விசாரித்துக்கொண்டிருக்கும் நூல். எந்த பதிப்பகத்தில் கேட்டாலும் ஸ்டாக் இல்லை என்பார்கள். மின்னூல் படிக்க எனக்கு மனம் ஒப்பவில்லை. அந்த எழுத்துக்கள் அசைவது என் பைபோக்கல் லென்ஸுக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது. அழகான அச்சுநூலாக வந்திருக்கிறது.

நான் 20 ஆண்டுகளுக்கு முன் வாசித்த நாவல். அன்று என் மனதில் இருந்த ஏராளமான கேள்விகளை தீப்பற்றி எரியச்செய்த நாவல். 1983ல் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இலங்கையில் இனக்கலவரம். அதன்பின் ஒரு புகைப்படம் நான் பார்த்தேன். மாத்தையா கைவீசி நடந்துவரும் காட்சி. அந்த குண்டான உருவம் என் அப்பா மாதிரி. என்னை ஆழமாக கவர்ந்தது. என் அப்பா அப்போது தவறியிருந்தார். ஒரு ரெண்டு ஆண்டு முன்னாடி. ஆனால் கொஞ்சநாள் தாண்டவில்லை. மாத்தையா துரோகி என்று சொல்லி கொல்லப்பட்டார். அந்த அமைப்பை உருவாக்கியவரே அதற்கு துரோகி என்றால் என்ன அர்த்தம்? என்னால் அந்த அடியில் இருந்து மீளவே முடியவில்லை. அதைவிட அந்தக்கொலை சரிதான் என்று என் நண்பர்கள் வாதிட்டதை ஏற்க முடியவில்லை.

பின்தொடரும் நிழலின் குரலை அதன்பிறகுதான் வாசித்தேன். அது என்னை என்ன செய்தது என்று சொல்லமுடியாது. செத்த குட்டியை தூக்கிக்கொண்டு அலையும் குரங்கு மாதிரி அதை ஒருவருஷம் வரை கையிலேயே வைத்திருந்தேன். பிறகு அதுவே உதிர்ந்து போய்விட்டது. இன்றைக்கு அந்நாவலுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதேசமயம் அது என்ன சரியாக அளித்தது என்று சொல்லவும் முடியவில்லை. அது ஒரு பெரிய குழப்பு குழப்பியது. சரித்திரம் முழுக்க இதுதான் கதை என்று சொல்லியது. புகாரின் அன்னாவிடம் விடைபெற்றுச் சாகப்போகும் இடத்தில் நான் அழுதேன். ஏசு வரும் இடத்திலும் அழுதேன்.

நாம் ஏன் கொள்கைகளுக்கு அடிமையாகிறோம்? கொள்கை என்பது ஒரு பூதக்கண்ணாடி. நம்மை நூறுமடங்கு பெரிசாக்கி நமக்கு காட்டுகிறது. நீ பெரிய இவன் என்று நம்மிடம் சொல்கிறது. ஆமா நான் பெரிய இவன் என்று நாம் உலகை நோக்கி கத்துகிறோம். அவ்வளவுதான். இலட்சியவாதமெல்லாம் சரிதான். ஆனால் நம்மை நாலுபேர் பார்க்காவிட்டால் எல்லாம் ஆவியாகிவிடும்.

1991ல் என்ன நடந்தது என்று நூலின் பின்னட்டையில் உள்ளது. நானறிந்து தமிழில் எழுதப்பட்ட மிகப்பெரிய சமகால அரசியல்நாவல் அதுதான். எழுத்தாளர்கள் சமகாலத்தை ஏன் எழுதுவதில்லை என அடிக்கடி கேட்பார்கள். சமகாலத்தை எழுதின பின்தொடரும் நிழலின் குரலை வாசித்திருக்கிறாயா என்று நான் கேட்பேன். இன்று அதை வாசிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞனிடம் ‘இன்றைய உன்னுடைய சிந்தனைகள், குழப்பங்கள் எல்லாமே எங்கே எப்படி தொடங்கின, எப்படி வளர்ந்தன என்று தெரிந்துகொள்ள இதைப் படி’ என்று சொல்வேன்.

ரவிச்சந்திரன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

Email: [email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைவேதங்களை வாசிப்பது…
அடுத்த கட்டுரைசிகண்டி- ஒரு தேவதையின் கதை