சமீபத்தில் இந்த கருத்தை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் அடுத்தகட்ட சிந்தனையாளர் டான் அசோக் என்பவர் சொல்கிறார்.
இளைஞர்களே, திராவிடத்திற்கு, திமுகவிற்கு எதிராகத் தொடர்ந்து பேசினால், செயல்பட்டால், பொய்களை கூறினால் என்ன கிடைக்கும்
- விருதுகள் / ஆராய்ச்சி நிதி என்ற பெயரில் பணம்
- கூட்டங்களுக்கு அழைப்பு என்ற பெயரில் விமான டிக்கட் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தங்குவது
- ஊடகங்களில் முக்கியத்துவம்
- தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைப்பார்கள்
- விகடன் / குமுதத்தில் கட்டுரை எழுதலாம்.
- நூலிபான்களின் நட்பு
- இணையத்தில் நூலிபான்களின் ஆதரவு
- நீலச்சாயம் பூசிய காவிக்குழுவின் ஆதரவு
- அறிவு ஜீவி பிம்பம் காலச்சுவடு நூல் வெளியீடு
- ஜெமோ பாராட்டு
திமுகவில் இணைந்து திராவிடத்திற்கு ஆதரவாக செயல்பட்டால் என்ன கிடைக்கும்?
மேயர் / துணைமேயர் / முனிசிபல் சேர்மன் / பஞ்சாயத்து சேர்மன் / கவுன்சிலர் / எம்.எல்.ஏ / எம்.பி / அமைச்சர் ஆகி நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தும் மனநிறைவு
எது பெரிது? சிந்திப்பீர், செயல்படுவீர்.
*
உண்மையில் அந்தக் குறிப்பு மிகவும் பிடித்திருந்தது. நவீன இலக்கியத்தில் செயல்பட்டால் வைரமுத்து, இமையம், மனுஷ்யபுத்திரன் ஆகிய எவருக்கும் கிடைக்காத விருதுகள், கூட்டங்களுக்கு அழைப்புகள், விமான டிக்கெட், நட்சத்திர விடுதிகளில் தங்கல் ஆகியவை கிடைக்கும். அவர்கள் தலைவைத்தே படுக்காத விகடன் குமுதத்தில் எழுதலாம். அவர்கள் அந்தப்பக்கமே போகாத டிவிகளில் தோன்றலாம். ராஜன் குறை வகையறாக்கள் நினைத்தே பார்க்கமுடியாத ஆராய்ச்சிநிதி எல்லாம் கிடைக்கும்.
கேட்கவே பரவசமாக இருக்கிறது. என்ன செலவானாலும் பரவாயில்லை, இதை பரப்ப நாம் ஒத்துழைக்கவேண்டும் என நணபர்களிடம் சொன்னேன். இளைஞர்களே வாரியமா சாகித்ய அக்காதமியா, மேயரா ஞானபீடமா? தெரிவு உங்கள் கையில்!
கிடைப்பவற்றில் உச்சகட்டம் ஜெமோ பாராட்டு! ஆமாம், அது! இல்லையா பின்னே?