வெண்முரசு, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

2020ஆம் ஆண்டு வெண்முரசு நாவலினை படிக்க ஆரம்பித்தேன். வேலை காரணமாக லண்டனில் தனியாக இருந்த போது பெரும் துணையாக, பல்வேறு இடங்களுக்கும், கால நிலைகளுக்கும்‌ அழைத்துச் சென்ற ஒரு நண்பனாக வெண்முரசு இருந்தது.

என் தாயார் சிறு வயதில் துரியோதனன் குறித்து கூறுகையில், அவன் எவ்வளவு சிறந்தவன், கருணை கொண்டவன் என கூற கேட்டதுண்டு.எனினும் தொலைக்காட்சியில் பார்த்த துரியோதனன் தான் என் மனதில் பதிந்தான்.வெண்முரசு படிக்க தொடங்கிய பின்னர், தங்கள் பார்வையில் பார்க்கும் தோறும் என்னுள் பதிந்த பிம்பம் மாற தொடங்கியது.

துரியோதனன் மட்டும் அல்ல அனைவரையும் புதிய கோணத்தில் பார்க்க தொடங்கினேன்.வருடத்திற்கு ஒரு முறை, எனக்கு பணி இடையே ஓய்வு தேவையெனில், சென்னையில் இருந்து திருப்பதி வரை தனியாக நான்கு நாட்கள் நடை பயணம் செல்வதுண்டு.

முதல் நாள் ஆரம்பிக்கும் போது உள்ள மலைப்பே எனக்கு வெண்முரசு படிக்க தொடங்கிய போது இருந்தது.  2020 அக்டோபர் மாதம், படித்து முடித்து திரும்பி பார்க்கையில் நான் பாரத நாட்டையே நடந்து வந்த உணர்வே உண்டானது. நுணுக்கமான, எளிதில் கவணிக்க தவற கூடிய தகவல்களை கூட அழகாக விவரித்த தங்கள் எழுத்திற்கு என் வியப்புடன் கூடிய வணக்கங்கள்.

படிப்பதற்கே மலைப்பூட்டும் வெண்முரசு படைத்த தங்களுக்கு அன்புடன் கூடிய வாழ்த்துக்கள்.மீண்டும் படிக்க துவங்கிய எனக்கு இக்கடிதத்தை தங்களுக்கு அனுப்ப வேண்டும் என தோன்றியது.

அன்புடன்,

ஜெ. ஜெயபிரகாஷ்.

***

அன்புள்ள ஜெ

வெண்முரசின் வாசகன் நான். அதாவது ஓராண்டாக வாசித்துக் கொண்டே இருக்கிறேன். நடுவே இரண்டுமுறை வாசிப்பு நின்றுவிட்டது. அதன்பின் விடக்கூடாது என்று மீண்டும் தொடங்கினேன். புத்தகமாகத்தான் வாசிக்கிறேன் நான் வந்துசேர்வதற்குள் மிஞ்சிய நான்கு பகுதிகளும் வெளியாகிவிடுமென நம்புகிறேன்.

என் மனைவி என்னிடம் ஒருமுறை கேட்டாள். வெண்முரசு உங்களுக்கு என்ன அளிக்கிறது என்று. நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தேன். ‘அதான் ஒரிஜினல் மகாபாரதம் இருக்கே’ என்று அவள் சொன்னாள். ஆனால் காலந்தோறும் மகாபாரதத்தை திருப்பி எழுதுகிறார்களே என்று நான் சொன்னேன்.

அதன்பிறகு நான் ரொமிலா தாப்பர் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்தேன். மகாபாரதத்தில் துஷ்யந்தன் சகுந்தலையை அப்படியே மறந்துவிடுகிறான். காரணம் ஒன்றும் இல்லை. ஆனால் காளிதாசன் அதற்கு துர்வாசரின் சாபம் என்று ஒரு காரணத்தை கொண்டுவருகிறான். காளிதாசனில் இருந்து அதை மீண்டும் மகாபாரதத்திலே சேர்க்கிறார்கள். துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் உள்ள அனாமலி ஒன்றை காளிதாசன் தீர்க்கிறான். அவன் வேண்டுமென்றே சகுந்தலையை கைவிட்டால் அதன்பின் ஏற்றுக்கொள்வதும் பெரிய மாண்பு இல்லையே. மறுபடி மறக்கமாட்டான் என்று எப்படிச் சொல்லமுடியும்?

இதேபோல பலநூறு அனாமலிகளை வெண்முரசு சரிசெய்கிறது என்று நான் என் மனைவியிடம் சொன்னேன். இந்த அனாமலி எல்லாம் காலமாற்றத்தால் வேல்யூஸ் மாறும்போது உருவாகிறது.அவற்றை ஏன் சரிசெய்யவேண்டும் என்றால் சாராம்சமாக மகாபாரதத்திலே உள்ள தர்சனத்தை துலக்கம் பண்ணுவதற்காகத்தான் என்று சொன்னேன். எனக்கே ஒரு தெளிவு கிடைத்தது.

அன்புடன்

அனந்த்ராம்

***

முந்தைய கட்டுரைபள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைத் தூய்மை செய்வது…
அடுத்த கட்டுரைமிளகு- காளிப்பிரசாத்