கருணை -கடிதங்கள்

https://victorianweb.org/art/illustration/leighton/4.html

கருணையும் உரிமையும்

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரையை வாசித்தேன். கடிதமாக இருந்தாலும் அது ஒரு கட்டுரை. அதில் நீங்கள் எப்போதுமே வலியுறுத்தும் ஒரு விஷயம்தான் இருந்தது. மனிதர்கள் வாழ்வது உடம்பால் அல்ல, பிரக்ஞையால். ஒருவன் அவனுக்கு அவன் யாரோ அதுதான் முக்கியம். அவனுடைய தன்னுணர்வுதான் அவன். அந்த தன்னுணர்வை அவை தன்னுடைய தன்னறத்தைச் செய்வதுவழியாகத்தான் ஈட்டிக்கொள்ள முடியும். அதைத்தான் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்

நன்றி

ஆர்

***

அன்புள்ள ஜெ

கருணை பற்றிய கடிதத்தில் உள்ள ஓவியத்தை இரண்டாம் வாசிப்பில்தான் பார்த்தேன். கண்இல்லாத பேரறிஞர். அற்புதமான ஓவியம்.

கே.ஆர்.குமார்

***

அன்புள்ள ஜெ

சென்ற வியாழனன்று மூடி திருத்தகம் சென்றிருந்தேன். வழக்கம் போல எனக்கான பரிதாப குரலொன்று பக்கத்தில் ஒலித்திருந்தது. ஒரு ரகசிய புன்னகையோடு வீடு திரும்பினேன். இன்றுகாலை கருணையும் உரிமையும் பதிவை படித்தவுடன் நினைவில் தோன்றியது. வாசகர் சரவணன் சொல்லியிருந்த எரிச்சலும் ஒவ்வாமையும் சில மாதங்களுக்கு முன்பு வரை எனக்குமிருந்தது.

ஜா.தீபாவின் ஒற்றை சம்பவம் கதை அதிலொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. அது செல்லும் பாதை வேறாயினும் அங்கிருந்து நான் சென்றடைந்தது ஒன்றரை ஆண்டுக்களுக்கு முன் நீங்கள் எனக்கு சொன்ன விடையை தான். வெறும் உடலாலேயே தன்னை பிறனுடன் ஒப்பிட்டு மகிழும் எளிய உள்ளத்தின் சிறுமையை அறியும் திறன் கொண்ட நான் கனிவான புன்னகையை தானே அவனுக்கு தர வேண்டும். அறிவின் முதன்மை பெறுபயன், கனிந்து விடுதலை அடைதல்லவா. இந்த அறிதலை வந்தடைந்த பின் இயல்பான நட்பு புன்னகையை தருவதில் எச்சிரமமும் இல்லை. அவர்கள் அப்படித்தான் என்று அறியும் போதே அதனோடு வீண் முரண்களை வளர்க்காது இசைந்து என் வழி தேறுதல் நலமென முடிவு செய்தேன்.

ஆனால் இன்றைய பதிலின் பிற்பகுதி நானும் கொண்டிருந்த ஐயத்தை நீக்கியது. ஒரு ஆசிரியராக பலவகையிலும் ஐயங்களை விலக்க வழிசொன்னாலும் அவ்வப்போது உங்கள் சொற்கள் இல்லாது கடந்து வரும் நிலையை அடையவில்லை. இங்கே சூழலில் என்னை போன்றோரிடம் தொடர்ச்சியாக ‘நீ ஒரு உடல் மட்டுமே, குறையுள்ள உடல்.’ என்ற குரல் ஒலித்து ஒலித்து ஏற்க வைக்கிறது. ஆனால் சற்று பார்வையை திருப்பினால் நம் சமுதாயமே அப்படித்தான் இருக்கிறது. வெறும் சோற்றுப்பிண்டங்களின் சமூகம். எந்த மரபு உடல் ஒரு கருவி, மனிதன் தன் அறிவால் தன் சுயத்தை விரிவாக்கி கொள்வதே முழுமை என அறைகூவியதோ அதன் தலைமுறைகள் அதற்கு முற்றிலும் எதிராக இருப்பது ஒரு வரலாற்று முரண்நகை தான்.

இங்கே அறிவியக்கவாதியாக தன்னை உணர்பவன் அந்த தளையிலிருந்து விடுவித்து கொள்ள உங்களை போன்ற நல்லாசிரியரின் சொல் தேவைப்படுகிறது. ஒவ்வொருமுறையும் உரிய காலத்தில் என்னை வந்தடையும் தங்களின் சொற்களுக்காக இக்கணத்தில் தலை பணிகிறேன்.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைமிளகு- காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியனின் குரல்