பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் புதிய பதிப்பைப் பார்த்தேன். அதன் பின்னட்டைக்குறிப்பு என்னை ஒருவகையான பதற்ற நிலைக்கு ஆளாக்கியது. 2002ல் அந்நாவலை நான் படித்தேன். அன்று தொழிற்சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகவே அந்நாவல் ஒரு மார்க்ஸிய விரோதியால் மார்க்ஸிய எதிர்ப்புக்காக எழுதப்பட்டது என்று தோன்றியது. மார்க்ஸிய எதிர்ப்பு என்றால் எதிர்த்தரப்பு. எதிர்த்தர்ப்பு என்றால் மார்க்ஸியர் அப்போது எவரை எதிர்த்தரப்பு என்று கொள்கிறார்களோ அந்தத்தரப்பு. 1991க்கு முன் என்றால் காங்கிரஸ், அமெரிக்க ஏகாதிபத்தியம். பிறகு என்றால் இந்துத்துவம். இப்படித்தான் மார்க்ஸியர் யோசிக்கமுடியும். வேறு வழியே இல்லை. இதே டெம்ப்ளேட் தான் நூறுவருடமாக இருக்கிறது. மாற்றவே முடியாது. நானும் அப்படியே நினைத்தேன்.
ஆனால் இன்று எவ்வளவோ கடந்துசெல்லப்பட்டுவிட்டது. இன்றைக்கு ஆந்நாவலின் பின்னட்டையை வாசிக்கும்போது அதை எப்படி முற்றிலும் தவறாக, முழுக்கமுழுக்க அபத்தமாக புரிந்துகொண்டோம் என்று தெரிகிறது. அப்படித்தான் புரிந்துகொண்டிருக்க முடியும் என்றாலும் அந்த கண்கட்டித்தனம் திகைப்பை அளிக்கிறது. உண்மையில் 1991 முதல் மிகப்பெரிய ஓர் உடைவு நிகழ்ந்தது. அந்த நொறுங்கலைத்தான் 1998ல் வந்த பின்தொடரும் நிழலின் குரல் சொல்கிறது. அப்படியெல்லாம் இல்லை என்று அன்று பலம்பிடித்துச் சொல்லிக்கொண்டிருந்தோம். இன்றைக்கும் ஒருசாரார் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம்பேர் வன்மமாகச் சொல்கிறார்கள். மிச்சபேர் பாவலாவாகச் சொல்கிறார்கள். மிகக்கொஞ்சம்பேர் நம்பிச் சொல்கிறார்கள்.
1991க்குப் பிறகுதான் இங்கிருக்கும் இடதுசாரி அமைப்புகளில் இன்றுள்ள எல்லா கொள்கைச் சிக்கல்களும் உருவாயின. தேசிய இனப்பிரச்சினை மேலேழுந்து வந்தது. தமிழ்த்தேசியவாதிகள் இடதுசாரிகளாக ஆனார்கள்.(அதுவரை அவர்கள் பாசிஸ்டுகளாக இடதுசாரிகளால் சொல்லப்பட்டார்கள்) மார்க்ஸியர்கள் பெரியாரியம் பேச ஆரம்பித்தார்கள் – தலைமையில் பிராமணர்களை வைத்துக்கொண்டே பார்ப்பனிய எதிர்ப்பு பேசினார்கள். நம்பிக்கையிழப்பு, கொள்கைக்குழப்பம். அதன் விளைவாக நிறையபேர் சாதிக்கட்சிகளுக்குச் சென்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை இடதுசாரிக் கட்சி என்றார்கள். அதுதான் பெரியாரிய இடைநிலைச் சாதி அரசியலுக்கான குறுக்குப்பாதையாக அமைந்தது.
மொத்தத்தில் ஒரு பெரிய கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் நிகழ்ந்து ஆளுக்கொரு திசையில் ஒதுங்கினார்கள். அந்த அத்தனை தரப்பையும் மிகநேர்மையாக முன்வைக்கும் நாவல் பின்தொடரும் நிழலின் குரல். சொல்லப்போனால் மார்க்ஸியமே அர்த்தமிழந்துவிட்டது என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் மார்க்ஸியத்தின் உண்மையான மதிப்பென்ன, சாராம்சம் என்ன என்று சொன்ன நாவல் அது. மார்க்ஸியத்தின் சாரம்சம் அந்த இலட்சியவாதமும், அந்த வரலாற்றுவாதமும்தானே ஒழிய அந்த அரசியல்சூழ்ச்சிகள் அல்ல. சோவியத் ருஷ்யாவோ சீனாவோ அல்ல. தொழிற்சங்க அரசியலோ தலைமைக்கான போட்டியோ அல்ல.
என் தொழிற்சங்க நண்பர் பட்டாபிராமன் அந்நாவலின் வெளியிட்ட மேடையில் சொன்னார் நாவலின் முதல் வார்த்தை இடது கடைசி வார்த்தை தோல்வியற்றவன். நாவல் அதைத்தான் சொல்கிறது. மார்க்ஸியத்தை ஒரு மூர்க்கமான நம்பிக்கையாக அல்லாமல் ஒரு இலட்சியவாதமாக, ஒருபோதும் தோற்காத மானுடக்கனவாகக் கொண்டுசெல்வது பற்றி பேசும் நாவல் அது. ஆனால் கருத்தியல் மூர்க்க நம்பிக்கைக்குள் இருக்கும் வரை அதைக் காணும் கண் இருக்காது. கூச்சலிடத்தான் தோன்றும். நானும் கூச்சலிட்டவன்தான்
ஆனால் இன்றைக்கு பல அடிகள். பல கசப்புகள். எல்லாம் தெளிந்து அமர்ந்து இன்றைக்கு யோசிக்கமுடிகிறது. வாழ்த்துக்கள்
என்.ஆர்.சிவராமன்
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்