புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பதிப்பகங்கள்/ஸ்டால்கள் அட்டவணைகள் குறிப்பிட்ட பதிப்பகத்தை எளிதாக கண்டுபிடிக்க உதவவில்லை. ஒரே வரிசை எண் இல்லை. கடைகளின் அளவை கொண்டு வெவ்வேறு எண் வரிசைகள். என்னை போன்ற பலரும் விசாரித்து தேடுவதைப் பார்த்தேன்.

கடைகளில் பார்வைக்கு புத்தகங்கள் அடுக்கப்பட்ட முறையும் வாசகர்களுக்கு உதவும் வகையில் இல்லை. எழுத்தாளர் பெயர் /புத்தகங்களின் பொருள் வாரியாக ஒழுங்கு செய்யப்படவில்லை. விற்பனையாளருக்கே புத்தகங்கள் தேடிக் கண்டுபிடிக்க கடினமாக இருந்தது.

“பொன்னியின் செல்வன்” மற்றும் பிற சரித்திர நாவல்கள் பல வடிவங்களில் பல கடைகளில் விற்பனைக்கு இருந்தன. தமிழர் வாசிப்பில் இவைதான் பிரதானம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

கி.ரா., யுவன், நிர்மல் வர்மா, விபூதிபூஷண் மற்றும் சில புத்தகங்களும் வாங்கியதும், முன்பே இருமுறை வாசித்திருந்தாலும் அன்பளிப்புக்காக “குமரித்துறைவி” இரண்டு பிரதிகள் வாங்கினேன். விற்பனையாளர் புத்தகம் எதைப்பற்றி என கேட்டார். சுருக்கமாக கூறினேன். கேட்கவே சிலிர்க்குது சார் என்றார். பிறகு. அவர் தங்களைப் பற்றி கூறி அவர் ஏன் சார் வெண்முரசு எழுதினார். அந்த நேரத்தில் பல நல்ல நாவல்கள் கதைகள் எழுதியிருக்கலாம் சார் என்றார். பதிலுக்கு சிறிய விளக்கம் மட்டும் கொடுத்துவிட்டு, கால் அசதி காரணமாக வெளியேறி வீடு வந்து சேர்ந்தேன்.

நோய் தொற்று குறைந்த இந்நிலையில் சென்னை புத்தக விழா நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அன்புடன்
பா.ரவிச்சந்திரன்
சென்னை

அன்புள்ள ஜெ

சென்னை புத்தகக் கண்காட்சியில் பின்தொடரும் நிழலின் குரல், குமரித்துறைவி வாங்கினேன். பின்தொடரும் நிழலின் குரல் கடைசிநாள்தான் வந்தது. குமரித்துறைவி எல்லா கடைகளிலும் சுடச்சுட விற்கப்பட்டதைக் கண்டேன். இந்த ஆண்டின் ஹிட் புத்தகங்களில் ஒன்றாக குமரித்துறைவி இருக்கும் என நினைத்திருந்தேன். அதுவே நடந்தது.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் நாயகன் புதுமைப்பித்தன்தான். நற்றிணை பதிப்பகம் புதுமைப்பித்தன் கதைகளை மலிவுப்பதிப்பாகக் கொண்டு வந்தது. அதற்கு முன்னரே சீர் வாசகர்வட்டம் வீ.அரசு பதிப்பாசிரியராக நூறுரூபாய் விலையில் புதுமைப்பித்தன் கதைகளைக் கொண்டுவந்தது. வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் கையில் அந்நூல்கள் இருப்பதைக் கண்டேன். மிகச்சிறப்பான ஒரு முன்னெடுப்பு. புதுமைப்பித்தன் இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு இப்படி ஒரு ‘ஹாட் கேக் சென்சேசன்’ ஆவது அற்புதமான விஷயம். வாங்கிச்செல்பவர்களில் பத்துக்கு ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தால்கூட ஒரு பெரிய மாற்றம்தான்.

மற்றபடி ஒருபக்கம் பெரியார் மறுபக்கம் சித்தர்கள் இன்னொருபக்கம் பதினெண்புராணங்கள் பகவத்கீதை என வழக்கம்போல விற்பனையாகும் நூல்கள் விற்றுக்கொண்டிருந்தன. புனைவுக்களியாட்டு நூல்கள் நன்றாக விற்றிருக்குமென நினைக்கிறேன். அறம் பத்தாண்டுகளாக எல்லா புத்தகக் கண்காட்சியிலும் பெஸ்ட் செல்லர்தான்.

முதற்கனல், குமரித்துறைவி எல்லாம் மலிவுப்பதிப்பாக போட்டு விரிவான வாசகர்களிடம் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பது என் ஆசை.

ஆர்.ராஜாராம்

முந்தைய கட்டுரைகனவில் கேட்டது…
அடுத்த கட்டுரைதேய்வழக்கை ஒளிரச்செய்தல்