பின்தொடரும் நிழலின் குரல்- சு.கார்த்திகேயன்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க 
பின்தொடரும் நிழலின் குரல் – புதிய பதிப்பு

வருடத்தின் ஆரம்பத்திலேயே 720 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை படிக்க தேர்ந்ததெடுத்ததில் ஒருபுறம் உற்சாகமும் மறுபுறம் பதட்டமும் மனதை நிறைத்திருந்தது. உற்சாகத்திற்கான காரணமாக பரந்துபட்ட வாசிப்புக்குள்ளாகி பல விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழின் மிக முக்கியமான நாவலை படிக்கிறேன் என்பதை சொல்லலாம்.அதே நேரத்தில் அதையே பதட்டத்திற்கான காரணமாகவும் சொல்லலாம்.

ஒரு புத்தகத்தை படிக்க பதட்டப்பட வேண்டுமா என்ன? அதை சரியாக சொல்லத் தெரியவில்லை, எனக்கு அப்படித்தான் இருந்தது. அதற்கான காரணமாக அந்த நாவலை குறித்தான என் முன்முடிவுகளை சொல்லலாம், இப்படி நிறைய அனுபவம் எனக்கு உண்டு, நண்பர்கள் பார்த்து,படித்து பரிந்துரை செய்யும் நல்ல படங்கள் மற்றும் புத்தகங்கள் என்னை இவ்வாறான அனுபவத்திற்கிட்டுச் செல்லும், அப்படி நேர்ந்தது தான் இந்த நாவலின் வாசிப்பு அனுபவம்.

ஜெயமோகனின் சிறந்த படைப்புகளில் ஒன்று என்று தீவிர இலக்கிய வாசகர்களால் குறிப்பிடப்படும் “பின்தொடரும் நிழலின் குரல்” நாவலை வாசிக்கத் தொடங்கி, ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து அதை வாசித்து முடித்தேன்.சிறந்த ஒரு வாசிப்பு அனுபவமாக இருந்தது.

மனிதனால் அளக்க முடியாத அறிந்துகொள்ள இயலாத ( முற்றிலுமாக ) மனதை பற்றிய தருக்கங்கள் விரவிக்கிடக்கும் ஒரு பரந்தவெளி தான் இந்த நாவல்,அதன் இன்னொரு பகுதியாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் அதனூடாக கம்யூனிசத்தின் தோல்வியையும் சொல்லிச் சொல்கிறது.

எந்தவொரு சிந்தாந்தமும் அதன் அடிப்படையில் முரண்பாட்டை கொண்டிருந்தால் அதன் அழிவு அதற்கு மட்டுமல்லமாது அது எதை நிலைநிறுத்தி அதை யாரை பின்பற்ற நிர்பந்திக்கிறதோ அந்த எல்லாவற்றிற்குமான அழிவாக இருக்கும் என்பது திண்ணம்.

நாவலின் முக்கிய கதாபாத்திரமான அருணாச்சலம், வீரபத்திரபிள்ளையாகவும், வீரபத்திரபிள்ளை புகாரினாகவும் கூடுவிட்டு கூடு பாய்ந்து வரலாற்று சான்றுகளாக இந்நாவலில் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு அமைப்பு அதன் செயல்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை எப்படி அந்த அமைப்பின் வரலாற்றிலிருந்து சுவடுகளே இல்லாமல் அழிக்கிறது,அதற்கான நியாய தர்மங்களை அந்த அமைப்பு எப்படி வரலாற்றிலிருந்தே தெரிவு செய்து செயல்படுத்துகிறது என்பதிலிருந்து,கதை கம்யூனிசத்தின் அடிவேரை ஆட்டிப்பார்க்கிறது.

மனிதனின் வாழ்வில் அவன் துயருரும்போது அவனை இரட்சித்து மீட்க மீட்பர் ஒருவர் எப்போதுமே தேவைப்படுகிறார், அவ்வாறு இல்லாதவர்களின் மனத்துயர் அவர்களை எந்த எல்லைக்கும் இட்டுச்சென்று அலைகழித்து விட்டுவிடும், இது மாபெரும் மேதைகளையும் கலைஞர்களையும் கூட விட்டு வைப்பதில்லை.

அருணாச்சலத்தின்,பாஸ்கரனின் தந்தை வீரபத்திரபிள்ளை பற்றிய தேடல்தான் அவனை வரலாற்றினூடாக பயணிக்க செய்து, வீரபத்திரபிள்ளையாகவும் புகாரினாகவும் அவனுடைய நிழலாக பின்தொடர வைக்கிறது

வீரபத்திரபிள்ளை பற்றிய தேடலில் அவன் சென்றடையும் இடம்,வீரபத்திரபிள்ளை ஏற்கனவே புகாரினை தேடி அடைந்த இடம் தான்,நாம் வாழ்க்கையை எதுவாக நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோமோ அதன் அடிப்படையே தவறு என்று நமக்கு தெரியவந்தால் அதன்பின் என்ன என்ற தேடல் தான் நம் எஞ்சிய வாழ்க்கை, இந்த நாவலின் மையமே இந்த வாழ்க்கையின் இரட்சிப்புக்கான தேடல்தான். புகாரின், தன் மனைவி அன்னாவின் மூலம் அதை கண்டடைகிறார், அருணாச்சலம் தன் மனைவி நாகம்மையின் மூலம் அதை அடைகிறார், ஆனால் வீரபத்திரபிள்ளையோ அந்த தேடலாகவே மறைந்துவிடுகிறார்.

இந்த நாவல், கம்யூனிசம் என்னும் சித்தாந்தம் தன்னை நிறுவிக்கொள்ளும் பொருட்டு உலக வரலாற்றில் விட்டுச் சென்ற தடயங்களை கண்டெடுக்கிறது,அதன் கொள்கைகளில் உள்ள அடிப்படை முரண்களை அலசி ஆராய்ந்து, நூறு வருடங்களில் அதன் சரிவை நியாயப்படுத்துகிறது,அது தின்று விழுங்கிய உயிர்களின் எண்ணிக்கையை வார்த்தைகளில் வரைந்து செல்கிறது,படிப்பவர்களுக்கு மனதில் ஒரு படிமத்தை விட்டுச்செல்கிறது.

இந்த நாவலின் சிறப்பம்சமாக அதன் கதை சொல்லும் விதத்தை சொல்லலாம்,உதாரணத்திற்கு அருணாசலத்தின் மூலம் கதை நகரத்தொடங்கி வீபத்திரபிள்ளையின் கடிதங்கள், கதைகள், நாடகங்கள் மூலம் வரலாற்றை மறுஉருவாக்கம் செய்கிறது,நாவலாசிரியர் புத்திசாலித்தனமாக கேரக்டர்களை உருவாக்கியிருக்கிறார்,சுந்தர ராமசாமி, லியோ தால்ஸ்த்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி,இன்னும் சிலரையும் வைத்து தன்னுடைய கற்பனைத் திறனுக்கு தீனி போட்டிருக்கிறார்.

நாவலில் ஓரிடத்தில் தால்ஸ்த்தோய் இறந்த இரயில் நிலையத்தில்தல்ஸ்தோய்க்கும், தாஸ்தாயெவ்ஸ்கிக்கும் இடையில் ஒரு உரையாடலை நிகழ்த்திக்காட்டியிருப்பார், புனிதர் என்ற பெயரில் தால்ஸ்தோயும், சூதாடி என்ற அடையாளத்துடன் தாஸ்தாயெவ்ஸ்கியும் அதில் வாழ்ந்திருப்பார்கள், இதை படிக்கும் எந்தவொரு வாசகனும் இந்த நாவலாசிரியரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடலாம்

அதேபோல நாவலின் இறுதி அத்தியாயத்தில் வரும் பைத்தியகார ஆஸ்பத்திரியில் நிகழும் வீரபத்திரபிள்ளையின் கைப்பிரதி நாடகங்கள் இன்னொரு உச்சம்,நாவலில் வரும் கெ.கெ.எம் உம்,அருணாச்சலமும் இறுதியில் ஆன்மீகத்தின் பாதையில் செல்வது அவரவருக்கான நியாயத்தை தருக்கப்பூர்வமாக நிறுவுகிறது.

நாவலின் குறையாக தெரிவது மிகையான சம்பாஷணைகள்தான், நிறைய பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், பல இடங்களில் சலிப்பூட்டும் உரையாடல்கள்,நாவலாசிரியரே கதைமாந்தரகளாகி பேசுகிறாரோ என்ற ஐய்யம் அடிக்கடி வருகிறது, ரஷ்யாவை பற்றி நாவல் பல இடங்களில் பேசுவதால்,ரஷ்ய இலக்கியங்களைப் போலவே கதைமாந்தர்கள் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நாவலாசிரியர் நினைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

தருக்கம் என்ற வார்த்தையிலிருந்து நாவல் தொடங்குவதால் இந்த சம்பாஷணைகள் ஒருவேளை நியாயப்படுத்தப்படலாம், எதுவாயினும் தமிழின் மகத்தான படைப்புகளில் ஒன்றாக இதை வைக்கலாம் என்று தோன்றுகிறது.

சு.கார்த்திகேயன்

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

v[email protected]

https://www.vishnupurampublications.com/

பின்தொடரும் நிழலின் குரலின் முன்னுரை

முந்தைய கட்டுரைஇரு கட்டுரைகள், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைத் தூய்மை செய்வது…