சிகண்டி- ஒரு தேவதையின் கதை 

சிகண்டி நாவல் வாங்க

ம. நவீனின் சிகண்டி நாவல் திருநங்கையரைப் பற்றிய முதன்மையான நாவல் என்றும் மலேசியாவின் இருண்ட நிழல் உலகத்தைப் பற்றி நுட்பமாக விவரிக்கும் நாவலென்றும்  அறிமுகக் கூட்டங்களில் கூறப்படுகிறது. ஆனால் இந்நாவல் ஒரு தேவதையின் கதை என எனக்குத் தோன்றுகிறது.

ம. நவீன் இந்நாவலை எழுதத் தொடங்கியபோது அவரது எண்ணம் திருநங்கைகளின் வாழ்வை மலேசிய நிழலுவகப் பிண்ணனியில் கூறுவதாகவே இருந்திருக்க வேண்டும். அதனாலேயே சிகண்டி எனப் பெயர் சூட்டியுள்ளார். ஆனால் நாவலை வாசித்து முடித்தவுடன் மனதில் பெரும் அலைக்கழிப்பை ஏற்படுத்துவது சராதான். வாசித்தபின் கடந்த ஒரு வாரமாக ஏன் ஏனென்று  என்னை உலுக்குகிறது சில கேள்விகள்.  தன்னையே இழந்துதான் பேரன்பை புரியவைக்க வேண்டுமா. அப்படி அவன் புரிந்துகொள்ளாமல் போனால்தான் என்ன. அத்தனை அன்பை கொடுக்குமளவிற்கு அவன் தகுதியென்ன.

நாவலின் சில அத்தியாயங்கள் வாசித்த பிறகு சரா எப்போது தோன்றுவாள் என்ற எதிர்பார்ப்புடனேயே வாசித்தேன். நாவல் காட்டும் கீழ்மையையும் இருண்மையையும் சராவின் இனிமையையும் அன்பையும் கொண்டே கடக்க முடிகிறது.

இந்நாவல் தீபனின் பார்வையில் சொல்லப்படுவதால் சராவின் உள்ளக் கிடக்கை ஆசிரியர் காட்டவில்லை. அறிமுக உரையில் ஆசிரியர் ஜெ. கூறியதுபோல தீபனின் எண்ணங்கள் சலிக்கச் சலிக்க சொல்லப்படுவதால் வாசகனுக்கு அவன் மீதான கவனம் சிதறி பெரிதாக சொல்லப்படாத சராவின் எண்ணவோட்டம் என்னவாயிருக்கும் என மனம் துடிக்கிறது. வாசகனுக்கு இப்படி தோன்றும் என நாவலாசிரியர் கண்டிப்பாக எதிர் பார்த்திருக்கமாட்டார். நண்பனின் தங்கை, கண்ணன், பூனை பூஸ் போல சராவும் தீபனின் மீட்பிற்கான ஒரு கருவி என்றே கருதியிருக்கிறார் என எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் சராவின் உலகத்தை குறைவாகவே காட்டியுள்ளார். ஆனால், அவரே எதிர்பாராத விதமாக தீபனின் கீழ்மைகளில் இருந்தும் நிழலுலக இருண்மைகளில் இருந்தும் திரண்டு எழும் அமுதமென சரா விளங்குகிறாள். இருண்மையிலிருந்து தோன்றினாலும் அதன் சுவடு ஒரு துளியுமின்றி.

முதலில் தீபன் சராவைக் கண்டபோது அவளின் அழகில் மயங்குகிறான். அவளின் காதலுக்குப் பாத்திரமாகி விரும்பவும் செய்கிறான். தான் திருநங்கையென அவளாக கூறும்வரை அவன் அறியவேயில்லை என நாவல் காட்டுகிறது. அப்படியாயின் எத்தனை தாய்மையோடும் பெண்மையோடும் விளங்கியிருப்பாள் என வியப்பு எழுகிறது.

தீபன்மேல் கொண்ட பெருங்காதலால் அல்லவா அவன் இவளை உதாசீனம் செய்ய முயலும்போது கடுஞ்சினம் கொள்கிறாள். சிறு பிள்ளையென அடம்பிடிக்கிறாள். அலைபேசியையும் தலைக்கவசத்தையும் உடைப்பது இவன்மேல் சரா கொண்ட காதலினால்தானே.

வீணாகப் போகும் பயன்படாத பொருட்களை வீட்டில் அழகுப் பொருளாக்குகிறாள் சரா. இது அவளின் கலையுணர்வை மட்டுமல்லாமல் எல்லாவற்றையுமே விளையாட்டுப் பொருளாகப் பார்க்கும், பாவிக்கும் குழந்தமையையும் காட்டுகிறது. சாலையில், தான் உடைத்த தலைக்கவசத்தை கொண்டுவந்து அதில் செடி வளர்ப்பது அவளின் தாய்மைக்  குணத்தின் மிகச் சிறந்த வெளிப்பாடாகும். எதற்காக வீம்பு பிடித்தோம் என மறந்து அடுத்த விளையாட்டுக்குள் செல்லும் பிள்ளைகளென    கண நேரத்தில் அவள் மறப்பது தன் கோபத்தை மட்டுமல்ல தீபனின் தவறையும்தான்.

சராவின் உடல் அழகை ஆசிரியர் வர்ணிக்கவேயில்லை. இதுவே வாசகனுக்கு அவளை கற்பனை செய்வதற்கான கட்டற்ற சுதந்திரத்தை தருகிறது. தேவதை போல என சிலமுறை  தீபனே கூறுகிறான். வாசிப்பவர் தன் மனதில் கொண்டுள்ள தேவதை உருவில் சராவை பொருத்தி கண்டுகொள்ளலாம். அங்கோர்வாட் அப்ஸரசாக தன்னைக் கூறிக் கொண்டு அந்நடனத்தை பகுஞ்சராவின் முன் ஆடுகிறாள். நடனத்தைப் பற்றிய நுட்பங்களை அறியாதவர்கள்கூட அந்நடனத்தை மனதில் உருவகித்துக் கொள்ளமுடியும். அப்போது மண்ணிலும் விண்ணிலும் நடமாடுவதாகவே  தீபன் உணர்கிறான் அவள்மீது ஒவ்வாமையோடு இருந்தபோதும். என் மனதில்,  விண்ணில் நடனமாடுபவள் போன்றே தோன்றுகிறாள்.

சராவின் உள்ளத்தைப் பற்றி தீபன் எண்ணவோ கவலைப்படவோ இல்லை. அவளுக்கும் ஒரு மனமுண்டு என்ற உணர்வே தெரியவில்லை. ஆனால் அவனின் நோக்கம் தெரிந்த பின்னும் சரா அவனுக்காக தன்னை முழுவதுமாய் இழக்கிறாள். தன்னை பலி கொடுத்து அவனுக்கு பேரன்பின் தரிசனத்தை காட்டுகிறாள். எப்போதும் இப்படித்தான் நிகழ்கிறது. தன் அன்பை நிரூபிக்க தன்னையே அழித்துக் கொள்வது.  தேவதைபோல என தீபன் முன்பு அறிந்தது அவள் உடலழகை மட்டுமே வைத்து. அவள் இறந்த பின்புதான் அறிகிறான் அவள் குணமும் தேவதையைப் போன்றதே என. அதன்பின் அறித்து என்னாகப்போகிறது. ஒருத்தனின் கீழ்மையை மாற்ற பரிசுத்தமான ஒருவர் இறக்கத்தான் வேண்டுமா. அவன்மேல் எத்தனை காதலிருந்தால் அவனின் கீழ்மையை அறிந்தபின்னும் அவன் திட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்வாள் என்று திகைப்பு ஏற்படுகிறது. ஆனால் என்ன செய்வது பல நேரங்களில் இப்படித்தான் நிகழ்கிறது. வேடிக்கை பார்ப்பதல்லாமல் நம்மால் இயற்றுவதற்கு என்னவுள்ளது.

அடர்ந்த முள் புதருக்குள்ளிருந்து மெல்ல தலை நீட்டி சிலிர்க்க வைக்கும் சிறு நீல மலர்போல வெளிப்படுகிறாள் சரா. நாவலின் கதைக்களமும் சொல்லவந்த வாழ்க்கையின் தீவிரமும்தான் சராவை தேவதையாக்குகிறது. அந்தத் தீவிரமும் இருண்மையும் குறைவாக இருந்திருந்தால் சராவின் பாத்திரம் இத்தனை துலக்கமாக வெளிப்பட்டிருக்காது என்றே மோன்றுகிறது. தமிழ் நாவல்களில் கூறப்பட்ட பெண் பாத்திரங்களின் முதன்மை வரிசையில் சராவும் இடம் பெறுவாள் என உறுதியாகக் கூறலாம்.

“சிகண்டி” நாவலின் மூலம்  சரா எனும்  தேவதையின் கதை தந்த ஆசிரியர் ம. நவீனுக்கு வாழ்த்துகள்.

கா. சிவா

முந்தைய கட்டுரைஇன்றைய சிந்தனைகளின் வயல்
அடுத்த கட்டுரைகண்மலர்தல்