இனிய ஜெயம்,
தேய்வழக்குகள் எவ்வாறு உருவாகின்றன என்று பார்த்தால், அந்த சொற்றொடர் முதலில் பயன்படுத்தப்படுகையில் அது ஏதோ ஒரு உணர்வைக் கடத்தும் ‘தனி மொழி’ யில் வெளிப்பாடு கொள்வதைக் காண முடிகிறது.
‘இழப்பதற்கு ஏதும் இல்லை நமது கைவிலங்குகள் தவிர, அடைவதற்கோ ஒரு பொன்னுலகே இருக்கிறது’ எனும் முழக்கம் முதல் நடிகர் சின்னி ஜெயந்த் உருவாக்கிய சில்ஃபான்ஸ் எனும் பொருளற்ற சொல் வரை, அது முதலில் வெளிப்படுகையில் அதன் தனி மொழி காரணமாகவே முந்தைய முழக்கம் உணர்வெழுச்சி கொடுப்பதாகவும் பிந்தைய சொல் ஒலி வழியே கிளுகிளுப்பு எழுப்புவதாகவும் இருக்கிறது.
அங்கிருந்து படி இறங்கி வெகு மக்கள் வழியே புழங்கு மொழி அல்லது பொது மொழிக்கு இவை சென்று பரவலாகும் போது முந்தைய முழக்கம் வெறும் உணர்ச்சி கிளர்த்தும் கும்பல் கோஷமாக மாறு கிறது. இன்னும் பரவப் பரவ எந்த உணர்ச்சியையும் கிளர்த்தாத வெறும் கும்பல் கோஷமாக எஞ்சி விடுகிறது. பிந்தைய சொல் அதன் கிளுகிளுப்பை இழக்கிறது.
இப்படி சாரமிழந்து போன உப்பைப் போல மாறிப்போன பல சொற்றொடர்கள் நம்மிடம் உண்டு. அப்படிப்பட்ட சொற்றொடர்களில் ஒன்று சு ரா வின் ‘எல்லோரும் சற்று நிம்மதியாக வாழும் காலம் ஒன்று வரும்’ எனும் தொடர்.
மனுஷ்ய புத்திரன் இதை அடிக்கடி பயன்படுத்துவார். அவர் வீட்டில் ஏதேனும் கொண்டாட்ட நிகழ்வு என்றாலும் சரி, எதிர் கட்சி நிகழ்த்தும் ஏதேனும் சமூக நீதிக்கு எதிரான கொடுமை என்றாலும் சரி, அது குறித்த பதிவின் இறுதியை இந்த சு ரா வின் பன்ச் குத்து வரிகள் கொண்டே முடிப்பார். (அவர் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால் இனி அவர் பதிவின் இறுதியில் இந்த பன்ச் குத்து இடம்பெறாது என நினைக்கிறேன்). இவர் போக இன்னும் பலப் பலர் இந்த சொற்றொடரை சொல்லி சொல்லி எழுதி, இதை சொன்னவர் சு ரா அல்ல அப்துல் கலாம் என்று எவரேனும் நாளை சொன்னால் அது ஏற்றுக்கொள்ளப்படும் நிலையே கிட்டத்தட்ட வந்து விட்டது.
இப்படி சாரமாற்றுப்போன உப்பை மீண்டும் அதன் சாரம் கண்டு அமைய வைத்த கவிதை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். கவிதையால் என்னென்ன மாயம் எல்லாம் நிகழ்த்த முடியும் என்பதன் மற்றொரு சாட்சியம்.
கவிதை எனும் இலக்கிய வடிவத்தின் பலம் இரண்டு தளங்களில் இருக்கிறது. ஒன்று கவிதை பிற புனைவு அல்புனைவு வடிவங்களின் அலகுகளில் ஒன்றை போல ‘எடுத்துச் சொல்ல’ வந்தது அல்ல. ‘எப்படிச் சொல்கிறது’ என்பதே அதன் அடிப்படைத் தொழில். இரண்டாவதாக அதன் உடனடித் தன்மை. இந்த உடனடித் தன்மையை காலம் இடத்துக்கு கட்டுப்படாத தனக்கே உரிய பிரத்யேக தனி மொழி கொண்டு வாசகனின் புலன்களை உணர்வை நேரடியாக தீண்டுவதன் வழியே கைக்கொள்ளுகிறது.
மேற்சொன்னவை எல்லாம் தொழில்நுட்பமாக அன்றி கலைக்கூராக ஒரு கவிதைக்குள் தொழிற்பட்டால் அந்த இலக்கிய வடிவம் என்ன மாயத்தை எல்லாம் நிகழ்த்தும் என்பதன் மற்றொரு சட்சியம்
சு ரா வின் மந்திரம் என்ற தலைப்பு கொண்ட இசையின் கீழ்கண்ட கவிதை.
மோனைகளின் மயக்கம் ஏதுமில்லை
ஒரு எதுகையும் இல்லை
அதன் சந்தமாவது
நம் நெஞ்சத்து ஏக்கம்
அதில் லயம் கொள்வது
குருட்டு நம்பிக்கைகளின் இதம்
மந்திரம் போல் இல்லாததொரு மந்திரம் அது
ஆயினும்
மிக உறுதியாக மந்திரம்
நம் கைவசம் உள்ள கடைசி மந்திரம்
மந்திரங்களுக்கு ஆற்றல் உண்டு
மந்திரங்களில் மாயம் உண்டு.
நண்பா,
உன் ஒரு கையை நெஞ்சில் வைத்துக் கொள்ள வேண்டுமா?
வைத்துக் கொள்!
அழுகை பீறிட்டு வருகிறதா?
அதை அடக்க முனையாதே!
நாம் ஒரே குரலில்
சேர்ந்து சொல்வோம்…
எல்லோரும்…
எல்லோரும்…
சற்று…
சற்று…
நிம்மதியாக….
நிம்மதியாக….
வாழும்…
வாழும்…
காலம் ஒன்று வரும்.
காலம் ஒன்று வரும்.
(இசை)
கவிதையின் முதல் வரிகள் சு ரா வின் சொற்கள் மீது கவியின் மதிப்பீடு. அதில் எதுகை மோனை இல்லை ஆகவே அது அரசியல் கோஷமாக கீழிறங்க வாய்ப்பே இல்லை.
அடுத்த வரிகள் அச்சொற்றொடருக்கு கவி அளிக்கும் பிறிதொரு மறு அர்த்தம்.
அது லட்சியவாத கனவின் பிரகடனம் இல்லை. வெறும் உதிரிகளின் நெஞ்சத்து ஏக்கம் மட்டுமே. அதில் உறைவது குருட்டு நம்பிக்கைகளின் இதம் மட்டுமே.
இந்த நிறைவேரா ஏக்கத்தின் குருட்டு நம்பிக்கை தரும் இதத்தின் சொற்களை மந்திரம் என மாற்றினால்?
மந்திரத்தால் மாயம் நிகழும்.
அந்த மாயத்தை நிகழ்த்தும் மந்திரமாக இச் சொற்கள் மாற என்ன செய்ய வேண்டும்
நண்பா
உன் நெஞ்சில் கைகளை வைத்துக்கொள்ளத் தோன்றினால் வைத்துக்கொள், பீறிட்டு அழுகை வருகிறதா அதை அடக்காதே.
நாம் ஒரே குரலில் சேர்ந்து சொல்வோம்…
இக் கவிதையின் இயங்கு வெளியில் இருந்து அக்கவியின் பிடியை மீறி நிற்கும் இந்த ‘நாம்’ சற்றே ‘பெரிய நாம்’, காக்கையும் குருவியையும் எங்கள் சாதியாக காணும் நாம், நீள் மலையையும் கடலையும் எங்கள் கூட்டமாக காணும் நாம்
எல்லோரும்…
எல்லோரும்…
சற்று…
சற்று…
நிம்மதியாக….
நிம்மதியாக….
வாழும்…
வாழும்…
காலம் ஒன்று வரும்.
காலம் ஒன்று வரும்.
பொது மொழியில் திருப்பத் திரும்ப சொல்லி சாரமிழந்து போன சொற்றொடரை, அதன் களிம்பிலிருந்து புடம் போட்டு மீட்டு தனது தனி மொழியால் மந்திரம் என மாற்றி அந்த மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதால் நிகழும் மாயத்தை நிகழ்த்திக் காட்டும் கவிதை. சு ரா வின் சொற்களை மீண்டும் அதன் ஆதார உணர்வுக்கு மீட்ட கவிதை.
இந்த ரசவாதத்தை நிகழ்த்தியமை கொண்டே இக் கவிதயை சமகால தமிழ்க் கவிதைப் பரப்பில் முக்கியமான கவிதை என்று சொல்லத் துணிவேன்.
கடலூர் சீனு