பின்தொடரும் நிழலின் குரல்- மறுபதிப்பு

விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும்  பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் பின்னட்டைக் குறிப்பு

1991 தமிழகச் சிந்தனையில் சில நெருக்கடிகள் உருவான ஆண்டு. அவ்வாண்டு சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ச்சியடைந்தது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். தொடர்ச்சியாக இலங்கை உள்நாட்டுப்போரில் சகோதரக்கொலைகள் குறித்த செய்திகள் வெளிவந்தன.வன்முறை சார்ந்த புரட்சியின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த சிந்தனையாளர்கள் பலர் ஆழ்ந்த உளச்சோர்வை அடைந்தனர். அது தொடர்ந்து தமிழக அரசியல் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அரசியல் சார்ந்து செயல்பட்ட பலர் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களாக மாறினர். பண்பாட்டரசியல் பற்றிய கேள்விகள் உருவாயின.

1991ல் கருக்கொண்டு 1997ல் எழுதி முடிக்கப்பட்ட பின்தொடரும் நிழலின் குரல் அந்த சிந்தனைக் கொந்தளிப்புகளை புனைவில் விரித்தெடுக்கிறது. கருத்தியலின் வன்முறையைப் பேசும் நாவல் இது. ஒரு கருத்தியலை நம்பி அதை தன் இலட்சியவாதமாகக் கொள்பவன் எப்படி அதனால் முழுமையாக அடிமைப்படுத்தப்படுகிறான் என்றும், எந்த அறத்தையும் மீறி எதையும் செய்பவனாக அவன் எப்படி ஆகிறான் என்பதையும் ஆராய்கிறது. கருத்தியலுக்கு அப்பாலுள்ள அழிவற்ற இலட்சியக் கனவுகள் என்ன என்று பார்க்கிறது.

தமிழின் அரசியல்நாவல்களில் முதன்மையானது என விமர்சகர் ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்ட இப்படைப்பு பல்வேறு உச்சகட்ட புனைவுத்தருணங்கள் வழியாக ஓரு தீவிர வாசிப்பனுபவத்தை அளிப்பது.

முந்தைய கட்டுரைதேவியும் சில கதைகளும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகருணையும் உரிமையும்