மிளகு- வாசிப்பின் வழி…

அன்புள்ள ஜெ

இரா முருகனின் மிளகு பற்றி எழுதியிருந்ததற்கு நன்றி. அவருடைய இணையதளத்தில் அந்நாவல் தொடராக வெளிவந்த ராமோஜியம் முதலிய நாவல்களை வாசித்துள்ளேன். ஆனால் அந்த இணையதளம் மிகமோசமாக வடிவமைக்கப்பட்டது ஆகவே எவற்றையும் முழுமையாக படிக்க முடியவில்லை. (இத்தனைக்கும் இரா முருகன் ஒரு கணிப்பொறி நிபுணர்). சொல்வனம் இணையதளத்தில் கொஞ்சம் வாசித்தேன். வாசித்தவரை என் அனுபவம் என்பது சுவாரசியம். அவ்வப்போது புன்னகையும் சிரிப்புமாக வாசிக்க முடிந்தது. அதுதான் அந்நாவல் முக்கியமானது என நான் நினைக்கக் காரணம்.

ஆனால் ஒட்டுமொத்தமாக அந்நாவலை புரிந்துகொள்ள எனக்குச் சில சிக்கல்கள் இருந்தன. அந்நாவல் விரைவாக படங்களை காட்டிக்கொண்டே போவதுபோல் இருந்தது. அதை எப்படிப் புரிந்துகொள்வது? விமர்சனமாக அல்ல. ஒரு வழிகாட்டியாக ஒரு குறிப்பு எழுதலாமே. நீங்கள் எழுதிய சிறு குறிப்பே எனக்கு ஒரு வாசகனாக மிகமிக உதவியானதாக இருந்தது. மேலும் ஒரு சிறு விளக்கமே நான் கேட்பது

ஆர்.ராகவ்

அன்புள்ள ராகவ்,

இரா முருகனின் இணையப்பக்கம்தான் தமிழ் இணையப்பக்கங்களிலேயே தாறுமாறானது. அவர்கள் கணிப்பொறியில் புழங்கிப்புழங்கி எதையும் பொருட்படுத்தாமலாகிவிடுகிறார்கள்.

மிளகு தமிழ் நாவல் இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. அப்படியெல்லாம் எளிதாக நான் சொல்லிவிடமாட்டேன். சொல்வதற்கு முன் நானே என் பிரேக்கில் காலை நன்றாக அழுத்திக்கொள்வேன்.அந்நாவலை நான் விரிவாக இன்னும் வாசிக்கவேண்டும்  கையில் இருந்த நாவலை எவரோ கொண்டுசென்றுவிட்டார்கள். ஒன்பதே நாள்தான் கையில் இருந்தது.

ஒரு நூலை அதன் வடிவத்தை உணர்ந்து வாசிக்க அது நம் கையில் அச்சுவடிவில் இருக்கவேண்டும். அதன் அத்தியாயக் கட்டமைப்பு, பகுப்புகள், விகிதங்கள் எல்லாம் ஒரே பார்வையில் நம்முள் வந்துவிடுகின்றன.

இரா.முருகனின் பெரிய சிக்கல், அவர் இளமையிலேயே சுஜாதாவின் நடைக்குள் சென்றுவிழுந்தது. தமிழில் இலக்கியப்பார்வையில் சுஜாதாவின் நடை மோசமான ஒன்று. அதில் ஆசிரியரின் நையாண்டிப் பார்வை இருந்துகொண்டே இருக்கிறது. ஒருவகை சமத்காரப் பேச்சுதான் அது. பலவகையான வித்தாரங்களும் தந்திரங்களும் கொண்டது. அந்த வகையான பிரக்ஞைபூர்வமான வித்தைகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் இல்லை

நம்மிடம் ஒருவர் எப்போதுமே ஜோக் அடித்து பேசினால் சட்டென்று ஒரு சலிப்பை அடைவோம். ஏனென்றால் ஜோக் மேலோட்டமானது. அது உணர்வுகளை, கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது. அந்தச் சலிப்பு சுஜாதாவில் நல்ல வாசகனுக்குச் சீக்கிரமே வந்துவிடும்.

சுஜாதாவின் நடை எல்லா எழுத்திலும் ஒரே வகையானது.  உரையாடல்கள் கூட ஒரே வகையானவை. அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஒரே மொழிநடை. அதுவும் இலக்கியத்துக்கு எதிரானது. இலக்கியம் மொழிநடையின் வண்ணபேதங்களாலானது.

இரா முருகன் சுஜாதாவில் இருந்து வெளிவர மிகவும் பிந்திவிட்டது. அதோடு சுஜாதா முத்திரை விழுந்தமையால் அவரை இலக்கியத்தில் கவனிக்காமலும் விட்டுவிட்டார்கள். அவர் வெளியேறி வந்து எழுதிய முதல் நாவல் அரசூர் வம்சம். முழுக்க தன் நடையை கூறுமுறையை கண்டுகொண்ட நாவல் மிளகு.

அரசூர் வம்சம் முதல் மிளகு வரையிலான நாவல்களில் இரண்டு விஷயங்கள் முதன்மையாகின்றன. ஒன்று, வரலாறு. இன்னொன்று வெவ்வேறு வகையான மொழிநடை. இரண்டுமே சுஜாதாவிடம் இல்லாதவை, சுஜாதா பாணி நடையால் எய்த முடியாதவை. அரசூர் வம்சத்தில் சுஜாதா நடையின் கலைக்குறைபாடு இருந்தது. மிளகு அதை முழுமையாக வென்றிருக்கிறது.

இன்று இரா.முருகனின் நடையில் ஆசிரியர் அடிக்கும் ‘ஜோக்கு’கள் இல்லை. அவை ஒருவகையான அப்பாவித்தனம் அல்லது கட்டற்றதனத்துடன் வெவ்வேறு கதைச்சூழல்கள் மற்றும் கதாபாத்திரங்களை சார்ந்தே உருவாகியிருக்கின்றன. தமிழில் மிக அரிதாக உருவாகும் ஒரு கலவையான மொழிச்சுழி என இந்நாவலைச் சொல்லமுடியும்

இந்நாவலை வாசிக்க சில முன்புரிதல்கள் தேவை.

ஒன்று, வரலாறு பற்றிய நம் உளநிலையை நாம் கவனிக்கவேண்டும். நாம் ஒரு வரலாற்றை அறிந்திருக்கிறோம். அது அடுக்கப்பட்ட வரலாறு. சீரான தர்க்க ஒழுங்கும் காலவரிசையும் கொண்டது. இந்நாவல் அதை கலைக்கிறது. பல்வேறு சாமானியர்கள், சரித்திரபுருஷர்கள் வழியாக அதை கலைத்து விரித்து வெவ்வேறு வண்ணம் காட்டுகிறது. இதிலுள்ள வரலாறு என்பது ‘உண்மையான’ வரலாறு அல்ல. கலைக்கப்பட்ட வரலாற்றுத் துண்டுச் சித்திரங்கள்.

ஏன் கலைக்கவேண்டும் என்றால் அது நவீன இலக்கியத்தின் வழிகளில் ஒன்று. அது தன்னை வரலாற்றுக்கு எதிரான அல்லது மாற்றான வரலாறு என எண்ணிக்கொள்கிறது. வரலாற்றெழுத்தில் ஓர் அதிகாரம் அல்லது ஆதிக்கம் உள்ளது என உருவகித்து அதை கலைத்துப் பார்க்கிறது. அதை கேலிக்குரியதாக பொருளற்றதாகக்கூட ஆக்கிக் காட்டுகிறது. இது ஒருவகை சிதைவு வரலாறு, உடைந்த கண்ணாடிவழியாக பார்ப்பதுபோன்றது என்னும் புரிதல் நமக்குத்தேவை.

இரண்டு, இந்நாவலின் கதாபாத்திரங்கள் ‘யதார்த்த’ மனிதர்கள் அல்ல. அவர்கள் கார்ட்டூன்கள். கேலிச்சித்திரங்கள். ஆகவே அவர்கள் உள்முரண்பாடுகள், உணர்வுநிலைகள் ஆகியவற்றுடன் காட்டப்படுவதில்லை. அவர்களின் குணச்சித்திரம் முழுமையாக வரையறை செய்யப்பட்டிருப்பதில்லை. அவை விரைவான கோடுகளால் வரையப்பட்டவை. ஏதேனும் ஒரு அம்சம் மேலோங்கியவை. கேலிச்சித்திரமே அப்படித்தான். ராகுல்காந்தி என்றால் மூக்கு ஏந்திநீண்டிருக்கும். இந்த கோணத்தில்தான் இக்கதாபாத்திரங்களை அணுகவேண்டும்.

இந்தவகையான கேலிச்சித்திரக் கதாபாத்திரத் தன்மைக்கு முன்னுதாரணமான நாவல் ஜே.ஜே.சில குறிப்புகள். ஆனால் அதில் இல்லாத மிகவிரிவான வரலாற்றுக் களம் இந்நாவலில் உள்ளதனால் இதன் கார்ட்டூன் மனிதர்கள் ஏராளமான வண்ணபேதங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மூன்று,  இந்நாவலின் முதன்மை அழகு இதிலுள்ள   பல வகையான மொழிநடை. மொழிநடைகளாலான ஒரு கலைடாஸ்கோப் இந்நாவல். வெவ்வேறு நூற்றாண்டுகளின் பேச்சுமொழிகள், எழுத்துமொழிகள் கலந்து வருகின்றன.

நாம் வணிக நாவல்களில் காண்பது சீரான ஒழுக்குள்ள ஒரு பொதுநடையை. அது நமக்கு தடையை அளிப்பதில்லை. இந்தவகையான மொழிநடை நம்மை அந்தந்த வரிகளில் தடை செய்து நிலைக்க வைத்து கூர்ந்து வாசிக்கச் செய்கிறது. இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இந்த தடை. அதுவே கூர்வாசிப்புக்கு  இடமளித்து புனைவை வாசகனுக்குள் கொண்டுசெல்கிறது

அந்த தடையை நல்ல இலக்கியம் இரண்டு வகைகளில் உருவாக்கும். அரிய வாழ்க்கைசார்ந்த அவதானிப்புகள் வழியாக நம்மை யோசிக்கவைத்து நிலைக்க வைக்கும். மொழிநடையின் உள்ளடுக்குகள் வழியாக தயங்க வைக்கும். சிற்றிதழ் எழுத்தாளர்கள் செயற்கையான சுற்றுநடை வழியாக அந்த தடையை உருவாக்க முயல்கிறார்கள்.

இரா.முருகன் மொழிநடை வழியாக அதை உருவாக்குகிறார். அதற்கு விரிவான வரலாற்று வாசிப்புடன் மொழித்திறனும் தேவை. அது அவரிடமுள்ளது. குமிழியிட்டுக்கொண்டே இருக்கும் இந்த மொழிநடைக்கு கொஞ்சம் கவனத்தை நாம் அளிக்கவேண்டும். அந்த மொழிநடையின் மூலநடைகள் கொஞ்சம் தெரிந்திருந்தால் நல்லது. அல்லது கற்பனைசெய்துகொள்ளவேண்டும்.

நான்கு, இந்நாவல் சமகாலத்தில் இருந்து பின்னகர்ந்து வரலாற்றுக்குச் செல்கிறது. கெட்டகனவு போல வரலாற்றின் எந்தப் பகுதியிலும் நுழைந்துவிடுகிறது. ஏன்? ஏனென்றால் அப்படித்தான் வரலாறு நம்மை வந்தடைகிறது. நீங்கள் திருச்சியில் ஆபீஸ் செல்வதற்குள் வழியில் நாலைந்து வரலாற்றுப்புள்ளிகளில் நுழைந்து வெளியேறிருப்பீர்கள். சோழர்காலக் கோயில்கள், நாயக்கர் காலக் கோட்டைகள். இந்த வரலாற்று நெசவு எப்படி நம் பிரக்ஞையை உருவாக்கியிருக்கிறது என்றுதான் இந்நாவல் ஆராய்கிறது.

வாசகன் ஓர் உழைப்பை அளித்து வாசிப்பதே நல்ல இலக்கியம். ஆனால் அந்த உழைப்பும் களிப்பூட்டுவதாக இருக்கவேண்டும். மிளகு அப்படிப்பட்ட நாவல்.

ஜெ

முந்தைய கட்டுரைஇதற்குப் பிறகு கவிதை சாத்தியமா – உக்ரைன் கவிகளின் குரல்கள் -மொழிபெயர்ப்பு லீனா மணிமேகலை 
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – புதிய பதிப்பு