இதற்குப் பிறகு கவிதை சாத்தியமா – உக்ரைன் கவிகளின் குரல்கள் -மொழிபெயர்ப்பு லீனா மணிமேகலை 

லீனா மணிமேகலை

 

போரிஸ் ஹுயூமன்யுக் (BORYS HUMENYUK)

எங்கள் படைப்பிரிவின் தளபதி ஒரு விசித்திரமான பிறவி
போர்க்களத்தின் கிழக்கில் சூரியன் உதிக்கும் போதெல்லாம்
தொலைவில் இருக்கும் சோதனைச்சாவடியில்
யாரோ டயரை எரிப்பதாக சொல்லிக் கொண்டிருப்பான்
அவனுக்கு பிரங்கியின் பீப்பாய் தான் நிலவு
கடலென்றால் உருக்கிய ஈயம்
கண்ணீரும் ரத்தமும் மூத்திரமும் கலந்தோடும்போது
ஏன் உப்பு கரிக்காது ?

இன்று
அவனின் விநோதத்தை அவனே விஞ்சினான்
அதிகாலையில் முகாமிற்குள் நுழைந்து
போர் நிறுத்தத்தை அறிவித்தான்
தொலைக்காட்சியில்
இன்றோடு போர் நிறுத்தமென
செய்தி வாசித்ததாக சொன்னான்

போர்முனையில் இருக்கும் எங்களுக்கான  பாடம்
மனிதர்களில் இரண்டு வகை
மனிதர்கள் மற்றும் தொலைக்காட்சி மனிதர்கள்
நாங்கள் தொலைக்காட்சி மனிதர்களை வெறுக்கிறோம்
அவர்கள் மிக மோசமான நடிகர்கள்
தொலைக்காட்சியில் கார்ட்டூன் மட்டுமே காட்டப்பட வேண்டும்
அவற்றில் தான் கொஞ்சம் உண்மையிருப்பதாக படுகிறது
மிருகங்களைக் காட்டும் நிகழ்ச்சிகளும் சுவாரஸ்யமானவை

நாங்கள் ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும்
தயார் செய்துக் கொண்டிருக்கும் போது
எங்கள் விசித்திர தளபதி கொண்டு வந்த
செய்தி அதிர்ச்சியளித்தது

இயந்திரத் துப்பாக்கியின் அரைக்கச்சு
கிரமனட்ஸ் வீரர் வாசில்  மற்றும்
போயோற்கோவை சேர்ந்த துப்பாக்கி ஏற்றி சாஷ்கோவின்
கைகளில் உறைந்தது
பின் அது ஒரு ஆதி மிருகத்தின் முதுகைப் போல முறுக்கியது
லுஹான்ஸ்கிலிருந்து வந்திருந்த எரிகுண்டாளர்  மேக்ஸின்
பையில் இருந்து எட்டிப் பார்த்த கைக்குண்டுகள்
பயந்து போன பூனைக் குட்டிகளென  உள்ளொடுங்கின

நீங்கள் எப்போதாவது ஒரு அதிவேக ரயிலை
தண்டவாளத்தில் ஒரு பைசாவை சொருகி நிறுத்த முயன்றிருக்கிறீர்களா
நீங்கள் என்றாவது சூரியனைப் பார்த்து
எனக்கு செய்ய நிறைய இருக்கிறது
கொஞ்சம் நகராமல் சும்மா இரு என சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா
அல்லது பிரசவ வலியில் இருக்கும் பெண்ணிடம்
பனி பொத்துக் கொண்டு பெய்கிறது
மருத்துவச்சியால் வர இயலவில்லை
ஒரு மூன்று நாட்கள் தாழ பெத்துக்கொள் எனக் கெஞ்சிக்கேட்டிருக்கிறீர்களா

குழந்தை பிறந்தாக வேண்டும்
ரயில் இலக்கை அடைந்தாக வேண்டும்
எரியும் டையர் போல சூரியன் உருண்டாக வேண்டும்
அது போனதும் பீரங்கி பீப்பாயாக நிலவு அதன் இடத்தை பிடித்தாக வேண்டும்
மேலும் இரவு சாம்பலாக உதிர்ந்தாக வேண்டும்

போர் நிறுத்தத்தின் முதல் நாளன்று
போயோற்கோவை சேர்ந்த துப்பாக்கி ஏற்றி சாஷ்கோவை
லுஹான்ஸ்கிலிருந்து வந்திருந்த எரிகுண்டாளர்  மேக்ஸை
நாங்கள் இழந்தோம்
போர்க்களத்தின் எதிர்ப்பக்கத்தில் இருந்து பாய்ந்த தோட்டாக்கள்
வெறிபிடித்த மலைக்குளவிகளைப்  போல
சாஷ்கோவை கழுத்திலும்
மேக்ஸை இதயத்திலும்
துளைத்தன
ஒரு வேளை மறுபுறத்தில்
எங்களுக்கு வாய்த்த விசித்திரமான தளபதி போலொருவர் இல்லாதிருக்கலாம்
அல்லது அவர் வேறொரு தொலைக்காட்சி சேனலை பார்ப்பவராய் இருக்கலாம்

(உக்ரைன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் -ஒக்ஸானா மாக்சிம்சுக், மேக்ஸ் ரோஸோசின்ஸ்கி )

அனஸ்தேசியா அஃபனசீவா (ANASTASIA AFANSIEVA)

இதற்குப் பிறகு கவிதை சாத்தியமா
யாசினுவதா, ஹார்லிவகா, சாவூர் மொஹைலா, நோவோஜாவாசிற்குப்
பிறகு
கிராஸ்நியி லுச், டொனிட்ஸ்க், லுஹான்ஸ்கிற்குப்
பிறகு
இறந்தவர்களின் உடலை வரிசைப்படுத்தி எண்களிடுகிறார்கள்
இன்னும் பசித்தவர்கள் உறுமியபடி உலா வருகிறார்கள்
நீண்ட பிறகு
கவிதை மனம்பிறழ்ந்து சலசலக்கிறது
உதடுகள் இருளைப் புணர்கின்றன
பாதி விழிப்பில்
நான் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இதற்குப் பிறகு கவிதை சாத்தியமா
வரலாறு பரபரக்கும் இந்தக் கணம்
அடுத்த அடியெடுத்து வைக்கும் போது
ஒவ்வொரு இதயமும் அதை எதிரொலிக்காதா
வேறெதுவும்  பேசுவதற்கில்லை
பேசவும் ஏலவில்லை
இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
எல்லா நம்பிக்கைகளும் முடிவுக்கு வருகின்றன

(உக்ரைன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள்  –  கெவின் வான், மரியா கோடிம்ஸ்கி )

கேத்ரீனா கேலிட்கோ (KETRYNA KALYTKO)

நீங்கள் அந்த மனிதனோடு மட்டுமல்ல
அவனுடைய வாழ்க்கையோடும் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
சிலவேளை அது உங்களை எழுப்பி
உங்கள் கரங்களில் இருந்து அவனைப்  பறித்துக் கொள்கிறது
பாருங்கள்
போர் உங்களுக்கே தெரியாமல்
இருளில் தனியாயிருக்க பயந்துக் கொள்ளும்
ஒரு குழந்தை போல
உங்களருகில் படுத்துக் கொள்கிறது

போர் எண்களால் ஆனதென
அவர் கூறுகிறார்
எப்படியென பார்ப்போம்
ஒரு எலும்பு மூட்டைக்குள் இரண்டு உறவினர்கள்
ஆயிரத்து முந்நூற்று தொண்ணூற்றைந்து
நாட்கள் முற்றுகை
வெண்ணெய், உறைந்த உணவு, தூள் பால், மூன்று சோப்புகளடங்கிய
நிவாரணப் பொட்டலங்கள்

அவர் கூறுகிறார்
நான்கு ஆயுதமேந்திய மனிதர்கள்
உங்களை தேடி வந்து உத்தரவுகளை காண்பித்து
இரவுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்
நகரத்தை குறுக்கு வெட்டாக நீங்கள் கடந்து செல்லும்போது
உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறப்பதை இரண்டு முறை கேட்கிறீர்கள்

அவர் கூறுகிறார்
ராணுவக் குடியிருப்பிலிருந்து  ஐந்து தடவை
உங்களை நாற்பத்திமூன்று பேர் அழுகி கிடைக்கும் பள்ளத்திற்கு மாற்றுகிறார்கள்
ஒவ்வொரு தடவையும் நினைக்கிறீர்கள்
இந்த தடவையாவது இறந்துவிட வேண்டும்
இதெல்லாமும் ஒரு மோசமான நகைச்சுவையென கடவுளிடம் சொல்ல வேண்டும்
ஆனால் அவர்கள் உங்கள் முகத்தை சாக்கடையில் இறக்குகிறார்கள்
அவகாசமெடுத்து தலையில் துப்பாக்கியை அழுத்துகிறார்கள்
அந்த தருணத்திலிருந்து கனவுகளை வெறுக்கிறீர்கள்
இந்த வகையான நினைவுகள் ஒரு மனிதனுக்குப் பொருத்தமில்லாதவையென கூவுகிறீர்கள்

அவர் கூறுகிறார்
நீங்கள் காடுகளிடையே ஓடுகிறீர்கள்
அவர்கள் முதுகில் சுடுகிறார்கள்
ஒரு தோட்டா உங்கள் தொடையில் தாக்குகிறது
ஆனால்
உங்கள் முகத்தில் அப்பியிருக்கும் அழுக்கை மட்டுமே
நீங்கள் உணர்கிறீர்கள்
அப்போது இலையற்ற மரமென
வலி வளர்ந்து வளர்ந்து
உங்கள் நெஞ்சில் துடிக்கிறது

அவர் கூறுவதையெல்லாம் கேட்டு
நான் என்ன செய்ய முடியும்
அவர் முகத்தில் இருக்கும் அழுக்கை துடைத்துக் கொண்டே இருக்கிறேன்
அவர் தூங்கும் போதும்
தொலைவில் இருக்கும் போதும்

(உக்ரைன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் -ஒலெனா ஜென்னிங்க்ஸ், ஒக்ஸானா லுட்சியானா)

Miesiąc Spotkań Autorskich 2015

செர்ஹி சாதன் (SERHIY ZHADAN)

போரின் மூன்றாம் ஆண்டு

அவனை சென்ற குளிர்காலத்தில் புதைத்தார்கள்
பனி பெய்யவில்லை, மழை தான்
ஒரு துரிதமான இறுதிச்சடங்கு
செய்ய வேண்டிய வேறு வேலைகள்
எல்லோருக்கும் இருந்தன
இந்தப் போரில் அவன் யார் பக்கம் போரிட்டான், நான் கேட்கிறேன்
இதென்ன கேள்வி என்கிறார்கள்
ஏதோ ஒரு பக்கம், யாரறிவார்
என்ன வித்தியாசம், ஒன்றும் பெரிதாய் இல்லை
இதற்கு சரியான பதில் இறந்தவன் தான் சொல்ல முடியும்
ஆனால் அவனால் முடியுமா
அவனது சடலத்தில்  தலையைக் காணவில்லை

போரின் மூன்றாம் ஆண்டு
பாலங்களை திருத்தியிருந்தார்கள்
அவனைப் பற்றி  எனக்கு நிறைய தெரியும்
அவனுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்திருந்தது
அவனுடைய சகோதரியை அறிவேன், அவளை நேசித்தேன்
அவனுடைய அச்சங்களையம் அவை எங்கிருந்து வந்தன என்பதையும் நானறிவேன்
அந்தக் குளிர்காலத்தில் யாரை சந்தித்தான்  என்ன பேசினான்  எனத் தெரியும்
சாம்பலும் நட்சத்திர ஒளியுமாய் மூன்று வருடங்கள்
மற்றொரு பள்ளிக்காக விளையாடினான் என்பது கூட நினைவிருக்கிறது
இப்போது அதனால் என்ன
இந்தப் போரில் அவன் யார் பக்கம் போரிட்டான்?

(உக்ரைன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் -வால்சினா மோர்ட்)

மொழியாக்கம் லீனா மணிமேகலை

முந்தைய கட்டுரைஇரு இலக்கியக்கொள்கை நூல்கள்
அடுத்த கட்டுரைமிளகு- வாசிப்பின் வழி…