சிகண்டி ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன்,

நவீனின் சிகண்டி நாவல் அறிமுக உரையினைக் கேட்டேன். ஒரு மணி நேரத்துக்கும் குறையாத உரை. சிகண்டியைக் கொண்டு ஒரு நாவல் எப்படி அமைய வேண்டும் என்பதான தங்கள் பார்வையைப் பகிர்ந்திருந்தீர்கள். நீங்கள் நாவலுக்கான கோட்பாட்டை வரையறை செய்ய முற்படவில்லை என்பதை நான் அறிவேன். வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு நாவல் எப்படி அமையலாம் என்பது பற்றிய உங்கள் தீர்க்கமான பார்வையை, இளம்படைப்பாளிகள் ‘அரசியலாகக்’ கடந்துவிடாமல் இருக்கக் கடவது.

இலக்கியப் படைப்புகள் பற்றிப் பேசும்போது ஆன்மீகம் எனும் சொல்லைக் கொண்டு வருகிறீர்கள். அச்சொல்லைக் கொண்டுதான் உங்களை வலதுசாரி என்று நிறுவுகின்றனர் நவீனஜீவிகள். சமீபத்தில் ஒரு நண்பரிடம் உங்களைப் பற்றிய பேச்சு வந்தது. நமது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வரக்கூடிய, தங்களை ஆசானாகப் போற்றுகிற வாசகர் அவர். “ஆசான் வலதுசாரி” என அடித்துச் சொன்னார். நான் அதை மறுத்து சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். “இப்ப என்ன சொல்றீங்க.. அவர் வலதுசாரியா, இடதுசாரியா.. தெளிவா சொல்லுங்க!” என்றார். “அதை நான் சொல்ல முடியாது. ஜெ-தான் சொல்ல வேண்டும். என் பார்வையில் அவர் வலதும் இல்லை, இடதும் இல்லை. ஒரு நல்ல இலக்கிய ஆசிரியர்!” என்றேன். அந்நண்பர், “நீங்க சொல்றது புதுசா இருக்கு.. ஆனா யோசிக்கற மாதிரியும் இருக்கு” என்றார். ”அவரோட படைப்புகளை நிதானமா வாசிச்சுட்டு வர்றவங்களுக்கு அது புரியும். இந்தியாவை விட்டுக்கொடுக்காம பேசறத வைச்சு அவரை வலதுசாரின்னு நீங்க முடிவு பண்ணிருக்கீங்க.. பரவாயில்லை, மறுபடியும் அவரோட இந்துத்துவா பற்றிய பதிவுகளைக் கவனமா படிச்சுப் பாருங்க. கூடுதலா பிற மதங்கள் பற்றி அவர் சொல்லி இருக்கறதையும் பொறுமையா படிச்சு பாருங்க!” எனக் கேட்டுக் கொண்டேன்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்ச்சமூகம் அறிவு வளர்ச்சியில் அதிகம் மேம்பட்டிருக்கிறது, சந்தேகம் இல்லை. ஆனால் அவ்வறிவு எப்படியானது என்பதே மறுவிசாரிப்புக்கு உரியது. சமூகம் என்பது அறிவாளிகள் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பது கனவாக இருக்கலாம்; அதற்கான பிரச்சாரங்களையும் மேற்கொள்ளலாம். அதில் குறையில்லை. ஆனால், அறிவாளிகள் மட்டுமே சமூகத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது போன்று.. எல்லாவற்றையும் அறிவுக்குட்படுத்திக் கூறுபோடும் மனநிலையை என்னவென்று சொல்வது, எங்ஙனம் எதிர்கொள்வது? அம்மனநிலையில்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் அறிவுச் செயல்பாடு அரங்கேறி இருக்கிறது.

ஒரு கலைப்படைப்பை அறிவுக்கருவிகள் வழியாக அறுத்து ஆராய்ந்து அணுகவேண்டும் என்றே நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒத்து ஊதுவதாகவே ’அடையாள நடைமுறை அரசியலும்’ களத்தில் நிலவுகிறது. பொதுச்சமூகத்தில், இலக்கியம் என்றால் அண்ணாவும் வைரமுத்துவுமே முந்தி நிற்கின்றனர். தீவிர வாசகர் என்றால் மேத்தா, அறிவுமதி என்பார். அதிதீவிர வாசகர் என்றால் பாலகுமாரன் என்பார். இப்படித்தான் நம் சமூகப்பொதுப்புத்தி உருவாகி வந்திருக்கிறது. அரசியல் தளத்தில் மட்டுமல்ல.. இலக்கியத்தளத்திலும் ‘அடையாள அரசியல்’ வெகுவாக நுழைந்திருக்கிறது. ஆளும் திமுக அரசு, எழுத்தாளர்கள் என சமீபமாய் விருதுகள் வழங்கி இருக்கும் ஆளுமைகளே, நாளைய சமூகம் வரலாற்றில் இடம்பெறப் போகும் இலக்கியகர்த்தாக்கள். நினைக்கவே திகிலாய் இருக்கிறது. எனது மாணவப்பருவத்தில் திராவிட தமிழ்த்தேசிய அடையாளம் கொண்ட படைப்புகளையும் ஆளுமைகளையுமே இலக்கியவாதிகளாக நம்ப வைத்திருந்தனர். போனால் போகட்டும் என்பது போல, அசோகமித்திரனையும் வல்லிக்கண்ணனையும் இடம்பெறச் செய்தனர். சில பத்து ஆண்டுகளைக் கடந்த பின்னும் அதுதான் நிலைமை.

தங்கள் கேள்விகளுக்கான பதில்களை விக்கிபீடியாவில் பெற்றுவிடலாம் எனும்படியான ’நுண்ணறிவுத்தலைமுறை’ ஒன்று சமீபமாய் உருவாகி வந்திருக்கிறது. தனது பெரும்பான்மையான நேரத்தைக் கைபேசியிலேயே செலவழிக்கும் அத்தலைமுறைக்கு கதை, கவிதை என்பது நான்கு வரிகளுக்குள் இருக்க வேண்டும். பத்து வரிகள் இருந்து விட்டால் பயந்து விடுவார்கள். எதைச் சொல்வதானாலும் அவர்களுக்கு இரண்டு வரிகளில் சொல்லியாக வேண்டும். அவர்களிடம், ”திமுக அரசு எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்த தகவல் தெரியுமா?” என்று கேட்டால், ”திமுகவா.. அப்படின்னா?” என்பார்கள். சமீபத்திய நீயா நானா ஒன்றில், ”தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் யார்?” என ஒரு கேள்வியை கோபிநாத் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் ஒரு இளைஞர் திணறிவிட்டார். இதுதான் இன்றைய நிலை. ஒருபுறம், அறிவுக்கருவிகள் கொண்டு கலைப்படைப்பைக் குதறி ஆராயும் அறிவுஜீவிகள்; மறுபுறம், இலக்கியம் என்றாலே ‘சாய்ஸ்ல விட்டுடலாம்’ என்பது மாதிரியான மின்னணுத் தலைமுறை. எப்படி வந்து சிக்கி இருக்கிறோம், பாருங்கள்.

ஆன்மீகத்துக்குத் திரும்பலாம். ஒரு படைப்பின் ஆன்மீகம் என நீங்கள் சொல்ல வருவது அதன் உயிர்த்தன்மையை. மதம் சொல்லும் ஆன்மீகம் அன்று அல்லது மதம் சொல்வதாய்ப் பரப்பப்படும் ஆன்மீகமும் அன்று. ஒரு வாழ்க்கை படைப்பாக மாறுவது அதன் ஜீவனால்தான். நினைவுகள், சம்பவங்கள் போன்றவற்றின் தொகுப்பை நாம் படைப்பாகச் சொல்ல முடியாது. வேண்டுமானால், சம்பவங்கள் அல்லது அனுபவங்கள் எனச் சொல்லலாம். நாளிதழ் பாணிக்கு மாற்றினால் அவை செய்திகளாகவும் ஆகலாம். அவை படைப்பாக மாறுவதற்கு அவற்றில் ஒருவித இரசவாதம் நிகழ வேண்டும்(அதை நாம் நிகழ்த்த முடியாது). அதைத்தான் உயிர் அல்லது ஜீவன் என்கிறோம். நீங்கள் அதை இன்னும் நுணுக்கமாய் ஆன்மீகம் என்கிறீர்கள். அதை அறிவுகொண்டு ஒருவரில் நிறுவிவிட முடியாது. அது ஒரு மேஜிக். நிகழ்வதற்கு முன்னும் பின்னும் அது சாதாரணம். நிகழும்போதே அது மேஜிக்.

ஒரு படைப்பை வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவன் திகைக்கும் கணத்தை ஆன்மீகம் எனச் சொல்ல மாட்டேன். அதை எழுதிக் கொண்டிருக்கும்போது எழுத்தாளனே திகைக்கும்படியான கணங்கள் அமையும். அப்படியான தருணங்களே ஆன்மீகம். எழுத்தாளனின் சிந்தனைப்பிடியை மீறி வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும். அவை அதற்கு முன்கணம் வரை அவன் நினைவில் இல்லாததாக இருக்கும்.

கதை, கவிதை, கட்டுரை என எப்படைப்பிலும் ஆன்மீகமான தருணங்கள் அமைவதுண்டு. இதுதான் எழுத வேண்டும் என முன்முடிவோடு அமர்பவர்களுக்கு ‘பண்டங்களே’ கிடைக்கும். திடும்மென ஒரு சம்பவத்தின் நினைவால் உந்தப்படும் ஒருவனை அச்சம்பவமே கூட்டிச் செல்லும்படியான அனுபவங்கள் அமையும். அங்குதான் ஆன்மீகமும் நிகழக் கூடும்.

நம்மை வெடுக்கென நம்மிலிருந்தே பிரித்து விலக்கிப் பித்தாக்குவதே ஆன்மீகம். இப்பித்தின் பரவசம் அதுகாறும் வாழ்ந்த வாழ்வில் பெறாத ஒன்றைப் பெற்றது போலவும், சமூகப்பரப்பிலிருந்து முழுக்க வெளியே தனியே நிற்கும் ரசவாதம் போலவும் தொனிக்கும். அப்பரவசத்தைச் சேகரிக்கவோ, தக்க வைக்கவோ இயலாது. அதனால்தான் அதை வரையறுக்கவும் தயங்குகிறேன்.

லா.ச.ரா ஒரு கதையில் சொல்வார், “திடீரென்று நேர்வதுதான் சிக்கறுப்பு, விடுதலை. விடுதலை திடீரென்றுதான் நேர முடியும்”. அவர் குறிப்பிடும் சிக்கறுப்பே ஆன்மீகம். தன்னில் ஆன்மீகத்தைக் கொண்டிருக்கும் படைப்புகளையே நாம் இலக்கியம் எனச்சொல்கிறோம். இது இலக்கியம் தொடர்பான கறார் வரையறை அன்று. வரையறுக்க முற்படும்போது அது கோட்பாடு எனும் சலிப்பாகி விட நேரும். மீண்டும் லா.ச.ராவின் ஒரு வரி. நஞ்சுக்குப் பழக்கிக் கொண்டால் நான் சிரஞ்சீவி. ஒரு சிறுகதையில் எதிர்ப்படும் ஆன்மீகப்பரவசத் தருணம் இது.

என் நண்பரின் அப்பா சொன்னது இது. அவரின் அப்பா தீவிர சன்மார்க்கி(வள்ளலார் பக்தர்). குடும்பத்தைத் துறந்து விட்டு ஒருநாள் வெளியேறி விடுகிறார். அதற்குப் பிறகு பல வருடங்கள் அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது. ஒருசமயம், அவர் வள்ளலாரைப் போலவே வெள்ளுடை அணிந்து வடலூர் பக்கம் அலைந்து கொண்டிருக்கும் செய்தி கிடைக்கிறது. குடும்பத்தினர் அவரைச் சந்திக்க விரும்புவதில்லை. அறுபதாவது வயதில் வீட்டுக்குத் திரும்பும் அவர் வெள்ளுடைகளைத் தீயிலிட்டுக் கொளுத்தி விடுகிறார். ஒருநாளைக்கு பத்து சிகரெட்டுகள் பிடிக்கிறார். மாலையில் குடிக்காமல் அவர் தூங்குவதில்லை. மட்டன் சிக்கன் இல்லாத உணவுகளை பத்தியம் போலப் பாவிக்கிறார். இறக்கும்போது தன்னை அப்படியே விட்டுவிடக் கேட்டுக் கொள்கிறார். இறுதிவரை அவரிடம் யாராலும் பேச முடியவில்லை. அவர் எதனால் அப்படி வாழ்ந்தார் என ஆராயும்போது ’அவர் கோணம்’, ’நம் கோணம்’, ‘சமூகக்கோணம்’ போன்றவை வம்படியாய் நுழையும். அவ்வாழ்க்கையில் நம்மை இணைத்துப் பார்க்கும் கற்பனையில்(புனைவு) எக்கோணங்களுக்குள்ளும் அடைபடாத பரவசம் புலப்பட்டு மறையும். எனில், அக்கற்பனையே படைப்பு; அப்பரவசமே ஆன்மீகம்.

முருகவேலன்,

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – புதிய பதிப்பு
அடுத்த கட்டுரைகுதிரைமரம் – ஒரு நெசவு