இரு கட்டுரைகள், ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த கடிதத்தில் இரண்டு விசயங்கள் பற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

முதலில் உங்கள் நேரத்திற்கு நன்றி!

1) உங்களுடைய காணொளி பதிவு ஒன்றில் “கண்ணிநுண் சிறுதாம்பு” என்ற வார்த்தை உங்களை எப்படி கவர்ந்தது பற்றி சொல்லியிருப்பீர்கள். அந்த பதிவில் உங்களுடைய உள்தோன்றும் உணர்வு பற்றி பேசியிருப்பீர்கள். எனக்கும் “நாலாயிர திவ்ய பிரபந்தம்” படிக்கும் போது சில வரிகள் அப்படியே அந்த நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும். (திருமங்கை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் எழுதிய  பாசுரங்களை படித்துக் கொண்டிருக்கிறேன்.)

அதைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். இங்கே ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

திருமங்கை ஆழ்வார் எழுதிய “பெரிய திருமொழியில்” “எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்” என்ற 10 பாடல்களில்,

“கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும் அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே”

iதில் தொண்டராய் நின்று என்ற வார்த்தைகள் மட்டும் எனக்கு அவ்வளவு அதிர்வுகளை தந்தது.   என்னமோ நானே இதை எழுதியது போல பல நாட்கள் ஆனந்தத்தில் திருமங்கை ஆழ்வாரை கொண்டாடித் திளைத்தேன். வைஷ்ணவத்தின் சாரம்சத்தை இரண்டே வரிகளில் சொல்லி விட்டார் என்று தோன்றியது.  இன்னும் இந்த வரிகளை படிக்கும் போது அப்படி ஒரு உள்ளே ஒரு  மகிழ்ச்சி.

2) இந்தப் பதிவில்,

https://www.jeyamohan.in/161327/

“நீங்கள் சொல்லும் அந்த சின்னக்குழு ஒரே இடத்தில் சுற்றிச்சுற்றி வருவது. முகநூலின் செயல்முறை என்பது நம்மைச்சார்ந்தவர்களை மட்டுமே நமக்கு காட்டுவது. அதுவே உலகம் என நாம் எண்ண ஆரம்பிக்கிறோம். முகநூலில் புழங்கும் கசப்புகள், காழ்ப்புகள், வம்புகள், சில்லறை அரசியல் ஆகியவை அதை கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களுக்கான மடமாக ஆக்குகின்றன என நினைக்கிறேன். அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.” என்று சொல்லியிருப்பீர்கள்.

“AI (Artificial Intelligence) is creating the world based on your search and companies are investing heavily on this” என்பது பெரிய கவலைப்பட வேண்டிய விசயம். உதாரணமாக, உங்களுடைய காணொளியை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது உங்களிடம் கேள்வி கேட்கப்படுகிறது. நீங்கள் பதில் சொல்வதற்கு முன் விளம்பரம் வருகிறது. எந்த அளவுக்கு AI காணொளியை கவனித்து  கேள்விக்கும் பதிலுக்கும் நடுவே விளம்பரத்தை உள்ளே புகுத்தியுள்ளது என்று யோசிக்கும் போது “அதுவே உலகம் என நாம் எண்ண ஆரம்பிக்கிறோம்.” என்று நீங்கள் சொன்னது எவ்வளவு சரி என்று புரியும்.

Google போன்ற நிறுவனங்கள் AI-ல் நிறைய பணம் போடுகிறார்கள். இது வரும் கால சந்ததியினருக்கு மிக பெரிய சவாலாக இருக்கும். நாம் தேடும் விசயங்களை வைத்து நமக்கென்று உலகத்தை உருவாக்குகிறார்கள். வெளியில் நடக்கும் உண்மை உலகத்தை ஆராய்ந்து தேட வேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில் நாம் எல்லாரும் AI தரும் உலகத்திலேயே வாழ வேண்டியது தான்.

நல்ல புத்தககங்களை படிக்க வேண்டிய அவசியத்தை உணருகிறேன். தெரிந்தவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இல்லையென்றால் AI-க்கு அடிமைகளாவோம் என்று தோன்றுகிறது.

உங்களின் பதிவுகள் இப்படி என்னுள் தோன்றும் விஷயங்களை தட்டி எழுப்புகிறது.

நிறைய இது போன்ற விசயங்களை படிக்கும் போதும் அந்த அனுபவமும் என்னுடைய அனுபவத்தை பொருந்தி இருக்கும் போதும் என்னுள் உங்களிடம் நேரடியாக பேசுவது போலத் தோன்றும்.

நன்றி!

சத்ய நாராயணன்,

ஆஸ்டின், டெக்சாஸ்.

முந்தைய கட்டுரைதேய்வழக்கை ஒளிரச்செய்தல்
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல்- சு.கார்த்திகேயன்