பன்னிரு படைக்களத்தின் திருதராஷ்டிரர்

பன்னிரு படைக்களம்… வாசித்து கொண்டு இருக்கிறேன், திருதராஷ்டிரர் வரும் இடங்களை மிகையுணர்ச்சி இல்லாமல் வாசிக்க முடியவில்லை ஒரு தோள்தழுவி என் உயர் உனக்கு என்று நின்றவர்கள் இன்று எதிரெதிராக நிற்கும்போது மனம் என்னமோ செய்கிறது. உண்மையில் அவர்கள் படைக்களம் ஏந்தி எதிர் எதிராக நிற்கும் போது உணர்வு கொந்தளிப்பு இல்லாமல் எவ்வாறு வாசித்து கடப்பேன் என்றே தெரியவில்லை. மூத்த கௌரவர் என்ன பிழை செய்தார் , தொடக்கம் முதலே ஊழ் எத்தனை சிறப்பாக தன் ஆட்டத்தை ஆடுகிறது !! அவர் வாயுவின் மைந்தன் அல்ல, இந்திரனின் மைந்தன் அல்ல, தர்மனின் மைந்தனும் அல்ல, மண் தோன்றிய இறைவடிவான இளைய யாதவன் அல்ல. பேரன்பே உருவம் என திகழும் விழி இழந்த பேரரசரின் எளிய மைந்தன். அவரின் குருதிக்காகவா இவர்கள் எல்லாம் மண் தோன்றினார்கள். “நிறைவின்மை அன்றி எதையும் அடையக்கூடாதென்பதே தெய்வங்கள் வகுத்தது போலும்” அதற்காகவே கர்ணனைப் போல் எப்போதும் நான் துரியோதனன் பக்கம் இருப்பேன்.

ஏழுமலை

***

அன்புள்ள ஜெ

வெண்முரசு பன்னிரு படைக்களம் வரை வந்திருக்கிறேன். எல்லா கதாபாத்திரங்களும் உருமாறியிருக்கின்றன. கதை எவ்வகையிலும் மாறவில்லை. ஆனால் அக்கதைகளைச் சொன்ன வகையில் அவை எல்லாமே மாறிவிட்டிருக்கின்றன. மகாபாரத்த்தில் கதாபாத்திரங்கள் எல்லாம் சொல்லிச் சொல்லி டைப் ஆக மாறியவை. வெண்முரசு எல்லா கதா பாத்திரங்களையும் சிக்கலானதாக, நாற்புறமும் விரிவனவாக மாற்றிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பிரம்மாண்டமானதாக ஆகிவிட்டன. என் மனதில் இப்போது திருதராஷ்டிரரின் பெருமிதமான இருப்புதான் பெரிதாக தெரிகிறது

சரண்

முந்தைய கட்டுரைதந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும்
அடுத்த கட்டுரைகோவையில்..